Ravana's boast | Yuddha-Kanda-Sarga-024 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இலங்கையின் சிறப்பை லக்ஷ்மணனிடம் சுட்டிக்காட்டிய ராமன்; சுகனை விடுவிக்க ஆணையிட்டது; இராமனின் படையைக் குறித்து ராவணனிடம் விவரித்த சுகன்; இராவணனின் தற்புகழ்ச்சி...
இராஜனால்[1] அணிவகுக்கப்பட்ட அந்த வீர சமிதி {வீரர்களின் கூட்டம்}, சசியுடனும் {சந்திரனுடனும்}, சுப நக்ஷத்திரங்களுடனும் கூடிய சரத்கால பௌர்ணமி இரவைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.(1) வசுந்தரை {பூமியானது}, சாகரத்திற்கு ஒப்பான அந்தப் படையால் கடுமையாக பீடிக்கப்பட்டு, அதன் வேகத்தால் அச்சமடைந்து நடுங்கியது.(2) அப்போது, கானனௌசர்கள், ரோமஹர்ஷணத்தை {காட்டுவாசிகளான வானரர்கள், மயிர்க்கூச்சத்தை} ஏற்படுத்தும் பேரிகை, மிருதங்க ஒலிகளுடன் கூடிய பயங்கர ஆரவாரத்தை லங்கையில் கேட்டனர்.(3) அந்த கோஷத்தால் மகிழ்ச்சியடைந்த ஹரியூதபர்கள் {குரங்குக் குழுத் தலைவர்கள்}, பொறுத்துக் கொள்ள முடியாத அந்த கோஷத்தைவிட அதிக கோஷத்தைச் செய்து மகிழ்ச்சியில் முழங்கினர்.(4) செருக்குடன் கூடிய பிலவங்கமர்கள், அம்பரத்தின் மேக ஸ்வனத்திற்கு {தாவிச் செல்பவர்களான குரங்குகள், வானத்து மேக ஒலிக்கு} ஒப்பாக முழங்கிய கர்ஜனையை ராக்ஷசர்களும் கேட்டனர்.(5)
[1] இது "ராமன்" என்று சில பதிப்புகளிலும், "சுக்ரீவன்" என்று சில பதிப்புகளிலும் இருக்கிறது. செம்பதிப்பான விவேக் தேவ்ராய் பதிப்பில் இந்த சர்க்கம் இடம்பெறவில்லை. யுத்தகாண்டத்தில் 10 முதல் 15ம் சர்க்கம் வரையும், 20ம் சர்க்கமும், 21ம் சர்க்கத்தின் முதல் ஒன்பது சுலோகங்களும், 23ம் சர்க்கமும், இப்போது வரும் இந்த 24ம் சர்க்கமும் தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஆக யுத்தகாண்டத்தில் இதுவரை ஒன்பது சர்க்கங்கள் செம்பதிப்பில் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.
சித்திர துவஜங்களுடனும், பதாகைகளுடனும் கூடிய லங்கையைக் கண்ட தாசரதி {தசரதனின் மகனான ராமன்}, துக்கத்தால் பீடிக்கப்பட்டவனாக, மனத்தால் சீதையிடம் சென்றான்.(6) "மான்விழியாளான அவள் {சீதை}, லோஹிதாங்கனால் {சிவந்த உடலைக் கொண்ட செவ்வாய் கோளால்} கிரஹிக்கப்பட்ட ரோஹிணியை {ரோஹிணி நக்ஷத்திரத்தைப்} போல, ராவணனால் அங்கே அடைக்கப்பட்டிருக்கிறாள்" {என்று ராமன் நினைத்தான்}.(7)
தீர்க்கமான உஷ்ண சுவாசத்தை வெளியிட்ட வீரன் {ஆழமானதும், சூடானதும், நீளமானதுமான பெருமூச்சை வெளியிட்ட ராமன்}, லக்ஷ்மணனைப் பார்த்து, தற்காலத்திற்கு தனக்கு ஹிதமான {பின்வரும்} வசனத்தைச் சொன்னான்:(8) "இலக்ஷ்மணா, ஆகாசத்தைத் தொடுமளவு உயரத்தில், விஷ்வகர்மனின் மனத்தால் {கற்பனையால்} மலையின் உச்சியில் செய்யப்பட்டிருக்கும் இந்த லங்கையைப் பார்.(9) விஷ்ணுபதமான ஆகாசம், வெண்மேகங்களால் மறைக்கப்பட்டதைப் போல, லங்காபுரம் ஏராளமான விமானங்களின் திரளுடன் {விண்ணை முட்டும் மாளிகைக் கூட்டங்களுடன்} கட்டப்பட்டிருக்கிறது.(10) நானாவித பறவைக்கூட்டங்களுடனும், பழங்களைத் தரவல்ல புஷ்பங்களுடனும் கூடிய மரங்களையும் கொண்ட சுபமான லங்கை, {குபேரனின்} சைத்திரரத வனத்தைப் போல சோபித்துக் கொண்டிருக்கிறது.(11) மங்கலமான அநிலன் {காற்று /வாயு}, மதங்கொண்ட பறவைகளாலும், மயக்கங்கொண்ட தேனீக்களாலும் {வண்டுகளாலும்}, கோகிலம் {குயில்} முதலிய பறவைகளாலும் நிறைந்த மரங்களை அசைப்பதைப் பார்" {என்றான் ராமன்}.(12)
தாசரதியான ராமன், லக்ஷ்மணனிடம் இவ்வாறு சொன்ன பிறகு, சாஸ்திரங்களில் காணப்படும் செயல்முறைப்படி அங்கே படையை அணிவகுத்து,(13) {பின்வருமாறு} ஆணையிட்டான், "வீரியவானும், வெல்வதற்கரியவனுமான அங்கதன், இந்தப் படையின் கபிசேனையை அழைத்துக் கொண்டு, நீலனுடன் சேர்ந்து இதய {மையப்} பகுதியில் நிலைபெறட்டும்.(14) ரிஷபன் என்ற பெயரைக் கொண்ட வானரன், வானரௌகஸர்கள் {குரங்குக்கூட்டத்தினர்} சூழ, வானர வாஹினியின் தக்ஷிண {வலது} பக்கத்தை அடைந்து நிலைக்கட்டும்.(15) கந்தஹஸ்தியை {மதயானையைப்} போல வெல்வதற்கரியவனும், வலிமைமிக்கவனுமான கந்தமாதனன், வானர வாஹினியின் ஸவ்ய {இடது} பக்கத்தை அடைந்து கண்காணித்தபடியே நிலைக்கட்டும்.(16) நான், லக்ஷ்மணனுடன் சேர்ந்து தலைப்பகுதியில் {முன்னணியில்} விழிப்புடன் நிலைத்திருப்பேன். மஹாத்மாக்களான ஜாம்பவான், சுஷேணன், வேகதர்சி உள்ளிட்ட வானர ரிக்ஷமுக்கியர்கள் {குரங்குகள், கரடிகளின் தலைவர்களான}[2] மூவரும் வயிற்றுப் பகுதியை ரக்ஷிக்கட்டும்.(17,18அ) தேஜஸ்ஸால் சூழப்பட்ட பிரசேதன் {வருணன்} உலகத்தின் மேற்குப் பகுதியை {காப்பதைப்} போல, கபிராஜன் {சுக்ரீவன்}, கபிசேனையின் இடை {பின்} பகுதியை ரக்ஷிக்கட்டும்" {என்றான் ராமன்}.(18ஆ,19அ)
[2] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், ""குரங்குகள் என்பதற்குப் பிறகு, "கரடிகள்" என்று வரும் அடைமொழி பொருத்தமற்றதாகத் தோன்றலாம். ஆனால் "குரங்குகள்" என்பது குரங்குக்கூட்டத்துடன் தொடர்புடைய வகையில் பொதுவான அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது என்று நினைக்கிறேன்" என்றிருக்கிறது.
மஹாவியூஹமாக[3] நன்கு வகுக்கப்பட்ட அந்த அனீகினி {படை}, மஹா வானரர்களால் ரக்ஷிக்கப்பட்டு, மேகத்திரளுடன் கூடிய வானத்தைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.(19ஆ,20அ)
[3] நரசிம்மாசாரியர் பதிப்பில், "அவ்வானர ஸைன்யம் கருடவ்யூஹமாக நன்கு ஒழுங்கு செய்யப்பெற்றுப் பெரிய வானர வீரர்களால் பாதுகாக்கப்பட்டு, மேகங்கள் ஸஞ்சரிக்கிற ஆகாயம் போல் ப்ரகாசித்துக் கொண்டிருந்தது" என்றிருக்கிறது. இராமன் இங்கு அமைத்தது "கருட வியூஹம்" என்ற குறிப்பு வேறு எந்தப் பதிப்பிலும் இல்லை.
