Thursday, 25 September 2025

பின்வாங்கிய ராவணனின் தேர் | யுத்த காண்டம் சர்க்கம் – 103 (31)

The retreat of Ravana's chariot | Yuddha-Kanda-Sarga-103 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சீதையை அபகரித்ததற்கு ராவணனை நிந்தித்த ராமன்; கணைமழையால் குழப்பமடைந்த ராவணன்; போர்க்களத்தில் இருந்து ராவணனைக் கொண்டு சென்ற சாரதி...

Rama reproaching Ravana in battle front

சமரசிலாகியான {போரைப் போற்றுகிறவனான} அந்த ராவணன், குரோதத்துடன் கூடிய காகுத்ஸ்தனால் அதிகம் துன்புறுத்தப்பட்டபோது, மஹாகுரோதமடைந்தான்.(1) ஒளிரும் நயனங்களுடன் {கண்களுடன்} கூடிய அந்த வீரியவான் {ராவணன்}, சீற்றத்துடன் சாபத்தை {வில்லை} உயர்த்தி, பெரும்போரில் ராகவனைத் தாக்கினான்.{2} அந்த ராவணன், அம்பரத்தின் மேகத்தால் {வானத்தின் மேகத்தால் நிறைக்கப்படும்} ஒரு தடாகத்தைப் போல, ஆயிரக்கணக்கான பாணத் தாரைகளால் ராமனை மறைத்தான்.(2,3) போரில் தனுவில் இருந்து ஏவப்பட்ட சரஜாலங்களால் மறைக்கப்பட்ட காகுத்ஸ்தன் {ராமன்}, அசைக்கப்பட முடியாத மஹாகிரியை {பெரும் மலையைப்} போல கலங்காதிருந்தான்.(4) சமரில் நின்ற அந்த வீரியவான், சூரியனின் கதிர்களைப் போன்ற சரஜாலங்களைத் தன் சரங்களால் தடுத்தபடியே அவற்றைப் பொறுத்துக் கொண்டான்.(5)

அப்போது, சீக்கிரஹஸ்தனான நிசாசரன் {வேகமான கைகளைக் கொண்ட இரவுலாவியான ராவணன்}, அந்த மஹாத்மாவின் மார்பில் ஆயிரக்கணக்கான சரங்களால் தாக்கினான்.(6) சமரில் சோணிதத்தால் நனைந்த லக்ஷ்மணாக்ரஜன் {லக்ஷ்மணனின் அண்ணனான ராமன்}, அரண்யத்தில் முற்றாக மலர்ந்திருக்கும் கிம்சுக {ஆச்சா} மரத்தைப் போலத் தெரிந்தான்.(7) மஹாதேஜஸ்வியான அந்தக் காகுத்ஸ்தன் {ராமன்}, சரங்களின் தாக்கத்தால் கோபமடைந்து, யுகாந்த ஆதித்யனின் தேஜஸ்ஸுடன் கூடிய சாயகங்களை {யுகத்தின் முடிவில் தோன்றும் ஆதித்யனின் ஒளியுடன் கூடிய கணைகளை} எடுத்தான்.(8) அப்போது, பெரும் கோபமடைந்த அந்த ராமராவணர்கள் இருவராலும், சராந்தகாரத்தால் {சரங்கள் உண்டாக்கிய இருளால்} சமரில் அன்யோன்யம் பார்த்துக் கொள்ள முடியவில்லை.(9) 

அப்போது, தசரதாத்மஜனும், வீரனுமான ராமன், குரோதத்தால் நிறைந்து, சிரித்துக் கொண்டே ராவணனிடம் {பின்வரும்} கடுஞ்சொற்களைச் சொன்னான்:(10) "இராக்ஷசாதமா {ராக்ஷசர்களில் இழிந்தவனே}, வசமற்றவளும் {ஆதரவற்றவளும்}, அறியாதவளுமான என் பாரியை {மனைவி சீதை}, உன்னால் அபகரிக்கப்பட்டாள். எனவே, நீ வீரியவானில்லை.(11) என்னைப் பிரிந்து, தீனமாக மஹாவனத்தில் இருந்த வைதேஹியை பலவந்தமாக அபகரித்துவிட்டு, "நான் சூரன்" என்று நினைத்துக் கொள்கிறாய்.(12) பரதாரம் தீண்டும் {பிறன்மனை விழையும்} சூரனே[1], நாதனற்ற ஸ்திரீயிடம் காபுருஷ கர்மத்தைச் செய்துவிட்டு {தலைவன் / கணவன் அற்ற பெண்ணிடம் ஆண்மையற்ற செயலைச் செய்துவிட்டு}, "நான் சூரன்" என்று நினைத்துக் கொள்கிறாய்.(13) வெட்கமற்றவனே, மரியாதை கெட்டவனே, நிலையற்ற நடத்தை கொண்டவனே, செருக்கால் மிருத்யுவை {வீண் கர்வத்தால் சீதையின் வடிவிலான மரணத்தை} ஏற்றுக் கொண்டு, "நான் சூரன்" என்று நினைத்துக் கொள்கிறாய்.(14) 

[1] விவேக்தேவ்ராய் பதிப்பில், "பகடியாகச் சொல்லப்பட்டது" என்றிருக்கிறது.

பலம் நிறைந்தவனும், சூரனும், தனதனின் பிராதாவுமான {குபேரனுடன் பிறந்தவனுமான} உன்னால், புகழத்தக்க, சிலாகிக்க {போற்றத்} தகுந்த மஹத்தான கர்மம் செய்யப்பட்டது.(15) செருக்கால் விளைந்ததும், இழிந்ததும், நன்மைக்கு இடமில்லாததுமான[2] அந்தக் கர்மத்திற்கான {சீதையைக் கடத்திய அந்தச் செயலுக்கான} மஹத்தான பலனை இதோ நீ அறுவடை செய்யப் போகிறாய்.(16) துர்மதி கொண்டவனே, சௌரவதனை {கள்வனைப்} போல சீதையை இழுத்துச் சென்று, வெட்கமில்லாமல், "நான் சூரன்" என்று உன்னை நீ நினைத்துக் கொள்கிறாய்.(17) என் முன்னிலையில் சீதை உன்னால் பலவந்தமாகத் தாக்கப்பட்டிருந்தால், அப்போது என் சாயகங்களால் கொல்லப்பட்ட நீ, உன் பிராதா கரனை பார்த்திருப்பாய்.(18) 

[2] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இராமானுஜர், "இம்மையிலும், மறுமையிலும் {நன்மைக்கு இடமில்லாத} என்று குறிப்பிடுகிறார்" என்றிருக்கிறது.

துஷ்டாத்மாவே, அதிஷ்டவசமாக என் பார்வை வரம்பிற்குள் வந்திருக்கிறாய். கூரிய சாயகங்களால் {கணைகளால்} இதோ உன்னை யமசாதனத்திற்கு {யமலோகத்திற்கு} அனுப்பப் போகிறேன்.(19) இதோ என் சரங்களால் துண்டிக்கப்பட்டு, ஜொலிக்கும் குண்டலங்களுடன் ரணப்புழுதியில் கிடக்கும் உன் சிரத்தை கிரவ்யாதங்கள் {போர்க்களப் புழுதியில் கிடக்கும் உன் தலையை ஊனுண்ணும் விலங்குகள்} இழுத்துச் செல்லப் போகின்றன.(20) இராவணா, தரையில் வீழ்த்தப்பட்ட உன் மார்பில், கழுகுகள் அமர்ந்து, பாணசல்லியங்களில் இருந்து உதிக்கும் {கணைகளால் ஏற்பட்ட காயங்களில் இருந்து வழியும்} உதிரத்தைத் தாகத்துடன் பருகட்டும்.(21) கருத்மந்தனால் உரகங்களைப் போல {கருடனால் இழுத்துச் செல்லப்படும் பாம்புகளைப் போல}, இதோ என் பாணங்களால் துளைக்கப்பட்டு, உயிரிழந்து கிடக்கும் உன் அந்திரங்களை {குடல்களை / நரம்புகளைப்} பறவைகள் இழுத்துச் செல்லட்டும்" {என்றான் ராமன்}.(22)

சத்ருக்களை அழிப்பவனும், வீரனுமான ராமன், இவ்வாறு சொல்லிவிட்டு, சமீபத்தில் இருந்த ராக்ஷசேந்திரன் மீது சரவர்ஷத்தை {கணை மழையைப்} பொழிந்தான்.(23) சத்ருவைக் கொல்ல விரும்பிய ராமன், போரில் தன் வீரியம், பலம், உற்சாகம் ஆகியவற்றையும், அஸ்திர பலத்தையும் இரட்டிப்பாக்கிக் கொண்டான்.(24) விதிதாத்மனுக்கு {அனைத்தையும் அறிந்த அறிவாளியான ராமனுக்கு} சர்வ அஸ்திரங்களும் {மனத்தில்} தோன்றின. அந்த மஹாதேஜஸ்வி, உற்சாகத்தால் பெரும் சீக்கிரஹஸ்தனானான் {மிக விரைந்த கைவேகம் கொண்டவனானான்}.(25) இராக்ஷசாந்தகம் செய்தவனான {ராக்ஷசர்களை அழித்தவனான} அந்த ராமன், இந்த சுபமான சின்னங்களை அறிந்து {நல்லறிகுறிகளான இவற்றை அடையாளம் கண்டு}, மேலும் ராவணனை வேதனையடையச் செய்தான்.(26) ஹரீக்களின் {குரங்குகளின்} கற்குவியல்களாலும், ராகவனின் சரவர்ஷத்தாலும் {கணை மழையாலும்} தாக்கப்பட்ட தசக்ரீவன் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணன்} ஹிருதயத் தடுமாற்றத்தை உணர்ந்தான்.(27) அதேபோல அவன் {ராவணன்}, சஸ்திரம் எடுக்க ஆரம்பிக்காமல், சராசனத்தையும் {வில்லையும்} வளைக்காமல், கலங்கிய அந்தராத்மாவுடன் அவனது {ராமனின்} வீரியத்தை எதிர்த்தானில்லை.(28) மிருத்யு {மரணமடையும்} காலம் நெருங்கியதால், அவனால் விரைவாக ஏவப்பட்ட சரங்களும், விதவிதமான சஸ்திரங்களும் ரணத்தில் பயனேதும் அளிக்கவில்லை[3].(29)

[3] ஒக்க நின்று எதிர் அமர் உடற்றும் காலையில்
முக்கணான் தட வரை எடுத்த மொய்ம்பற்கு
நெக்கன விஞ்சைகள் நிலையின் தீர்ந்தன
மிக்கன இராமற்கு வலியும் வீரமும்

- கம்ப ராமாயணம் 9849ம் பாடல், யுத்த காண்டம், இராவணன் வதைப் படலம்

பொருள்: சரிசமமாக நின்று எதிர்த்துப் போர்புரியும்போது, முக்கண்ணனின் மலையை {சிவனின் கயிலை மலையை} தூக்கிய வலிமையான தோளுடையவனுக்கு {ராவணனுக்கு} அவன் கற்று வைத்த மாய வித்தைகள் நெகிழ்ந்தன {நினைவுக்கு வராதிருந்தன}, அவற்றின் {தெய்வத்} தன்மைகள் அகன்றன. இராமனுக்கோ வல்லமையும் வீரமும் அதிகமாகின. {இராமனுக்கு அஸ்திரங்கள் அனைத்தும் நினைவுக்கு வந்தன. இராவணனுக்கோ எதுவும் நினைவுக்கு வரவில்லை}.

அவனது ரதத்தைச் செலுத்திய சூதன் {தேரோட்டி}, அவனது {ராவணனின்} அந்த அவஸ்தையைக் கண்டு, குழப்பமடையாமல், யுத்தகளத்தில் அவனது ரதத்தை மெதுவாகச் செலுத்தினான்.(30) பிறகு, வீரியம் தொலைந்து விழுந்த மஹீபதியைக் கண்ட அந்த சாரதி, மேகம் போல் ஸ்வனம் எழுப்பும் அவனது பயங்கர ரதத்தைத் திருப்பி, பீதியுடன் போர்க்களத்தில் இருந்து அப்புறங்கொண்டு சென்றான்.(31)

யுத்த காண்டம் சர்க்கம் – 103ல் உள்ள சுலோகங்கள்: 31

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை