The battle of the primary army | Yuddha-Kanda-Sarga-093 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராவணனுடைய ஆணையின் பேரில் போர்க்களம் சென்ற ராக்ஷசப் படை; இராமனின் வலிமைமிக்க கணைகளால் அழிவை அடைந்தது...
தீனனும், பரம துக்கத்தில் இருந்தவனுமான அந்த ராஜா {ராவணன்}, சபைக்குள் பிரவேசித்து, சிம்ஹத்தைப் போலப் பெருமூச்சுவிட்டபடியே முக்கிய ஆசனத்தில் அமர்ந்தான்.(1) மஹாபலவானான அந்த ராவணன், புத்திர விசனத்தால் உண்டான வேதனையுடன் கைகளைக் கூப்பிக் கொண்டு, அந்த சர்வ பலமுக்கியர்களிடமும் {படைத்தலைவர்களான அவர்கள் அனைவரிடமும், பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(2) "சர்வ ஹஸ்த அஷ்வங்களால் {யானைகள், குதிரைகள் அனைத்தாலும்} சூழப்பட்ட, ரத சங்கங்களும், பதாதிகளுமான {தேர்ப்படையையும், காலாட்படையையும் சேர்ந்தவர்களான} நீங்கள் அனைவரும் புறப்படுவீராக.(3) இராமனைத் தனியாகச் சுற்றி வளைத்து, மழைக்காலத்து மேகங்களைப் போல, சர வர்ஷங்களை வர்ஷித்து {கணை மழைகளைப் பொழிந்து}, அவனைக் கொல்வீராக.(4) அல்லது, நான், நாளைய பெரும்போரில், உலகம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, உங்கள் கூரிய சரங்களால் காத்திரங்கள் {கணைகளால் உடல் உறுப்புகள்} பிளக்கப்பட்ட ராமனைக் கொல்வேன்" {என்றான் ராவணன்}.(5)
அந்த ராக்ஷசர்கள், ராக்ஷசேந்திரனின் {ராக்ஷசர்களின் தலைவனான ராவணனின்} இந்த வாக்கியத்தை ஏற்றுக் கொண்டு, சீக்கிரமாகச் செல்லக்கூடிய ரதங்களில், நானாவித அனீகங்களுடன் {படைகளுடன்} உடனடியாகப் புறப்பட்டுச் சென்றனர்.(6) அவர்கள் அனைவரும், சரீரத்தை அழிக்கவல்ல பரிகங்களையும், பட்டிசங்களையும், சர, கட்க, பரசுகளையும் வானரர்கள் மீது வீசினர்.{7} வானரர்களும், பதிலுக்கு ராக்ஷசர்களை நோக்கி மரங்களையும், சைலங்களையும் வீசினர்.(7,8அ)
சூரிய உதயம் முதல் ராக்ஷசர்களுக்கும், வானரர்களுக்கும் இடையிலான அந்த மஹாபயங்கரப் போர், மிகப் பயங்கரமானதாகவும், குழப்பமிக்கதாகவும் ஆனது.(8ஆ,9அ) அப்போது, அந்த வானரராக்ஷசர்கள் போரில் விசித்திரமான கதைகள் {கதாயுதங்கள்}, பிராசங்கள், கட்கங்கள் {வாள்கள்}, பரசுகள் {கோடரிகள்} ஆகியவற்றால் அன்யோன்யம் தாக்கிக் கொண்டனர்.(9ஆ,10அ) இவ்வாறு அந்தப் போர் வளர்ந்து கொண்டிருந்தபோது, எழுந்த மஹத்தான புழுதிப்படலமானது, ராக்ஷச, வானரர்களின் சோணித {ரத்தப்} பெருக்கால், அடங்கியது அற்புதமாக இருந்தது.(10ஆ,11அ) மாதங்கங்களையும் {யானைகளையும்}, ரதங்களையும் கரைகளாகவும், வாஜிகளை மத்ஸ்யங்களாகவும் {குதிரைகளை மீன்களாகவும்}, துவஜங்களை மரங்களாகவும், கொண்ட சோணிதாபகம் {ரத்த ஆறு}, சரீரங்களை மரக்கட்டைகளாகச் சுமந்து பெருக்கெடுத்து ஓடியது.(11ஆ,12அ)
அப்போது அந்த சர்வ வானரர்களும், சோணிதத்தில் முழுமையாக நனைந்தனர்.{12ஆ} சமரில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த வானரேந்திரர்கள், துவஜங்கள், கவசங்கள், ரதங்கள், அஷ்வங்கள் ஆகியவற்றையும், நானாவித ஆயுதங்களையும் நொறுக்கினர்.(12ஆ,13அ,ஆ) பிலவங்கமர்கள் {தாவிச் செல்பவர்களான வானரர்கள்}, தங்கள் கூரிய பற்களாலும், நகங்களாலும், ராக்ஷசர்களின் கேசங்களையும், காதுகளையும், நெற்றிப் புருவங்களையும், நாசிகளையும் {மூக்குகளையும்} துண்டித்தனர்.(14) பழங்களுடன் கூடிய விருக்ஷசத்தை சகுனங்கள் {பறவைகள்} எப்படியோ, அப்படியே ஒவ்வொரு ராக்ஷசனையும் நூறு வானரபுங்கவர்கள் எதிர்த்தோடினர்.(15) அப்போது, பர்வதங்களுக்கு ஒப்பான ராக்ஷசர்கள், பெரும் கதைகள், பிராசங்கள், கட்கங்கள், பரசுகளால் வானரர்களை கோரமாகத் தாக்கினர்.(16) இராக்ஷசர்களால் வதைக்கப்பட்ட மஹாசம்முவை சார்ந்தவர்கள் {பெரும்படையைச் சேர்ந்த வானரர்கள்}, சரண்யனும் {தஞ்சமளிப்பவனும்}, தசரதாத்மஜனுமான ராமனிடம் சரணம் அடைந்தனர் {தஞ்சம்புகுந்தனர்}.(17)
அப்போது, மஹாதேஜஸ்வியும், வீரியவானுமான ராமன், தன் தனுவை எடுத்துக் கொண்டு, ராக்ஷச சைனியத்திற்குள் பிரவேசித்து சர வர்ஷத்தை வர்ஷித்தான் {கணை மழையைப் பொழிந்தான்}.(18) அப்போது அம்பரத்தில் சூரியனை {வானில் சூரியனை அணுகாத} மேகங்களைப் போல, சராக்னியால் எரித்துக் கொண்டே உள்ளே பிரவேசித்த ராமனை அந்த மஹாகோரர்கள் அணுகத் துணிந்தார்களில்லை.(19) இரஜனீசரர்கள், ராமனால் செய்யப்பட்ட கோரங்களை மட்டும் கண்டார்களே அன்றி, ரணத்தில் பிறரால் செய்ய முடியாத கர்மங்களைச் செய்த ராமனை இல்லை {கண்டார்களில்லை}[1].(20) வனத்தை அடைந்த வாதத்தை {வாயுவை} எப்படியோ, அப்படியே மஹாரதங்களை ஊதித் தள்ளிவிட்டு, மஹா அனீகத்தை அல்லாடச் செய்த ராமனை அவர்கள் கண்டார்களில்லை {மரங்களை முறிக்கும் காற்றைக் காண முடியாததைப் போல அவர்களால் ராமனைக் காணமுடியவில்லை}.(21) சஸ்திரங்களால் பீடிக்கப்பட்டு, நொறுங்கி, எரிந்து, சரங்களால் துளைக்கப்பட்டுப் பிளக்கப்படும் பலத்தை {படையை} அவர்கள் கண்டார்களேயன்றி, சீக்கிரமாகக் காரியங்களைச் செய்யும் ராமனை இல்லை. {விரைந்து செயலாற்றும் ராமனை அவர்கள் கண்டார்களில்லை}.(22) இந்திரிய அர்த்தங்களில் நிலைக்கும் பூதாத்மாவை {பார்க்க முடியாத} பிரஜைகளைப் போல {புலன் இன்பங்களில் திளைக்கும் சரீரத்தில் உள்ள ஆத்மாவைப் பார்க்கமுடியாத மக்களைப் போலத்} தங்கள் சரீரங்களைத் தாக்கும் ராகவனை அவர்கள் பார்த்தார்களில்லை.(23)
[1] தர்மாலயப் பதிப்பில், "ஸ்ரீராமரால் மிகப்பயங்கரமானவைகள் புரியப்பட்டன. அரக்கர்களும் போரில் ஸ்ரீராமரின் செயற்கரிய செயல்களை மட்டும் கண்டார்கள்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "யுத்தத்தில் ராமன் மஹா பயங்கரங்களும், பிறர்க்குச் செய்யமுடியாதவைகளுமான கார்யங்களைச் செய்து கொண்டிருக்கையில், அவனுடைய ஹஸ்தலாகவத்தின் மிகுதியால் அந்தக் கார்யங்களைச் செய்து முடித்த பின்பு கண்டார்களே யன்றிச் செய்து கொண்டிருக்கும் பொழுது காணவல்லராகவில்லை" என்றிருக்கிறது. கோரக்பூர், கீதா பிரஸ் பதிப்பில், "இராமன், மிக பயங்கரமான அழிவுகளை நிகழ்த்திக் காட்டினார். அரக்கர்கள், அந்த அழிவுச் செயல்களைக் கண்டார்களே தவிர அவைகளை நிகழ்த்தியவரைக் கண்டார்களில்லை" என்றிருக்கிறது.