போரில் மர்த்தனம் செய்ய {போரில் ராக்ஷசர்களை நசுக்க} விரும்பிய வானரர்கள், கிரி சிருங்கங்களையும், மஹத்தான பெருமரங்களையும் எடுத்துக் கொண்டு லங்கையை அடைந்தனர்.(20ஆ,21அ) சர்வ ஹரிபுங்கவர்களும், "சிகரங்களாலும், வெறும் முஷ்டிகளாலும் இந்த லங்கையை சிதறடிப்போம்" என்று தங்கள் மனங்களில் தீர்மானித்துக் கொண்டனர்.(21ஆ,22அ)
அப்போது மஹாதேஜஸ்வியான ராமன், "சைனியம் நன்றாக வகுக்கப்பட்டிருக்கிறது. இந்த சுகனை விடுவிப்பாயாக[4]" என்று சுக்ரீவனிடம் சொன்னான்.(22ஆ,23அ)
[4] யுத்த காண்டம் 20ம் சர்க்கம் 37ம் சுலோகத்தில் ராமன் சுகனை விடுவிக்கச் சொல்கிறான். இப்போது மீண்டும் இங்கே சுகனை விடுவிக்கச் சொல்கிறான். 20ம் சர்க்கத்தில், கட்டப்பட்டிருக்கும் கட்டில் இருந்து சுகனை விடுவிக்கச் சொன்ன ராமன், இப்போது உண்மையாக விடுவிக்கச் சொல்கிறான் என்று எடுத்துக் கொள்ளலாம். இந்த சர்க்கம் இடைச்செருகலாக இருக்கவும் கூடும்.
இராமனின் வசனத்தைக் கேட்ட வானரேந்திரன் {சுக்ரீவன்}, தூதனான அந்த சுகனை ராமனின் ஆணையின் பேரில் விடுவித்தான்.(23ஆ,24அ) வானரர்களால் பீடிக்கப்பட்டவனும், ராமவாக்கியத்தால் விடுவிக்கப்பட்டவனுமான சுகன், அச்சத்தால் நடுங்கியவாறே ராக்ஷசாதிபனை {ராவணனை} அடைந்தான்.(24ஆ,25அ)
இராவணன், சிரித்துக் கொண்டே {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்,{25ஆ} "ஏன் உனது சிறகுகள் கட்டப்பட்டன? சிறகுகள் பிடுங்கப்பட்டவனாகத் தெரிகிறாயே. அனேக சித்தங்களுடன் கூடிய {மனம் ஒருநிலையில் இல்லாத} அவர்களின் பிடிக்குள் நீ அகப்படவில்லை அல்லவா?" {என்று கேட்டான் ராவணன்}.(25ஆ,26)
அப்போது பயத்தால் பீடிக்கப்பட்ட அவன் {சுகன்}, ராஜனின் தூண்டுலுக்குப் பிறகு, இந்த உத்தம வசனத்தை ராக்ஷசாதிபனிடம் {ராவணனிடம்} மறுமொழியாகச் சொன்னான்,{27} "சாகரத்தின் உத்தர தீரத்தில் {வடகரையில்}, உமது அறிவுறுத்தலின்படி, உமது வசனத்தை தடுமாற்றமேதுமின்றி மென்மையான குரலில் சொன்னேன்.(27,28) என்னைக் கண்ட மாத்திரத்தில், கோபமடைந்த அந்தப் பிலவங்கமர்கள் {தாவிச் செல்பவர்களான குரங்குகள்}, குதித்தெழுந்து என்னைப் பிடித்தனர். என்னைக் கொல்வதற்காக முஷ்டிகளைக் கொண்டு தாக்கவும் தொடங்கினர்.(29) இராக்ஷசாதிபரே, அவர்களிடம் பேசவும் முடியவில்லை; கேட்கவும் முடியவில்லை. வானரர்கள் இயல்பிலேயே கோபம் நிறைந்தவர்களாகவும், கொடியவர்களாகவும் இருக்கின்றனர்.(30)
விராதன், கபந்தன், கரன் ஆகியோரைக் கொன்றவனான அந்த ராமன், சுக்ரீவன் சகிதனாக சீதையின் பதம் {சீதை இருக்குமிடத்திற்கு} வந்திருக்கிறான்.(31) அத்தகைய ராகவன், சாகரத்தில் சேதுவைச் செய்து, லவணோததியை {பாலத்தைக் கட்டி, உப்புநீர் கடலைக்} கடந்து, ராக்ஷசர்களை வெளியேற்றிவிட்டு, கையில் தனுவுடன் {வில்லுடன்} நிற்கிறான்.(32) கிரிகளுக்கும், மேகங்களுக்கும் ஒப்பான ரிக்ஷ வானர சங்கத்தினர் ஆயிரக்கணக்கான அனீகனிகளாக வசுந்தரையை {படைப்பிரிவுகளாக பூமியை} மறைத்திருக்கின்றனர்.(33) தேவ, தானவர்களைப் போல, ராக்ஷசர்களின் படைக்கும், பலௌகர்களுடன் {கரடிகளுடன்} கூடிய வானரேந்திரனின் {சுக்ரீவனின்} படைக்கும் இடையில் உடன்பாடு ஏற்படுவது சாத்தியமில்லை.(34) சீக்கிரமே புரத்தின் பிராகாரத்தை {நகரின் மதிற்சுவரை} அடைவார்கள். நீர் இரண்டில் ஒன்றைச் செய்யலாம். சீதையைத் திருப்பிக் கொடுக்கலாம். அல்லது அவனுடன் {ராமனுடன்} உடனே யுத்தம் செய்யலாம்" {என்றான் சுகன்}.(35)
சுகனின் வசனத்தைக் கேட்ட ராவணன், கோபத்தில் கண்கள் சிவக்க, பார்வையாலேயே அவனை எரித்துவிடுபவனைப் போல {இந்த} வாக்கியத்தைச் சொன்னான்:(36) "தேவ, கந்தர்வ, தானவர்களே என்னுடன் யுத்தம் செய்தாலும், சர்வலோகமும் எனக்கு பயத்தை விளைவித்தாலும் சீதையை நான் கொடுக்க மாட்டேன்.(37) வசந்த காலத்தில் புஷ்பித்த மரத்தின் மீது {பாய்ந்து செல்லும்} மதங்கொண்ட வண்டுகளைப் போல, என் சரங்கள் ராகவன் மீது எப்போது விரைந்து பாயப்போகின்றன?(38) குஞ்சரத்தை {யானையை அழிக்கும்} எரிகொள்ளியைப் போல, கார்முகத்தில் {வில்லில்} ஏவப்பட்டவையும், எரிபவையுமான சரங்களைக் கொண்டு, சோணிதம் பாயும் {குருதி வழியும்} அவனது அங்கத்தை எப்போது எரிக்கப் போகிறேன்?(39) உதிக்கும் திவாகரன், சர்வ ஜோதிகளின் பிரபைகளை {மறைப்பதைப்} போல, மஹத்தான படையால் சூழப்பட்டவனாக அவனது அந்த பலத்தை மறைத்துவிடுவேன்.[5](40)
[5] இந்த சர்க்கத்தில் ராவணன் பேசுவதற்கும், அடுத்த சர்க்கத்தில் பேசுவதற்கும் பெரும் வித்தியாசம் தெரிகிறது.
என் வேகம் சாகரத்தைப் போன்றது, என் பலம் மாருதனை {வாயு தேவனைப்} போன்றது. தாசரதி {தசரதனின் மகனான ராமன்} அதை அறியமாட்டான். எனவேதான் அவன் என்னுடன் யுத்தம் செய்ய விரும்புகிறான்.(41) விஷமிக்க பன்னகங்களை {பாம்புகளைப்} போல, தூணியில் இருக்கும் என் பாணங்களை ராமன் பார்த்ததில்லை. எனவேதான் அவன் என்னுடன் யுத்தம் செய்ய விரும்புகிறான்.(42) அந்த ராமன் இதற்குமுன் போரில் என் வீரியத்தை அறிந்ததில்லை. சரங்களின் எண்ணற்ற இசைக்குறிப்புகளால் மீட்டப்படும் வில்லின் வடிவிலான வீணையை நான் இசைக்கப் போகிறேன்.{43} நாண்கயிற்றின் ஆரவாரவொலி, கோரமாகக் காயமடைந்தவர்களின் மஹாஸ்வனம், நாராசங்கள் உள்ளங்கையில் உராயும் நாதம் ஆகியவற்றை, எனக்கு ஹிதமில்லாதவர்களின் வாஹினியில் {எனது பகைவரின் படையில்} {44} புகுந்து, போரெனும் மஹா அரங்கத்தில் இசைப்பேன்.(43-45அ) சஹஸ்ராக்ஷனான வாசவனானாலும் {ஆயிரம் கண்களைக் கொண்ட இந்திரனானாலும்}, போரில் தானே நேரடியாக வரும் வருணனானாலும், யமனானாலும், தானே நேரடியாக வரும் வைஷ்ரவணனானாலும் {குபேரனானாலும்}, சர அக்னிகளுடன் கூடிய என்னை பெரும்போரில் தாக்கவல்லவர்களல்லர்" {என்றான் ராவணன்}.(45ஆ,இ)
யுத்த காண்டம் சர்க்கம் – 024ல் உள்ள சுலோகங்கள்: 45
Previous | | Sanskrit | | English | | Next |