Hospitality offered by Bharadwaja | Ayodhya-Kanda-Sarga-091 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: பரதனுக்கும், அவனது படைக்கும் பரத்வாஜர் விமரிசையாகச் செய்த விருந்தோம்பல்; விருந்துக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய விஷ்வகர்மாவை இருப்புக்கு அழைத்தது...
கைகேயி புத்திரனான பரதன் அங்கே வசிப்பதெனத் தீர்மானித்த போது அந்த முனிவர் {பரத்வாஜர்}, அவனை அதிதியாக {விருந்தினராக} அழைத்தார்.(1) அப்போது பரதன் அவரிடம், "பாத்தியமும் {கால்களைக் கழுவுவதற்கான நீரும்}, அர்க்கியமும் {கைகளைக் கழுவுவதற்கான நீரும்}, வனத்தில் விளைவனவற்றையுங் கொடுத்துத் தகுந்த ஆதித்யத்தை {விருந்தோம்பலை} நீர் செய்துவிட்டீர்" என்றான்.(2)
அப்போது பரத்வாஜர் புன்னகைத்தவாறே பரதனிடம் {பின்வருமாறு} பேசினார், "நீ பிரீதியால் {அன்பால்} நிறைந்தவன் என்பதையும், இருப்பதில் நிறைவடைபவன் என்பதையும் நான் அறிவேன்.(3) மனுஜரிஷபா {மனிதர்களில் காளையே}, உன்னுடைய இந்த சேனைக்கு போஜனம் படைக்க நான் விரும்புகிறேன். என் விருப்பத்தை நான் எண்ணிய வண்ணம் செய்ய விடுவதே உனக்குத் தகும்.(4) புருஷரிஷபா {மனிதர்களில் காளையே}, ஏன் தொலைதூரத்தில் பலத்தை {படையை} நிறுத்திவிட்டு இங்கே வந்தாய்? ஏன் பலத்துடன் {படையுடன்} நீ இங்கே வரவில்லை?" {என்று கேட்டார்}.(5)
பரதன், தன் கைகளைக் குவித்து அந்த தபோதனரிடம் இதை மறுமொழியாகச் சொன்னான், "பகவானே, பகவத்பயத்தாலேயே {உம்மிடம் கொண்ட அச்சத்தாலேயே} நான் சைன்னியத்துடன் வரவில்லை.(6) பகவானே, ராஜனோ, ராஜபுத்திரனோ எக்காலத்திலும் தபஸ்விகள் இருக்கும் இடங்களை எத்தனத்தோடு {முயற்சியுடன் கவனமாகத்} தவிர்க்க வேண்டும்.(7) பகவானே, என்னைப் பின்தொடர்ந்து வரும் முக்கிய வாஜிகளும் {குதிரைகளும்}, மனுஷ்யர்களும், மதங்கொண்ட சிறந்த வாரணங்களும் {யானைகளும்} மகத்தான பூமியை {பெரும்பரப்புள்ள நிலத்தை} மறைத்திருக்கின்றன.(8) அவை ஆசிரமங்களில் உள்ள விருக்ஷங்களையும் {மரங்களையும்}, குடில்களையும், பூமியையும் {நிலத்தையும்}, நீரையும் அழித்துவிடக்கூடாது என்பதற்காகவே நான் ஏகனாக {தனி ஒருவனாக} வந்தேன்[1]" {என்றான் பரதன்}.(9)
[1] இதற்கு முந்தைய சர்க்கமான அயோத்தியா காண்டம் 90ம் சர்க்கத்தில், 3ம் சுலோகத்தில், "பரதன் வசிஷ்டரைப் பின்தொடர்ந்து பரத்வாஜரிடம் சென்றான்" என்றிருக்கிறது.
அதன் பிறகு, "சேனை இங்கே அழைக்கப்படட்டும்" என்ற அந்தப் பரமரிஷியின் ஆணையின் பேரில், சேனையின் வரவை பரதன் அனுமதித்தான்.(10)
அப்போது அக்னிசாலைக்குள் பிரவேசித்தவர் {பரத்வாஜர்}, நீரைப் பருகி {உதடுகளையும், கைகளையும்} துடைத்துக் கொண்டு, ஆதித்ய காரியத்துக்காக {விருந்தினர்களை உபசரிக்கப் பின்வருமாறு} விச்வகர்மாவை இருப்புக்கு ஆழைத்தார்:(11) "நான் ஆதித்யம் செய்ய {விருந்து கொடுக்க} விரும்புகிறேன். அதற்கான ஏற்பாடுகளை எனக்காகச் செய்ய தேவதச்சனான விச்வகர்மாவை நான் அழைக்கிறேன்.(12) நான் ஆதித்யம் செய்ய {விருந்து கொடுக்க} விரும்புகிறேன். அதற்கான ஏற்பாடுகளை எனக்காகச் செய்ய சக்ரனின் {இந்திரனின்} தலைமையிலானவர்களும், லோகபாலர்களுமான திரிதேவர்களை {யமன், வருணன், குபேரன் ஆகியோரை} நான் அழைக்கிறேன்.(13) பிருத்வியிலும் {பூமியலும்}, அந்தரிக்ஷத்திலும் {ஆகாயத்திலும்} கிழக்காகவும், மேற்காகவும் பாயும் நதிகள், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் ஒன்று கூடி இங்கே வரட்டும்.(14) {அவற்றில்} சில மைரேயமாகப் பாயட்டும், சில உயர்ந்த சுரையையும், வேறு சில கரும்பு ரசம் போன்ற இனிமையுடன் கூடிய குளுமையான நீரையும் பெருக்கட்டும்[2].(15)
[2] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "கிழக்கு நோக்கியோடுகிறவைகளும், மேற்கு நோக்கியோடுகிறவைகளும், பூமியிலும் ஆகாயத்திலுமிருக்கிற நதிகள் எவைகளோ அவைகளெல்லாம் எல்லாப்பக்கங்களிலிருந்தும், இப்பொழுது ஒன்று கூடி வரட்டும். சிலவைகள் மைரேயம் என்னும் மதுவையும், சிலவைகள் சுரை என்னும் மதுவையும் நல்ல அமைப்புடைய மற்றவைகள் குளிர்ந்த கரும்புச் சாறை நிகர்த்த தீர்த்தத்தையும் பெருக்கட்டும்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "குணதிசையை நோக்கியும் குடதிசையை நோக்கியும், பெருகி வருகின்ற நதிகளையும் அழைத்து, பூமியிலும், ஆகாயத்திலும், நாற்புறத்திலிருந்து பெருகி வரக்கடவீர்கள். உங்களுள் சிலர் காஜூரத்தின் மத்தியத்தையும், சிலர் கௌடீ, பைஷ்டீ, மாத்துவீ யென்று மூவகைப்பட்ட சுரைகளையும், வேறு சிலர் கரும்பின் சாற்றுக்கு நிகராகிய தண்ணீரையும் பெருகக் கடவீர்கள்" என்றிருக்கிறது.
தேவகந்தர்வர்களான விச்வாவசு, ஹாஹா, ஹுஹு ஆகியோரையும், அப்சரஸ் தேவிகளையும், அனைத்துப் பக்கங்களிலும் இருக்கும் கந்தர்விகளையும் நான் அழைக்கிறேன்.(16) கிருதாசி, விச்வாசி, மிச்ரகேசி, அலம்புஸை, நாகதந்தை, ஆகியோரையும், மலைகளில் வசிப்போரான ஹேமை, ஹிமை ஆகியோரையும்,(17) சக்ரனுக்கு {இந்திரனுக்குப்} பணிவிடை செய்யும் அழகிய பெண்களையும், பிரம்மனுக்குப் பணிவிடை செய்வோர் அனைவரையும், {மேற்கண்டோரின் ஆசானான} தும்புருவுடன் கூடிய அவரவர் பரிவாரங்களையும் நான் அழைக்கிறேன்.(18) ஆடையாபரணங்களை இலைகளாகக் கொண்டதும், திவ்யநாரீகளை {தேவமாதர்களைப்} பழங்களாகக் கொண்டதும், உத்தர குருவில் இருப்பதும், குபேரனுக்குரியதுமான திவ்யவனம் இங்கே தோன்றட்டும்.(19) சோம பகவான் {சந்திரன்} வித விதமான உத்தம அன்னங்களையும், மென்று, {பாயசம் போன்று} உறிஞ்சி, {தேன் போல} நக்கி என உண்ணத்தக்க பிற உணவு வகைகளையும்,[3] மரங்களில் பறித்த பல வண்ண மலர்களாலான மாலைகளையும், சுரை {சுராபானம்} போன்ற பல வகையான பானங்களையும், வித விதமான மாமிசங்களையும் இங்கே எனக்கு ஏராளமாக அளிக்கட்டும்" {என்று வேண்டினார் பரத்வாஜர்}.(20,21)
[3] நரசிம்மாசாரியர் பதிப்பில், "மிகுந்த மஹிமை பொருந்திய சந்த்ரன் இவ்விடத்தில் எனக்காக பக்ஷ்ய போஜ்ய சோஷ்ய லேஹ்யங்களென்னும் நான்கு வகைப்பட்ட அன்னங்களையும், அவற்றில் ஒவ்வொன்றும் பலவிதமாகவும் அளவின்றியிருக்கும்படியும் நிருமிப்பானாக" என்றிருக்கிறது.
ஒப்பற்ற தேஜஸும், தபமும் கொண்ட அந்த முனிவர், சமாதி நிலையில் {ஆழ்ந்த தியானத்தில் வேதாந்தங்களின் உச்சரிப்புக்கு இணங்கிய} சிக்ஷையின் குரலில் இவ்வாறு வேண்டினார்.(22) கூப்பிய கைகளுடனும், கிழக்கு நோக்கிய முகத்துடனும் மனத்துக்குள் அவர் இவ்வாறு தியானித்துக் கொண்டிருந்தபோது, அந்த தேவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக அங்கே வந்தனர்.(23) மலயம், தர்துரம் ஆகியவற்றை {ஆகிய மலைகளைத்} தீண்டுபவனும், வியர்வையைப் போக்குபவனுமான அநிலன் {காற்றானவன்}, பிரியமான, சுகமான, மங்கலமான இயல்புடன் அங்கே வீசினான்.(24) அதன்பிறகு, மேகங்களும் திவ்யமான மலர்மாரியைப் பொழிந்தன. திக்குகள் அனைத்திலும் திவ்யமான துந்துபி கோஷம் கேட்டது.(25) காற்றின் மெல்லிசை உண்டாக்கிய சலசலப்புக்கு ஏற்ப அப்சரகணங்கள் நடனமாடினார்கள், தேவகந்தர்வர்கள் பாடினார்கள், வீணைகள் தங்கள் சுவரங்களை முழங்கின.(26) மென்மையாக வெளிப்பட்ட, இனிய, லயமிக்க சப்தங்கள், வானத்திலும், பூமியிலும் பிராணிகளின் காதுகளிலும் நுழைந்தன.(27) மனிதர்கள் கேட்பதற்கு சுகமான அந்த திவ்ய சப்தங்கள் நின்றதும், பரதனின் சைன்னியமானது விச்வகர்மாவின் அற்புத படைப்புகளைக் கண்டது.(28) சுற்றிலும் ஐந்து யோஜனைகள் {சற்றேறக்குறைய இருபது மைல்கள்} அளவு கொண்ட சமமான பூமியானது, நீல வைடூரியங்களை போன்ற புல்விரிப்புகள் பலவற்றால் மறைக்கப்பட்டது.(29) அங்கே வில்வம், விளா, பலா, மாதுளை / கொய்யா, நெல்லி, மா மரங்கள் ஆகியன பழங்கள் நிறைந்தவையாக விளங்கின.(30) உத்தர குருவில் உள்ள ஒரு திவ்யபோகவனமும், தீரங்களில் மரங்கள் பலவற்றால் வடிவமைக்கப்பட்ட ஒரு தெய்வீக நதியும் அங்கே தோன்றின.(31)
கஜவாஜிகளுக்கான சாலைகளுடன் {யானைகள், குதிரைகளுக்கான லாயங்களுடன்} கூடியவையும், காவல் கோட்டங்களுடன்கூடிய கோபுரங்களையும், தோரண வாயில்களையும் கொண்டவையும், சுபமானவையுமான சதுர மாளிகைகள் அங்கே தோன்றின.(32) மேகத்தைப் போல பளபளப்பதும், அழகிய தோரணங்களுடன் கூடியதும், வெண்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், திவ்ய கந்தங்களால் {தெய்வீக நறுமணப் பொருள்களால்} நிறைந்ததும், சமகோணமுள்ளதும் {நாற்சதுர அளவுகளில் அமைந்ததும்}, விசாலமானதும், சயனங்கள் {மஞ்சங்கள்}, ஆசனங்கள், யானங்களுடனும் {பல்லக்குகளுடனும்}, திவ்யமான சர்வ ரசங்களுடனும் {தெய்வீகச் சாறுகள் அனைத்துடனும்}, திவ்யமான போஜன {சிற்றுண்டி}, வஸ்திரங்களுடனும் {ஆடைகளுடனும்}, நன்கு தயாரிக்கப்பட்ட அனைத்துவகை அன்னங்களுடனும் {உணவுடனும்}, மாசற்ற தூய்மையான பாத்திரங்களுடனும், முறையான அனைத்து வகை ஆசனங்களுடனும் {இருக்கைகளுடனும்}, ஆடம்பர விரிப்புகளைக் கொண்ட உத்தம சயனங்களுடனும் {மஞ்சங்களுடனும்} கூடியதும், செல்வம் நிறைந்ததுமான ஒரு ராஜ வேஷ்மமும் {அரச மாளிகையும்} அங்கே தோன்றியது.(33-35)
மஹாபாஹுவும், கைகேயிசுதனுமான பரதன், அந்த மஹரிஷியின் அழைப்பின் பேரில் ரத்ன சம்பூர்ணமான அந்த வேஷ்மத்திற்குள் {மாளிகைக்குள்} பிரவேசித்தான்.(36) அவனைப் பின்தொடர்ந்து சென்ற மந்திரிமார்கள், புரோஹிதர்கள் அனைவரும் அந்த வேஷ்மத்தின் சிறப்புகளைக் கண்டு மகிழ்ச்சியால் நிறைந்தனர்.(37) மந்திரிகளுடன் கூடிய பரதனும், ஏற்கனவே ஒரு ராஜாவால் பயன்படுத்தப்பட்டதைப் போல {அங்கே இருந்த} திவ்யமான ராஜாசனம் {அரியணை}, சாமரம், குடை ஆகியவற்றை வலம் வந்தான்.(38) இராமனே இருப்பதைப் போல அந்த ஆசனத்தை வணங்கிப் பூஜித்த அவன், சாமரத்தை எடுத்துக் கொண்டு, முதன்மந்திரிக்கான ஆசனத்தில் அமர்ந்தான்.(39) மந்திரிகள், புரோஹிதர்கள் அனைவரும் வரிசைப்படி அமர்ந்தனர். அவர்களுக்குப் பின்னால் சேனாதிபதியும், இறுதியாக அந்த முகாமின் நிர்வாகியும் அமர்ந்தனர்.(40)
ஒரு முஹூர்த்த காலத்தில், பரத்வாஜரின் ஆணையின் பேரில் பாயசமும், குழம்பும் கொண்ட நதிகள் அங்கே பரதனை நோக்கிப் பாய்ந்தன.(41) அவற்றின் இரு கரைகளிலும், வெண்சுண்ணம் பூசப்பட்டவையும், பிரம்மனின் அருளால் உண்டானவையுமான தெய்வீக வீடுகள் தோன்றின.(42) அந்த முஹூர்த்தத்திலேயே திவ்யாபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட இருபதாயிரம் ஸ்திரீகள், பிரம்மனால் அனுப்பப்பட்டவர்களாக அங்கே வந்தனர்.(43) சுவர்ணம், மணி, முத்து, பவளம் ஆகியவற்றுடன் பிரகாசிக்கும் இன்னும் இருபதாயிரம் ஸ்திரீகளும் குபேரனால் அனுப்பப்பட்டவர்களாக அங்கே வந்தனர்.(44) எந்தப் புருஷனானாலும், தன்னைத் தழுவியதும் மதிமயங்கும் வகையிலான இருபதாயிரம் அப்சரஸ் கணங்கள் நந்தனத்திலிருந்து {இந்திரனின் தேவலோகத் தோட்டத்திலிருந்து} வந்தனர்.(45) சூரியனைப் போலப் பிரகாசிக்கும் நாரதர், தும்புரு, கோபர் உள்ளிட்ட மிகச் சிறந்த கந்தர்வராஜர்கள் பரதனின் முன்னிலையில் பாடத்தொடங்கினர்.(46)
பரத்வாஜருடைய சாசனத்தின் {ஆணையின்} பேரில் அலம்புஸை, மிச்ரகேசி, புண்டரிகை, வாமனை ஆகியோர் பரதனின் முன்னிலையில் ஆடத் தொடங்கினர்.(47) தேவர்களுக்குரியவையும், சைத்ரரத வனத்தில் விளைபவையுமான மலர் மாலைகள் பரத்வாஜருடைய சாசனத்தின் பேரில் அங்கே பிரயாகையில் காணப்பட்டன.(48) பரத்வாஜருடைய சாசனத்தின் பேரில் வில்வ மரங்கள் மிருதங்கமிசைத்தன, விபீதக {தாளி} மரங்கள் தாளம்போட்டன, அரச மரங்கள் நர்த்தனம்புரிந்தன.(49) சரளம் {தேவதாரு}, பனை, திலகம் {மஞ்சாடி}, நக்தமாலகம் {புங்கை} முதலிய மரங்கள் குப்ஜர்களாகவும், வாமனர்களாகவும் {கூனர்களாகவும், குள்ளர்களாகவும்} மாறி மகிழ்ச்சியுடன் அங்கே வந்தன.(50)
அந்த பரத்வாஜ ஆசிரமத்தில், சிம்சுபை {அசோகம்}, நெல்லி, ஜம்பு {நாவல்} ஆகிய மரங்களும் மாலதி, மல்லிகை, ஜாதி உள்ளிட்ட கானகக் கொடி வகைகளும், பெண் வடிவந்தரித்து வந்து, {பின்வருமாறு} பேசின:(51,52அ) "ஸுராபர்களே {குடிகாரர்களே}, விரும்பும் அளவுக்கு ஸுரையையும், பாயஸத்தையும் பருகுவீராக. பசித்தவர்களே, பக்குவமிக்க மாமிசத்தை உண்பீராக" {என்றன}.(52ஆ,53)
ஒவ்வொரு புருஷனுக்கும் {ஆடவனுக்கும்} ஏழு, எட்டு இளம்பெண்கள் வீதம் அந்த அழகிய நதி தீரத்தில் அங்கமர்த்தனஞ்செய்து ஸ்நானம் செய்வித்தனர் {உடம்பைப் பிடித்துவிட்டு குளிப்பாட்டினர்}.(54) அழகிய கண்களைக் கொண்ட நாரியைகள் {பெண்கள்} ஓடிவந்து அவர்களுக்கு எண்ணெய் பூசினர். அதேபோலவே சில வராங்கனைகள் {அழகிய பெண்கள்} அவர்களின் மேனியைத் துடைத்துவிட்டு அன்யோன்யம் மதுவைப் பகிர்ந்து பருகினர்.(55)
குதிரைகள், யானைகள், கழுதைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றுக்கும், சுரபியின் மகன்களுக்கும் {காளைகளுக்கும்} விதிப்படி அதனதற்குரிய தீனியை வாகன ரக்ஷகர்கள் ஊட்டினர்.(56) மஹாபலவான்களான இக்ஷ்வாகு வழித்தோன்றல்களுடைய படைவீரர்களின் விலங்குகளுக்கு கரும்புகளையும், தேன் கலந்த தவிடு முதலியவற்றையும் கொடுத்து உண்ணத் தூண்டினர்.(57) அச்வபந்தன் {குதிரைக்காரன்} தன் அச்வத்தை {குதிரையை} அறியவில்லை, குஞ்சரக்ரஹன் {யானைப் பாகன்} தன் கஜத்தை {யானையை} அறியவில்லை. அங்கே அந்த சம்மு {படை} மிதமிஞ்சிய மகிழ்ச்சி வெறியில் மெய்மறந்திருப்பதாகத் தோன்றியது.(58) ஆசைகள் அனைத்தும் ஈடேறியவர்களாக திருப்தியடைந்து, மேனியில் செஞ்சந்தனம் பூசிக் கொண்டு, அப்சரஸ்கள் சூழ இருந்த அந்த சைனியத்தார் {தங்களுக்குள்} ஒருவருக்கொருவர் இந்தச் சொற்களைச் சொன்னார்கள்:(59) "நாம் அயோத்திக்கோ, தண்டகத்திற்கோ செல்ல வேண்டாம். பரதன் {அயோத்தியில்} க்ஷேமமாக {நலமாக} இருக்கட்டும். இராமனும் {தண்டகத்திலேயே} சுகமாக இருக்கட்டும். {நாம் இங்கேயே இருப்போம்}" {என்றனர்}.(60)
காலாட்படையினரும், ஹஸ்த அச்வங்களில் ஆரோஹணஞ்செய்பவர்களும் {யானை, குதிரைகளில் ஏறிச் செல்பவர்களும்}, அவற்றைக் கட்டுபவர்களும் இந்த விதியை {விருந்தோம்பலை} அடைந்த அநாதைகளாக {நாதனற்றவர்களாக} இந்தச் சொற்களை இவ்வாறே சொன்னார்கள்.(61) பரதனைப் பின்தொடர்ந்த ஆயிரக்கணக்கான நரர்கள், மகிழ்ச்சியின் உச்சத்தில் கூச்சலிட்டவாறே, "இதுவே ஸ்வர்க்கம்" என்றனர்.(62) ஆயிரக்கணக்கான சைனிகர்களும் {படைவீரர்களும்} மாலைகளை அணிந்து கொண்டு நர்த்தனம் செய்தனர்; சிரித்தனர்; பாடினர்; இங்கேயும் அங்கேயும் ஓடினர்.(63) அமுதத்திற்கு ஒப்பான அன்னத்தை உண்டவர்களுக்கும், அங்கே திவ்யபக்ஷ்யங்களை {தெய்வீகமான சிற்றுண்டிகளைக்} கண்டபோது, அவற்றை உண்ணும் ஆசை {மீண்டும்} எழுந்தது.(64) அந்தப் படையிலுள்ள பணிப்பெண்களும், பணியாட்களும், வீரர்களின் இளம் மனைவியரும் புத்தாடைகளை உடுத்திக் கொண்டு பெருந்திருப்தியுடன் இருந்தனர்.(65) குஞ்சரங்கள் {யானைகள்}, கழுதைகள், ஒட்டகங்கள், கோக்கள் {பசுக்கள்}, அச்வங்கள் {குதிரைகள்}, மிருகங்கள், பக்ஷிகள் ஆகியவற்றுக்குத் தகுந்த தீனிகள் கொடுக்கப்பட்டதால் அவை வேறெதையும் வேண்டாமல் {ஒன்றையொன்று பீடிக்காமல்} இருந்தன.(66) அங்கே புழுதியடைந்த உடையுடனோ, பசித்தவனாகவோ, அழுக்கடைந்தவனாகவோ எவனும் காணப்படவில்லை. தூசியில் மறைந்த தலைமயிரைக் கொண்ட எந்த நரனும் அங்கே இல்லை.(67)
சுவையுஞ்சாறுமிக்க சிறந்த ஆட்டிறைச்சியாலும், பன்றியிறைச்சியாலும், மணமும், சுவையுமிக்க குழம்புகளாலும், பழச்சாறுகளாலும், வெண்ணிற அன்னத்தாலும் {சோற்றால்} நிறைந்தவையும், மலர்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான அரிய உலோகப் பாத்திரங்கள் ஆயிரக்கணக்கானவற்றை அங்கே அனைத்துப் பக்கங்களிலும் கண்ட நரர்கள் ஆச்சரியமடைந்தனர்.(68,69)
அந்த வனத்தின் ஓரங்களில் இருந்த கிணறுகளில் பாயஸங்கள் ஊறின; அங்கிருந்த பசுக்கள் காமதேனுக்களாகின; மரங்கள் தேனைச் சொரிந்தன.(70) வாவிகள் மைரேய மது நிறைந்தவையாகின; அவற்றைச் சுற்றிலும் நன்கு பக்குவம் செய்யப்பட்ட மான், மிருஷ்ட மாமிசத்தால் {மான் / மயில் / கோழி இறைச்சியால்} நிறைந்த சூடான பானைகள் இருந்தன.(71) ஆயிரக்கணக்கான பாத்திரங்களும், லட்சக்கணக்கான வெள்ளிப் பானைகளும், கோடிக்கணக்கான பொன்குடங்களும், தயிரால் நிறைந்த தூய்மையான பாத்திரங்களும், அகன்ற வாய் கொண்ட நீர்க்குடங்களும் அங்கே இருந்தன.(72)
அங்கே மடுக்கள் சிலவற்றில் விளாம்பழத்தின் மணமுள்ளதும், புளிக்காததும், வெளுத்ததுமான கபித்தமென்னும் மோரும், மேலும் சிலவற்றில் சர்க்கரை சேர்த்து, {சுக்கு, திப்பிலி, மிளகு, ஏலம், லவங்கம், தக்கோலம், நாகபுஷ்பங்கள், இஞ்சி, சீரகம் ஆகியவற்றால்} மணமூட்டப்பட்ட ரஸாலமென்னும் மோரும், இன்னுஞ்சிலவற்றில் தயிரும், சிலவற்றில் பாயஸமும் நிறைந்திருந்தன. சிலவற்றில் சர்க்கரை கலந்த யவகோதுமை அப்பங்கள் குவியல் குவிலாகக் கிடந்தன. அந்த நரர்கள் சரிதத்தீர்த்தங்களில் {நதித்துறைகளில்} நறுமணப்பொடிகள், கஷாயங்கள் போன்ற ஸ்நானத்திற்கு வேண்டிய பலவகை பொருள்கள் நிரம்பிய பாத்திரங்களைக் கண்டனர். (73-75)
தூரிகை போன்று வெளுத்த நுனியுடன் கூடிய {பற்களை சுத்தம் செய்யப் பயன்படும்} தந்தகாஷ்டங்களின் {பற்குச்சிகளின்} குவியல்கள், வெண்சந்தனக் குழம்பு நிறைந்த கிண்ணங்கள், பளபளப்பான கண்ணாடிகள், துணிக்குவியல்கள், ஆயிரக்கணக்கான பாதுகை ஜதைகள் {காலணி ஜோடிகள்}, அஞ்சனம் {கண் மை} நிறைந்த சிமிழ்கள், சீப்புகள், கூர்ச்சங்கள் {மீசை முதலியவற்றை ஒழுங்கு செய்யும் தூரிகைகள்}, வஸ்திரங்கள், குடைகள், தனுக்கள் {விற்கள்}, மர்மங்களைக் காக்கும் {பாதுகாப்புக்} கவசங்கள், சித்திரவிசித்திரமான சயனங்கள் {மஞ்சங்கள்}, ஆசனங்கள் ஆகியவற்றையும், கழுதைகள், ஒட்டகங்கள், கஜங்கள் {யானைகள்}, வாஜிகள் {குதிரைகள்} ஆகியவை நீர் பருகுவதற்கான மடுக்களையும், தாமரைகளும், கருநெய்தல்களும் நிறைந்தவையும், ஆகாச வண்ணத்தில், நீலத்தையும், வைடூரியத்தையும் ஒத்த மென்மையான புற்கள் நிறைந்த கரைகளுடனும்[4], படித்துறைகளுடனும், நீராடுவதற்கான தெளிந்த நீருடனும் கூடியவையுமான மடுக்களையும் சுற்றிலும் அவர்கள் கண்டனர்.(76-80)
[4] நரகதர்க்கு அறம் நல்கும் நலத்த நீர்கரகதக் கரி கால் நிமிர்த்து உண்டனமரகதத்தின் கொழுந்து என வார்த்த புல்குரகதத்தின் குழாங்களும் கொண்டவே- கம்பராமாயணம் 2590ம் பாடல்பொருள்: நரகத்தை அடையவல்ல பாபிகளுக்கும் புண்ணியப் பயனான அறத்தை நல்கும் நல்ல நீரைத் துதிக்கையுடன் கூடிய மதங்கொண்ட யானைகள் தங்கள் கால்களை நிமிர்த்திப் பருகின. மரகதத்தின் பிரகாசத்துடன் கூடிய நீண்ட புற்களைக் குதிரைக்கூட்டங்கள் உண்டன.
அந்த மஹரிஷியால் {பரத்வாஜரால்} வழங்கப்பட்ட அத்தகைய அற்புதமான, ஸ்வப்னம் போன்ற ஆதித்யத்தை {விருந்தோம்பலைக்} கண்டு அந்த மனுஷ்யர்கள் அனைவரும் வியப்படைந்தனர்.(81) இவ்வாறு நந்தனத்தில் தேவர்களைப் போல அந்த ரம்மியமான பரத்வாஜ ஆசிரமத்தில் அவர்கள் இன்புற்றிருக்கையில் அந்த ராத்திரியும் கழிந்தது.(82) நதிகளும், கந்தர்வர்களும், வராங்கனைகள் {அழகிய பெண்கள்} அனைவரும் எவ்வாறு வந்தனரோ அவ்வாறே பரத்வாஜரின் அனுமதியின் பேரில் திரும்பிச் சென்றனர்.(83) மதுவின் மயக்கத்தில் இருந்த நரர்கள் அவ்வாறே உற்சாகத்தில் திளைத்தபடியே, திவ்யமான அகில், சந்தனப் பூச்சுகளுடன் முன்பைப் போலவே படுத்திருந்தனர். அதே போலவே நறுமணத்துடன் கூடிய விதவிதமான திவ்யமாலைகள் தொலைவில் நசுங்கி, சிதறிக் {மாலைகளின் மலர்கள் வாடி வதங்கி உதிர்ந்து தனித்தனியே விழுந்து} கிடந்தன.(84)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 091ல் உள்ள சுலோகங்கள்: 84
Previous | | Sanskrit | | English | | Next |