Tuesday 30 November 2021

பாணிக்ரஹணம் | பால காண்டம் சர்க்கம் - 73 (40)

Wedding Ceremony | Bala-Kanda-Sarga-73 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சீதையை ராமனுக்கும், ஊர்மிளையை லக்ஷ்மணனுக்கும், மாண்டவியை பரதனுக்கும், சுருதகீர்த்தியை சத்ருக்னனுக்கும் தாரைவார்த்துக்  கொடுத்த ஜனகன்...

The marriage of Sita and Rama

ராஜா {தசரதன்} எந்த நாளைக் குறித்தானோ, அதே நாளில் உத்தம கோதானம் செய்தபோது, சூரனான யுதாஜித் அங்கே வந்தான்.(1) கேகயராஜனின் புத்திரனும், சாக்ஷாத் பரதனின் மாதுலனுமான அவன் {பரதனின் தாய்மாமனுமான அந்த யுதாஜித், தசரத} ராஜனைக் கண்டு குசலம் விசாரித்து இதைச் சொன்னான்:(2) "நீர் குசலம் விசாரிக்க விரும்பும் கேகயாதிபதியான ராஜா தற்போது நலமாக இருக்கிறார். அவர் ஸ்நேஹத்துடன் குசலம் விசாரிக்கிறார்.(3) இரகுநந்தனரே, ராஜேந்திரரே, அந்த மஹீபதி {கேகயராஜர்} என் தங்கையின் மகனை {கைகேயியின் மகனான பரதனைக்} காண விரும்புவதால் என்னை அயோத்திக்கு அனுப்பி வைத்தார்.(4) மஹீபதியே {நிலத்தின் தலைவரே}, உமது ஆத்மஜர்களின் {மகன்களின்} விவாஹத்திற்காக நீர் மிதிலை சென்றதாக அயோத்தியில் நான் கேள்விப்பட்டேன். என் தங்கையின் மகனைக் காணும் விருப்பத்தில் துரிதமாக இங்கு வந்து சேர்ந்தேன்[1]" {என்றான் யுதாஜித்}.(5,6அ)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "பரதனுடைய தாய்மாமன் வருகை வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டதா, அல்லது காவிய ஒழுங்கிற்கு அவசியமானதா என்பது கேள்வியல்ல என்றாலும் ஓர் ஐயத்தை எழுப்பவே செய்கிறது. மேலும் அவன், தன் மருமகன்கள் அனைவரையும் கேட்காமல் பரதனை மட்டுமே "என் தங்கையின் மகனை" என்று கேட்கிறான். இந்தப் பகுதி இனி வரப்போகும் நிகழ்வுகளுக்குப் பொருந்தி வந்தாலும், வராவிட்டாலும் இந்தியக் காவியங்களில் ஒரு மாமா எப்போதும் நுழைகிறார். மஹாபாரதத்தில் சகுனியைப் போல" என்றிருக்கிறது.

அப்போது தசரதராஜன், பிரிய அதிதியின் {அன்புக்குரிய விருந்தினரின்} வரவைக் கண்டு பூஜிக்கத்தகுந்த அவனுக்குப் பரமசத்காரங்களையும் {நல்ல காரியங்கள் அனைத்தையும்} செய்து நன்றாகப் பூஜித்தான்.(6ஆ,7அ) பிறகு மஹாத்மாக்களான தன் புத்திரர்கள் ஸஹிதம் ராத்திரியில் ஓய்ந்திருந்த அந்தத் தத்வவித் {கடமையில் கட்டுண்டவனான தசரதன்}, விடியலில் எழுந்து, கர்மங்களைச் செய்து, ரிஷிகளை முன்னிட்டுக் கொண்டு யஜ்ஞவாடத்தில் {யாகசாலையில்} வந்து சேர்ந்தான்[2].(7ஆ,8) சர்வ ஆபரணங்களையும் பூண்டு கொண்டு தம்பிகள் ஸஹிதனாக இருந்த ராமன், மங்கலச் சடங்குகளைச் செய்து விட்டு, வசிஷ்டரையும், இதர மஹாரிஷிகளையும் முன்னிட்டுக் கொண்டு உரிய விஜய முஹூர்த்தத்தில் வந்து சேர்ந்தான் {தசரதன் இருக்கும் யாகசாலைக்கு வந்தான்}.(9,10அ)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "அவன் சில நாட்களாக வந்து போகும் வேள்வி மண்டபத்தைத் தானாகவே அடைந்தான். மணமகன் தரப்பினர், அழைக்கப்படுவதற்கு முன்னர்த் திருமண மண்டபத்திற்குள் நுழையமாட்டார்கள். மணமகன் விஷ்ணுவாகவும், மணமகள் லக்ஷ்மிதேவியாகவும் கருதப்படுவதால் இன்றைய காலத்தில் வரபூஜை என்றழைக்கப்படும் சிறிய நிகழ்வுடன் இந்த அழைப்புச் செய்யப்படுகிறது. இந்த வேள்வி மண்டபத்தின் அருகிலேயே திருமண மண்டபம் இருந்திருக்குமெனக் கருதப்படுகிறது" என்றிருக்கிறது.

பகவானான வசிஷ்டர், வைதேஹனிடம் {ஜனகனிடம்} சென்று இதைச் சொன்னார்: "நரவரசிரேஷ்டா {சிறந்த மனிதர்களில் சிறந்தவனே}, இராஜாவே, தசரதராஜன் மங்கலச் சடங்குகளைச் செய்து கங்கணங்கட்டிய புத்திரர்களுடன் தாதாவை {கன்னிகையைக் கொடையளிக்கும் உன்னை} எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான்.(10ஆ,11) கொடுப்பவனுக்கும், பெற்றுக் கொள்பவனுக்கும் சர்வ அர்த்தங்களும் {அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை} வாய்க்கும். இந்த உத்தம வைவாஹத்தைச் செய்வதால் ஸ்வதர்மத்தை {கடமையைச்} செய்யும் பிரதிபலன் உனக்குக் கிட்டும்" {என்றார் வசிஷ்டர்}.(12)

மஹாத்மாவான வசிஷ்டர் இவ்வாறு சொன்னதைக் கேட்டு மஹாதேஜஸ்வியும், பரமதர்மவானுமான அந்தப் பரமோதாரன் {ஒப்பற்ற கொடையாளி ஜனகன்} இந்த வாக்கியத்தை மறுமொழியாகச் சொன்னான்:(13) "உங்களைத் தடுப்பவன் எவன்? எவருடைய ஆணையை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? சொந்த கிருஹத்தில் {வீட்டில்} தயக்கம் ஏன்? இந்த ராஜ்யம் உங்களுடையதே[3].(14) முனிசிரேஷ்டரே, என் கன்னிகைகள் மங்கலச் சடங்குகளைச் செய்துவிட்டு, அக்னி ஜுவாலைகளால் ஒளிர்ந்து கொண்டிருக்கும் வேதிமூலத்தின் {வேள்விப்பீடத்தின்} அருகில் வந்துவிட்டனர்.(15) ஏற்கனவே நானும் இந்த வேதிகையில் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இஃது இடையூறுகள் இன்றி நடைபெறட்டும். {தசரத} ராஜா எதற்காகத் தாமதம் செய்கிறான்?" {என்றான் ஜனகன்}[4].(16)

[3] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இவை கேள்விகளோ, ஆச்சரியமடையும் தருணங்களோ அல்ல. வட நாட்டுக்காரர்களால் சந்திகள் என்றும், தென்னாட்டுக்காரர்களால் சம்மந்திகள் என்றும் அழைக்கப்படும் இரு தரப்பும் திருமண விழாக்களில் சொல்லும் வழக்கமான பதில்களும், வழக்கமான விவாதங்களுமாகும் இவை" என்றிருக்கிறது.

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "வசிஷ்டர் இதை தசரதனுக்குச் சொல்ல, தசரதனும் அவனது பரிவாரங்களும் நிதானமாக ஊர்வலமாகச் சென்றனர். இன்றும் இந்த ஊர்வலங்கள் நடக்கின்றன. மணமகன் தரப்பின் அலங்கார அணிவகுப்பு இரண்டு ஃபர்லாங் தொலைவை இரண்டு மணி நேரத்தில், அல்லது அதற்கும் அதிகமான நேரத்தில் கடந்து மணமகள் தரப்பை ஓர் எதிர்பார்ப்பிலேயே வைத்திருக்கும்" என்றிருக்கிறது.

அப்போது தசரதன், ஜனகன் சொன்ன வாக்கியத்தை {வசிஷ்டர் மூலம்} கேட்டு சுதர்களுடனும் {மகன்களுடனும்}, சர்வ ரிஷி கணங்களுடனும் {வேள்வி மண்டபத்திற்குள்} பிரவேசித்தான்.(17) பிறகு விதேஹராஜன் {ஜனகன்} வசிஷ்டரிடம் இதைச் சொன்னான்: "தார்மிகரே, ரிஷியே, பிரபுவே, உலகங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் ராமனின் விவாஹ காரியங்களை ரிஷிகளுடன் சேர்ந்து நடத்துவீராக" {என்றான் ஜனகன்}.(18,19அ)

பகவானும், மஹாதபஸ்வியுமான வசிஷ்ட ரிஷி ஜனகனிடம், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு, தார்மிகரான விஷ்வாமித்ரரையும், சதாநந்தரையும் முன்னிட்டுக் கொண்டு, பச்சை ஓலைகளால் கட்டப்பட்ட திருமணப் பந்தலின் மத்தியில், விதிப்படி வேதியை {வேள்வி நெருப்பை} ஏற்படுத்தி, கந்தம் {சந்தனம் / நறுமணப்பொருள்கள்}, புஷ்பங்கள், {முளைத்த நவதானியங்கள் நிறைந்த} சுவர்ண பாலிகைகள், அரும்புகள், சித்திரக் கும்பங்கள், மடக்குகள் {முளைகளுடன் கூடிய மண் அகல்கள்}, தூபங்களுடன் கூடிய தூபப்பாத்திரங்கள் {நறுமணப் புகையுடன் கூடிய பாத்திரங்கள்}, சங்கு பாத்திரங்கள், ஸ்ருவங்கள் {மூங்கிலாலான அகப்பை}, ஸ்ருக்குகள் {நெருப்பில் நெய்விடும் மூங்கில் கரண்டி}, அர்க்கிய பூஜைக்கான நீர் நிரம்பிய பாத்திரங்கள், பொரிகள் நிறைந்த பாத்திரங்கள், மஞ்சள் பூசப்பட்ட புனித அரிசி {அக்ஷதை} நிறைந்த பாத்திரங்கள் ஆகியவற்றையும் அந்த வேதியைச் சுற்றிலும் புனித அலங்காரமாகத் திகழச் செய்தார்.(19ஆ-23அ) மஹாதேஜஸ்வியும், முனிபுங்கவருமான வசிஷ்டர், சமமான அளவுள்ள தர்ப்பைகளை மந்திரப்பூர்வமாகச் சரியாகப் பரப்பி, விதிப்படி மந்திரங்களைச் சொல்லி அந்த வேதியில் அக்னியைத் தூண்டி வளர்த்தார்.(23ஆ,24)

அப்போது ஜனக ராஜன், சர்வ ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட சீதையை அக்னிக்கு முன்பாக அழைத்துவந்து, ராகவனின் {ராமனின்} முகத்திற்கு நேராக நிறுத்தி, அந்தக் கௌசல்யானந்தவர்த்தனனிடம் {கௌசல்யையின் ஆனந்தத்தை அதிகரிப்பவனான ராமனிடம்}[5] இதைச் சொன்னான்:(25,26அ) "என் மகளான இவளை {சீதையை} உன் ஸஹதர்மினியாக {வாழ்வின் கடமைகளில் உடன் பங்கேற்பவளாக} ஏற்றுக் கொண்டு மங்கலமாக இருப்பாயாக. பாணிக்ரஹணஞ்செய்வாயாக {இவளது உள்ளங்கையை உன் உள்ளங்கையில் ஏற்பாயாக}.(26ஆ,27அ) மஹாபாக்யவதியான இவள் பதிவிரதையாக சதா நிழல் போல் {உன்னைப்} பின்தொடர்வாள்" என்று சொன்ன அந்த ராஜன், பின்னர் மந்திரப்பூர்வமான ஜலத்தை {நீரை ராமனின் கைகளில்} ஊற்றினான்[6].(27ஆ,28அ) அப்போது தேவர்களும், ரிஷிகளும், "சாது {நன்று}, சாது" என்றனர், தேவதுந்துபிகள் உரக்க முழங்கின, மஹாபுஷ்பவர்ஷம் {மாமலர்மாரி} பொழிந்தது.(28ஆ,29அ)

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சரி, இந்தக் கௌசல்யை எங்கிருக்கிறாள்? ராமன் அவளை அழைத்து வராமலேயே தன் திருமணத்தால் அவளது மகிழ்ச்சியை அதிகரிக்கிறானா? கடந்த மூன்று நான்கு நாட்களில் அவளையோ, மற்ற ராணிகளையோ குறித்து நாம் கேள்விப்படவில்லையே. உண்மையில் அவள் வந்திருக்கிறாளா? சிறிய செய்திகளைப் பதிவு செய்யாத வால்மீகியின் பாணியைக் கொண்டு, "ஆம், அவள் வந்திருந்தாள்" என்று சிலர் வாதிடுகின்றனர். இவை மறைமுகமாகச் சொல்லப்பட்டுள்ளன. தசரதன் பசுதானம் செய்தான் என்றால், மனைவி தன்னருகே இல்லாமல் அவனால் அறச்சடங்குகளைச் செய்யவோ, தானம் செய்யவோ முடியாது. பாலகாண்டம் 69ம் சர்க்கம் 1ம் சுலோகத்தில் "உபாத்யாயர்கள், பந்துக்களுடன்" என்று வருகிறது. அங்கே குறிப்பிடப்பட்ட பந்துக்களில் இந்த மனைவியரும் அடங்குவர். மேலும் இங்கே ஐந்து ராகவர்கள் இருக்கும்போது இஃது எப்படி ராமனைக் குறிக்கிறது என்றால், கௌசல்யானந்தவர்த்தனன் என்ற அடைமொழி  ராகவனை ராமனாக்குகிறது. இங்கே ராமனைக் குறிக்க தசரதாத்மஜன் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கலாம். இன்னும் வேறு பல அடைமொழிகளையும் பயன்படுத்தியிருக்கலாம். கௌசல்யையுடன் இந்த அடைமொழியைப் பொருத்தி வால்மீகிப் புலவர் மறைமுகமாக அவளது இருப்பைத் தெரிவிக்கிறார்" என்றும், இன்னும் அதிகமும் இருக்கிறது.

[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "தானம் அளிக்கும்போதும் தானம் பெறுபவனின் கைகளில் நீரை ஊற்றுவது தானமளிப்பவனின் வற்றாத விருப்பத்தைப் பிரதிபலிக்கிறது. "நிழல்" என்ற சொல் "எப்போதும் தொடர்புடையவள்" என்பதைக் குறிக்கிறது. இதுவரை அவர்கள் தனித்தனியாக வாழ்ந்த காலம் இந்தப் புனித நீரால் கழுவப்படுகிறது" என்றிருக்கிறது.

ஜனகராஜன் இவ்வாறு மந்திரப்பூர்வமாகப் புனிதப்படுத்தப்பட்ட நீரால் தன் மகள் சீதையைத் தத்தம் செய்ததும் {தாரைவார்த்துக் கொடுத்ததும்} பெரும் மகிழ்ச்சியில் மூழ்கியவனாகச் சொன்னான்:(29ஆ,30அ) "லக்ஷ்மணா வருவாயாக[7]. என்னால் உத்தேசிக்கப்பட்டபடி ஊர்மிளையை ஏற்றுக் காலத்தைத் தாழ்த்தாமல் பாணிக்ரஹணஞ் செய்து மங்கலமாக இருப்பாயாக" {என்றான் ஜனகன்}.(30ஆ,31அ) அவனிடம் {லக்ஷ்மணனிடம்} இவ்வாறு சொன்ன ஜனகன், பரதனை அழைத்து, "இரகுநந்தனா, மாண்டவியின் உள்ளங்கையை உன் உள்ளங்கையில் ஏற்பாயாக" {என்றான்}.(31ஆ,32அ) பிறகு, தர்மாத்மாவான அந்த மிதிலேஷ்வரன் {ஜனகன்} சத்ருக்னனிடம் சொன்னான், "மஹாபாஹுவே {பருத்த தோள்களைக் கொண்டவனே சத்ருக்னா}, சுருதகீர்த்தியின் உள்ளங்கையை உன் உள்ளங்கையில் ஏற்பாயாக[8].(32ஆ,33அ) காகுத்ஸ்தர்களே {ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னர்களே}, நீங்கள் அனைவரும் சௌம்யர்களாகவும் {மென்மையானவர்களாகவும்}, நன்னடத்தை எனும் விரதம் கொண்டவர்களாகவும் பத்தினிகளுடன் சேர்வீராக. கால விரயம் செய்ய வேண்டாம்" {என்றான் ஜனகன்}.(33ஆ,34அ)

[7] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "பரதனே மூத்தவன் எனும்போது ஏன் லக்ஷ்மணன் அழைக்கப்படுகிறான்? சக்களத்திகளுக்குப் பிறந்த சகோதரர்களுக்குள் மூத்தவனுக்கே முதலில் திருமணம் என்ற விதி பொருந்தாது. தந்தையின் சகோதரர்கள், அல்லது தாயின் சக்களத்திகளுக்குப் பிறந்த மகன்களின் மத்தியில் மூத்தவன் என்ற கணக்குத் திருமணங்களிலும், தானச் சடங்குகளிலும் பொருந்தாது, அத்தகைய நிகழ்வுகளில் இளையவனும் முதலில் அழைக்கபடலாம்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "பரதன் பெரியவனாயிருக்கச் சிறியவனாகிய லக்ஷ்மணனுக்கு முன்பு விவாஹஞ் செய்வது தோஷமென்று நினைக்கலாகாது. பெரியவனுக்கு முன்பு விவாஹஞ் செய்ய வேண்டுமென்கிற விதி ஸஹோதரர்களுக்கேயன்றிச் சக்களத்திப் பிள்ளைகளுக்கில்லை" என்றிருக்கிறது.

[8] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "பத்னிகளுடன் கூடி என் கையால் தாரை வார்த்தாயிற்றென்று தோற்றுகின்றது. ஜனகன் மூத்தவனாகையால் மாண்டவீச்ருதகீர்த்திகளைப் பற்றி அநுஜ்ஞை மாத்திரஞ் செய்தனன். அவர்களைத் தாரைவார்த்துக் கொடுத்தவன் குசத்வஜனே" என்றிருக்கிறது.

ஜனகனின் சொற்களைக் கேட்ட அந்த நால்வரும் {ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னர்கள்}, வசிஷ்டரின் கருத்தைக் கேட்டுத் தங்கள் உள்ளங்கைகளில் அந்த நால்வரின் {சீதை, ஊர்மிளை, மாண்டவி, சுருதகீர்த்தி ஆகியோரின்} உள்ளங்கைகளைப் பற்றினர்.(34ஆ,35அ) மஹாத்மாக்களான அந்த ரகூத்வஹர்கள் {ரகுவில் இருந்து வெளிப்பட்டவர்கள்} தங்கள் பாரியைகள் ஸஹிதராக அக்னி, வேதி ஆகியவற்றையும், ராஜனையும் {ஜனகனையும்}, ரிஷிகளையும் பிரதக்ஷிணம் செய்தனர். எவ்வாறு சொல்லப்பட்டதோ அவ்வாறே விதிப்பூர்வமாக அந்த விவாஹம் நடைபெற்றது[9].(35ஆ,36)

[9] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "முதலில் வசிஷ்டர் புனித நெருப்பை மூட்டி ராமனின் நலத்திற்கும், அவனது தம்பிகள் நலத்திற்கும் ஆகுதிகளைக் காணிக்கை அளித்தார். அடுத்ததாக ராமனும், அவனது தம்பியரும் திருமணத்திற்கான ஆகுதிகளைச் செலுத்தியபோதும் புனித நெருப்பைத் தூண்டினார். மணமகள்களின் கைகளைப் பற்றிய பின்னர் அவர்கள் பிரதக்ஷிணம் செய்தனர். அதன் பிறகு ஒவ்வொரு ஜோடியும் தங்களுக்கான சடங்குக்கென நெருப்பை நிறுவி, அதில் காணிக்கைகளை அளித்தனர். அதன்பிறகு ஒவ்வொரு ஜோடியும் பொரியை நெருப்புக்குள் இட்டு மீண்டும் வேள்வி நெருப்பைப் பிரதக்ஷிணம் செய்தனர். எனவே திருமணம் என்பது ஒரு நிமிடத்தில் கைகளைக் குலுக்கி முடித்துக் கொள்ளும் காரியமல்ல, ஒரு நாள் நெடுகிலும் நெருப்பின் முன்னிலையில் அவர்கள் செய்ய வேண்டிய கடமைகள் ஏராளம் உண்டு" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "அப்பொழுது மஹாநுபாவர்களாகி ரகுக்களில் சிறப்புற்ற ராமலக்ஷ்மண பரத சத்ருக்நர்கள் தம் பாரியைகளுடன் கூட அக்நிக்கும் விவாஹவேதிகைக்கும் ஜநகமஹாராஜனுக்கும் மற்றும் அங்குள்ள ரிஷிகளுக்கும் ப்ரதக்ஷிணஞ் செய்து சாஸ்த்ரங்களிற் சொல்லியபடி கல்பஸூத்ரங்களையும் அநுஸரித்து வேறுவேறாக விவாஹத்தை நடத்திக்கொண்டனர்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "முதலில் வசிஷ்ட மாமுனிவர் ஹோமஞ்செய்தது ராமாதிகளின் நன்மைக்காவென்று தெரிகின்றது. பின்பு அக்நியைப்ரதிஷ்டை செய்து விவாஹ ஹோமம் ராமாதிகள் செய்தனர். பாணிக்ரஹணமான பின்பு அவ்வக்நிக்கும் ப்ராஹ்மணர்களுக்கும் கந்யாதாநஞ் செய்கிற ஜனகனுக்கும் ராமாதிகள் பிரதக்ஷிணஞ் செய்து, பின்பு ஸ்வகல்பாநுஸாரமாக ஒவ்வொருவரும் வேறு வேறாக அக்நியை ப்ரதிஷ்டை செய்து விவாஹோமஞ் செய்தனர். பின்பு லாஜஹோமமும் நடத்தி தத்தமது அக்நிகளுக்கு மும்முறை ப்ரதக்ஷிணஞ் செய்தனரென்று க்ரமங் கண்டு கொள்வது" என்றிருக்கிறது.

அந்த ரகுமுக்கியர்களின் விவாகத்தின்போது, அந்தரிக்ஷத்தில் {ஆகாயத்தில்} இருந்து பளபளக்கும் மஹாபுஷ்பவிருஷ்டி {மாமலர்மாரி} பொழிந்ததும்,  வாத்தியங்களுடன் கூடிய திவ்யதுந்துபிகளின் முழக்கமும், அப்சரஸ் சங்கத்தினரின் நர்த்தனமும், கந்தர்வர்களின் கீதமும் அற்புதமாகத் தெரிந்தது.(37,38) இவ்வாறு தூரியங்கள் முழங்கிக் கொண்டிருந்தபோது, பெரும் தேஜஸ்விகளான அவர்கள் {ராம லக்ஷ்மண பரத சத்ருக்னர்கள்}, தங்கள் பாரியைகளுடன் மும்முறை அக்னியை வலம் வந்தனர்.(39) அந்த ரகுநந்தனர்கள் தங்கள் தாரங்களுடன் விடுதிக்குச் செல்வதைக் கண்ணாறக் கண்ட {தசரத} ராஜனும், ரிஷிசங்கங்களுடனும், பந்துக்களுடனும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான்.(40)

பாலகாண்டம் சர்க்கம் – 73ல் உள்ள சுலோகங்கள் : 40

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை