Aksha killed | Sundara-Kanda-Sarga-47 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: ஹனுமானுடன் போரிட தன் மகன் அக்ஷனை அனுப்பிய ராவணன்; ஹனுமானுடன் நடந்த போரில் கொல்லப்பட்ட அக்ஷன்...
சேனாபதிகள் ஐவரும், தங்களைப் பின்தொடர்ந்தவர்களுடனும், வாஹனங்களுடனும் சேர்த்து ஹனூமதனால் கொல்லப்பட்டதைக் கேட்டறிந்த ராஜா {ராவணன்}, சமர் புரிவதற்குச் செருக்குடன் ஆயத்தமாக முன் வந்து நிற்கும் தன் குமாரன்[1] அக்ஷனைப் பார்த்தான்.(1) அவனது {ராவணனின்} பார்வையால் தூண்டப்பட்ட அந்தப் பிரதாபவான் {அக்ஷன்}, ஹவிஸ்ஸை இட்டு துவிஜாதிமுக்கியர்களால் தூண்டப்படும் பாவகனை {நெய் விட்டு இருபிறப்பாளர்களால் தூண்டப்படும் அக்னியைப்} போல சதஸ்ஸில் காஞ்சனச் சித்திர கார்முகத்துடன் {அந்த அரசவையில் இருந்து பொன்னாலான விசித்திர வில்லுடன்} விரைவாக எழுந்தான்[2].(2) பிறகு, வீரியவானான அந்த நைர்ருதரிஷபன் {ராக்ஷசர்களில் காளையான அக்ஷன்}, பால திவாகரனின் பிரபையைக் கொண்டதும், தப்த ஜாம்பூநத ஜாலத்தால் {புடம்போட்ட பொன்வலைகளால்} அலங்கரிக்கப்பட்டதுமான மஹத்தான ரதத்தில் ஏறி, அந்த மஹாஹரியை {பெருங்குரங்கான ஹனுமானை} நோக்கிச் சென்றான்.(3)
[1] இந்த அக்ஷன் என்பவன் இந்திரஜித்தின் தம்பி என்ற குறிப்பு கம்பராமாயணத்தில் காணக்கிடைக்கிறது. வால்மீகி ராமாயணம், சுந்தரகாண்டம் 58ம் சர்க்கம் 126ம் சுலோகத்தில் இந்திரஜித்தை ராவணனின் இரண்டாம் மகன் என ஹனுமான் குறிப்பிடுகிறான்.
[2] தர்மாலயப் பதிப்பில், "அந்த சூரன் அவனது கண்ணோக்கினாலே ஏவப்பெற்றவனாய் பொன்னிற்செய்த விசித்திரமான ஒரு வில்லை தரித்தவனாய் உத்தமரான அந்தணர்களால் செய்யப்பட்ட ஹவிஸ்ஸால் உயரக்கிளம்பும் அக்கினிபோல் இப்பொழுது ஸதஸ்ஸில் தோன்றினான்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "மிகுந்த ப்ரதாபமுடைய அந்த அக்ஷகுமாரன் அந்த ராவணன் அங்ஙனம் கண்வைத்த மாத்ரத்தினால் தூண்டப்பட்டவனாகி ஸ்வர்ணரேகைகளால் அற்புதமாயிருக்கிற தனுஸ்ஸை எடுத்துக் கொண்டு ப்ராஹ்மணோத்தமர்கள் நெய்யை விட்டு வளரச் செய்கையில் ஜ்வாலைகள் மேற்கிளம்பப்பெற்ற அக்னிபோல் ஸபையினின்று திடீலென்று பரபரப்புடன் எழுந்தனன்" என்றிருக்கிறது. கோரக்பூர், கீதா பிரஸ் பதிப்பில், "இராவணனுடைய பார்வையினாலே ஆணையிடப்பட்டவனாக, பராக்கிரமம் மிக்க அவன், தங்க வேலைப்பாடுகள் கொண்ட வில்லை எடுத்துக் கொண்டு, வேள்விச்சாலையில் வேதவித்துக்களால் சொரியப்படும் நெய் ஆகுதியினால் ஜொலித்து எரியும் தீயைப் போல நின்றான்" என்றிருக்கிறது.
பல்வேறு தபங்களால் பெறப்பட்டதும், தப்த ஜாம்பூநத ஜாலத்தால் {புடம்போட்ட பொன் வலைகளால்} ஒளிர்வதும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட துவஜத்துடனும், பதாகையுடனும் {கொடிமரத்துடனும், கொடியுடனும்} கூடியதும், மனோவேகங் கொண்ட சிறந்த அஷ்வங்கள் {குதிரைகள்} பூட்டப்பட்டதும்,(4) ஸுராஸுரர்களால் {தேவர்களாலும், அசுரர்களாலும்} தாக்கப்பட முடியாததும், தடையின்றி செல்லக்கூடியதும், ரவியின் {சூரியனின்} பிரபையுடன் கூடியதும், வானத்தில் செல்லவல்லதும், தூணம் {அம்பறாத்தூணி}, எட்டு வாள்கள் ஆகியவற்றுடன் கூடியதும், மணிகள் பூட்டப்பட்டதும், சக்திகளும், தோமரங்களும் நன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதும்,(5) ஹேமத்தாலான {பொன்னாலான} மலர்களால் அலங்கரிக்கப்பட்டதும், சசி {சந்திரன்}, சூரியன் ஆகியோரின் ஒளியுடன் கூடியதும், நல்ல வஸ்துக்கள் அனைத்தும் நிறைந்ததும், திவாகரனை {சூரியனைப்} போல் ஒளிர்வதுமான ரதத்தில் ஏறிக் கொண்டவன் {அக்ஷன்}, அமரர்களுக்குத் துல்லியமான விக்கிரமத்துடன் வெளிப்பட்டான்.(6)
அவன் {அக்ஷன்}, அசலங்களுடன் கூடிய மஹீயையும் {மலைகளுடன் கூடிய பூமியையும்}, வானையும், துரங்க, மாதங்க, மஹாரத ஸ்வனங்களால் {குதிரைகள், யானைகள், பெருந்தேர்கள் ஆகியவற்றின் ஒலிகளால்} நிறைத்தபடியே, தோரணத்தில் சமர்த்தாக நின்று கொண்டிருந்த மஹாகபியை {பெருங்குரங்கான ஹனுமானை} நெருங்கினான்.(7) சிங்கம் போன்ற விழிகளைக் கொண்டவனான அந்த அக்ஷன், பிரஜைகளை அழிக்கும் யுகாந்த காலாக்னியை {பிரளய கால அக்னியைப்} போலத் தயாராக நின்று கொண்டிருந்த அந்த ஹரியை {குரங்கான ஹனுமானை} அணுகி, ஆச்சரியத்தால் உண்டான கலக்கத்துடனும், பஹுமானத்தை {பெரும்மதிப்பை} வெளிப்படுத்தும் நோக்குடனும் பார்த்தான்.(8) மஹாபலவானும், பார்த்திவாத்மஜனுமான அவன், மஹாத்மாவான அந்தக் கபியின் வேகத்தையும், பகைவரிடம் காட்டும் பராக்கிரமத்தையும், தன் பலத்தையும் கருத்தில் கொண்டு, பனி விலகிய சூரியனைப் போலப் பெருகினான் {பேருடலுடன் வளர்ந்தான்}.(9)
கோபமடைந்த அவன் {அக்ஷன்}, யுத்தத்தில் தடுக்கப்பட முடியாத ஸ்திரமான பராக்கிரமத்தை {ஹனுமானிடம்} கண்டு, தன்னிலை தவறாத ஸ்திரநிலையை அடைந்து, கூர்மையான மூன்று சரங்களை ஏவி, ஹனுமந்தனைப் போரிடத் தூண்டினான்.(10) அந்தக் கபி {குரங்கான ஹனுமான்}, பெருமையுடன் சத்ருக்களை வென்றதிலும், சிரமத்தை வென்றதிலும் கர்வித்திருப்பதாக உணர்ந்த அந்த அக்ஷன், கையில் பாணங்களுடன் கூடிய கார்முகத்தை {வில்லை} பிடித்துக் கொண்டும், உற்சாக மனத்துடன் {ஹனுமானைக்} கண்டான்.(11) ஹேமநிஷ்கங்கள் {பொன் பதக்கங்கள்}, அங்கதங்கள் {தோள்வளைகள்}, அழகிய குண்டலங்கள் ஆகியவற்றுடன் கூடிய அவன், பெரும் பராக்கிரமத்துடன் கபியை {குரங்கான ஹனுமானை} அணுகினான். அவர்களுக்குள் ஏற்பட்ட ஒப்பற்ற போரானது, ஸுராஸுரர்களுக்கும் {தேவாசுரர்களுக்கும்} கலக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது[3].(12) கபிக்கும், குமாரனுக்கும் {குரங்கான ஹனுமானுக்கும், இளைஞனான அக்ஷனுக்கும்} இடையிலான மோதலைக் கண்டு பூமி கர்ஜித்தது; பானுமான் {சூரியன்} வெப்பத்தை வெளிப்படுத்தவில்லை; வாயு வீசவில்லை; அசலங்கள் {மலைகள்} நடுங்கின; தியு {வானம்} நாதம் செய்தது; உததியும் {கடலும்} கலக்கமடைந்தது.(13) அப்போது இலக்கைக் குறித்து, தொடுக்கவும், ஏவவும் தெரிந்த அந்த வீரன் {அக்ஷன்}, நல்ல முகத்தை {கூரிய முனையைக்} கொண்டவையும், சுவர்ண புங்கங்களுடனும், இறகுகளுடனும் கூடியவையும், விஷமிக்க உரகங்களுக்கு {பாம்புகளுக்கு} ஒப்பானவையுமான மூன்று சரங்களை கபியின் {குரங்கான ஹனுமானின்} தலையில் ஏவினான்.(14)
[3] உற்றான் இந்திரசித்துக்கு இளையவன்ஒரு நாளே பலர் உயிர் உண்ணகற்றானும் முகம் எதிர் வைத்தான் அதுகண்டார் விண்ணவர் கசிவுற்றார்எற்றாம் மாருதி நிலை என்பார் இனிஇமையாவிழியினை இவை ஒன்றோபெற்றாம் நல்லது பெற்றாம் என்றனர்பிறியாது எதிர் எதிர் செறிகின்றார்- கம்பராமாயணம் 5699ம் பாடல், அக்ககுமாரன் வதைப்படலம்பொருள்: இந்திரஜித்தின் தம்பி {அக்ஷன்}, எதிரே வந்தான். ஒரே நாளில் பலரின் உயிரை அழிக்க கற்றவனும் {ஹனுமானும்} எதிர் முகமாக நின்றான். அந்நிலையைக் கண்ட தேவர்கள் மனம் இரங்கியவர்களாக, "மாருதி நிலை என்னாகும்?" என்று சொல்லி, "இமைக்காத கண்களைக் கொண்ட நாங்கள், {இதைக் காணும்} சிறப்பைப் பெற்றோம்" என்று சொல்லிவிட்டு பிரியாமல் எதிர் எதிராகப் போய் நின்றனர்.
அந்தச் சரங்கள் ஒரேநேரத்தில் தலையில் பாய்ந்ததால் பெருகும் ரத்தத்துடன் கூடியவனும், ரத்தமாகச் சிவந்து சுழலும் கண்களைக் கொண்டவனும், புதிதாக உதிக்கும் ஆதித்யனைப் போலத் தெரிந்தவனுமான அவன் {ஹனுமான்}, சரங்களையே கதிர்களாகக் கொண்டவனும், கதிர் மாலையால் சூழப்பட்டவனுமான ஆதித்யனைப் போலவே ஒளிர்ந்தான்.(15) அந்த பிங்காதிப மந்திரி சத்தமன் {குரங்குத்தலைவன் சுக்ரீவனின் மந்திரிகளில் சிறந்தவனான ஹனுமான்}, அற்புதமானவையும், சித்திரமானவையுமான ஆயுதங்களுடனும், சித்திரமான கார்முகத்துடனும் {வில்லுடனும்} கூடிய அந்த ராஜவராத்மஜனை ரணத்தில் {ராஜகுமாரர்களில் சிறந்த அக்ஷனைப் போர்முனையில்} கண்டபோது, மகிழ்ச்சியடைந்தவனாக போருக்கான முனைப்புடன் வளர்ந்தான் {உடலைப் பெருக்கிக் கொண்டான்}.(16) அப்போது, பலமும், வீரியமும் கொண்டவனும், மந்தரத்தின் {மந்தர மலையின்} உச்சியில் தோன்றும் அம்சுமானை {சூரியனைப்} போன்றவனும், கோபம் அதிகரித்தவனுமான அவன் {ஹனுமான்}, பலத்துடனும் {படையுடனும்}, வாகனங்களுடனும் கூடிய அக்ஷகுமாரனை நேத்திரங்களில் {கண்களில்} உண்டான அக்னியில் வெளிப்படும் கதிர்களால் எரித்தான்.(17)
பிறகு, சரங்களைப் பொழியும் ராக்ஷசமேகமான அவன் {அக்ஷன்}, பாணாசனத்துடனும், சித்திரக் கார்முகத்துடனும் {அம்பறாத்தூணியுடனும், விசித்திரமான வில்லுடனும்} கூடியவனாக விரைவில், உத்தம அசலத்தின் {உயர்ந்த மலையின்} மீது மழையைப் பொழியும் மேகத்தைப் போல, அந்த ஹரீஷ்வர அசலத்தின் {மலைபோல் தெரிந்த குரங்குத் தலைவனான ஹனுமானின்} மீது சரங்களை ஏவினான்.(18) அப்போது, ரணசண்டவிக்கிரமனான {போரில் உக்கிர வீரியம் கொண்டவனான} அக்ஷகுமாரன், பெருகும் தேஜஸ்ஸுடனும், பலத்துடனும், வீரியத்துடனும், மேகத்திற்குத் துல்லியமான விக்கிரமத்துடனும் போரில் திரிவதைக் கண்ட கபி {குரங்கான ஹனுமான்} மகிழ்ச்சி நாதம் செய்தான்.(19) பாலபாவத்தினால் {சிறுபிள்ளைத்தனத்தால்} யுத்த வீரியத்தில் தற்புகழ்ச்சி செய்தவன் {அக்ஷன்}, தலைக்கேறிய சீற்றத்துடனும், கோபத்தால் சிவந்த கண்களுடனும், புற்குவியலால் மறைக்கப்பட்ட பெரும்கிணற்றை அணுகும் கஜத்தைப் போல, ரணத்தில் {போரில்} ஒப்பற்றவனான கபியை {குரங்கான ஹனுமானை} அணுகினான்.(20)
அவன் {அக்ஷன்} பலமாக ஏவிய பாணங்களால் மேக முழக்கம் போன்ற நாதம் செய்த அந்த மாருதி {வாயுமைந்தன் ஹனுமான்}, தன் புஜங்களையும், தொடைகளையும் விரித்து கோரமாகக் காட்சியளித்தபடியே விரைவாக வானத்தில் குதித்தான்.(21) பலவானும், ராக்ஷசர்களில் முதன்மையானவனும், தேர்வீரர்களில் சிறந்தவனுமான அந்தப் பிரதாபவான் {அக்ஷன்}, ரதத்தில் ஏறி, மேல்நோக்கிச் சென்று, சைலத்தில் கல்மலை பொழியும் மேகத்தைப் போல சரங்களைப் பொழிந்தான்.(22) போரில் சண்டவிக்கிரமனும், மனோவேகம் கொண்டவனுமான அந்த வீர ஹரி {குரங்கான ஹனுமான்}, சரங்களுக்கு மத்தியில் விரைந்து செல்லும் மாருதனை {வாயுவைப்} போல, அவனது {அக்ஷனின்} சரங்களில் இருந்து தப்பி, வாயுவால் சேவிக்கப்படும் பாதையில் சென்றான்.(23) அந்த மாருதாத்மஜன் {வாயு மைந்தன் ஹனுமான்}, பாணாசனத்துடன் {அம்பறாத்தூணியுடன்} கூடியவனும், போரை எதிர்கொள்ள ஆயத்தமாக இருந்தவனும், வெவ்வேறு வகையான முனைகளைக் கொண்ட உத்தம சரங்களால் வானத்தை மறைப்பவனுமான அந்த அக்ஷனை, பஹுமானத்தை {பெரும் மதிப்பைக்} காட்டும் நோக்கில் பார்த்து, சிந்தனையில் ஆழ்ந்தான்.(24)
மஹாபுஜங்களைக் கொண்டவனும், கர்ம விசேஷங்களின் தத்துவத்தை அறிந்தவனுமான கபி {குரங்கான ஹனுமான்}, மஹாத்மாவான வீரக்குமாரனின் {அக்ஷனின்} கணைகளால் மார்பில் துளைக்கப்பட்டபோது நாதம் செய்தபடியே, ரணத்தில் பகைவனின் பராக்கிரமத்தைக் குறித்து {பின்வருமாறு} சிந்தித்தான்.(25) "பாலதிவாகரனின் பிரபையை {இளஞ்சூரியனின் ஒளியைக்} கொண்டவனும், மஹாபலவானுமான இவன் {அக்ஷன்}, சிறுபிள்ளைத்தனமேதுமின்றி மஹத்தான கர்மத்தைச் செய்து வருகிறான். சர்வ போர்க் கர்மங்களிலும் சோபிக்கும் இவனைக் கொல்வதற்கு எனக்கு மனம் வரவில்லை.(26) மஹாத்மாவான இந்த மஹான், வீரியத்துடனும், சமாஹிதத்துடனும் கூடியவனாகவும், போரில் பெரும் பொறுமையுடன் கூடியவனாகவும் இருக்கிறான். இவனது கர்மங்களுக்காகவும், குணங்களுக்காகவும் முனிகளாலும், நாகர்களாலும், யக்ஷர்களாலும் பூஜிக்கப்படுவான் என்பதில் சந்தேகமில்லை.(27) பராக்கிரமத்தாலும், உற்சாகத்தாலும் முன்னே நின்று என்னை உற்றுப் பார்க்கிறான். வேக நடையுடன் கூடிய இவனது பராக்கிரமம் ஸுராஸுரர்களின் {தேவாசுரர்களின்} மனங்களிலும் நடுக்கத்தை ஏற்படுத்தும்.(28) இவனைப் புறக்கணித்தாலும், நிச்சயம் தாக்குதல் தொடுப்பான். போரில் இவனது பராக்கிரமம் அதிகரிக்கிறது. இவனைக் கொல்வது மட்டுமே எனக்குச் சரியாகப் படுகிறது. வளர்ந்து வரும் அக்னி புறக்கணிக்கத்தகாதது" {என்று நினைத்தான் ஹனுமான்}.(29)
வீரியவானும், மஹாபலவானுமான மஹாகபி {பெருங்குரங்கான ஹனுமான்}, பகைவனின் வேகத்தைக் குறித்து இவ்வாறு சிந்தித்து, தன் கர்மத்தின் போக்கைத் தீர்மானித்துக் கொண்டு, அவனை வதம்புரிவதற்கான புத்தியை வேகமாக அமைத்துக் கொண்டான்.(30) வீரனும், பவனாத்மஜனுமான அந்தக் கபி {குரங்கான ஹனுமான்}, வாயு பாதையில் செல்பவையும், பெரும் வேகத்தைக் கொண்டவையும், சமாஹிதம் கொண்டவையும் {சலிப்பற்றவையும்}, பல்வேறு திசைகளில் திரும்பிக் கொண்டே பெரும் பாரங்களைச் சுமக்கவல்லவையுமான அந்த எட்டு ஹயங்களையும் {குதிரைகளையும்} தன் உள்ளங்கைகளால் அறைந்து கொன்றான்.(31) பிங்காதிபனின் மந்திரியால் {குரங்குகளில் தலைவன் சுக்ரீவனின் மந்திரியான ஹனுமானால்} வெல்லப்பட்டு, உள்ளங்கைகளால் அறையப்பட்ட அந்த மஹாரதம், நீடம் {ரதத்தின் உட்புறம்} பங்கமடைந்து, கூபரம் {ஏர்க்கால்} தளர்ந்து, வாஜிகள் {குதிரைகள்} கொல்லப்பட்டதாக அம்பரத்தில் {வானில்} இருந்து பூமியில் விழுந்தது.(32) உக்கிர வீரியத்துடன் கூடிய அந்த மஹாரதன் {அக்ஷன்}, ரதத்தைக் கைவிட்டு, தபத்தின் யோகத்தால் மருத்துகளின் ஆலயத்திற்கு {தேவலோகத்திற்குச்} செல்லும் ரிஷியைப் போலத் தன் தேஹத்தைக் கைவிட்டு, கார்முகத்துடனும், கட்கத்துடனும் {வில்லுடனும், வாளுடனும்} வானத்தில் உயர்ந்து சென்றான்.(33)
அதன்பிறகு, மாருதனுக்குத் துல்லியமான விக்கிரமத்தைக் கொண்ட கபி, பறவைகளின் ராஜனாலும் {கருடனாலும்}, சித்தர்களாலும் சேவிக்கப்படும் அம்பரத்தில் {வானத்தில்} திரிந்து கொண்டிருப்பவனை அணுகி, மெல்ல மெல்லமாகவும், திடமாகவும் அவனது {அக்ஷனின்} பாதங்களைப் பற்றினான்.(34) பிதாவுக்குத் துல்லியமான விக்கிரமம் கொண்டவனும், வானரோத்தமனுமான அந்தக் கபி {சிறந்த குரங்கான ஹனுமான்}, அவனைப் பிடித்து, மஹா உரகத்தை அண்டஜேஸ்வரன் {பாம்பைச் சுழற்றும் கருடன்} போல ஆயிரம் முறை சுழற்றி மஹீதலத்தில் {தரையில்} வேகமாக வீசினான்.(35) வாயுசுதனால் {வாயு மைந்தன் ஹனுமானால்} கொல்லப்பட்ட அந்த ராக்ஷசன் {அக்ஷன்}, தோள்கள், தொடைகள், இடுப்பு, கழுத்து ஆகியவை பங்கமடைந்து, எலும்புகளும், கண்களும் பிதுங்கி, மூட்டுகள் சிதைந்து, உதிரம் பெருகி, பூட்டுகள் நொறுங்கி, கட்டுகள் தளர்ந்து பூமியில் விழுந்தான்.(36)
பூமிதலத்தில் அவனை சாய்த்த மஹாகபி {பெருங்குரங்கான ஹனுமான்}, ரக்ஷோதிபதிக்கு {ராவணனுக்கு} மஹத்தான பயத்தை உண்டாக்கினான். {அக்ஷ} குமாரன் கொல்லப்பட்டதும், தடையில்லாமல் திரியக்கூடியவர்களும், மஹாவிரதம் பூண்டவர்களுமான மஹரிஷிகளும், யக்ஷர்கள், பன்னகர்கள் உள்ளிட்ட பூதங்களும், இந்திரன் உள்ளிட்ட ஸுரர்களும் {தேவர்களும்} ஒன்றுகூடி நின்றவர்களாக பேராச்சரியத்துடன் அந்த கபியானவனை {ஹனுமானைக்} கண்டனர்.(37) வஜ்ரியின் மகனுக்கு {இந்திரனின் மகன் ஜயந்தனுக்கு} ஒப்பான பிரபையுடன் கூடியவனும், சிவந்த கண்களைக் கொண்டவனுமான அந்த அக்ஷனைக் கொன்றுவிட்டு, வீரனான அவன் {ஹனுமான்}, எத்தருணத்திலும் பிரஜைகளை அழிக்கும் காலனைப் போலத் {தக்க சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவனாக மீண்டும்} தோரணத்தையே அடைந்தான்.(38)
சுந்தர காண்டம் சர்க்கம் – 47ல் உள்ள சுலோகங்கள்: 38
Previous | | Sanskrit | | English | | Next |