Shardula again | Yuddha-Kanda-Sarga-029 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வானரப் படையைப் புகழ்ந்ததற்காக சுகனையும், சாரணனையும் கண்டித்து, மற்றொரு ஒற்றனான சார்தூலனை அனுப்பிவைத்த ராவணன்...
சுகனால் சொல்லப்பட்ட ஹரியூதபர்களை {குரங்குக் குழுத் தலைவர்களைக்} கண்டும், ராமனின் தக்ஷிணபுஜமாக {வலது கையாகத்} திகழ்பவனும், மஹாவீரியம் கொண்டவனுமான லக்ஷ்மணனையும்,{1} ராமனின் சமீபத்திலிருப்பவனும், தன்னுடன் பிறந்தவனுமான விபீஷணனையும், பீமவிக்கிரமனும், சர்வ வானரர்களின் ராஜாவுமான சுக்ரீவனையும்,{2} வஜ்ரஹஸ்தாத்மஜாத்மஜனுமான {கையில் வஜ்ரத்துடன் கூடிய இந்திரனுடைய மகனான வாலியின் மகன்} அங்கதனையும், விக்ராந்தனான ஹனூமந்தனையும், வெல்வதற்கரிய ஜாம்பவந்தனையும்,{3} சுஷேணன், குமுதன், நீலன், பிலவகரிஷபனான {தாவிச் செல்பவர்களில் காளையான} நளன் ஆகியோரையும், கஜன், கவாக்ஷன், சரபன், மைந்தன், துவிவிதன் ஆகியோரையும் கண்டும்,{4} சற்றே கலங்கிய ஹிருதயத்துடன் கூடிய ராவணன் குரோதம் அடைந்து, மேற்படி சொல்லிமுடித்த வீரர்களான அந்த சுகசாரணர்கள் இருவரையும் கண்டித்தான்.(1-5)
முகம் கவிழ்ந்து வணங்கி நிற்கும் அந்த சுகசாரணர்கள் இருவரிடமும், கோபத்தால் தழுதழுத்த சொற்களைப் பதற்றத்துடன் {ராவணன், பின்வருமாறு} கடுமையாகச் சொன்னான்[1]:(6) "உபஜீவிகளான {அண்டிப் பிழைக்கும்} அமைச்சர்கள், நிக்ரஹம், பிரக்ரஹம் செய்யக்கூடிய {தண்டிக்கவும், அருள்புரியவும் கூடிய} பிரபுவான நிருபதிக்கு {மன்னனுக்குப்} பிரியமற்ற வகையில் இவ்வாறு பேசுவது தகுந்ததல்ல.(7) யுத்த அர்த்தத்திற்காக வந்திருப்பவர்களும், பிரதிகூலர்களுமான {நம்மை எதிர்ப்பவர்களுமான} பகைவரைப் பொருத்தமின்றி நீங்கள் இருவரும் புகழ்வது முறையாகுமா?(8) {தலைவனின் மனங்கோணாமல் நடக்க வேண்டும் என்ற} எது ராஜசாஸ்திரங்களில் ஜீவிக்கும் சாரமாக இருக்கிறதோ, அதை கிரஹித்துக் கொள்ளாத நீங்கள் இருவரும், ஆசார்யர்கள், குருக்கள், பெரியோர் ஆகியோரை சேவித்தது வீணே.(9) கிரஹித்துக் கொண்டாலும், அஞ்ஞானத்தின் பாரத்தால் அதன் பொருளை அறிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறீர்கள். உங்களைப் போன்ற மூர்க்கர்களை அமைச்சர்களாகக் கொண்டும், அதிஷ்டவசத்தாலேயே நான் ஆட்சியைத் தக்கவைத்து வருகிறேன்.(10)
[1] யுத்தகாண்டம் 25ம் சர்க்கத்திற்கு அடுத்து நேரடியாக இந்த 29ம் சர்க்கத்தின் 6ம் சுலோகத்திற்கு வந்துவிட்டால் சரியாகக் கதையின் போக்குத் தொடர்கிறது.
எவனுடைய நாவின் ஆணைகளால் சுபாசுபங்கள் {நன்மையும், தீமையும்} விளையுமோ, அத்தகைய என்னிடம் இவ்வாறான கடுஞ்சொற்களைப் பேசும் உங்களுக்கு மிருத்யு {மரண} பயம் இல்லையா?(11) மரங்கள், நெருப்பைத் தீண்டியும் வனத்தில் நீடிக்கலாம். ராஜதோஷத்திற்காகக் கடுமையாக நடத்தப்படும் அபராதிகளால் {அவ்வாறு} நீடிக்க முடியாது.(12) பூர்வத்தில் {இவர்கள்} செய்த உபகாரங்களால் என் குரோதம் மிருதுவடையாமல் {என் கோபம் தணியாமல்} இருந்தால், சத்ருக்களின் தரப்பைப் புகழும் இந்தப் பாபிகள் இருவரையும் கொன்றிருப்பேன்.(13) என் அருகில் இருந்து ஒழிந்து போவீராக. நீங்கள் எனக்குச் செய்த உபகாரங்களை நினைத்து, நான் உங்களைக் கொல்ல விரும்பவில்லை.{14} சினேகமற்றவர்களும், கிருதக்னர்களுமான {நன்றி மறந்தவர்களுமான} நீங்கள் இருவரும் என்னளவில் கொல்லப்பட்டவர்களே" {என்றான் ராவணன்}.(14,15அ)
இவ்வாறு சொல்லப்பட்டதும் வெட்கமடைந்த அந்த சுக, சாரணர்கள் இருவரும், "ஜயமடைவீராக" என்று ராவணனை வாழ்த்திவிட்டு அங்கிருந்து சென்றனர்.(15ஆ,16அ) அந்த தசக்ரீவன் {பத்துக்கழுத்துகளைக் கொண்ட ராவணன்}, தன் சமீபத்தில் நின்றிருந்த மஹோதரனிடம், "நீதிவிசாரதர்களான சாரர்களை {நீதிநியாயங்களில் திறன்மிக்க ஒற்றர்களை} சீக்கிரம் என்னிடம் அழைத்து வருவாயாக" என்றான்.(16ஆ,17அ) இவ்வாறு சொல்லப்பட்ட மஹோதரன், சீக்கிரமே சாரர்களுக்கு ஆணையிட்டான்.{17ஆ} பிறகு, பார்த்திப ஆணையின் பேரில் விரைந்து வந்த சாரர்கள், தங்கள் கைகளைக் கூப்பிக் கொண்டு, "ஜயமடைவீராக" என்று வாழ்த்தி நின்றனர்.(17ஆ,18)
அப்போது, ராக்ஷசாதிபனான ராவணன், நம்பத்தகுந்தவர்களும், சூரர்களும், பக்தர்களும், பகைவரிடம் அச்சமற்றவர்களுமான அந்த சாரர்களிடம் {ஒற்றர்களிடம், பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(19,20அ) "இங்கிருந்து சென்று, ராமனின் வியவசாயத்தையும் {முயற்சியையும்}, அவனிடம் கொண்ட பிரீதியால் அவனுக்கு நெருக்கமாக இருக்கும் அந்த மந்திரிகளையும், பிறரையும் பரீக்ஷித்துவிட்டு இங்கே திரும்பி வருவீராக.(20ஆ,21அ) {ராமன்} எவ்வாறு உறங்குகிறான்? {எவ்வாறு} விழிக்கிறான்? முதலிய பிறவற்றையும், அவன் செய்யும் அனைத்தையும் முழுமையான நிபுணத்துவத்துடன் அறிந்து கொண்டு திரும்பி வருவீராக.(21ஆ,22அ) பண்டிதர்களான வசுதாதிபர்களால் {அறிஞர்களான மண்ணின் தலைவர்களால்}, சாரர்கள் மூலம் நன்றாக அறிந்து கொள்ளப்பட்ட சத்ரு, யுத்தத்தில் அற்ப யத்னத்தின் {முயற்சியின்} பேரில் வீழ்த்தப்படுகிறான்" {என்றான் ராவணன்}.(22ஆ,23அ)
மகிழ்ச்சியடைந்த அந்த சாரர்கள், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு, சார்தூலனை முன்னிட்டுக் கொண்டு,[2] ராக்ஷசேஷ்வரனை பிரதக்ஷிணம் செய்தனர் {ராக்ஷசர்களின் தலைவனான ராவணனை வலம் வந்தனர்}.(23ஆ,24அ) சாரர்கள், மஹாத்மாவான ராக்ஷசசத்தமனை {ராக்ஷசர்களில் முதன்மையான ராவணனை} பிரதக்ஷிணம் செய்த பிறகு, அந்த ராமலக்ஷ்மணர்கள் எங்கே இருந்தனரோ அங்கே சென்றனர்.(24ஆ,25அ)
[2] யுத்த காண்டம் 20ம் சர்க்கத்தில் ராமனின் வானரப் படையை வேவு பார்க்க சார்தூலனை அனுப்புகிறான் ராவணன். அப்போது நளசேது கட்டப்படவுமில்லை, ராமன் கடலைக் கடக்கவும் இல்லை. செம்பதிப்பில் அந்த சர்க்கம் இடம்பெறவில்லை. இப்போது ராமன் கடலைக் கடந்தவுடன் மீண்டும் ராவணன் அனுப்பும் ஒற்றர் குழுவில் சார்தூலனும் இருக்கிறான்.
அவர்கள் மாறுவேடம் பூண்டு சென்று ஸுவேலம் எனும் சைலத்தின் சமீபத்தில் சுக்ரீவ, விபீஷணர்களுடன் கூடிய ராமலக்ஷ்மணர்களைக் கண்டனர்.(25ஆ,26அ) அந்தப் படையைக் கண்டு பயத்தால் கலக்கமடைந்திருந்த அந்த ராக்ஷசர்களை தர்மாத்மாவான ராக்ஷசேந்திரன் {விபீஷணன்} கண்டான்.(26ஆ,27அ) விபீஷணன் யதேச்சையாக அங்கிருந்தவர்களைத் தடுத்துநிறுத்தி, "இந்த ராக்ஷசன் பாபி" என்று சொல்லி, சார்தூலனை மட்டும் பிடித்தான்.(27ஆ,28அ) அவனும் {அந்த சார்தூலனும்} பிலவங்கமர்களால் கொல்லப்படும் தருணத்தில் ராமனால் விடுவிக்கப்பட்டான். மற்ற ராக்ஷசர்களும் தண்ணளியான {தீங்கிழைக்காத, கருணையுள்ள} ராமனால் விடுவிக்கப்பட்டனர்.(28ஆ,29அ) விக்ராந்தர்களும், லகுவிக்ரமர்களுமான வானரர்களால் துன்புறுத்தப்பட்ட அவர்கள், மனம் பதைத்து, பெருமூச்சுவிட்டபடியே மீண்டும் லங்கையை அடைந்தனர்[3].(29ஆ,30அ)
[3] யுத்தகாண்டம் 25ம் சர்க்கத்தில் ஒற்றர்களான சுகனும், சாரணனும் பிடிபடுவதும், வானரப் படையை முழுமையாகப் பார்வையிட அவர்களை ராமன் அனுமதிப்பதும் விரிவாகச் சொல்லப்படுகிறது. இங்கே அவ்வாறு சொல்லப்படவில்லையெனினும், அடுத்த அத்தியாயத்தில் சார்தூலன் இந்த சம்பவத்தைக் கொஞ்சம் விரிவாக ராவணனிடம் சொல்கிறான்.
நித்தியம் வெளியில் திரிபவர்களும், மஹாபலவான்களும், நிசாசரர்களுமான அந்த சாரர்கள் {இரவுலாவிகளுமான அந்த ஒற்றர்கள்}, தசக்ரீவனை அடைந்ததும், ஸுவேலத்தின் {சுவேல மலையின்} சமீபத்தில் வசிக்கும் ராமனின் படையைக் குறித்து அறிவித்தனர்.(30ஆ,இ)
யுத்த காண்டம் சர்க்கம் – 029ல் உள்ள சுலோகங்கள்: 30
Previous | | Sanskrit | | English | | Next |