"இதோ கஜானீகத்தை {யானைப்படையை} அழிக்கிறான்; இதோ மஹாரதங்களை அழிக்கிறான்; இதோ தன் கூரிய சரங்களால், வாஜிகளுடன் கூடிய பதாதிகளை {குதிரைகளுடன் கூடிய காலாள்படையை} அழிக்கிறான்",{24} என்ற அந்த சர்வ ராக்ஷசர்களும், காண்பதற்கு ராமனைப் போலிருந்தவர்களைக் கண்டு, ரணத்தில் கோபத்துடன் அன்யோன்யம் {ஒருவரையொருவர்} தாக்கிக் கொண்டனர்.(24,25)
மஹாத்மா ஏவிய காந்தர்வமெனும் {காந்தர்வாஸ்திரம் எனும்} பரமாஸ்திரத்தால் மோஹதிம் அடைந்த அவர்கள், தங்கள் வாஹினியை எரித்துக் கொண்டிருந்த ராமனைக் கண்டார்களில்லை[2].(26) இரணத்தில் ஆயிரக்கணக்கான ராமர்களைப் பார்த்த அந்த ராக்ஷசர்களும், மீண்டும் பெரும்போரில் ஒரேயொரு காகுத்ஸ்தனைப் பார்த்தனர்.(27) அவர்கள், மஹாத்மாவின் {ராமனின்} காஞ்சனக் கார்முகத்தின் நுனி, கொள்ளிச் சக்கரத்திற்கு நிகராகச் சுழல்வதைக் கண்டார்களேயன்றி, ராகவனை இல்லை {ராமனைக் கண்டார்களில்லை}.(28) சரீரத்தை நாபியாகவும் {மையப் பகுதியாகவும்}, சத்வத்தை {வலிமையை} தீப்பொறியாகவும், சரங்களை {கணைகளை} ஆரங்களாகவும், கார்முகத்தை நேமியாகவும் {வில்லை, சுற்றளவில் உள்ள கட்டு போன்ற புடைப்பாகவும்}, நாணும், உள்ளங்கையும் உறைவதால் உண்டாகும் கோஷத்தை அதன் ஒலியாகவும், தேஜஸ், புத்தி, குணம் ஆகியவற்றைப் பிரபையாகவும்,{29} திவ்யாஸ்திரங்களை நுனியின் குணமாகவும் {அடிச்சுவடுகளாகவும்} கொண்ட காலச் சக்கரத்தைப் போல, யுத்தத்தில் ராக்ஷசர்களை அழிக்கும் ராமச்சக்கரத்தைப் பிரஜைகள் கண்டனர்.(29,30)
[2] நரசிம்மாசாரியர் பதிப்பில், "இந்த ராக்ஷஸர்கள் மஹாஸ்வபாவமுடைய ராமனால் மேலான காந்தர்வாஸ்த்ரந் தொடுத்து விடப்பெற்று மோஹித்துத் தமது ஸைன்யத்தை எரித்துக் கொண்டிருக்கும் ராமனைக் காண வல்லவராக இல்லை" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "ராமன் காந்தர்வஸ்த்ரத்தினால் சத்ருக்களுக்கு மதிமயக்கத்தை விளைவித்து வதித்தானென்று கருத்தன்று. அப்படியாயின் அவனுக்கும் இந்த்ரஜித்துக்கும் பேதமென்? காந்தர்வாஸ்த்ரத்தினால் மதிமயங்கச் செய்தானென்னில் - அவ்வஸ்த்ரம் ப்ரயோகிக்கும்பொழுது ராக்ஷஸர் அதன் வேகாதியத்தினால் அதை ப்ரயோகித்தவன் தம்முடையவனோ பிறனோ என்று பேதம் அறியமுடியாமல் மதிமயங்கப் பெற்றார்களென்று கருத்து. ஆகையால் மதிமயங்கப் பெறுதலாவது - வேகத்தினால் அறியமுடியாதிருத்தல். ராமன் மிகுந்த வேகத்துடன் உலாவும்படியான லாகவத்தைப் பற்றி, அவன் எங்குப் புலப்படுவானோ அங்கேயே அந்த க்ஷணத்தில் புலப்படாமல் வேறோரிஇடத்தில் உலாவிக் கொண்டிருக்கையால் அதேக்ஷணத்தில் அவனைக் குறித்து விடுத்த பாணங்கள் அவ்விடத்திலுள்ள தம்முடையவர்களையே ஹிம்ஸிப்பவையாயின. இங்ஙனம் அஸ்த்ரம் ப்ரயோகிக்கிற வேகாதிசயத்தினாலும் ராமன் ஸஞ்சரிக்கிற லாகவாதியத்தினாலும் ராக்ஷஸர்கள் இவனவனென்றும் இங்கங்கென்றும் தெரிந்து கொள்ள முடியாமல் மோஹித்து ஒருவரையொருவர் அடித்துக் கொண்டிருந்தார்களேயன்றி அஸ்த்ரத்தினால் தம்மில் ஒவ்வொருவரும் ராமனாகத் தோன்றலால் மோஹித்து அடித்துக் கொண்டார்களல்லர். ராமனைக் கண்டுபிடிக்க ராக்ஷஸர்கள் நானாத் திசைகளிலும் கண்விட்டுப் பார்க்கையில் அவன் வேகாதிசயத்தினால் ஆங்காங்குப் புலப்படுகையால் ஒருவனே பலவாறும் அவர்க்குத் தோற்றினானென்று தெரிகிறது. ஆனது பற்றியே ராமனைச் சீக்ரகாரியென்றது. தனுஸ்ஸின் நுனியைச் சக்ரம்போல் சுழலுங் கொள்ளிக்கட்டையாகவும் ராமனைச் சக்ரமாகவும் சொன்னமை பாணப்ரயோகஞ் செய்வதினாலுண்டான த்வரையப்பற்றியே. ஆனதுபற்றியே ஸுக்ரீவாதிகள், தான் அஸ்த்ரம் ப்ரயோகிக்கும் லாகவத்தை மாயாபலமாகச் சங்கிப்பார்களோ என்னவோவென்று ராமன் 'இது அஸ்த்ர ப்ரயோகஞ் செய்யம் ஸாமர்த்யத்தினால் விளைந்ததேயன்றி அஸ்த்ர பலத்தினாலுண்டானதன்று' என்றுஞ் சொல்லினன். ஆகையால் இங்கு அஸ்த்ரத்தினால் மோஹிக்கையாவது - அதன் வேகத்தினால் ப்ரயோகித்தவனைக் கண்டுபிடிக்க முடியாதிருத்தலே. அஸ்த்ரத்தின் கார்யம் தஹிக்கை மாத்ரமே. அதை ப்ரயோகித்த லாகவமே மோஹத்திற்குக் காரணம்" என்றிருக்கிறது.
அனீகத்தில், வாதவேகம் {படையில் வாயு வேகம்} கொண்ட ரதங்களில் பத்தாயிரமும், வலிமைமிக்க குஞ்சரங்களில் {யானைகளில்} பதினெட்டாயிரமும்,{31} தம்மீது ஏறியிருப்போருடன் கூடிய வாஜிகளில் {குதிரைகளில்} பதினான்காயிரமும், ராக்ஷசர்களின் காலாள்படையில் மொத்தம் இருநூறாயிரமும் {இரண்டு லட்சமும்},{32} என அக்னியின் சிகைகளுக்கு ஒப்பான கூரிய சரங்களைக் கொண்டு பகலின் எட்டில் ஒரு பாகத்தில் {மூன்றே முக்கால் நாழிகையில் / தொண்ணூறு நிமிடங்கள் / ஒன்றரை மணிநேரத்தில்} ராமன் ஒருவனால் காமரூபிகளான {விரும்பிய வடிவையேற்க வல்லவர்களான} ராக்ஷசர்கள் அழிக்கப்பட்டனர்.(31-33) கொல்லப்படாமல் எஞ்சிய நிசாசரர்கள் {இரவுலாவிகள்}, அஷ்வங்கள் {குதிரைகள்} கொல்லப்பட்டு, ரதங்கள் அழிக்கப்பட்டு, துவஜங்கள் முறிக்கப்பட்டு, உற்சாகம் இழந்து லங்காம்புரீக்கே விரைந்து சென்றனர்.(34) கொல்லப்பட்ட கஜங்கள், பதாதிகள், அஷ்வங்கள் {யானைகள், காலாள்படையினர், குதிரைகள்} ஆகியவற்றுடன் கூடிய அந்தப் போர்முனை, குரோதத்துடன் கூடிய மஹாத்மா ருத்ரனின் கிரீடா பூமியானது {விளையாட்டு மைதானமானது [மயானம் ஆனது]}.(35) அப்போது, தேவர்களும், கந்தர்வர்களும், சித்தர்களும், பரமரிஷிகளும், "சாது, சாது {நன்று, நல்லது}" என்று சொல்லி, ராமனின் அந்தக் கர்மத்தைப் பூஜித்தனர் {ராமனின் அந்தச் செயலைப் புகழ்ந்து கொண்டாடினர்}[3].(36)
[3] நினைந்தன முடித்தேம் என்னா வானவர் துயரம் நீத்தார்புனைந்தெனன் வாகை என்னா இந்திரன் உவகை பூத்தான்வனைந்தன அல்லா வேதம் வாழ்வு பெற்று உயர்ந்தமாதோஅனந்தனும் தலைகள் ஏந்தி அயாவுயிர்த்து அவலம் தீர்ந்தான்- கம்பராமாயணம் 9525ம் பாடல், யுத்த காண்டம், மூலபல வதைப் படலம்பொருள்: "நாம் எண்ணியவை எண்ணியபடியே முடித்துவிட்டோம்" என்று தேவர்கள் துயரம் நீங்கினார்கள்; "{வெற்றி பெற்று} வாகை மாலை அணிந்தேன்" என்று இந்திரன் மகிழ்ச்சியடைந்தான். எவராலும் செய்யப்படாதனவான வேதங்கள் உயிர் வாழ்வைப் பெற்று உயர்ந்தன. {உலகைத் தாங்கும் பாம்பாகிய} அனந்தனும் துன்பமும், சோர்வும் தீர்ந்து தலைகளை ஏந்தினான்.
பிறகு, ராமன், தன் அருகே இருந்த சுக்ரீவனிடமும், தர்மாத்மாவான விபீஷணனிடமும், வானரன் ஹனூமந்தனிடமும்,{37} ஜாம்பவந்தனிடமும், ஹரிசிரேஷ்டர்களான மைந்தன், துவிவிதன் ஆகியோரிடம் {பின்வருமாறு} கூறினான், "இந்த திவ்ய அஸ்திர பலம் என்னிடமும், திரயம்பகனிடமும் {முக்கண்ணனான சிவனிடமும் மட்டுமே} உள்ளது" {என்றான் ராமன்}[4].(37,38)
[4] நரசிம்மாசாரியர் பதிப்பில், "இங்ஙனம் மூலபலத்தை யெல்லாம் க்ஷணத்திற்குள் முடித்தமை மாயையினாலன்று. இது அஸ்த்ரங்களை ப்ரயோகிக்கும் சக்தியாலேயே ஆயிற்று. இப்படிப்பட்ட சக்தி எனக்கும் ஸம்ஹார காலத்தில் சிவனுக்கும் மாத்ரமே உளதன்றி மற்றெவனுக்கும் உண்டாகாது" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "இங்கு, "ஏததஸ்த்ரபலன் திவ்யம் மம வா த்ர்யம்பகஸ்ய வா" என்பது மூலம். இங்ஙனம் க்ஷணப்பொழுதில் கணக்கில்லாத ராக்ஷஸர்களை வதித்தமை மாயையாலன்று, அஸ்த்ரம் ப்ரயோகிக்கும் சக்தி லாகவத்தினாலென்று கருத்து. கேவல அஸ்த்ரத்திற்கு அந்தச் சக்தி கிடையாது. அப்படியாயின். "காந்தர்வேணச காந்தர்வம்" என்று ராவணாதிகளுக்கும் காந்தர்வாஸ்த்ரம் உண்டாகையால் அந்த சக்தியும் உண்டாக வேண்டுமல்லவா? அது இல்லையாகையால் கேவல அஸ்த்ர சக்தியே யாகாமல் அஸ்த்ரம் ப்ரயோகிக்கும் சக்தியே யென்று தெரிகிறது" என்றிருக்கிறது.
அப்போது, அந்த ராக்ஷசவாஹனி அழிவடைந்ததில் மகிழ்ச்சியடைந்த தேவகணங்கள் {தேவர்களின் கூட்டங்கள்}, சக்ரனுக்கு {இந்திரனுக்கு} சமமானவனும், மஹாத்மாவும், அஸ்திர சஸ்திரங்களைக் களைப்பின்றி பயன்படுத்துபவனுமான ராமனைத் துதித்தன.(39)
யுத்த காண்டம் சர்க்கம் – 093ல் உள்ள சுலோகங்கள்: 39
Previous | | Sanskrit | | English | | Next |