Monday 23 October 2023

புவியியல் ஞானம் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 46 (24)

Geographic Knowledge | Kishkindha-Kanda-Sarga-46 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சுக்ரீவனின் புவியியல் ஞானம் குறித்து விசாரித்த ராமன்; அந்த ஞானத்தை அடைந்தது எவ்வாறு என்பதை விளக்கிச் சொன்ன சுக்ரீவன்...

Rama and Sugreeva

வானரேந்திரர்கள் சென்றபிறகு, ராமன், சுக்ரீவனிடம், “சர்வ புவிமண்டலத்தையும்[1] உண்மையில் நீ எவ்வாறு அறிந்து கொண்டாய்?” என்று கேட்டான்.(1)

[1] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், “மண்டலம் என்ற சொல்லுக்கு உருண்டை, வட்டம், கோளம் என்ற பொருள்கள் உள்ளன” என்றிருக்கிறது.

அப்போது, பணிந்து வணங்கிய சுக்ரீவன், ராமனிடம் {பின்வருமாறு} சொன்னான், “சர்வத்தையும் விஸ்தாரமாகச் சொல்கிறேன். நான் சொல்வதைக் கேட்பீராக.(2) வாலி, எருமையின் ஆகிருதியை {எருமை வடிவம்} கொண்டவனும், துந்துபி என்ற பெயரைக் கொண்டவனுமான தானவனை மலய பர்வதத்தை நோக்கி விரட்டிச் சென்றபோது.{3} அந்த மஹிஷன் மலயத்தின் குகைக்குள் பிரவேசித்தான். அவனைக் கொல்ல விரும்பிய வாலியும் அந்த மலயத்திற்குள் பிரவேசித்தார்[2].(3,4) அப்போது வினீதவானான {[அண்ணனுக்குக்] கட்டுப்படுபவனான} நான், அங்கே குகையின் துவாரத்தில் நிறுத்தப்பட்டேன். சம்வத்சரம் {ஒரு வருடம்} கடந்த பிறகும் வாலி வெளியே வரவில்லை.(5) 

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “எருமை வடிவிலான அசுரன் துந்துபியை வாலி கிஷ்கிந்தையில் கொன்றான். அவனது சடலம் மதங்க முனிவரின் ஆசிரமத்தின் அருகில் தூக்கி வீசப்பட்டது {4:11:45-48}. ஆனால் இப்போதோ, அவன் குகையில் வைத்துக் கொல்லப்பட்டதாக சுக்ரீவன் சொல்கிறான். குகையில் வைத்துக் கொல்லப்பட்ட அசுரன் மாயாவியே ஆவான் {4:9:4-23}. மாயாவியும், துந்துபியும் சகோதரர்களும், மயனின் மகன்களுமாவர். “மாயாவியும், எருமை அசுரனான மயனின் மகன் என்பதால் துந்துபி என்று அழைக்கப்படலாம்” என்று மஹேஸ்வர தீர்த்தர் சொல்கிறார். “மாயாவி முதல் மகன், துந்துபி இரண்டாவது மகன் என்று மயன் உத்தரகாண்டத்தில் சொல்கிறான்” என்று கோவிந்தராஜர் சொல்கிறார். மாயாவியும், துந்துபியும் முதலில் வாலியுடன் போரிட வந்தனர் என்றும், வாலியையும், சுக்ரீவனையும் கண்டதும், துந்துபியும் மாயாவியுடன் குகைக்குள் நுழைந்து, அங்கிருந்து எப்படியோ தப்பித்தான் என்றும், வாலி மாயாவியை மட்டுமே அப்போது கொன்றான் என்றும் நம்பப்படுகிறது. பிறகுதான் துந்துபி கிஷ்கிந்தையின் வாயிலுக்கு வந்து வாலியால் கொல்லப்பட்டிருக்க வேண்டும். எனவே சுக்ரீவன் இங்கே துந்துபி என்று, மாயாவி, துந்துபி ஆகிய இருவரையும் சேர்த்தே சொல்கிறான்” என்றிருக்கிறது.

பிறகு, பிலத்திலிருந்து ரத்தம் வேகமாகப் பெருகி நிறைந்தது. அப்போது, அதைக் கண்டு பேச்சிழந்து நின்ற நான், சகோதர சோகம் எனும் விஷத்தால் பீடிக்கப்பட்டேன்.(6) பிறகு, குரு {பெரியவர்} கொல்லப்பட்டது வெளிப்படையானது என்ற புத்தியை நான் அடைந்தேன். மஹிஷன் {துந்துபி / மாயாவி} வெளியே வரமுடியாதபடி முழுமையாக நாசம் செய்ய வேண்டும் என்று நினைத்த நான், பர்வதத்திற்கு ஒப்பான பாறையைக் கொண்டு பிலத்தின் துவாரத்தை அடைத்தேன்.(7,8அ) அப்போது, அவர் ஜீவித்திருப்பதில் நிராசையடைந்த நான், கிஷ்கிந்தையை அடைந்து, மஹத்தான ராஜ்ஜியத்தையும், ருமையுடன் தாரையையும் அடைந்து[3], மித்ரர்கள் சஹிதனாக ஜ்வரம் இல்லாமல் அங்கே வசித்திருந்தேன்.(8ஆ,9)

[3] கிஷ்கிந்தா காண்டம் 9ம் சர்க்கத்தில், இதே கதையை சுக்ரீவன் ராமனிடம் சொன்னபோது, தாரையைத் தான் அடைந்தது குறித்து எதுவும் சொல்லவில்லை. வாலி தன்னை விரட்டியதைச் சொல்லும் 10ம் சர்க்கத்திலும் இதைச் சொல்லவில்லை. 

பிறகு, அந்த தானவ ரிஷபனைக் கொன்று வாலி திரும்பி வந்தார். அப்போது பயத்தால் செயலற்றவனான நான், கௌரவத்துடன் ராஜ்ஜியத்தைத் திருப்பிக் கொடுத்தேன்.(10) துஷ்டாத்மாவான அந்த வாலி, கலங்கிய இந்திரியங்களுடன், அமைச்சர்களுடன் ஓடிச் சென்றுகொண்டிருந்த என்னைக் கொல்ல விரும்பி குரோதத்துடன் விரட்டி வந்தார்.(11) அத்தகையவனும், அந்த வாலியால் விரட்டப்பட்டவனுமான நான், அவ்வாறு விரட்டப்படும்போது, விதவிதமான நதிகளையும், வனங்களையும், நகரங்களையும் கண்டேன்.(12) அப்போது, ஆதர்ஷதலத்திற்கு {கண்ணாடியின் மேற்பரப்பிற்கு} ஒப்பானதாகவும், அலாதசக்கரத்தின் பிரதிமை {கொள்ளிகளாலான சக்கரத்தின் வடிவம்} போன்றதாகவும் தென்பட்ட பிருத்வியானது {தெளிவாகவும், வேகமாகச் சுழல்வதாகவும் தென்பட்ட பூமியானது}, அதுமுதல் எனக்கு கோஷ்பதம் {மாட்டுக் குளம்படி} போலானது[4].(13)

[4) ஆங்கிலத்தில், வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில், "அப்போது என்னால் பிருத்வியானது, கண்ணாடியின் மேற்பரப்பைப் போலவும், சுழலும் கொள்ளிகளின் பிரதிமை போலவும் மாட்டின் குளம்படி போலவும் காணப்பட்டது" என்றும், ஹரிபிரசாத்சாஸ்திரி பதிப்பில், "பூமியானது, கண்ணாடியிலோ, குட்டையிலோ காணப்படும் சுழலும் கொள்ளிகளின் பிரதிபலிப்பைப் போல எனக்குத் தோன்றியது" என்றும், மன்மதநாததத்தர் பதிப்பில், "பூமியானது, மாட்டின் குளம்படியைப் போலவோ, கண்ணாடியில் பிரதிபலிக்கும் தோற்றத்தைப் போலவோ, சுழலும் கொள்ளிகளைப் போலவோ எனக்குத் தென்பட்டது" என்றும், பிபேக்திப்ராய் பதிப்பில், "நான் கண்ணாடியின் பரப்பில் உள்ள பிரதிபலிப்பைப் போலப் பூமியைக் கண்டேன். சில இடங்களை நெருப்பின் வளையம் போலவும், வேறு சிலவற்றை மாட்டின் குளம்படியைப் போலவும் நான் கண்டேன்" என்றும் இருக்கிறது. தமிழில், தர்மாலயப் பதிப்பில், "பூமியானது என்னால் கொள்ளிவட்டம் போல் சுழன்று கொண்டிருப்பதாய், கண்ணாடியை நிகர்த்ததாய் மாட்டுக் குளம்படி போல பார்க்கப்பட்டது" என்றும், நரசிம்மாசாரியர் பதிப்பில், "பூமி முழுமையும் குளப்படிபோல் நினைத்துக் கண்ணாடியைப் போலவும், கொள்ளிக் கட்டையின் சக்ரத்தைப் போலவும் ஸ்பஷ்டமாகக் கண்டனன்" என்றும், தாதாசாரியர் பதிப்பில், "இப்பார் முழுதும் அலாதசக்கரம் போலக் காணப்பட்டு மாட்டின் குளப்படிபோல் தாண்டவும்பட்டது" என்றும், கோரக்பூர், கீதாபிரஸ் பதிப்பில், "இந்தப் பூமியானது, கண்ணாடியின் மேற்பரப்பைப் போல் பளபளப்புள்ளதாகவும், கொள்ளிக்கட்டை வட்டவடிவாகச் சுழல்வது போலவும், மாட்டுக் குளம்படி போலவும் (சிறியதாக, எளிதில் கடக்கக்கூடியதாகவும்) காணப்பட்டது" என்றும் இருக்கிறது. இங்கே சுக்ரீவன் பூமியை வட்ட வடிவில் கண்டானா? அல்லது அவன் சென்ற வேகத்தைக் குறிக்க அவ்வாறு சொல்லப்பட்டதா என்பது படிக்கும் அவரவரின் அனுமானத்திற்குரியது. சம்ஸ்கிருத மொழியியல் வல்லுனர்களே இதில் உண்மைப் பொருளை விளக்கவல்லவர்கள்.

அப்போது பூர்வ {கிழக்குத்} திசைக்குச் சென்று விதவிதமான மரங்களையும், குகைகளுடன் கூடிய ரம்மியமான பர்வதங்களையும், விதவிதமான சரஸ்களையும் {பொய்கைகளையும்} கண்டேன்.(14) அங்கே தாதுக்களால் சூழப்பட்ட உதய பர்வதத்தையும், நித்யம் அப்சரஸ்களின் ஆலயமாகத் திகழும் க்ஷீரோத சாகரத்தையும் {பால் போன்ற நீரைக் கொண்ட கடலையும்} கண்டேன்.(15) விபுவே {தலைவா}, வாலியால் விரட்டப்பட்டு பயந்தோடிக் கொண்டிருந்த நான், மீண்டும் திரும்பியபோது, வாலி மீண்டும் வேகமாக என்னை விரட்டி வந்தார்.(16) அப்போது நான், அந்தத் திசையில் இருந்து மரங்கள் அடர்ந்த விந்திய மலைத்தொடருடன் கூடியதும், சந்தன மரங்களால் நிறைந்திருப்பதுமான தக்ஷிண {தெற்குத்} திசையை நோக்கி ஓடினேன்.(17) மரங்களையும், சைலங்களையும் தாண்டி தக்ஷிணத்திலிருந்து மற்றொன்றை {தெற்கில் இருந்து மேற்கைப்} பார்த்துக் கொண்டிருந்தபோது, மீண்டும் வாலியால் விரட்டப்பட்டு மற்றொரு {மேற்குத்} திசைக்கு ஓடினேன்.(18) அத்தகைய நான், விதவிதமான தேசங்களையும், சிறந்த அஸ்த கிரியையும் கண்டேன். சிறப்புவாய்ந்த அஸ்த கிரியையும் அடைந்த பிறகு, வடக்கு நோக்கி ஓடினேன்.(19) 

ஹிமவந்தம் {இமயம்}, மேரு, அதே போல உத்தர சமுத்ரம் ஆகியவற்றுக்கும் வாலியால் விரட்டப்பட்ட போது, வேறு புகலிடம் எதையும் அறியாதிருந்தேன்.{20} அப்போது, புத்திசம்பன்னனான {ஞானம் நிறைந்தவனான} ஹனுமான் என்னிடம் {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னான்:(20,21அ) “இராஜன் {அரசே, சுக்ரீவரே}, இப்போது எனக்கு நினைவு வருகிறது. எதன்படி ஹரீஷ்வரரான வாலியை{21} மதங்கர் சபித்தாரோ, அதன்படி அவருடைய {மதங்கரின்} ஆசிரம மண்டலத்திற்குள் வாலி பிரவேசித்தால், அவரது தலை நூறு துண்டுகளாகச் சிதறும்.{22} எனவே, அங்கே நாம் வாசம் செய்தால் கவலையின்றி சுகமாக இருக்கலாம்” {என்றான் ஹனுமான்}.(21ஆ-23அ)

நிருபாத்மஜரே {மன்னரின் மகனான ராமரே}, பிறகு, ரிச்யமூக பர்வதத்தை அடைந்தேன். வாலி, மதங்கரிடம் கொண்ட பயத்தால் அங்கே பிரவேசிக்கவில்லை. இராஜன் {ராமரே}, இவ்வாறே அப்போது பிருத்வி மண்டலம் முழுவதையும் பிரத்யக்ஷமாக நான் கண்டேன். அதன்பிறகே குகையை வந்தடைந்தேன்.(23ஆ,24)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 46ல் உள்ள சுலோகங்கள்: 24

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை