Sunday 5 December 2021

அயோத்தி பிரவேசம் | பால காண்டம் சர்க்கம் - 77 (29)

Return to Ayodhya | Bala-Kanda-Sarga-77 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மகன்கள், மருமகள்களுடன் அயோத்தி நகருக்குள் நுழைந்த தசரதன்; பரதனும், சத்ருக்கனும் தங்கள் தாய்மாமனுடன் புறப்பட்டுச் சென்றது; ராமன் மற்றும் சீதையின் குணங்கள்...

SitaRama

இராமர் {பரசுராமர்} புறப்பட்டுச் சென்றதும், பிரஷாந்தாத்மாவான தாசரதி {கோபத்தைவிட்டு இதயம் அமைதியடைந்தவனும், தசரதனின் மகனுமான} ராமன், பெரும்புகழ்வாய்ந்த அந்த தனுவை ஒப்பற்றவனான வருணனின் கைகளில் தத்தம் செய்தான்.(1) பின்பு, ரகுநந்தனனான ராமன், வசிஷ்டரையும், பிற முக்கிய ரிஷிகளையும் வணங்கி, திகைத்து நிற்கும் தன் பிதாவை {தசரதனைக்}[1] கண்டு அவனைத் தணிக்கும் வகையில்,(2) "ஜாமதக்னேய ராமர் சென்றுவிட்டார். பாலிக்கும் நாதனான {ஆளும் தலைவரான} உமது ஆணையை எதிர்பார்த்திருக்கும் சதுரங்க சேனைகளுடன் நாம் அயோத்திக்குப் புறப்படலாம்" {என்றான் ராமன்}.(3)

[1] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "தசரதன் திகைத்து நின்று கொண்டிருந்ததனால், பரசுராமன் ராமனைப் பரதைவமாக ஸ்தோத்ரஞ் செய்ததும், விஷ்ணுதனுஸ்ஸை ராமன் வருணனது கையிற் கொடுத்ததும் அறியானென்று தோன்றுகின்றது. மற்றவர்களுக்கு மாயாதிரோதாநத்தினால் அவை தெரியவில்லை யென்றுணர்க" என்றிருக்கிறது.

தசரத ராஜன், ராமனின் வசனத்தைக் கேட்டுத் தன் மகனான அந்த ராகவனை இருகரங்களிலும் வாரி அணைத்துக் கொண்டு, நெற்றியில் முத்தமிட்டான். ராமர் {பரசுராமர்} சென்றுவிட்டதைக் கேட்டு மகிழ்ச்சியும், பேரானந்தமும் அடைந்த அந்த நிருபன் {மன்னன்}, புத்திரர்களுடன் தானும் புனர்ஜன்மம் அடைந்ததை {மீண்டும் பிறந்ததைப்} போல எண்ணினான்[2].(4,5) பிறகு அந்த ராஜா முன்னேறும்படி அந்தச் சேனைக்கு ஆணையிட்டான். பதாகைகளுடனும், துவஜங்களுடனும் {கொடிக் கம்பங்களுடனும்} கூடியதும், ரம்மியமானதும், தூரிய கோஷங்கள் முழங்கிக் கொண்டிருந்ததும், {புழுதி எழாமல் இருக்க} நனைக்கப்பட்ட ராஜபாதைகளுடன் கூடியதும், மலர்கள் தூவப்பட்டதும், ராஜனின் பிரவேசத்தில் மலர்ந்த முகங்களைக் கொண்டதும், மங்கலமொழிகளைக் கூறி வரவேற்கும் நகரத்தாருடன் கூடியதும், ஜனக்கூட்டங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்த ரம்மியமான {அயோத்தி} நகருக்குள் அவர்கள் நுழைந்தனர்.(6,7,8அ)

[2] தசரதனின் நிலை நரசிம்மாசாரியர் பதிப்பில் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது: "தசரதசக்ரவர்த்தி இங்ஙனம் ராமன் மொழிந்த வார்த்தைகளைக் கேட்டு அப்புதல்வனை இரண்டு கைகளாலும் கட்டியணைத்து உச்சி மோந்தனன். முதலில் பரசுராமன் போனானென்று ராமன் சொல்லியும், அப்பொழுது பயத்தினால் அவ்வார்த்தையை ஸ்பஷ்டமாகத் தசரத மன்னவன் அறியாதிருந்து கொஞ்சம் தெளிந்த பின்பு மீளவும் ராமன் உரைக்க, பரசுராமன் போனானென்று கேள்விப்பட்டு உடம்பெல்லாம் மயிர்க் கூச்சலிட்டுப் பேராநந்தம் அடைந்து, அப்பொழுது தானும் தன் புத்ரர்களும் தப்பிப் பிழைத்தது புநரிஜந்ம மென்றெண்ணினன்" என்றிருக்கிறது.

நகரத்தாரும், நகரில் வசிக்கும் துவிஜர்களும் {இரு பிறப்பாளர்களும்} தூரத்தில் எதிர்கொண்டு அழைக்க, ஸ்ரீமான்களான புத்திரர்கள் பின்தொடர, ஸ்ரீமானும், பெரும்புகழ்பெற்றவனுமான ராஜா {தசரதன்}, இமயத்தைப் போன்ற கிருஹத்திற்குள் பிரியத்துடன் பிரவேசித்தான் {தன்னுடைய பெரும் மாளிகைக்குள் மகிழ்ச்சியாக நுழைந்தான்}.(8ஆ,9) ராஜா அந்தக் கிருஹத்திற்குள் சென்றதும், ஆனந்தமிக்கத் தன் ஜனங்களால் ஆசையுடன் நன்கு பூஜிக்கப்பட்டான். கௌசல்யையும், சுமித்ரையும், நல்லிடை கொண்ட கைகேயியும், மற்றுமுள்ள ராஜயோஷிதைகளும் {அரசமகளிரும்} மருமகள்களை வரவேற்பதில் ஆனந்தம் அடைந்தனர்.(10,11அ) அப்போது, அந்த நிருபயோஷிதைகளும் {ராஜனின் மனைவியர் அனைவரும்}, மஹாபாக்கியவதியான சீதையையும், பெரும் நற்பேறுபெற்ற ஊர்மிளையையும், குசத்வஜனின் மகள்கள் இருவரையும் {மாண்டவி, சுருதகீர்த்தி ஆகியோர்} வரவேற்றனர்.(11ஆ,12அ) பட்டாடை உடுத்தியிருந்த அவர்கள் அனைவரும் மங்கல ஆலாபனைகளும், ஹோமமும் செய்து தேவர்களை ஆலயங்களில் பூஜித்து ஒளிர்ந்தனர்.(12ஆ,13அ) அப்போது அந்த ராஜமகள்கள் அனைவரும் வணங்க வேண்டியவர்களை வணங்கி, தனிமையை அடைந்து, பர்த்தாக்களின் {கணவர்களின்} ஸஹிதம் மகிழ்ச்சியுடன் சுகமாக இருந்தனர்.(13ஆ,14அ) புதுமணம் புரிந்தவர்களும், அஸ்திரங்களில் தேர்ச்சியடைந்தவர்களுமான அந்த நரரிஷபர்கள் {மனிதர்களில் காளைகள்}, தனத்துடனும், நல்லிதயம் கொண்ட ஜனங்களுடனும் தங்கள் பிதாவுக்கு {தசரதனுக்குத்} துணை புரிவதில் ஈடுபட்டனர்.(14ஆ,15அ)

சில காலம் சென்றதும், ரகுநந்தனரான தசரதராஜன், கைகேயியின் புத்திரனான தன் மகன் பரதனிடம் சொன்னான்:(15ஆ,16அ) "புத்திரா, கேகயராஜனின் புத்திரனும், வீரனும், உன் மாதுலனுமான {தாய்மாமனுமான} இந்த யுதாஜித் உன்னை அழைத்துச் செல்ல காத்திருக்கிறான்" {என்றான்}.(16ஆ,17அ)

கைகேயி சுதனான பரதன், தசரதன் சொன்ன அனைத்தையும் கேட்ட பிறகு, சத்ருக்னனுடன் கூடியவனாகப் புறப்படத் தயாரானான்.(17ஆ,18அ) அந்த சூரன் {பரதன்}, தன் பிதாவிடமும் {தசரதனிடமும்}, எவருக்கும் வருத்தமின்றிக் காரியங்களைச் செய்யும் ராமனிடமும், மாதாக்களிடமும் விடைபெற்றுக் கொண்டான். பிறகு அந்த நரசிரேஷ்டன் {மனிதர்களில் சிறந்த பரதன்} சத்ருக்னனுடன் சேர்ந்து புறப்பட்டான்.(18ஆ,19அ) அப்போது யுதாஜித், பரதனையும், சத்ருக்னனையும் உறுதியாகப் பற்றிக் கொண்டான்[3]. அந்த வீரன் பெரும் மகிழ்ச்சியுடன் தன் நகருக்குள் பிரவேசித்துத் தன் பிதாவின் மகிழ்ச்சியை அதிகரித்தான்.(19ஆ,20அ)

[3] பாலகாண்டம் 73ம் சர்க்கத்தின் [1]ம் அடிக்குறிப்பில் தேசிராஜு ஹனுமந்தராவ் அவர்கள் விளக்கியிருப்பதற்கு முற்றிலும் வேறுவகையில் இங்கே யுதாஜித் நடந்து கொள்கிறான். அஃதாவது, அவன் தன் தங்கை கைகேயியின் மகனான பரதனை மட்டுமன்றி, அவளது சக்களத்தியான சுமித்ரையின் மகன் சத்ருக்னனையும் உறுதியாகப் பற்றிக் கொண்டு பாசத்துடன் அழைத்துச் செல்கிறான்.  

பரதன் புறப்பட்டுச் சென்ற பிறகு மஹாபலம் பொருந்திய ராமனும், லக்ஷ்மணனும் தேவனைப் போன்ற தங்கள் பிதாவைப் பூஜித்துக் கொண்டிருந்தனர்.(20ஆ,21அ) இராமன், தந்தையின் ஆஜ்ஞையை {ஆணையை} முன்னிட்டுக் கொண்டு, அனைவருக்கும் பிரியமானவையும், ஹிதமானவையுமான {நன்மை விளைவித்துத் தீமையைப் போக்கும்} நகரக் காரியங்களில் முழுமையாக ஈடுபட்டான். அவன் சுய ஒழுக்கத்துடன் மாதாக்களுக்கும், குருக்களுக்கும், குரு காரியங்களுக்கும் செய்ய வேண்டிய காரியங்களைக் காலாகாலத்திற்குக் கவனமாகச் செய்து வந்தான்.(21ஆ-23அ) ராமனின் நடவடிக்கைகளைக் கவனித்து தசரதன் பிரீதியடைந்ததைப் போலவே, பிராமணர்களும், வணிகர்களும், சர்வவிஷயவாசிகளும் {எந்தக் காரியத்திற்காகவும் நகரத்தில் வசித்து வருபவர்களும்} நிறைவடைந்தனர். உலகத்தில் பெரும்புகழ்பெற்றவனும், குணவானும், சத்தியபராக்கிரமனுமான ராமன், அவர்களுக்கு {மேற்சொன்ன பிராமணர் முதலிய அனைவருக்கும்} பூதங்களின் ஸ்வயம்பூவைப் போலத் {உயிரினங்களுக்குப் பிரம்மன் எவ்வாறோ அவ்வாறாகத்} திகழ்ந்தான்.(23ஆ-25அ)

மனஸ்வியான ராமன், எவள் மனத்தைத் துளைத்தானோ அந்த சீதையின் மனத்தில் அர்ப்பணிப்புடன் உறைந்து, அவளுடன் சேர்ந்து பல ருதுக்கள் {பருவ காலங்கள்} இன்புற்றிருந்தான்.(25ஆ,26அ) சீதை, பிதாவால் {தசரதனால்} ஏற்படுத்தப்பட்ட தாரமாக ராமனின் பிரியத்திற்குரியவளாகி இருந்தாள். {சீதையின்} குணத்தினாலும், ரூபகுணத்தினாலும் {அழகினாலும், ராமனிடம்} அந்தப் பிரீதி இன்னும் பெருகிவந்தது.(26ஆ,27அ) பர்த்தாவும் {கணவனும்}, அவளுடைய ஹிருதயத்தில் இருமடங்கு ஆழமாகப் பதிந்தான். ஹிருதயத்தின் அந்தரத்திற்குள் சென்று இருவரும் ஹிருதயங்களால் உரையாடிக் கொண்டனர்.(27ஆ,28அ) ரூபத்தில் தேவதைக்கு ஒப்பானவளும், ஸ்ரீரூபினியும் {உடல்கொண்டு வந்த லக்ஷ்மி தேவியும்}, மைதிலியும் {மிதிலையைச் சேர்ந்தவளும்}, ஜனகனின் மகளுமான {ஜானகியுமான} சீதை அதிக விசேஷங்களை அவனிடம் ஹிருதயப்பூர்வமாக உணர்ந்தாள்[4].(28ஆ,இ) இராஜரிஷிசுதனான {அரசமுனி தசரதனின் மகனான} ராமன், அதியாசை வைத்திருக்கும் அந்த உத்தம ராஜகன்னிகையுடன் சேர்ந்து, ஸ்ரீயுடன் கூடிய அமரேஷ்வரனும், விபுவுமான {எங்குமுள்ளவனுமான} விஷ்ணுவைப் போல அதிகப் பிரகாசத்துடன் ஒளிர்ந்தான்.(29)

[4] நரசிம்மாசாரியரின் பதிப்பில், "ராமனது ப்ரீதி அங்ஙனமிருக்க, ஸீதையின் மனத்திலும் அவள் பர்த்தாவாகிய ராமன் இருமடங்காகச் சுற்றிக் கொண்டிருந்தனன். (அதாவது ஸீதையின் மனத்திலும் பர்த்தாவினிடத்தில் ப்ரேமமானது இருமடங்காகப் பெருகிக்கொண்டிருந்தது.) ஸீதையின் மனத்திலுள்ள பதிப்ரேமமானது யாவருமறிய வொண்ணாதபடி மறைந்திருப்பினும், அதை ராமன் அதற்குள்ள அடையாளங்களால் ஊஹித்துத் தெரிந்து கொண்டிருந்தனன். எப்பொழுதும் தான் அவள் மனத்திலேயே சுற்றிக் கொண்டிருப்பவனாகையால் அவளது ப்ரேமம் எவ்வளவு மறைந்திருப்பினும், அதை அவன் அறியாதிருப்பனோ? சீதையும் தனது அந்தரங்கத்தை ராமன் அறிவதைக் காட்டிலும் மிகவும் மேலாகவே அவனது மனத்தைத் தான் அறிந்து கொண்டிருந்தனள். எப்படியெனில் ஹீதையோ மிதிலாபுரத்தில் பிறந்தவள்; ஜநகராஜன் புதல்வி. ஆகையால் தேசஸ்வபாவத்தினாலும், வம்ச ஸ்வபாவத்தினாலும் ஸூக்ஷ்மங்களை அறியுந்திறமுடையவள். தேவதைகளைப் போன்றவளாகையால் மிகுந்த திறமையுடையவள்; அழகில் அனைவர்க்கும் புலப்படும்படி வடிவு கொண்ட நேரே ஸ்ரீ மஹாலக்ஷ்மி போலிருப்பவள். ஆகையால் இத்தன்மையளான அப்பெண்மணிக்குப் புத்தி விசேஷம் ஸஹஜமென்பது சொல்ல வேண்டுமோ? ஆகையால் ராமனது மனத்தை அவனையும் விஞ்சித்தான் அறிபவளாகினள்" என்றிருக்கிறது. 

பாலகாண்டம் சர்க்கம் – 77ல் உள்ள சுலோகங்கள் : 29

*******பாலகாண்டம் முற்றும் *******

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை