Mayavi | Kishkindha-Kanda-Sarga-09 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: அசுரனான மாயாவியுடன் போரிட்ட வாலி; கிஷ்கிந்தையின் மன்னனாக நிறுவப்பட்ட சுக்ரீவன்; கிஷ்கிந்தைக்குத் திரும்பிய வாலி...
{சுக்ரீவன் தொடர்ந்தான்}, "சத்ருசூதனனும் {பகைவரை அழிப்பவனும்}, வாலி என்ற பெயரைக் கொண்டவனுமான என் அண்ணன், பூர்வத்தில் பிதாவால் {எங்கள் தந்தையால்} மிக உயர்வாக மதிக்கப்பட்டான்; என்னாலும் அவ்வாறே மதிக்கப்பட்டான்.(1) பிதாவானவர் மறைந்ததும், மூத்தவன் என்பதால் ராஜ்ஜியத்தின் பரம சம்மதத்துடன் மந்திரிகள் அவனை கபீக்களின் ஈஷ்வரனாக்கினர் {குரங்குகளின் தலைவனாக்கினர்}.(2) பித்ரு பைதாமஹர்களின் {தந்தை பாட்டன் வழியில் வந்த} மஹத்தான ராஜ்ஜியத்தை அவன் ஆண்டபோது, நான் சர்வ காலங்களிலும் {அவனை} வணங்கி நடக்கும் சேவகனாக இருந்தேன்.(3)
துந்துபியின் அண்ணனும், {மயனின்} மகனும்[1], மாயாவி என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு தேஜஸ்வி இருந்தான். பூர்வத்தில் அந்த வாலி, ஒரு ஸ்திரீயின் காரணமாக அவனிடம் {அந்த மாயாவியிடம்} மஹத்தான வைரம் கொண்டிருந்தான் என்பது நன்கு அறியப்பட்டது[2].(4) இராத்திரியில் ஜனங்கள் தூங்கும்போது, அவன் {மாயாவி}, கிஷ்கிந்தையின் துவாரத்தை {வாயிலை} அடைந்து, ஆத்திரத்துடன் கர்ஜித்தபடியே வாலியைப் போருக்கு அழைத்தான்.(5) அப்போது நன்கு உறங்கிக் கொண்டிருந்தவனும், என்னுடன் பிறந்தவனுமான வாலி, பயங்கர சுவனத்துடன் கூடிய அந்த நாதத்தைக் கேட்டுப் பொறுத்துக் கொள்ள முடியாமல் விரைவாகக் குதித்தெழுந்தான்.(6) பிறகு அவன் {வாலி}, ஸ்திரீகளும், நானும் வணக்கத்துடன் தடுத்தும் அந்த அசுரோத்தமனைக் கொல்வதற்காகக் குரோதத்துடன் புறப்பட்டான்.(7) மஹாபலவானான அவன், எங்கள் அனைவரையும் உதறிவிட்டுப் புறப்பட்டுச் சென்றதும், நானும் அன்பினால் {ஆதரவாக} வாலியைப் பின்தொடர்ந்து வெளியே வந்தேன்.(8)
[1] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "அவன் {மாயாவி}, ஒரே நேரத்தில் இரண்டாகவும் {அண்ணனாகவும், மகனாகவும்} இருக்க முடியாது, என்றாலும் உரை இப்படித்தான் சொல்கிறது. மாயாவி, மயனின் மகனாவான். மயனுக்கும், ரம்பைக்கும் மாயாவி, துந்துபி, மஹிஷன் என்ற மூன்று மகன்கள் இருந்தனர். {ராவணனின் பட்டமஹிஷியான} மண்டோதரி அவர்களின் சகோதரியாவாள்" என்றிருக்கிறது. ஆங்கிலத்தில் மன்மதநாததத்தர், ஹரிபிரசாத் சாஸ்திரி ஆகியோரின் பதிப்புகளிலும், கோரக்பூர் பதிப்பிலும், தமிழில் தர்மாலயம், கோரக்பூர் பதிப்புகளிலும், நரசிம்மாசாரியர் பதிப்பிலும், "மாயாவி, துந்துபியின் மூத்த மகன்" என்றிருக்கிறது. தமிழில் தாதாசாரியர் பதிப்பில், "துந்துபிக்கு மூத்தவனும், மயாஸுரன் மகனுமான மாயாவி" என்றிருக்கிறது.
[2] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த பகைக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. வேறு எந்த உரையிலும் இது குறிப்பிடப்படவுமில்லை" என்றிருக்கிறது.
அந்த அசுரன் {மாயாவி}, என்னுடன் பிறந்தவனும் {வாலியும்}, நானும் தூரத்தில் வருவதைக் கண்டதும் திகிலடைந்தவனாக வேகமாக ஓடிச் சென்றான்.(9) அச்சத்துடன் அவன் ஓடிச் செல்கையில், நாங்கள் இருவரும் {அவனைப் பின்தொடர்ந்து} மிகவிரைவாகச் சென்றோம். அப்போது உதயமான சந்திரனால் அந்த மார்க்கமும் பிரகாசமடைந்திருந்தது.(10) அந்த அசுரன் {மாயாவி}, தரணியில் புற்களால் மறைக்கப்பட்டதும், நுழைவதற்கரியதுமான மஹத்தான வளைக்குள் {பூமியின் பிளவு / பாதாளக் குகைக்குள்} வேகமாக பிரவேசித்தான். வேகமாகச் சென்ற நாங்களும் அதை அடைந்து நின்றோம்.(11)
அப்போது பகைவன் பிலத்திற்குள் பிரவேசிப்பதைக் கண்ட வாலி, கோப வசமடைந்தவனாக, கலங்கிய இந்திரியங்களுடன் என்னிடம் {பின்வரும்} சொற்களைச் சொன்னான்:(12) "சுக்ரீவா, நான் இதற்குள் பிரவேசித்தது முதல், அவனைக் கொல்லும் வரை ஸமாஹிதத்துடன் {கவனத்துடனும், விழிப்புடனும்} நீ இங்கேயே இந்த பிலத்வாரத்திலேயே {வளையின் வாயிலிலேயே} காத்திருப்பாயாக" {என்றான்}[3].(13)
[3] எய்து காலை அப்பிலனுள் எய்தி யான்நொய்தின் அங்கு அவற் கொணர்வென் நோன்மையாய்செய்தி காவல் நீ சிறிது போழ்து எனாவெய்தின் எய்இனான் வெகுளி மேயினான்- கம்பராமாயணம் 3837ம் பாடல், நட்புக் கோட் படலம்{மாயாவி} அவ்வாறு நுழைந்த போது, சினங்கொண்டவன் {வாலி}, அந்த பிலத்தினுள் நுழைந்து, "நான் விரைவில் அங்குள்ளவனைப் பிடிப்பேன். நீ சிறிது நேரம் காவல் செய்" என்று கூறி விரைவாக {அந்தப் பிலத்தினுள்} நுழைந்தான்.
இந்தச் சொற்களைக் கேட்டதும், அந்த பரந்தபனிடம் {பகைவரை அழிப்பவனான வாலியிடம், உடன் வருவதாக} நான் யாசித்தேன். அவன் {வாலி}, தன் பாதங்களின் மீது என்னை சபதமேற்கச் செய்து, அந்த பிலத்திற்குள் {புழைக்குள்} பிரவேசித்தான்.(14) அவன் பிலத்திற்குள் பிரவேசித்து சம்வத்சரமும் {ஓராண்டும்} நிறைவடைந்தது. துவாரத்தில் {வாயிலில்} இருந்த எனக்கும் அந்தக் காலம் {அங்கேயே அவ்வாறே} கடந்தது.(15) நானும் அவன் நஷ்டமானதை {காணாமல் போனதை} அறிந்து, சினேகத்தால் குழப்பமடைந்தேன். உடன் பிறந்தானைக் காணாத என் மனம் பாபத்தை {ஆபத்து நேர்ந்திருக்குமோவென} சந்தேகித்தது.(16) நீண்ட காலத்திற்குப் பிறகு, அந்த பிலத்திலிருந்து நுரையுடன் கூடிய உதிரம் வெளிப்படுவதைக் கண்டபோது நான் பெருந்துக்கமடைந்தேன்.(17) அசுரர்களின் அலறல் சப்தம் என் காதுகளை அடைந்தது. போரில் ஈடுபட்ட என் குருவின் {அண்ணன் வாலியின்} கூச்சல் சப்தம் {என் காதுகளை} அடையவில்லை.(18)
சகாவே, {அசுரர்களின் அலறல் கேட்டது, அண்ணனின் கர்ஜனை கேட்காதது, உதிரம் வழிந்தோடுவது உள்ளிட்ட} அந்தச் சின்னங்களால், உடன் பிறந்தவன் கொல்லப்பட்டான் என்ற புத்தியை அடைந்த நான், அளவில் கிரிக்கு ஒப்பான பாறையால் பிலத்வாரத்தை அடைத்தேன். நான் சோகத்தால் பீடிக்கப்பட்டவனாக நீர்க்கடன்களைச் செய்துவிட்டு, கிஷ்கிந்தைக்குத் திரும்பினேன். {எதையும் வெளியிடாமல்} மறைத்து வைத்திருந்தாலும், மந்திரிகள் தங்கள் யத்னங்களின் {விடாமுயற்சியின்} மூலம் என்னிடம் உண்மையைக் கேட்டறிந்தனர்.(19,20)
பிறகு அவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அழைத்து எனக்கு அபிஷேகம் செய்தனர். இராகவரே, அவ்வாறு நான் ராஜ்ஜியத்தை நியாயமாக ஆண்டு வரும்போது, அந்த வானரன் {வாலி}, பகைவனான தானவனை {மாயாவியைக்} கொன்றுவிட்டுத் திரும்பி வந்தான்.(21,22அ) அபிஷேகம் செய்யப்பட்ட என்னைக் கண்ட கோபத்தில், கண்கள் சிவந்தவன் {வாலி}, என் மந்திரிகளைக் கட்டிப்போட்டு கடும் வாக்கியங்களைச் சொன்னான்.(22ஆ,23அ) இராகவரே, அதைத் தடுக்கும் சமர்த்தனாக இருந்தும், உடன்பிறந்தானிடம் {அண்ணன் வாலியிடம்} கொண்ட மதிப்பால் பணிந்தேன். என் புத்தி பாபத்தை நோக்கிச் செல்லவில்லை.(23ஆ,24அ) என்னுடன் பிறந்தவனும், சத்ருவைக் கொன்று புரத்திற்குள் {நகருக்குள்} பிரவேசித்தவனுமான அந்த மஹாத்மாவை {வாலியை} மதித்து, வழக்கம்போல் நான் வணங்கினாலும் அவன் அந்தராத்மத் திருப்தியுடன் {நிறைவடைந்த உள்ளத்துடன்} ஆசி கூறவில்லை.(24ஆ,25) பிரபுவே, நான் என் மகுடம் தீண்ட அவனது பாதங்களில் பணிந்தாலும், அந்த வாலி குரோதத்தால் எனக்கு அருள் செய்யவில்லை" {என்றான் சுக்ரீவன்}.(26)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 09ல் உள்ள சுலோகங்கள்: 26
Previous | | Sanskrit | | English | | Next |