The wish of Vibheeshana | Yuddha-Kanda-Sarga-121 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: அயோத்திக்குப் புறப்படத் தயாரான ராமன்; ராமன் அயோத்தியை அடைய புஷ்பக விமானத்தை ஏற்பாடு செய்த விபீஷணன்...
அரிந்தமனான {பகைவரை அழிப்பவனான} ராமன், அந்த ராத்திரியைக் கழித்து, சுகமாக எழுந்ததும், "ஜயமா" என்று கேட்டுவிட்டு, விபீஷணன், தன் கைகளைக் கூப்பிக் கொண்டு, {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(1) "ஸ்நானத்திற்குரிய அங்கராகங்கள் {நறுமணப் பொருள்கள்}, வஸ்திரங்கள், ஆபரணங்கள், சந்தனங்கள், விதவிதமான திவ்ய மாலைகள் ஆகியவற்றுடன்,{2} ராகவரே, பத்மங்களை {தாமரைகளைப்} போன்ற கண்களைக் கொண்டவர்களும், அலங்காரம் செய்வதில் திறன்மிக்கவர்களுமான இந்த நாரியைகள் {பெண்கள்}, விதிப்படியான உமது ஸ்நானத்திற்காக {நீராடலுக்காக} வந்திருக்கின்றனர்.(2,3)
இவ்வாறு சொல்லப்பட்டதும், காகுத்ஸ்தன் {ராமன்}, விபீஷணனுக்கு {பின்வரும்} பதிலைச் சொன்னான், "சுக்ரீவன் முதலான ஹரிக்களை {குரங்குகளை} ஸ்நானத்திற்கு {நீராடலுக்கு} நீ அழைப்பாயாக.(4) சுகத்திற்குத் தகுந்தவனும், சுகுமாரனும், மஹாபாஹுவும், சத்தியத்தைப் பின்பற்றுபவனுமான அந்த பரதன் என் காரணமாக துன்புற்று வருகிறான்.(5) தர்மசாரியும், கைகேயி புத்திரனுமான அந்த பரதன் இல்லாமல் ஸ்நானம் {நீராடல்}, வஸ்திரங்கள் {ஆடைகள்}, ஆபரணங்கள் ஆகியவை எனக்குப் பிடிக்கவில்லை.(6) எப்படி இவ்வாறு அந்த புரீக்கு {அயோத்திக்குத்} திரும்பிச் செல்லமுடியுமோ அதைப் பார்ப்பாயாக. அயோத்யை செல்வதற்கான இந்தப் பாதை கடப்பதற்கு மிக அரிதானதாகும்" {என்றான் ராமன்}.(7)
இவ்வாறு சொல்லப்பட்டதும், விபீஷணன் காகுத்ஸ்தனுக்கு {ராமனுக்கு பின்வருமாறு} பதில் சொன்னான், "பார்த்திவாத்மஜரே, ஒரே பகலில் அந்தப் புரீக்கு {அயோத்திக்கு} உம்மை அழைத்துச் செல்வேன்.(8) உமக்கு பத்ரம் {மங்கலமாக இருப்பீராக}. சூரியனைப் போல் ஒளிர்வதும், புஷ்பகம் என்ற நாமத்தை {பெயரைக்} கொண்டதும், என் பிராதாவான {என்னுடன் பிறந்தவரான} குபேரருக்குரியதுமான விமானம், பலவானான ராவணனால்{9} அபகரிக்கப்பட்டது. அதுலவிக்ரமரே {ஒப்பற்ற ஆற்றல் கொண்டவரே}, திவ்யமானதும், உத்தமமானதும், {நம்} விருப்பத்திற்கேற்றவாறு செல்வதுமான அஃது {அந்த விமானம்} உமது அர்த்தத்திற்காக இங்கே பாலிதம் செய்யப்பட்டிருக்கிறது {பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது}.(9,10)
எந்த யானத்தில் பிணியேதுமின்றி {கவலையேதுமின்றி} நீர் அயோத்யைக்குச் செல்லக்கூடுமோ, அத்தகையதும், மேகம் போன்றதுமான இந்த விமானம் இங்கே நிற்கிறது.(11) பிராஜ்ஞரே {அறிஞரே}, நான் உமது அனுக்கிரகத்திற்குத் தகுந்தவனென்றால், என் குணத்தை நீர் நினைவில் கொண்டிருந்தால், என்னுடன் நீர் நட்பு கொண்டிருந்தால், இங்கேயே வசித்திருப்பீராக.(12) இராமரே, சர்வ காமங்களாலும் நீர் அர்ச்சிக்கப்பட்ட பிறகு {விருப்பத்திற்குரிய அனைத்துப் பொருள்களாலும் நீர் வழிபடப்பட்ட பிறகு}, பிராதா லக்ஷ்மணர் சகிதராகவும், பாரியை வைதேஹி சகிதராகவும் நீர் செல்வீராக.(13) இராமரே, பிரியத்துடன் என்னால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் என் விருந்தோம்பலை நண்பர்களுடனும், சைனியத்துடனும் நீர் ஏற்றுக் கொள்வீராக.(14) இராகவரே, நான் அன்புடனும், மதிப்புடனும், நட்புடனும் உம்மை வேண்டிக் கொள்கிறேன். நான் உமது பணியாள். நான் உமக்கு ஆணையிடவில்லை" {என்றான் விபீஷணன்}.(15)
இவ்வாறு சொல்லப்பட்டு, சர்வ ராக்ஷசர்களும், வானரர்களும் கேட்டுக் கொண்டிருந்தபோது, ராமன், விபீஷணனிடம் {பின்வரும்} பதிலைச் சொன்னான்:(16) "பரந்தபா {பகைவரை அழிப்பவனே}, வீரா, உன் நல்லாலோசனையாலும், சர்வாத்மாவுடன் கூடிய முயற்சியாலும், மேலும் உன் நட்பினாலும் நான் பூஜிக்கப்பட்டேன்.(17) இராக்ஷசேஷ்வரா, உன்னுடைய இந்த வசனத்தின்படி நான் செயல்படவில்லை என்பதில்லை. ஆனால், என் மனம் என் பிராதாவான {என்னுடன் பிறந்தவனான} அந்த பரதனைக் காண அவசரப்படுகிறது.(18) எவன் என்னைத் திருப்பி அழைத்துச் செல்ல சித்திரகூடத்திற்கு வந்தானோ, எவன் சிரம் தாழ்ந்து யாசித்தும் அவனது வசனத்தின் படி நான் செயல்படவில்லையோ, அவனையும் {பரதனையும்}, கௌசல்யையும், சுமித்ரரையும், புகழ்பெற்றவளான கைகேயியையும், நண்பன் குஹனையும், பௌரவாசிகளையும் {அயோத்தி நகர வாசிகளையும்}, ஜனபதத்தையும் {காண விரும்புகிறேன்}.(19,20) சௌம்யா, {நான் செல்வதற்கு} என்னை அனுமதிப்பாயாக. விபீஷணா, நான் பூஜிக்கப்பட்டேன். சகாவே {தோழா}, கோபம் வேண்டாம். என் கடமையைச் செய்ய உன்னை வேண்டுகிறேன்.(21) இராக்ஷசேஷ்வரா, விமானத்தை சீக்கிரம் கொண்டு வருவாயாக. காரியம் நிறைவேறிய எனக்கு, இங்கே வசிப்பது எப்படி சம்மதமாகும்?" {என்றான் ராமன்}[1].(22)
[1] ஆண்டு பத்தொடு நாலும் இன்றோடு அறும்ஆயின்மாண்டதாம் இனி என் குலம் பரதனே மாயின்ஈண்டுப் போக ஓர் ஊர்தி உண்டோ என இன்றேதூண்டு மானம் உண்டு என்று அடல் வீடணன் தொழுதான்- கம்பராமாயணம் 10092ம் பாடல், யுத்த காண்டம், மீட்சிப் படலம்பொருள்: ஆண்டுகள் பதினான்கும் இன்றோடு முடிந்து போகுமானால், பரதனே இறந்து போவானாயின், இனி என் {சூரிய} குலமும் மாண்டு போகும். அயோத்திக்கு விரைந்து செல்ல ஒரு வாகனம் உண்டோ?" என்று {ராமன்} கேட்க, வலிமைமிக்கவனான வீடணன் {விபீஷணன்}, "இன்றே {அயோத்திக்கு} சென்று சேர விமானம் உண்டு" என்று சொல்லி வணங்கினான்.
இராமனால் இவ்வாறு சொல்லப்பட்டபோது, ராக்ஷசேஷ்வரனான விபீஷணன், சூரியனைப் போலப் பிரகாசிக்கும் அந்த விமானத்தைத் துரிதமாக அழைத்தான்.{23} காஞ்சனச் சித்திராங்கங்களுடனும், வைடூரியமயமான வேதிகையுடனும் {மேடையுடனும்} கூடியதும், உயரமான கூடங்களுடனும் எங்கும் வெள்ளியால் ஒளிர்வதும்,{24} வெள்ளை பதாகைகளாலும், துவஜங்களாலும் அலங்கரிக்கப்பட்டதும், காஞ்சனமயமான உப்பரிகைகளால் ஒளிர்வதும், ஹேம பத்மங்களால் {பொற்தாமரைகளால்} அலங்கரிக்கப்பட்டதும்,{25} கிங்கிணி மணிச் சரங்களால் நிறைந்ததும், முத்துக்களாலும், ரத்னங்களாலும் இழைத்த ஜாலங்களுடன் {சாளரங்களுடன்} கூடியதும், மணி வரிசைகளால் நிறைந்ததும், இனிய ஓசையைக் கொண்டதும்,{26} விஷ்வகர்மனால் மேரு பர்வத சிகரத்திற்கொப்பாக நிர்மிதம் செய்யப்பட்டதும், முத்துக்களுக்கும், வெள்ளிக்கும் ஒப்பான பல மேன்மாடங்களால் ஒளிர்வதும்,{27} ஸ்படிகக் கற்களாலான தலங்களை {தரையைக்} கொண்டதும், சிறந்த விரிப்புகள் விரிக்கப்பட்ட, விலையுயர்ந்த வைடூரியமிழைக்கப்பட்ட சிறந்த ஆசனங்களுடன் கூடியதுமாக அஃது {அந்த விமானம்} இருந்தது.(23-28)
தடுக்கப்பட முடியாததும், மனோவேகம் கொண்டதுமான அந்த விமானம் வந்துவிட்டதை அறிவித்து விட்டு விபீஷணன் அங்கே நின்றான்.(29) உதாரசத்வனும், சௌமித்ரியுடன் {லக்ஷ்மணனுடன்} கூடியவனுமான ராமன், பூதரத்திற்கு {மலைக்கு} ஒப்பானதும், விருப்பத்திற்கேற்றவாறு செலுத்தவல்லதுமான அந்த புஷ்பக விமானத்தைக் கண்டு ஆச்சரியமடைந்தான்.(30)
யுத்த காண்டம் சர்க்கம் – 121ல் உள்ள சுலோகங்கள்: 30
| Previous | | Sanskrit | | English | | Next |
