Parashurama's pride hurt | Bala-Kanda-Sarga-76 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வைஷ்ணவ தனுவை வளைத்த ராமன்; மஹேந்திர மலைக்குத் திரும்பிய பரசுராமர்...
அப்போது தாசரதி {தசரதனின் மகனான ராமன்}, ஜாமதக்னேயரின் {ஜமதக்னியின் மகனான பரசுராமரின்} வாக்கியத்தைக் கேட்டு, பிதாவின் {தன் தந்தையான தசரதனின்} கௌரவத்தைக் கருதி பேசாமல் இருந்தான். பிறகு ராமன் சொன்னான்:(1) "பார்க்கவரே {பிருகு குலத்தின் பரசுராமரே}, நீர் செய்த செயல்களை நான் கேட்டிருக்கிறேன். பிராமணரே, பிதாவின் கடன் தீர்க்க நீர் செய்தவற்றை நான் பாராட்டுகிறேன்.(2) பார்க்கவரே, வீரியஹீனன் {வீரியமற்றவன்} என்றும், க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடிப்பதில் அசக்தன் என்றும் என்னை அவமதித்தீர். என் தேஜஸ்ஸையும், பராக்கிரமத்தையும் இதோ பார்ப்பீராக" {என்றான் ராமன்}.(3)
இலகுபராக்கிரமனான அந்த ராகவன் {கை நளினமும், ஆற்றலும் படைத்தவனான ராமன்}, கோபத்துடன் இதைச் சொல்லிவிட்டு, பார்க்கவரின் கையில் இருந்து அந்த வராயுதத்தையும் {விஷ்ணு தனுசையும்}, சரத்தையும் {கணையையும்} வாங்கினான்[1].(4) ராமன், அந்தத் தனுவை உயர்த்தி, சரத்தைப் பொருத்திக் குறி பார்த்தான். பிறகு ராமன் கோபத்துடன் ஜாமதக்னேய ராமரிடம் இதைச் சொன்னான்:(5) "இராமரே, நீர் பிராமணராக இருப்பதாலும், விஷ்வாமித்ரருக்காகவும்[2] என்னால் பூஜிக்கப்படத் தகுந்தவராக இருக்கிறீர். எனவே, உமது பிராணனைப் போக்கும் சரத்தை ஏவ நான் சக்தனாக இல்லை.(6) இராமரே, உமது நடக்கும் சக்தியையோ, உமது தபோபலத்தால் ஈட்டப்பட்ட ஒப்பற்ற உலகங்களையோ அழிக்க விரும்புகிறேன். நீர் எதை விரும்புகிறீர்?(7) பரபுரஜயம் {பகை நகரங்களில் வெற்றியைத்} தருவதும், வீரியமிக்கதும், பலத்தை {படைகளை} அழிப்பதும், திவ்யமானதுமான இந்த வைஷ்ணவ சரம் வீண் போகாது" {என்றான் ராமன்}.(8)
[1] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "பத்மபுராணத்திற் சொல்லப்பட்டது: 'தேவி! அந்த ராமன் இங்ஙனம் உரைத்து அந்தப் பரசுராமனிடத்திலிருந்த விஷ்ணு சக்தியுடன் {விஷ்ணுவின் அவதாரமென்கிற விஷ்ணு அம்சத்தையும்} அவ்வைஷ்ண தநுஸ்ஸை வணக்கத்தோடு அவலீலையாக வாங்கிக் கொண்டனன்'" என்றிருக்கிறது.
[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "விச்வாமித்ரமுனிவரது உடன்பிறந்தவளாகிய ஸத்தியவதியென்பவள் ரிசீகருடைய பாரியை. ரிசீகர் அவளிடத்தில் ஜமதக்நியைப் படைத்தனர். ஜமதக்நி பரசுராமனைப் பெற்றனன். இப்படிப் பரசுராமன் விச்வாமித்ரமாமுனியோடு பந்துத்வமுடையவனாகையால் விச்வாமித்ரரைப் பற்றிப் பரசுராமனை ராமன் கொல்ல முடியாதிருந்தனனென்று கருத்து" என்றிருக்கிறது.
வராயுததாரியான {சிறந்த ஆயுதத்தைத் தரிக்கும்} ராமனைக் காண்பதற்காக ரிஷிகணங்களும், ஸுரர்களும், பிதாமஹனை முன்னிட்டுக் கொண்டு வந்தனர். கந்தர்வர்கள், அப்சரஸ்கள், சித்தர்கள், சாரணர்கள், கின்னரர்கள், யக்ஷர்கள், ராக்ஷசர்கள், நாகர்கள் ஆகியோர் அனைவரும் அந்த மஹா அற்புத நிகழ்வைக் காண அங்கே ஒன்றுகூடினர்[3].(9,10) இராமன், வரதனுதரனாக இருந்தபோது {சிறந்த வில்லை ஏந்திக் கொண்டிருந்தபோது} உலகமே திகைத்திருந்தது. ஜாமதக்னேய ராமர், நிர்வீரியராக ராமனை வெறித்துப் பார்த்தார்[4].(11)
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே குறிப்பிடப்படும் அற்புத நிகழ்வானது, ராமன் வில்லை எடுத்துக் கையாண்டது அல்ல; பார்க்கவ ராமரிடம் இருந்த முக்கிய இயல்பு {விஷ்ணு அம்சம்} தசரதராமனுக்கு மாற்றப்பட்டதே இங்கே முக்கிய நிகழ்வு" என்றிருக்கிறது.
[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "பார்க்கவ ராமரிடம் இருந்த விஷ்ணுவின் ஒளியானது, விஷ்ணுவின் நீண்ட வில்லின் வழியாக தசரத ராமனுக்குள் புகுந்தபோது, தசரதர ராமனின் ஒளி, விஷ்ணுவின் ஒளியைப் போலப் பிரகாசித்தது. விஷ்ணு ஒளியின் அந்தப் பிரகாசமே உலகைத் திகைக்கச் செய்தது. அதன் பிறகு ஒளி குன்றிய பார்க்கவ ராமரால் விஷ்ணுவைப் போன்ற ராமனிடம் கண்களை உயர்த்தி வெறித்துப் பார்க்க மட்டுமே முடிந்தது" என்றிருக்கிறது.
{இராமனின்} தேஜஸ்ஸினால் முற்றிலும் வீரியம் அழிந்து திகைத்து நின்ற ஜாமதக்னேயர் {பரசுராமர்}, கமலபத்ராக்ஷனான {தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட} ராமனிடம் மந்தம் மந்தமாக {மெதுமெதுவாக} பேசினார்:(12) "பூர்வத்தில் வசுந்தரையை {பூமி அனைத்தையும்} நான் காசியபருக்கு தத்தம் செய்தபோது, "என் ஆட்சிப்பகுதி உன் வசிப்பிடமல்ல" என்று காசியபர் என்னிடம் சொன்னார்.(13) எனவே அந்த குருவசனத்தைக் கேட்டதுமுதல் நான் இரவு காலங்களில் பிருத்வியில் தங்குவதில்லை. காகுத்ஸ்தா, {பூமியை} காசியபருக்குக் கொடுத்துவிட்டேன்.(14) எனவே, வீரா, ராகவா, என்னுடைய நடக்கும் சக்தியை அழிக்காதே. உத்தம பர்வதமான மஹேந்திரத்திற்கு மனோவேகத்தில் நான் செல்ல வேண்டும்.(15) இராமா, என்னுடைய தவத்தால் வென்று ஈட்டப்பட்ட ஒப்பற்ற உலகங்களை இந்த முக்கிய சரத்தால் {கணையால்} அழிப்பாயாக. காலதாமதம் வேண்டாம்.(16)
இந்த தனுசை அலட்சியமாகத் தீண்டியதால், அழிவற்றவனும், ஸுரேஷ்வரனான மதுஹந்தாரன் {தேவர்களின் தலைவனும், மதுவை அழித்த மதுசூதனுமான விஷ்ணு} நீ என நான் உணர்கிறேன். பரந்தபா {பகைவரை அழிப்பவனே}, அருள்நிலை உனக்கு வாய்க்கட்டும்.(17) சர்வ ஸுரகணங்களும் ஒன்றாகத் திரண்டுவந்து ஒப்பற்ற சாதனைகளைச் செய்தவனும், ஒப்பற்ற துவந்தம் செய்பவனுமான உன்னைக் காண்கின்றனர்.(18) காகுத்ஸ்தா, திரிலோகநாதனான உன்னால் நான் தலை கவிழச் செய்யப்பட்டது எனக்கு அவமானமானதல்ல.(19) நல்ல விரதம் கொண்டவனே, ராமா, இந்த ஒப்பற்ற சரத்தை ஏவுவதே உனக்குத்தகும். சரம் விடப்பட்டதும் நான் உத்தம பர்வதமான மஹேந்திரத்திற்குச் செல்வேன்" {என்றார் பரசுராமர்}.(20)
ஜாமதக்னேய ராமரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், பிரதாபவானும், ஸ்ரீமானுமான தாசரதிராமன் அந்த உத்தம சரத்தை {கணையை} ஏவினான்.(21) ஜாமதக்னேயர், தாம் தவத்தால் அடைந்த அனைத்து உலகங்களும் ராமனால் அழிக்கப்படுவதைக் கண்டு கண்ணிமைக்கும் நேரத்திற்குள் உத்தம பர்வதமான மஹேந்திரத்தை அடைந்தார்.(22) அப்போது சர்வ திசைகளும், உபதிசைகளும் மாசற்றவை ஆகின {இருள் அகன்றன}. ரிஷிகணங்களுடன் கூடிய ஸுரர்கள் {தேவர்கள்} உதாயுதனான {உயர்த்தப்பட்ட ஆயுதத்துடன் கூடிய} ராமனைப் புகழ்ந்தனர்.(23) பிரபுவான ஜாமதக்னேய ராமர், தாசரதி ராமனைக் கொண்டாடி, பிரதக்ஷிணம் செய்து, தம் வழி நோக்கிச் சென்றார்.(24)
பாலகாண்டம் சர்க்கம் – 76ல் உள்ள சுலோகங்கள் : 24
Previous | | Sanskrit | | English | | Next |