Mountain of herbs and the son of the carrier of fragrance | Yuddha-Kanda-Sarga-074 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இமய மலைக்குச் சென்று, மூலிகைகளுடன் கூடிய மலைச்சிகரத்தை எடுத்து வந்த ஹனுமான்; மூலிகையின் மகிமையால் உணர்வு மீண்ட வானரர்களும், ராமலக்ஷ்மணர்களும்...
போர்க்களத்தில் அவ்விருவரும் {ராமலக்ஷ்மணர்கள் இருவரும்} விழுந்துகிடந்தபோது, ஹரியூதபர்களின் சைனியம் திகைத்திருந்தது. சுக்ரீவன், நீலன், அங்கதன், ஜாம்பவந்தன் ஆகியோரும் ஏது செய்வதெனக் கொஞ்சமும் அறியாதிருந்தனர்.(1) புத்திமான்களில் சிறந்தவனான விபீஷணன், அனைத்தையும் கண்டு விசனமடைந்தான். பிறகு, ஒப்பற்ற சொற்களால், சாகை மிருக ராஜ வீரர்களை ஆசுவாசப்படுத்தும் வகையில் {பின்வருமாறு} சொன்னான்:(2) "பயம் வேண்டாம். மனச்சோர்வடைவதற்கான காலம் இதுவல்ல. ஸ்வயம்பூவின் {பிரம்மாவின்} வாக்கியத்தை மதிக்கும் வகையிலேயே ஆரியபுத்திரர்கள் {ராமலக்ஷ்மணர்கள்} இருவரும் இந்திரஜித்தின் அஸ்திரஜாலங்களால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர். அதன்காரணமாக, சுதந்திரத்தை இழந்து உணர்விழந்துள்ளனர்.(3) அமோக {வீண்போகாத} வீரியம் கொண்ட பிரம்மம் என்ற இந்தப் பரமாஸ்திரம், ஸ்வயம்பூவால் அவனுக்கு {பிரம்மனால் இந்திரஜித்துக்கு} தத்தம் செய்யப்பட்டது. அதற்கு மதிப்பளிக்கவே ராஜபுத்திரர்கள் {ராமலக்ஷ்மணர்கள்} இருவரும் யுத்தத்தில் விழுந்தனர். இங்கே விஷாதகாலம் ஏது? {இது வருந்துவதற்கான காலமல்ல)" {என்றான் விபீஷணன்}.(4)
அப்போது, மதிமிக்க மாருதியான {வாயுமைந்தன்} ஹனுமான், விபீஷணனின் சொற்களைக் கேட்டு, பிரம்மாஸ்திரத்திற்கு மதிப்பளித்துவிட்டு, இதைக் கூறினான்:(5) "வலிமைமிக்க வானரர்களின் இந்த சைனியத்தில், அஸ்திரத்தால் தாக்கப்பட்டும், எவரெவர் பிராணன்களைத் தரித்திருக்கின்றனரோ, அவரவரை ஆசுவாசமடையச் செய்வோம்" {என்றான் ஹனுமான்}.(6)
வீரர்களான அந்த ஹனூமதன், ராக்ஷசோத்தமன் {விபீஷணன்} இருவரும் சேர்ந்து, அந்த ராத்திரியில் உல்கஹஸ்தர்களாக {கைகளில் கொள்ளிகளைக் கொண்டவர்களாக} போர்க்களத்தில் திரிந்தனர்.(7) லாங்கூலம் {வால்} அறுந்தவர்களும், கை, தொடை, கால், விரல்கள், சிரங்கள் {தலைகள்} வெட்டப்பட்டு, காத்திரங்கள் {உடல் அங்கங்கள்} எங்கும் உதிரம் பெருகுபவர்களும், {தன்னையறியாமல்} சிறுநீர் கழிப்பவர்களும்,{8} பர்வதங்களுக்கு ஒப்பாக விழுந்து கிடப்பவர்களுமான வானரர்களால் நிறைந்ததும், ஒளிரும் சஸ்திரங்களால் மறைந்து கிடப்பதுமான வசுந்தரையை {பூமியை} அவர்கள் கண்டனர்.(8,9) சுக்ரீவன், அங்கதன், நீலன், சரபன், கந்தமாதனன், கவாக்ஷன், சுஷேணன், வேகதர்சி, ஆஹுகன்,{10} மைந்தன், ஜோமுகன், துவிவிதன், பனசன் ஆகியோர் ரணத்தில் தாக்கப்பட்டுக் கிடப்பதை விபீஷணனும், ஹனூமானும் கண்டனர்.(10,11) வலிமைமிக்க வானரர்களில் அறுபத்து ஏழு கோடி பேர், பகலின் ஐந்தாம் பாகத்தில்[1], ஸ்வயம்பூவின் வல்லபனால் {பிரம்மாவுக்குப் பிடித்தமான இந்திரஜித்தால்} வீழ்த்தப்பட்டனர்.(12)
[1] தேசிராஜுஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "பகலின் பனிரெண்டு மணிநேரங்கள், பொதுவாக ஆறு கதிகைகளை (இரண்டு மணிநேரம் இருபத்து நான்கு நிமிடங்களைக்) கொண்ட ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. பிராதம் (காலை), ஸங்கவம் (முற்பகல்), மத்யாஹவம் (நடுப்பகல்), அபராஹ்னம் (பிற்பகல்), ஸாயாஹ்னம் (மாலை) என்ற பெயர்களில் அவை அறியப்படுகின்றன" என்றிருக்கிறது.
ஹனுமானும், விபீஷணனும், சாகர ஓகத்திற்கு {கடல் வெள்ளத்திற்கு / கடல் அலைகளுக்கு} ஒப்பாகத் தெரிந்ததும், பாணங்களால் பீடிக்கப்பட்டதுமான பயங்கர பலத்தை {படையைப்} பார்த்துக் கொண்டே ஜாம்பவந்தனைத் தேடிக் கொண்டிருந்தனர்.(13) ஸ்வபாவத்திலேயே ஜரையுடன் {மூப்புடன்} கூடியவனும், விருத்தனும் {முதியவனும்}, நூற்றுக்கணக்கான சரங்களால் தைக்கப்பட்டவனும், அணையப் போகும் பாவகனை {அக்னியைப்} போலத் தெரியும் வீரனுமான பிரஜாபதிசுதனை {பிரம்மனின் மகன் ஜாம்பவானை}{14} நெருங்கிக் கண்ட பௌலஸ்தியன் {புலஸ்தியரின் பேரனான விபீஷணன் பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(14,15அ) "ஆரியரே, கூரிய சரங்களால் பீடிக்கப்பட்டாலும், உமது பிராணன்கள் அழிவடையவில்லை" {என்றான் விபீஷணன்}.
விபீஷணனின் சொற்களைக் கேட்ட ரிக்ஷபுங்கவன் {கரடிகளில் முதன்மையான} ஜாம்பவான், சிரமத்துடன் வாக்கியங்களை வெளிப்படுத்தும் வகையில், இந்த வசனத்தை மொழிந்தான்:(15ஆ,16) "நைர்ருதேந்திரா {ராக்ஷசர்களின் தலைவா}, மஹாவீரியா, ஸ்வரத்தினாலேயே உன்னை அடையாளம் காண்கிறேன். கூரிய பாணங்களால் காத்திரங்கள் {உடல்பாகங்கள்} தாக்கப்பட்டுள்ளதால் கண்களால் உன்னைக் காணமுடியவில்லை.(17) நைர்ருதா {ராக்ஷசா}, எவனால் அஞ்சனையும், மாதரிஷ்வனும் {வாயுவும்} நன்மகனைப் பெற்றவர்களானார்களோ, அந்த வானரசிரேஷ்டன் {வானரர்களில் சிறந்தவன்} ஹனுமான், பிராணன்களைத் தரித்தவனாக எங்காவதிருக்கிறானா?" {என்று கேட்டான்}.(18)
ஜாம்பவதனின் வாக்கியத்தைக் கேட்ட விபீஷணன், இந்த வாக்கியத்தைச் சொன்னான், "ஆரியபுத்திரர்களையும் {ராமலக்ஷ்மணர்களையும்} தாண்டி, மாருதியை {வாயு மைந்தன் ஹனுமானைக்} குறித்து ஏன் கேட்கிறீர்?(19) ஆரியரே, வாயுசுதனிடம் {ஹனுமானிடம்} {நீர்} காட்டும் பரம ஸ்னேஹம், ராஜா சுக்ரீவனிடமும் இல்லை, அங்கதனிடமும் இல்லை, ராகவரிடம் {ராமரிடம்} கூட இல்லையே, ஏன்?" {என்று கேட்டான் விபீஷணன்}.(20)
விபீஷணனின் சொற்களைக் கேட்ட ஜாம்பவான் {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான், "நைர்ருதசார்தூலா {ராக்ஷசர்களில் புலியே, விபீஷணா}, மாருதியைக் குறித்து நான் ஏன் கேட்கிறேன்? கேட்பாயாக.(21) அந்த வீரன் ஜீவித்திருந்தால், ஹதம் செய்யப்பட்ட பலமும் ஹதம் செய்யப்பட்டதாகாது {கொல்லப்பட்ட படையும் கொல்லப்பட்டதாகாது}. ஹனூமதன் பிராணன்களைக் கைவிட்டிருந்தால், ஜீவித்திருக்கும் நாமும் மாண்டவர்களே.(22) தாதா {ஐயா}, மாருதனுக்கு {வாயு தேவனுக்கு} ஒப்பானவனும், வீரியத்தில் வைஷ்வாநரனுக்கு {அக்னி தேவனுக்கு} சமமானவனுமான மாருதி இருந்தானெனில், {நமக்கு} ஜீவிதத்தில் ஆசை பிறக்கும் {பிழைப்போம் என்ற நம்பிக்கை உண்டாகும்" என்றான் ஜாம்பவான்}.(23)
அப்போது, விருத்தனின் {முதியவனின்} அருகில் சென்ற மாருதாத்மஜன் {வாயுமைந்தன்} ஹனுமான், வினயத்துடன் {பணிவுடன்} ஜாம்பவதனின் பாதங்களைப் பற்றி, வணக்கம் செலுத்தினான்.(24) பிலவகேந்திரன் {தாவிச் செல்பவர்களின் தலைவனான ஜாம்பவான்}, இந்திரியங்கள் கலங்கியவனாக இருந்தாலும், ஹனூமதனின் சொற்களைக் கேட்டதும், மீண்டும் தான் பிறந்தைப் போல {புத்துயிர் பெற்றவனாகத் தன்னைக்} கருதினான்.(25)
அப்போது, மஹாதேஜஸ்வியான அந்த ஜாம்பவான், ஹனூமந்தனிடம் {பின்வருமாறு} மொழிந்தான், "வருவாயாக. ஹரிசார்தூலா {குரங்குகளில் புலியே}, வானரர்களைப் பாதுகாக்கக் கடவாய்.(26) அளவில்லா விக்ரமம் கொண்ட நீயே இவர்களின் பரம சகா {உயர்ந்த தோழன்} ஆவாய். வேறு யாருமில்லை. இஃது உன் பராக்கிரமத்திற்கான காலமாகும். {இத்தகைய} வேறு எவரையும் நான் பார்க்கவில்லை.(27) இரிக்ஷவானர வீரர்களின் அனீகங்களுக்கு {கரடி, வானர வீரர்களின் படைகளுக்கு} மகிழ்ச்சியளிப்பாயாக. உணர்விழந்த ராமலக்ஷ்மணர்களையும் சல்லியங்களற்றவர்களாக {முட்கள் அற்றவர்களாக / வேதனைகளற்றவர்களாச்} செய்வாயாக.(28) ஹனூமனே, பரம சாகரத்தின் மேலே, மேலே சென்று நகசிரேஷ்டமான ஹிமவந்தத்திற்கு {மலைகளிற்சிறந்த இமய மலைக்குச்} செல்லக் கடவாய்.(29) பிறகு, அரினிசூதனா {பகைவரை அழிப்பவனே}, அங்கே உத்தம பர்வதமான ரிஷபத்தையும், காஞ்சனத்துடன் {தங்கத்துடன்} கூடிய அதி உக்கிர கைலாச சிகரத்தையும் காண்பாய்.(30) வீரா, அவ்விரு சிகரங்களுக்கு மத்தியில் ஒப்பற்ற பிரபையுடன் ஒளிர்வதும், சர்வ ஔஷதிகளையும் {மூலிகைகளையும்} கொண்டதுமான ஔஷதிபர்வதத்தை நீ காண்பாய்.(31) வானரசார்தூலா {வானரர்களில் புலியே}, அதன் உச்சியில், ஒளியுடன் கூடிய நான்கு ஔஷதிகள் {மூலிகைகள்} முளைத்திருக்கும். அவை தசதிசைகளையும் {பத்துத் திசைகளையும்} ஒளிரச் செய்வதை நீ காண்பாய்.(32) அவையே, {இறந்தோரை உயிர்ப்பிக்கும்} மிருதஸஞ்ஜீவினி, {முட்களை அகற்றி / ஆயுதத்துண்டுகளை வெளியேற்றி, காயங்களை ஆற்றும்} விசல்யகரணி, {உடலின் அசல் நிறத்தை மீட்கும்} ஸௌவர்ணகரணி, {முறிந்த எலும்புகளையும், அங்கங்களையும் சேர்க்கும்} ஸந்தானி என்ற மஹா ஔஷதிகளாகும் {பெரும் மூலிகைகளாகும்}.(33) ஹனுமானே, அவை அனைத்தையும் எடுத்துக் கொண்டு சீக்கிரம் வரக் கடவாய். கந்தவஹாத்மஜா {நறுமணத்தைச் சுமப்பவனின் மைந்தனே}, பிராணன்களைச் செலுத்தி ஹரிக்களை ஆசுவாசப்படுத்துவாயாக" {குரங்குகளை உயிர்ப்பித்து, அவர்களைத் தேற்றுவாயாக", என்றான் ஜாம்பவான்}.(34)
ஹரிபுங்கவனான {குரங்குகளில் மேன்மையான} ஹனுமான், ஜாம்பவதனின் வாக்கியத்தைக் கேட்டதும், நீரின் வேகத்தால் {பலமடையும்} ஆர்ணவத்தைப் போல, பலத்தின் உற்சாகத்தால் நிறைந்தான்.(35) {திரிகூட} பர்வதத்தின் உச்சியில் நின்ற வீரனான அந்த ஹனுமான், உத்தம பர்வதத்தைப் பீடித்த இரண்டாம் பர்வதத்தைப் போலத் தெரிந்தான்.(36) அப்போது ஹரி பாதத்தால் {குரங்கின் பாதம் அழுத்தியதில்} அதிகம் பீடிக்கப்பட்டு பங்கமடைந்த அந்த பர்வதம், தன்னையே தாங்கிக் கொள்ளும் சக்தி இல்லாமல் ஒடுங்கியது.(37) ஹனூமதனால் பீடிக்கப்பட்டு அதன் மரங்கள் பூமியில் விழுந்து, ஹரிவேகத்தில் {குரங்கின் வேகத்தில்} எரிந்தன. அதன் சிருங்கங்களும் முறிந்தன.(38) மரங்களும், பாறைத்தலங்களும் பங்கமடைந்து {முறிந்து}, அந்த உத்தம பர்வதம் அதிர்ந்து ஆடும்போது, வானரர்களால் அங்கே நிற்க முடியவில்லை.(39) மஹாதுவாரங்கள் அசையவும், கிருஹங்களும் {வீடுகளும்}, கோபுரங்களும் முறிந்து விழவும், பீதியில் குழம்பிய லங்கை, ராத்திரியில் நர்த்தனம் செய்வது போலத் தெரிந்தது.(40) பிருத்வீதரத்திற்கு ஒப்பான மாருதாத்மஜன் {மலைக்கு ஒப்பான வாயு மைந்தன் ஹனுமான்}, அந்தப் பிருத்வீதரத்தை {மலையை} நன்றாகப் பீடித்து, ஆர்ணவத்துடன் கூடிய பிருத்வியை {கடலுடன் கூடிய பூமியை} நடுங்கச் செய்தான்.(41)
பிறகு, அந்த ஹரி {குரங்கான ஹனுமான்} அங்கிருந்து, மலயபர்வதத்தில்[2] ஏறினான். மேருவையும், மந்தரத்தையும் போலிருந்த அது, நானாவித பிரஸ்ரவணங்களால் {நீரோடைகளால்} நிறைந்திருந்தது.{42} மலர்ந்த கமலங்கள், உத்பலங்களுடன் {கருநெய்தல்களுடன்} கூடிய அது, நானாவித மரங்களாலும், கொடிகளாலும் மறைக்கப்பட்டிருந்தது. தேவர்களாலும், கந்தர்வர்களாலும் சேவிக்கப்பட்ட அஃது, அறுபது யோஜனை உயரம் கொண்டதாக இருந்தது.{43} வித்யாதரர்கள், முனிவர்கள், அப்சரஸ் கணங்களாலும், நானாவித மிருக கணங்களாலும் நிறைந்திருந்த அஃது, ஏராளமான குகைகளுடன் சோபித்துக் கொண்டிருந்தது.{44} யக்ஷர்கள், கந்தர்வர்கள், கிங்கரர்களும் கலக்கம் அடையும் வகையில், மேகத்துக்கு ஒப்பாக அங்கே மாருதாத்மஜனான ஹனுமான் வளர்ந்தான் {தன் உடலை பெருக்கிக் கொண்டான்}.(42-45)
[2] 46ம் சுலோகத்தில் அங்கிருந்து உச்சக் குரலில் ஹனுமான் முழங்கியது அசுரர்களை அச்சுறுத்தியதாகவும், மேலும் 50ம் சுலோகத்தில் ஹனுமான் மலய மலையில் இருந்து குதிக்கும்போது, தன்னுடன் சேர்த்து சில வானரர்களையும் இழுத்துச் சென்றான் என்ற குறிப்புகள் இருக்கின்றன. எனவே, இது லங்கையில் உள்ள மலைய பர்வதமாக இருக்க வேண்டும்.
அவன், சைலத்தைத் தன் பாதங்களால் அழுத்தி, படபாமுகத்தை {வடவாமுகாக்னியைப்} போல உக்கிரமாக வாயைத் திறந்து, உச்ச நாதம் செய்து ரஜனீசரர்களை அச்சுறுத்தினான்.(46) இலங்கையில் இருந்த ராக்ஷச வியாகரர்கள் {ராக்ஷசப் புலிகள்}, பயங்கரமாக முழங்கும் அந்த உத்தமநாதத்தைக் கேட்டு, அப்படியும், இப்படியும் அசையும் சக்தியற்றவர்களாக இருந்தனர். (47) பரந்தபனும், பீமவிக்ரமனுமான மாருதி {பகைவரை அழிப்பவனும், பேராற்றல் வாய்ந்தவனுமான வாயுமைந்தன் ஹனுமான்}, ராமனை நமஸ்கரித்துவிட்டு, ராகவனின் அர்த்தத்திற்கான பரம கர்மத்தில் {ராமனுக்கான பெருஞ்செயல் செய்வதில்} தன் மனத்தைச் செலுத்தினான்.(48) அவன் புஜங்கத்திற்கு {பாம்பிற்கு} ஒப்பான வாலை உயர்த்தி, தன் பிருஷ்டத்தை {பின்பகுதியை} வளைத்து, காதுகளை மடக்கி, உக்கிரமான படபாமுகத்திற்கு ஒப்பான வாயைத் திறந்து, சண்ட வேகத்தில் வியோமத்திற்குள் {வானத்திற்குள்} பாய்ந்தான்.(49) தன் வேகத்தால் ஏராளாமான விருக்ஷ கண்டங்களையும் {மரக்கூட்டங்களையும்}, சைலங்களையும், பாறைகளையும், சில பிராகிருத {சாதாரண} வானரர்களையும் சேர்த்து இழுத்துச் சென்றான். அவனது கைகளாலும், தொடைகளாலும் உண்டான வேகத்தில் {அவனுடன்} பாய்ந்து சென்ற அவை, வேகம் குறையப்பெற்றவையாக நீரில் விழுந்தன.(50)
உரக போகத்தை {பாம்பின் உடலைப்} போன்ற தன் புஜங்கங்களை {கைகளை} விரித்த அந்த வாயுஸூனன் {வாயு மைந்தன் ஹனுமான்}, புஜங்காரிக்கு {பாம்புகளின் பகைவனான கருடனுக்கு} ஒப்பான வீரியத்துடன், திசைகளை இழுத்துச் செல்வதைப் போல, மேருவுக்கு ஒப்பான நகராஜனை {இமய மலையை} நோக்கிச் சென்றான்.(51) அலைகளின் வரிசைகள் புரள்வதும், பிராணிகள் யாவும் அங்குமிங்கும் அல்லாடுவதுமான சாகரத்தை நோக்கியபடியே, அவன் விஷ்ணுவின் கரங்களில் இருந்து விடுபட்ட சக்கரம் எப்படியோ, அப்படி விரைந்து சென்றான்.(52) அவன், பர்வதங்கள், பக்ஷிகணங்கள் {பறவைக்கூட்டங்கள்}, சரஸ்கள் {ஏரிகள்}, நதிகள், தடாகங்கள், ஜனங்கள் நிறைந்த உத்தம புரங்கள் {நகரங்கள்} ஆகியவற்றைக் கண்டபடியே தன் பிதாவுக்கு {தன் தந்தையான வாயுவுக்குத்} துல்லியமான வேகத்தில் சென்றான்.(53) தன் பிதாவுக்குத் துல்லியமான பராக்கிரமம் கொண்ட அந்த வீர ஹனுமான், சிரமம் களைந்து, ஆதித்யபாதையை ஆசரித்துத் துரிதமாகச் சென்றான்.(54) ஹரிசார்தூலனான மாருதி, மாருதன் {காற்று செல்லும் வேகம்} எப்படியோ, அப்படிப்பட்ட மஹத்தான வேகத்துடன், சப்தத்தால் திசைகளில் நாதம் எழுப்பியபடியே சென்றான்.(55)
மஹாகபியான மாருதி, ஜாம்பவதனின் வாக்கியத்தை நினைவில் கொண்டு, பீம விக்ரமத்துடன் சென்று, திடீரென ஹிமவந்தத்தையும் கண்டான்.(56) நானாவித பிரஸ்ரவணங்கள் {அருவிகள்}, ஏராளமான குகைகள், ஊற்றுகள் ஆகியவற்றால் சோபிப்பதும், வெண்மேகக் கூட்டங்களுக்கு ஒப்பான சிகரங்களுடன் அழகாகத் தெரிவதும், விதவிதமான விருக்ஷங்களை {மரங்களைக்} கொண்டதுமான உத்தம பர்வதத்தை அடைந்தான்.(57) அவன், மிக உயர்ந்ததும், உத்தம ஹேம சிருங்கங்களைக் கொண்டதுமான அந்த மஹா நகேந்திரத்தை {மலையரசை / இமய மலையை} அடைந்து, ஸுரரிஷி சங்கங்களால் {தேவ, ரிஷிகளின் கூட்டத்தால்} சேவிக்கப்படுபவையும், புண்ணியம் நிறைந்தவையுமான மஹா ஆசிரமங்களைக் கண்டான்.(58)
அவன், {பிரம்மனின் வசிப்பிடமான} பிரம்மகோசம், ரஜதாலயம் {சிவனின் வசிப்பிடமான கயிலாயம்}, {இந்திரனின் வசிப்பிடமான} சக்கிராலயம், {ருத்திரன் கணை ஏவிய இடமான} ருத்ரசரப்ரமோக்ஷம், {விஷ்ணுவின் குதிரை முக அவதாரமான ஹயக்ரீவ வழிபாட்டுக்குரிய} ஹயானனம், {பிரம்மனின் தலை விழுந்த இடமான} ஜுவலிக்கும் பிரம்மசிரஸ் ஆகியவற்றையும், வைவஸ்வத கிங்கரர்களையும் {யமகிங்கரர்களையும்} கண்டான்.(59) {பிரம்மன் இந்திரனுக்கு வஜ்ராயுதத்தைக் கொடுத்த இடமான} வஜ்ராலயம், சூரியப் பிரபையுடன் கூடிய {குபேரனின் வசிப்பிடமான} வைச்ரவணாலயம், {சூரியன் கட்டப்பட்ட இடமான} சூரியநிபந்தம்[3], {தேவர்களைக் காண பிரம்மன் அமரும் இடமான} பிரம்மாஸனம், {சிவனுக்குரிய வில்லின் இருப்பிடமான} சங்கரகார்முகம் ஆகியவற்றையும், வசுந்தரையின் நாபியையும் {பூமியின் தொப்புளான பாதாளத்திற்குள் செல்லும் வழியையும்} கண்டான்.(60)
[3] நரசிம்மாசாரியர் பதிப்பில், "ஸூர்யனது பார்யையாகிய சாயா தேவியின் ப்ரீதிக்காக விஷ்வகர்மா ஸூர்யனுடைய வெப்பத்தைக் குறைக்கும்பொருட்டுச் சாணை பிடிப்பதற்காக ஏற்படுத்தின ஸ்தானம்" என்றிருக்கிறது.
உத்தம கைலாசம், {அந்தக் கைலாசத்தில் சிவன் அமரும்} ஹிமவச்சிலை, அப்படியே சிறந்த காஞ்சன சைலமான {பொன்மலையான} ரிஷபம் ஆகியவற்றையும், சர்வ ஔஷதங்களால் {மூலிகைகளால்} ஜுவலிப்பதும், சர்வ ஔஷதங்களுக்கும் இருப்பிடமுமான ஔஷதி பர்வதேந்திரத்தையும் கண்டான்.(61) அந்த வாசவதூதஸூனன் {இந்திரனின் தூதனான வாயுவின் மைந்தன் ஹனுமான்}, அனலனின் {அக்னியின்} கதிர்களால் ஒளிரும் அதைக் கண்டு, வியப்படைந்து, அந்த ஔஷதி பர்வதேந்திரத்திற்குப் பாய்ந்து சென்று, அங்கே ஔஷதிகளை {மூலிகைகளைத்} தேடினான்.(62) மஹாகபியான அந்த மாருதாத்மஜன் {பெருங்குரங்கான வாயுமைந்தன் ஹனுமான்}, ஆயிரக்கணக்கான யோஜனைகளைக் கடந்து வந்து, திவ்ய ஔஷதங்களை {தெய்வீக மூலிகைகளைக்} கொண்ட சைலத்தில் திரிந்து கொண்டிருந்தான்.(63) அப்போது அந்தப் பெரும் மலையில் எங்குமிருந்த மஹா ஔஷதங்கள் {பெரும் மூலிகைகள்}, தங்களுக்காக {தங்களை அடைவதற்காக} வந்திருப்பவனை அறிந்து, அங்கே புலப்படாமல் மறைந்தன.(64)
மஹாத்மாவான அந்த ஹனுமான், அவற்றைக் காணாமல் கோபமடைந்து, அந்தக் கோபத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பெரும் நாதம் செய்து, அக்னிக்கு ஒப்பான கண்களுடன், அந்த மஹீதரேந்திரத்திடம் {மலையரசான ஔஷதிபர்வதத்திடம் பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(65) "நகேந்திரா {மலையரசே}, ராகவரிடம் தயை காட்டக்கூடாது என்ற நிச்சயத்துடன் இருக்கிறாயா என்ன? அப்படியிருந்தால், என் பாஹுபலத்தால் பீடிக்கப்பட்டு, இதோ நீ சிதறப் போவதைப் பார்ப்பாயாக" {என்று சொன்னான் ஹனுமான்}.(66)
ஆயிரக்கணக்கான தாதுக்கள் நிறைந்த சிருங்கத்தை, அதன் மரங்களோடும், யானைகளோடும், காஞ்சனத்தோடும் {பொன்னோடும்} இறுகப் பற்றிய அவன் {ஹனுமான்}, கூடங்கள் சிதற, முகடுகள் பற்றி எரிய அதைப் பெயர்த்தெடுத்த உடனேயே வேகமாக குதித்தெழுந்தான்.(67) அஸுரஸுரேந்திரர்கள் உள்ளிட்ட உலகங்களை அச்சுறுத்தியபடியே அதை {அந்த ஔஷதிபர்வத சிகரத்தைப்} பெயர்த்தெடுத்து, அனேக விண்ணவர்களால் துதிக்கப்பெற்று, வானத்தில் பாய்ந்து, கருடனின் உக்கிர வேகத்தில் வானத்தில் விரைந்து பாய்ந்தான்.(68) பாஸ்கரனுக்கு {சூரியனுக்கு} ஒப்பான பிரகாசத்துடன் கூடிய அவன் {ஹனுமான்}, பாஸ்கரனைப் போல் ஒளிரும் அந்த சிகரத்தைப் பற்றிக் கொண்டு, பாஸ்கராத்வானத்தை {சூரிய மார்க்கத்தை} அடைந்து, ரவியின் {சூரியனின்} சமீபத்திலேயே மற்றொரு பாஸ்கரனை {சூரியனைப்} போல் ஒளிர்ந்தான்.(69) சைலத்திற்கு ஒப்பான அந்த கந்தவஹாத்மஜன் {நறுமணங்களைச் சுமந்து செல்பவனின் மைந்தனான ஹனுமான்}, வானத்தில் அந்த சைலத்துடன், கிட்டத்தட்ட ஆயிரம் நுனிகளுடன் எரியும் சக்கரத்தைக் கொண்ட விஷ்ணுவைப் போலத் தெரிந்தான்.(70) அப்போது அவனைக் கண்ட வானரர்கள் கூச்சலிட்டனர். அவர்களைக் கண்டு அவனும் மகிழ்ச்சியுடன் நாதம் செய்தான். அவர்களின் பேரொலியைக் கேட்ட லங்காலயர்கள் {லங்காவாசிகள்} பீதியில் கூச்சலிட்டனர்[4].(71)
[4] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கு வானரர்கள் ஹனுமானைப் பார்த்து இறைச்சலிட்டதாகச் சொல்லுகையால், தூரத்தினின்றே அந்தப் பர்வதத்திலுள்ள ஔஷதிகளின் வாஸனையை மோந்து, எல்லோரும் ஜீவித்தார்களென்று தெரிகிறது" என்றிருக்கிறது.
பிறகு அந்த மஹாத்மா {ஹனுமான்}, அந்த உத்தம சைலத்தில், வானர சைனியத்தின் மத்தியில் இறங்கினான். அங்கே அவன், ஹரியூதபர்களுக்கு {குரங்குக் குழுத் தலைவர்களுக்குத்} தலைவணங்கி, விபீஷணனைத் தழுவிக் கொண்டான்.(72) மஹா ஔஷதிகளின் அந்த கந்தத்தை {மணத்தை} நுகர்ந்த அந்த மானுஷராஜபுத்திரர்கள் இருவரும் {ராமலக்ஷ்மணர்கள் இருவரும்}, அங்கேயே அப்போதே விசல்யர்களாகினர் {முட்கள் நீங்கி / வேதனையற்றவர்களாகினர்}. சிறந்த ஹரிவீரர்கள் {குரங்கு வீரர்கள்} பிறரும் எழுந்தனர்.(73) ஹதம் செய்யப்பட்டவர்களான அவர்கள் அனைவரும், மிகச் சிறந்த அந்த ஔஷதிகளின் கந்தத்தால் க்ஷணத்தில் விசல்யர்களாகி {வேதனைகளற்று}, துன்பம் நீங்கி, நிசியின் அந்தத்தில் {விடியற்காலையில்} உறங்கியவர் எழுவதைப் போல எழுந்தனர்.(74)
எப்போதிலிருந்து லங்கையில் ஹரிராக்ஷசர்கள் போரிடுகின்றனரோ, அப்போதிலிருந்தே ராவணனின் ஆணையின் பேரில், மான அர்த்தத்திற்காக,{75} கபிகுஞ்சரர்களால் {குரங்குகளில் யானைகளால்} போரில் கொல்லப்பட்ட ராக்ஷசர்கள் அனைவரும், அவரவர் கொல்லப்பட்டபோதே {கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தெரியக்கூடாது என்பதற்காக} சாகரத்தில் வீசப்பட்டனர் {அதன் காரணமாகவே, பெரும் மூலிகைகளின் நறுமணம் பரவியும் அவர்கள் உயிர்த்தெழவில்லை}.(75,76) பிறகு, ஹரியான கந்தவஹாத்மஜன் {ஹனுமான்}, உக்கிர வேகத்துடன் எழுந்து சென்று, ஔஷதீசைலத்தை ஹிமவந்தத்திலேயே விரைவாகக் கொண்டு சேர்த்து, மீண்டும் ராமனை வந்தடைந்தான்.(77)
யுத்த காண்டம் சர்க்கம் – 074ல் உள்ள சுலோகங்கள்: 77
Previous | | Sanskrit | | English | | Next |