Tuesday 15 March 2022

இராமனின் குணங்கள் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 001 (50)

Virtues of Rama | Ayodhya-Kanda-Sarga-001 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய தசரதன் ஆலோசித்தது; பரதனும், சத்ருக்னனும் தாய்மாமனுடன் சென்றது; இராமனின் நற்குணங்கள்...

Dasharatha's counsel

பரதன், தன் மாதுலன் {தாய் மாமனான யுதாஜித்தின்} வீட்டுக்குச் சென்ற போது, பாவமற்றவனும், பகைவரை எப்போதும் அழிப்பவனுமான சத்ருக்னனை அன்போடு தன்னுடன் அழைத்துச் சென்றான்.(1) அங்கே அவன் {பரதன்}, சகோதரனுடன் {சத்ருக்னனுடன்} வசித்து வந்தபோது, அஷ்வபதியான {குதிரைப் படைத் தலைவனான} தன் மாதுலனால் {தாய்மாமன் யுதாஜித்தால்}, புத்திரசினேகத்துடனும், நல்ல விருந்தோம்பலுடனும் நன்கு பேணப்பட்டான்.(2) சகோதரர்களான அந்த வீரர்கள் இருவரும், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறியவர்களாக அங்கே வசித்திருந்தாலும், முதிர்ந்தவனான தசரத நிருபனை {மன்னனை} நினைத்துக் கொண்டேயிருந்தனர்.(3)

மஹாதேஜஸ்வியான அந்த ராஜனும் {தசரதனும்}, வெளிநாட்டில் {கேகய நாட்டில்} இருந்தவர்களும், மஹேந்திரனுக்கும், வருணனுக்கும் இணையானவர்களும், சுதர்களுமான {மகன்களுமான} பரதசத்ருக்னர்கள் இருவரையும் நினைத்தவாறே இருந்தான்.(4). அவன் {தசரதன்}, அந்தப் புருஷரிஷபர்கள் {மனிதர்களில் காளைகள்} நால்வரையும், தன் சரீரத்தில் {உடலில்} இருந்து வெளிப்பட்ட நான்கு கைகளைப் போல விரும்பினான்.(5) அவர்களில் மஹாதேஜஸ்வியும், குணத்திற் சிறந்தவனும், பூதங்களில் {உயிரினங்கள் அனைத்திலும்} ஸ்வயம்பூவை {பிரம்மனைப்} போன்றவனுமான ராமன் தந்தையின் மகிழ்ச்சிக்குப் பிறப்பிடமாகத் திகழ்ந்தான்.(6) அவன் {ராமன்}, ஆணவக்காரனான ராவணனை வதம் செய்ய விரும்பிய தேவர்களால் தூண்டப்பட்டு மனிதர்களின் உலகத்தில் பிறந்த சநாதன விஷ்ணுவல்லவா?(7) தேவர்களிற்சிறந்த வஜ்ரபாணியால் {இந்திரனால் ஒளிர்ந்த} அதிதியைப் போலவே, கௌசல்யை வலிமைமிக்கவனான தன் மகனால் {ராமனால்} ஒளிர்ந்தாள்.(8)

அழகிய ரூபம் கொண்டவனும், வீரியவானும், பொறாமையற்றவனுமான அவன் {ராமன்}, குணத்தில் தசரதனைப் போன்றவனாகவும், உண்மையில் பூமியில் ஒப்பற்ற மகனாகவும் திகழ்ந்தான்.(9) பிரசாந்தாத்மாவும் {அமைதியான மனம் கொண்டவனும்}, உண்மையில் எப்போதும் மென்மையாக {இனிமையாகப்} பேசுபவனுமான அவன் {ராமன்}, பிறரால் சொல்லப்படும் வன்சொற்களுக்குப் பதிலளிக்காதவனாகவும் {பதிலுக்குத் தானும் வன்சொற்கள் பேசாதவனாகவும்} இருந்தான்.(10) அவனுடைய {ராமன்} நல்ல மனத்தால், {ஒருவன்} செய்த நல்ல காரியத்தில் மகிழ்ச்சியடைவானேயன்றி, கெட்ட காரியங்கள் நூறாயினும் {அவற்றை} நினைவில் கொள்ள மாட்டான்.(11) அஸ்திரயோகம் பயிலும்போது கிட்டும் இடைவேளைகளில் சீலத்தில் {ஒழுக்கத்தில்} பெரியோரிடமும், ஞானத்தில் பெரியோரிடமும், வயதில் பெரியோரிடமும், நல்லோரிடமும் உரையாடிக் கொண்டிருப்பான்.(12)

{இராமன்} புத்திமான்; மதுரபாஷை {இனிய மொழி} பேசுபவன்; உரையாடலைத் தொடங்குபவன்; அன்புமொழி பேசுபவன்; வீரியவான்; வீரமிக்கவனாக இருப்பினும் அகங்காரமற்றவன்.(13) பொய்ம்மை பேசாதவன்; வித்வான் {கல்விமான்}; வழிபடத்தகுந்தவனாக இருப்பினும் பெரியோரை வணங்குபவன்; பிரஜைகளால் {மக்களால்} விரும்பப்படுபவன்; பிரஜைகளிடம் அன்பு கொண்டவன்.(14) கருணையுள்ளவன்; குரோதத்தை வென்றவன்; பிராமணர்களை வழிபடுபவன்; அவர்களால் வழிபடப்படுபவன்; தீனர்களிடம் {வலுவற்றவர்களிடம்} இரக்கம் கொண்டவன்; தர்மத்தை அறிந்தவன்; எப்போதும் தற்கட்டுப்பாட்டுடன் இருப்பவன்; {ஒழுக்கத்தில்} தூய்மையானவன்.(15)

தன் குலத்திற்குத் தகுந்த மதியைக் கொண்டவனும், க்ஷத்திரிய தர்மத்திற்கு உரிய மதிப்பளிப்பவனுமான அவன் {ராமன்}, இவற்றின் {மேற்கண்ட குணங்களின்} மூலம் பெருங்கீர்த்தியையும், மகத்தான ஸ்வர்க்கபலத்தையும் அடையலாம் என்று நினைத்தான் {நம்புகிறவனாக இருந்தான்}.(16) {அவன்}, நன்மையற்ற செயல்பாடுகளில் விருப்பமில்லாதவன்; வித்வான் {அறிஞன்}; தர்மத்திற்கு முரணான கதைகளில் விருப்பமில்லாதவன்; வாசஸ்பதியை {பேச்சின் தலைவனைப்} போல உத்திகளை வெளிப்படுத்தும் வக்தன் {தடையின்றிப் பேசுபவன்}.(17) பிணியற்ற இளைஞன்; நல்ல பேச்சாளன்; நல்ல மேனியைக் கொண்டவன்; தேச காலம் {இடமும், நேரமும்} அறிந்தவன்; மனிதர்களின் புத்தியைப் புரிந்து கொள்பவன்; இந்த உலகத்தில் படைக்கப்பட்ட சாது {மென்மையான நல்ல மனிதன்}.(18) பார்த்திவாத்மஜனும் {மன்னனின் மகனும்}, சிறந்த குணங்களைக் கொண்டவனுமான அவனை {ராமனை}, வெளியே உலவும் தங்கள் பிராணனை {உயிரைப்} போலக் கருதி பிரஜைகள் அன்பு செலுத்தினர்.(19)

பரிந்துரைக்கப்பட்ட முறைக்கு உரிய வித்யாவிரத ஸ்நாநம் செய்தவனும் {கல்வி முடித்து உரிய முறையில் நீராடியவனும்}, வேத வேதாங்கங்களை அறிந்தவனுமான அந்தப் பரதாக்ரஜன் {பரதனின் அண்ணனான ராமன்}, அஸ்திரங்களில் தன் பிதாவை {தன் தந்தை தசரதனைக்} காட்டிலும் சிரேஷ்டனாக {சிறந்தவனாகத்} திகழ்ந்தான்.(20) நல்ல குலத்தில் பிறந்தவனான அந்தச் சாது {மென்மையான ராமன்}, தீனமற்றவனாகவும் {வலிமைமிக்கவனாகவும்}, சத்தியவாக்கியம் சொல்லும் ஒளிவுமறைவற்ற நேர்மையாளனாகவும், தர்ம அர்த்தங்களை {அறம்பொருளை} உணர்ந்த முதிய துவிஜர்களால் {இரு பிறப்பாளர்களால்} முறையான பயிற்சி அளிக்கப்பட்டவனாகவும் இருந்தான்.(21) தர்ம காம அர்த்தங்களின் {அறம், பொருள், இன்பங்களின்} உண்மையான வடிவை அறிந்தவனாகவும், ஸ்மிருதிமானாகவும் {நல்ல நினைவுத்திறன் கொண்டவனாகவும்}, அளவில்லா விவேகம் கொண்டவனாகவும், சமூகத்தில் சமயத்திற்குத் தகுந்த சடங்குகளை உண்டாக்குவதில் விசாரதனாகவும் {திறன் கொண்டவனாகவும், [பெரியோர் பயின்ற ஒழுக்க நெறிகளை நிலைநிறுத்துவதில் சமர்த்தனாகவும்] இருந்தான்}.(22)

பணிவுள்ளவனாகவும், அடக்கமானவனாகவும், எண்ணங்களைத் தன்னுள் வைத்துக் கொள்பவனாகவும், சகாயவானாகவும் {பிறருக்கு உதவி செய்பவனாகவும்}, வீணாகாத {பயனுள்ள} கோபமும், மகிழ்ச்சியும் அடைபவனாகவும், கொடைக்கான {கொடுக்கவும், திறை வாங்கவும் உரிய} காலத்தை அறிந்தவனாகவும் இருந்தான்.(23) திடபக்தி கொண்டவனாகவும், உறுதியான மனம் கொண்டவனாகவும், பிடிவாதமற்றவனாகவும், துர்வசனம் பேசாதவனாகவும் {தீச்சொற்கள் சொல்லாதவனாகவும்}, சோம்பலற்றவனாகவும், விழிப்புடையவனாகவும், பிறர் செய்யும் பிழைகளை அறிவது போல் தன் பிழைகளை அறிபவனாகவும் இருந்தான்.(24) சாஸ்திரமறிந்தவனாகவும், அவற்றின் நடைமுறை அறிந்தவனாகவும், மனிதர்களுக்கிடையிலான வேறுபாடுகளைப் புரிந்து கொண்டவனாகவும், யாரைப் பாதுகாப்பது, யாரைத் தண்டிப்பது என்பதை நியாயப்படி பகுத்தாராய்பவனாகவும் இருந்தான்.(25) நல்லோரை அடையாளம் கண்டு பாதுகாப்பவனாகவும், கண்டிக்கத் தகுந்தவர்களை அறிபவனாகவும், வருமானம் ஈட்டும் வழிகளையும், வழிமுறைகளையும் அறிந்தவனாகவும், சாத்திரம் குறிப்பிடும் வகையில் செலவிடும் முறையை அறிந்தவனாகவும் {தக்காரை அறிந்து கொடை அளிப்பவனாகவும்} இருந்தான்.(26)

சாஸ்திரங்களிலும், துணை சாஸ்திரங்களிலும் பெரும் நிபுணத்துவம் வாய்ந்தவனாகவும், பொருளும் {அர்த்தமும்}, அறமும் {தர்மமும்} ஈட்டிய பிறகு சுகத்தில் விருப்பம் கொண்டவனாகவும், ஒருபோதும் செயலற்றுக் கிடக்காதவனாகவும் இருந்தான்.(27) அவன் செல்வத்தைப் பகிர்ந்தளிப்பது எவ்வாறு என்பதையும், கேளிக்கைக்கான நுண்கலைகளையும் {இசைக்கருவிகள் இசைப்பது, ஓவியம் வரைவது முதலிய கலைகளை} நன்கறிந்தவனாகவும், வாரணம் {யானை}, வாஜிகளை {குதிரைகளைப்} பயிற்றுவித்துத் திறம்படச் செலுத்துபவனாகவும் இருந்தான்.(28) தனுர்வேதமறிந்தவர்களில் சிரேஷ்டனாக {சிறந்தவனாக} உலகத்தின் அதிரதர்களால் பாராட்டப்படுபவனாகவும், பகைவரை எதிர்த்துக் கொல்பவனாகவும், சேனைகளை முறையாக வழிநடத்தும் {அணிவகுப்பில்} திறன் கொண்டவனாகவும் இருந்தான்.(29) கோபமடைந்த ஸுராஸுரர்களாலும் {தேவாசுரர்களாலும்} போரில் வீழ்த்தப்பட முடியாதவனாகவும், அநசூயனாகவும் {பொறாமையற்றவனாகவும்}, ஜிதக்ரோதனாகவும் {கோபத்தை வென்றவனாகவும்}, ஆணவமற்றவனாகவும், பகையற்றவனாகவும், எந்த உயிரினத்தையும் அவமதிக்காதவனாகவும், காலத்திற்கு வசப்படாதவனாகவும் இருந்தான்.(30)

இந்தச் சிரேஷ்டகுணங்களை {சிறந்த குணங்களைக்} கொண்ட அந்தப் பார்த்திவாத்மஜன் {மன்னனின் மகன்}, பிரஜைகளுக்கு {மக்களுக்கு} நல்லவனாகவும், மூவுலகங்களுக்கும் ஏற்புடையவனாகவும் இருந்தான். அவன், பொறுமை குணத்தில் வசுதைக்கும் {பூமிக்கும்}, புத்தியில் பிருஹஸ்பதிக்கும், துல்லியமான வீரியத்தில் சதிபதிக்கும் {இந்திரனுக்கும்} ஒப்பானவனாக இருந்தான்.(31,32அ) கதிர்களால் ஒளிரும் சூரியனைப் போலவே மக்கள் அனைவரின் விருப்பத்திற்குரியவையும், பிதாவின் {தந்தையான தசரதனின்} மகிழ்ச்சிக்குப் பிறப்பிடமாகத் திகழ்ந்தவையுமான குணங்களால் ராமன் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(32ஆ,33அ) விரதக் கட்டுப்பாடுள்ளவனாகவும், வீழ்த்தப்பட முடியாத பராக்கிரமம் கொண்டவனாகவும், லோகபாலர்களுக்கு ஒப்பானவனாகவும் இருந்த அவனே {ராமனே} தன் நாதனாக வேண்டுமென மேதினி {பூமாதேவி} விரும்பினாள்.(33ஆ,34அ)

பரந்தபனான {பகைவரை அழிப்பவனான} ராஜா {தசரதன்}, தன் மகனிடம் {ராமனிடம்} இவ்வாறான ஒப்பற்ற குணங்கள் பலவற்றையும் கண்டு சிந்திக்கத் தொடங்கினான்.(34ஆ,35அ) பிறகு, சிரஞ்சீவியும், முதிர்ந்தவனுமான அந்த ராஜா {தசரதன்}, "நான் ஜீவித்திருக்கும்போதே ராமன் ராஜனாகி இவ்வாறு மகிழ்வேனா?" {என்று நினைத்தான்}.(35ஆ,36அ)

தன் பிரிய சுதனின் அபிஷேகத்தை {அன்பு மகனின் பட்டாபிஷேகத்தை} எப்போது காண்போம் என்ற பரம மகிழ்ச்சியான விருப்பம் அவனது இதயத்தில் உண்மையில் எழுந்தது.(36ஆ,37அ) {தசரதன்}, "இந்த உலகில் என்னைவிட அதிகம் விரும்பப்படுபனாகவும், மழையைக் கொண்ட பர்ஜன்யனைப் போல, உண்மையில் உலகத்தின் வளர்ச்சியை விரும்புகிறவனாகவும், வாழும் உயிரினங்கள் அனைத்திடம் அன்பு பாராட்டுபவனுமாகவும் இவன் இருக்கிறான்.(37ஆ,38அ) வீரத்தில் யமனுக்கும், சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்} இணையானவனாகவும், மதியில் {அறிவில்} பிருஹஸ்பதிக்கு இணையானவனும், துணிவில் மலைக்கு இணையானவனுமாக இருக்கிறான். குணங்களில் என்னிலும் மேலானவனாகவும் திகழ்கிறான்.(38ஆ,39அ) இந்த மஹீ {பூமி} முழுவதையும் என் மகன் ஆள்வதை இந்த வயதில் கண்டு சுவர்க்கத்தை அடைவேனா?" {என்றும் நினைத்தான்}.(39ஆ,40அ)

இவ்வாறே அந்த மஹாராஜன் {தசரதன்}, அந்நிய பார்த்திபர்களுக்கு {வேறு மன்னர்களுக்கு} வாய்க்காத இந்தப் பல்வேறு குணங்களும், உலகிற் சிறந்தவர்களாலும் அளவிடப்பட முடியாத இன்னும் சிறந்த பல மங்கல குணங்களும் அவனிடம் திரண்டிருப்பதை முழுமையாகக் கண்டு நிச்சயித்து, ஆலோசகர்களுடன் கூடி {அவனை} யுவராஜனாக்கத் துணிந்தான்.(40ஆ,41,42அ) அதன்பிறகு அந்த மேதாவி {தசரதன்}, சொர்க்கத்திலும், அந்தரத்திலும் {வானத்திலும்}, பூமியிலும் உண்டாகும் உத்பாதங்களையும் {தீய சகுனங்களையும்}, தன் சரீரம் அடையும் முதுமையையும் உணர்ந்து கோரமான பயத்தை அடைந்து {பேரச்சம் கொண்டு},(42ஆ,43அ) பூர்ணசந்திரனைப் போன்ற முகம் படைத்தவனும், மஹாத்மாவும், உலகத்தால் விரும்பப்படுபவனுமான ராமனால் தன் சோகம் விலகுமென அறிந்தான்.(43ஆ,44அ)

தர்மாத்மாவான அந்த நிருபன் {தசரதன்}, தனக்கும், பிரஜைகளுக்கும் நன்மையை விரும்பி, அதற்கான காலமும் கனிந்துவிட்டதைக் கருதி விரைந்து,(44ஆ,45அ) பல்வேறு நகரங்களிலும், ஜானபதங்களிலும் {கிராமங்களிலும்} வசிப்பவர்களுக்கும், மேதினியில் பிரதானமானவர்களுக்கும், பிருத்வீபதிகளுக்கும் {பூமியின் தலைவர்களுக்கும்} தனித்தனியாக அழைப்பு விடுத்தான்.(45ஆ,46அ) அவசரமடைந்த அந்த நராதிபன் {மனிதர்களின் தலைவன்}, கேகயராஜனும் {பரதனின் தாய்மாமனான யுதாஜித்தும்}, ஜனகனும் {வருவதற்குக் காலதாமதமாகும் என்பதால்} இந்த நல்ல செய்தியை பிறகு அறிந்து கொள்ளட்டும் என்று நினைத்து அவர்களை அழைக்காதிருந்தான்.(46ஆ,47அ)

அந்த ராஜா, அங்கு வந்தவர்களை மதிப்புடன் அழைத்துத் தகுந்த வசிப்பிடங்களையும், ஆபரணங்களையும் அளித்து, தன்னையும் அலங்கரித்துக் கொண்டு, பிரஜைகளை {பிள்ளைகளைக்} கவனிக்கும் பிரஜாபதி போல {பிரம்மனைப் போல} அவர்களைப் பார்த்துக் கொண்டான்.(47ஆ,48அ) அதன் பிறகு, உலகத்தால் விரும்பப்படுபவர்களான எஞ்சிய ராஜர்கள், பகைவரின் படையை அழிப்பவனான அந்த நிருபதி {தசரத ராஜன்} அமர்ந்ததும் அவ்விடத்தில் பிரவேசித்தனர்.(48ஆ,49அ) பிறகு, அந்த நிருபர்கள், ராஜனால் ஒதுக்கப்பட்ட பல்வேறு ஆசனங்களில் அந்த ராஜனைப் பார்த்தவாறு விதிப்படி அமர்ந்தனர்.(49ஆ,50அ) மதிக்கப்படுபவர்களும், எளிமையானவர்களும், நெருக்கமாக அமர்ந்தவர்களுமான அந்த நிருபர்களாலும், நகர மக்களாலும், ஜானபதர்களாலும் சூழப்பட்டிருந்த அந்த நிருபதி {தசரதன்}, அமரர்களால் சூழப்பட்ட பகவான் ஸஹஸ்ரசக்ஷுவை {ஆயிரங்கண்களைக் கொண்ட இந்திரனைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(50ஆ,இ,ஈ,உ)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 001ல் உள்ள சுலோகங்கள் : 50

Previous | Sanskrit | TamilwithVerses | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை