Wednesday, 31 July 2024

புஞ்சிகஸ்தலை | யுத்த காண்டம் சர்க்கம் - 013 (21)

Punjikasthala | Yuddha-Kanda-Sarga-013 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சீதையை பலவந்தமாக அடையுமாறு ராவணனுக்கு அறிவுறுத்திய மஹாபார்ஷ்வன்; பிரம்மன் கொடுத்த சாபத்தால் தன்னால் அப்படிச் செயல்பட இயலாது என்று சொன்ன ராவணன்...

Ravana and Punjikasthala

மஹாபலவானான மஹாபார்ஷ்வன், {கும்பகர்ணனின் பேச்சால்} ராவணன் குரோதமடைந்திருப்பதை அறிந்து, ஒரு முஹூர்த்தம் சிந்தித்துவிட்டு, கைகளைக் கூப்பியபடியே {பின்வரும் வாக்கியத்தைக்} கூறினான்:(1) "எந்த நரன், மதுவுக்காக {தேனுக்காக} மிருகங்களும் {மான்களும்}, வியாலங்களும் {பாம்புகளும் / துஷ்ட விலங்குகளும்} சேவிக்கும் வனத்தை அடைந்து, அதை {தேனைப்} பெற்ற பிறகும் பருகாதிருக்கிறானோ, அவன் நிச்சயம் பாலிஷனே {சிற்றறிவு கொண்டவனே / மூடனே} ஆவான்.(2) சத்ருக்களை அழிப்பவரே, ஈஷ்வரனான உமக்கு எவன் ஈஷ்வரன்? சத்ருக்களின் தலைகளில் கால்பதித்து, வைதேஹியுடன் இன்புற்றிருப்பீராக.(3) மஹாபலவானே, குக்குடத்தின் விருத்தத்தில் {சேவலின் நடைமுறையில்} நடந்து கொண்டு, பலவந்தமாக அந்த சீதையை ஆக்கிரமித்து, அனுபவித்து, இன்புற்றிருப்பீராக.(4) காமத்தை {விருப்பத்தை} நிறைவேற்றிக் கொண்ட பிறகு, என்ன பயம் {ஆபத்து} வரப்போகிறது? வருவது, வரப்போவது என அனைத்தையும் {அனைத்து ஆபத்துகளையும் நீர்} எதிர்த்துத் தடுக்கவல்லவராவீர்.(5) நம்முடன் கூடிய கும்பகர்ணர், மஹாபலவானான இந்திரஜித் ஆகியோர் {இருவரும்}, வஜ்ரம் தரித்த வஜ்ரியையே {இந்திரனையே} எதிர்க்கவல்லவராவர்.(6)

குசலர்கள் {நல்லவர்கள்} செய்யும் தானம், சாந்த்வம் {சாமம் / நற்சொல் சொல்வது}, பேதம் {பிரித்து வைப்பது} ஆகிய வழிமுறைகளைக் கைவிட்டு, தண்டத்தால் கிட்டும் சித்தியை {பலவந்தத்தால் நிறைவடைவதையே}  விருப்பத்திற்குரியது.(7) மஹாபலவானே, இங்கே வரும் உமது சத்ருக்கள் அனைவரையும் சஸ்திர பிரதாபத்தால் {ஆயுதங்களின் ஆற்றலால்} வசப்படுத்துவோம். இதில் ஐயமில்லை" {என்றான் மஹாபார்ஷ்வன்}.(8)

அப்போது, ராஜா ராவணன், மஹாபார்ஷ்வனால் சொல்லப்பட்ட இந்த வாக்கியத்தை மெச்சி, இந்த வசனத்தைச் சொன்னான்:(9) "மஹாபார்ஷ்வா, என்னைக் குறித்த சின்ன ரஹஸ்யத்தை அறிவாயாக. பூர்வத்தில் நான் அடைந்ததும், வெகு காலத்திற்கு முன் நடந்ததும் எதுவோ, அதைச் சொல்கிறேன்.(10) அக்னிசிகையைப் போன்றவளும், {என் மீது கொண்ட பயத்தால்} தன்னை மறைத்தபடியே பிதாமஹனின் பவனத்திற்கு {பிரம்மனின் வசிப்பிடத்திற்கு} ஆகாசத்தில் சென்று கொண்டிருந்தவளுமான புஞ்சிகஸ்தலையை {புஞ்ஜிகஸ்தலையைக்}[1] கண்டேன்.(11) நான் பலவந்தமாக அவளை வஸ்திரங்களற்றவளாக்கி அனுபவித்தேன். பிறகு, வாடிவதங்கிய நளினியை {தாமரையைப்} போல அவள் ஸ்வயம்பூவின் {பிரம்மனின்} பவனத்தை அடைந்தாள்.(12) 

[1] கிஷ்கிந்தா காண்டம் 66ம் சர்க்கத்தின் 8ம் சுலோகத்தில், "அப்சரஸ்களில் சிறந்தவளும், புகழ்பெற்றவளுமான அந்தப் புஞ்சிகஸ்தலையே, குரங்கான கேசரியின் பத்தினி அஞ்சனை என்று அறியப்படுகிறாள்" என்றிருக்கிறது. இந்த அஞ்சனையே ஹனுமானின் தாயாவாள். செம்பதிப்பில், இந்த யுத்தகாண்டத்தின் 10 முதல் 15 வரையான 6 சர்க்கங்கள் இடம்பெறவில்லை. இது யுத்தகாண்ட 10 சர்க்கத்தின் [1]ம் அடிக்குறிப்பில் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது. இந்த சர்க்கம் இடைச்செருகலா? இல்லையா? என்பதற்கு அப்பாற்பட்டு, செம்பதிப்பை அடியொற்றி ராமாயணத்தை அணுகுபவர்களுக்கு புஞ்சிகஸ்தலை குறித்த இந்தத் தகவல் கிடைக்காது. 

Ravana and Punjikasthala

மஹாத்மாவான அவனிடம் {பிரம்மனிடம்} அப்போதே அஃது அறிவிக்கப்பட்டது என்று நினைக்கிறேன். அதனால் கோபமடைந்த வேதா {பிரம்மன்}, இந்த வாக்கியத்தை என்னிடம் சொன்னான்:(13) "இது முதல், எப்போது அந்நிய நாரீயை {வேறொரு பெண்ணை} நீ பலவந்தமாக அணுகுவாயோ, அப்போதே உன் தலை சுக்கு நூறாகப் பிளந்து போகும். இதில் ஐயமில்லை" {என்றான் பிரம்மன்}.(14) எனவே, அந்த சாபத்தால் பீடிக்கப்பட்ட என்னால், வைதேஹியான சீதையை சுபமான சயனத்தில் {மங்கலமான என் படுக்கையில்} வலுக்கட்டாயமாக ஏற்ற இயலவில்லை[2].(15) 

[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "ராவணன் தனக்கு ரம்பையைப் பற்றி நலகூபரன் கொடுத்த சாபம் இருப்பினும், அந்த நலகூபரன் ப்ராக்ருத {சாதாரண} தேவதையாகையாலும், தனக்குப் புத்ரனாகையாலும் {பேரனானதாலும்}, அவனது சாபத்தைப் பாராட்டாமல், பின்பு புஞ்ஜிகஸ்தலையென்னும் அப்ஸரமடந்தையைப் பலவந்தமாகப் பிடித்துப் புணருகையில் ப்ரஹ்மதேவன் கண்டு கோபித்துச் சாபங்கொடுத்தனன். ஆனதுபற்றியே ராவணன் உள்ளங்கணஞ் செய்யமுடியாத பிதாமஹவாக்யத்தையே இங்கு மொழிந்தானென்று தெரிகின்றது" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் சொல்லும் இந்த நிகழ்வு, ராமாயணத்தின் உத்தர காண்டத்தில், 26ம் சர்க்கத்தில் வரும் கதையாகும். நலகூபரன், யக்ஷ மன்னன் குபேரனின் மகனான மணிபத்ரனின் மகனாவான். அதாவது குபேரனின் பேரனாவான். நலகூபரன் அப்சரஸ் ரம்பையை மணந்து சுகமாக வாழ்ந்து வந்தான். அந்நிலையில் ராவணன் அவளை நாடினான். அரம்பை, "இந்த ஆசை உமக்கு நல்லதல்ல. நான் உமது குடும்பத்தின் மருமகள்" என்றாள். இருந்தும் விடாமல், ராவணன் அத்துமீறுகிறான். அரம்பை நடந்ததைத் தன் கணவன் நலகூபரனிடம் சொல்கிறாள். நலகூபரன், பிரம்மன் சபித்தவாறே, "இராவணன் மற்றொரு பெண்ணை பலவந்தமாகத் தீண்டினால், அவன் தலை சுக்குநூறாகும்" எனச் சபிக்கிறான். இதையே மேற்கண்ட அடிக்குறிப்பில் நரசிம்மாசாரியர் குறிப்பிடுகிறார்.

என் வேகம் சாகரனை {பெருங்கடலைப்} போன்றது; என் கதி மாருதனை {என் போக்கு வாயுவைப்} போன்றது. இதை தாசரதி {தசரதனின் மகனான ராமன்} அறியமாட்டான். எனவேதான், தாக்க வருகிறான்.(16) கிரியின் குகையில் உறங்கிக் கிடக்கும் சிம்ஹத்தைப் போன்றவனை, கோபத்தில் அமர்ந்திருக்கும் மிருத்யுவைப் போன்றவனை, எவன்தான் தூண்ட விரும்புவான்?(17) இரட்டைநாவுகளைக் கொண்ட பன்னகங்களை {பாம்புகளைப்} போல என்னிடம் இருந்து வெளிப்படும் கூரிய பாணங்களை ராமன் கண்டதில்லை. எனவேதான், என்னை எதிர்த்துப் போரிட வருகிறான்.(18) உல்கங்களால் குஞ்சரத்தை {எரிகொள்ளிகளால் எரிக்கப்படும் யானையைப்} போல, வஜ்ரத்திற்கு சமமான நூற்றுக்கணக்கான பாணங்களை என் கார்முகத்திலிருந்து {வில்லிருந்து} ஏவி, ராமனை சீக்கிரமே எரிக்கப் போகிறேன்.(19) அதிகாலையில் சவிதன் {சூரியன்} உதிக்கையில் {மங்கும்} நக்ஷத்திரங்களின் பிரபையைப் போல, மஹாபலத்தால் சூழப்பட்ட நான், அவனுடைய அந்த பலத்தையும் {படைபலத்தையும்} போக்கிவிடுவேன்.(20) ஆயிரம் கண்களைக் கொண்ட வாசவனானாலும் {இந்திரனானாலும்}, வருணனானாலும், {அவர்கள்} யுத்தத்தில் என்னை அணுகவல்லவர்களல்லர். பூர்வத்தில் இந்தப் புரீயை பாலித்த வைஷ்ரவணன் {குபேரன்} என் பாஹுபலத்தால் {தோள்வலிமையால்} வெல்லப்பட்டான்" {என்றான் ராவணன்}.(21)

யுத்த காண்டம் சர்க்கம் – 013ல் உள்ள சுலோகங்கள்: 21

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை