Wednesday, 9 October 2024

மகுட பங்கம் | யுத்த காண்டம் சர்க்கம் - 040 (30)

Breaking the crown | Yuddha-Kanda-Sarga-040 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அரண்மனையின் உச்சியில் ராவணன் நிற்பதைக் கண்ட ராமன்; மலையில் இருந்து ராவணனிடம் குதித்து, அவனுடன் போரிட்டு, வெற்றிகரமாகத் திரும்பி வந்த சுக்ரீவன்...

Sugreeva topples the crown of Ravana


பிறகு, ஹரியூதபர்களால் {குரங்குக்குழுத் தலைவர்களால்} சூழப்பட்டவனும், சுக்ரீவனுடன் கூடியவனுமான ராமன், இரண்டு யோஜனை மண்டலம் {விட்டம்} கொண்ட சுவேலத்தின் {சுவேல மலையின்} உச்சியின் மேல் ஏறினான்[1].(1) ஒரு முஹூர்த்தம் அங்கேயே நின்று பத்து திசைகளையும் கண்டு, ரம்மியமான திரிகூட சிகரத்தில் விஷ்வகர்மனால் வலுவாக நிர்மிக்கப்பட்டதும் {கட்டப்பட்டதும்},{2} ரம்மியமான கானகங்களுடன் கூடியதுமான லங்கையைக் கண்டான்.(2,3அ)

[1] சென்ற சர்க்கத்திலேயே ராமன் சுவேல மலையில் ஏறி இரவெல்லாம் அங்கேயே தங்கி லங்கையின் அழகைக் கண்டான். இங்கே இப்போதுதான் ஏறுவது போலக் காட்டப்படுகிறது. எனவே, இரவில் சுவேல மலைச் சாரலில் தங்கிவிட்டு, இப்போதுதான் அதன் உச்சியை ராமன் அடைகிறான் என்று கொள்ளலாம். இந்த சர்க்கம் முழுமையும், அடுத்த சர்க்கத்தின் 1 முதல் 10ம் சுலோகம் வரையிலும் செம்பதிப்பான விவேக் தேவ்ராய் பதிப்பில் தவிர்க்கப்பட்டிருக்கிறது. யுத்தகாண்டத்தில் இதுவரையில் 10 சர்க்கங்கள் செம்பதிப்பில் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.


அந்த கோபுரத்தின் சிருங்கத்தில் {உச்சியில்} ராக்ஷசேந்திரன் {ராவணன்} அணுகுதற்கரியவனாக இருந்தான்.{3ஆ} இருபுறமும் வெண்சாமரங்களால் வீசப்பெற்றவனும், வெற்றிக் குடையால் சோபிக்கிறவனும் {அழகுற்று விளங்குபவனும்}, செஞ்சந்தனத்தால் பூசப்பெற்றவனும், ரத்னமயமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனும்,{4} கருமேகத்திற்கு ஒப்பானவனும், தங்கச் சரிகைகளுடன் கூடிய ஆடைகளை உடுத்தியவனும், {இந்திரனின் யானையான} ஐராவதத்தின் தந்த நுனிகளால் உண்டான வடுக்களை மார்பில் கொண்டவனும்,{5} முயலின் குருதி நிறத்திலான செவ்வாடை உடுத்தியவனும், சந்தியா வேளை வெப்பத்தால் மறைக்கப்பட்ட அம்பரத்தின் {ஆகாயத்தின்} மேகவரிசையைப் போல அவன் {ராவணன்} இருந்தான்.(3ஆ-6)

வானரேந்திரனான {வானரர்களின் தலைவனான} சுக்ரீவன், ராகவன் ராக்ஷசேந்திரனை {ராமன் ராக்ஷசர்களின் தலைவனான ராவணனைக்} காண்பதைப் பார்த்த உடனேயே குதித்தெழுந்தான்.(7) குரோதத்தின் வேகத்துடன், சத்வத்தையும் {துணிவையும்}, பலத்தையும் திரட்டிக் கொண்டு அசைக்க முடியாத அந்த {சுவேல மலையின்} உச்சியிலிருந்து குதித்து கோபுர ஸ்தலத்திற்குத் தாவினான்[2].(8) அவன், அந்தராத்மாவில் பயமில்லாமல் ஒரு முஹூர்த்தம் அந்த ராக்ஷசனை பார்த்து, புல்லென மதித்து {பின்வரும்} கடுஞ்சொற்களைக் கூறினான்:(9) "இராக்ஷசா, நான் லோகநாதரான ராமரின் சகாவும், தாசனுமாவேன் {தோழனும், தொண்டனுமாவேன்}. அந்தப் பார்த்திவேந்திரரின் தேஜஸ்ஸால் {வல்லமையால்} நான் உன்னைத் தப்பவிட மாட்டேன்" {என்றான் சுக்ரீவன்}.(10)

[2] சுதையத்து ஓங்கிய சுவேலத்தின் உச்சியைத் துறந்து
சிதையத் திண் திறல் இராவணக் குன்றிடைச் சென்றான்
ததையச் செங்கரம் பரப்பிய தன் பெருந்தாதை
உதையக் குன்றின் நின்று உகு குன்றில் பாய்ந்தவன் ஒத்தான்

- கம்பராமாயணம் 6898ம் பாடல், யுத்த காண்டம், மகுட பங்கப் படலம்

பொருள்: வானம் வரை உயர்ந்தோங்கிய சுவேலத்தின் உச்சியை விட்டு, {ராவணனின்} பேராற்றல் சிதையும் வண்ணம், ராவணன் என்னும் மலைமேல் பாய்ந்தவன் {சுக்ரீவன்}, சிவந்த கதிர்களெனும் கைகளைப் பரப்பியபடியே, தான் உதிக்கும் உதய மலையில் இருந்து, அஸ்த மலைக்குப் பாய்பவனான தன்னுடைய பெருமைக்குரிய தந்தைக்கு {சூரியனுக்கு} ஒப்பானவன் ஆனான்.


Sugreeva fights with Ravana

இவ்வாறு சொல்லிவிட்டு திடீரென குதித்து, அவன் மீது தாவியவன் {ராவணன் மீது தாவிய சுக்ரீவன்}, சித்திரமான மகுடத்தைப் பிடித்திழுத்து அதைப் புவியில் வீசியெறிந்தான்[3].(11) அவன் தன்னிடம் வருவதைத் துரிதமாகக் கண்ட நிசாசரன் {இரவுலாவியான ராவணன்}, "எனக்குப் புலப்படாத வரையில் சுக்ரீவனாக இருந்த நீ, இதோ ஹீனக்ரீவனாகப் போகிறாய் {அழகிய கழுத்தைக் கொண்டவனான நீ இப்போதே கழுத்தற்றவனாகப் போகிறாய்}" {என்றான்}.(12)

[3] வால்மீகியில் யாரும் காட்டாமல் ராமன் தானாகவே ராவணனைக் காண்கிறான். இராமன் ராவணனைக் காண்பதைக் கண்ட மாத்திரத்தில் சுக்ரீவன், ராவணன் மீது பாய்ந்து மகுடத்தைத் தரையில் வீழ்த்துகிறான். கம்பராமாயணத்தில் ராமன் கேட்க, விபீஷணன் ராவணனை அடையாளம் காட்டுகிறான். அப்போது சுக்ரீவன் அவன் மீது பாய்ந்து, நெடுநேரம் போர் புரிந்து, இறுதியில் ராவணனின் மகுடத்தில் உள்ள மாணிக்க மணிகளைப் பறித்து வந்து ராமனின் பாதங்களில் சமர்ப்பிக்கிறான்.


இவ்வாறு சொல்லிவிட்டு எழுந்து, சீக்கிரமே அவனைத் தன் கைகளால் பற்றி தளத்தில் {தரையில்} வீசினான். எதிர்த்தெழுந்த அந்த ஹரி {குரங்கான சுக்ரீவன்} பந்தைப் போல அவனைக் கைகளால் பற்றி வீசி எறிந்தான்.(13) பரஸ்பரம் வியர்வையில் நனைந்த காத்திரங்களுடனும் {அங்கங்களுடனும்}, பரஸ்பரம் குருதி வழிந்த தேகங்களுடனும், பரஸ்பரம் சால்மலியும், கிம்சுகமும் {இலவும், பூவரசும்} போலவும் பரஸ்பரம் அவ்விருவரும் தங்களுக்குள் மோதிக் கொண்டனர்.{14} முஷ்டிக் குத்துகளாலும், உள்ளங்கை அறைகளாலும், ஓரக் கைவெட்டுகளாலும், நகங்களின் பீடிப்பாலும் மஹாபலவான்களான அந்த ராக்ஷசவானரேந்திரர்கள் இருவரும் {ராவணனும், சுக்ரீவனும்} பொறுத்துக் கொள்ள முடியாத வகையில் யுத்தம் செய்தனர்.(14,15) கடுமையாகவும், உக்கிர வேகத்துடனும் நீண்ட நேரம் கோபுர மேடையின் மத்தியில் யுத்தம் செய்து, தேகங்களை உயர எறிந்தும், உதறித் தள்ளியும், வளைத்துக் கால்களைப் பிடித்துக் கொண்டும், கோபுர மேடையைப் பற்றி இருந்தனர்.(16)

பிறகு, இருவரும் அன்யோன்யம் அழுந்தக் கட்டிப் பிடித்தபடியே மதிற்சுவருக்கும், அகழிக்கும் இடையில் விழுந்தனர். ஒரு முஹூர்த்தம் பெருமூச்சு விட்டபடியே இருந்த பிறகு, தங்கள் உடல்களைப் பற்றிக் கொண்டு பூமிதளத்தில் உருண்டனர்.(17) கயிறுகளைப் போல கைகளால் இறுகப் பற்றிக் கொண்டு போரிட்டனர். பரபரப்பும், பயிற்சியும், பலமும் நிறைந்த அவர்கள் யுத்த மார்க்கத்தில் அங்கேயும், இங்கேயும் மாறி மாறி நடந்தனர்.(18) நீண்ட பற்களைக் கொண்ட புலியையும், சிங்கத்தையும் போன்றவர்களும், இளம் கஜேந்திரர்களை {தலைமை யானைகளைப்} போன்றவர்களுமான அவ்விருவரும், கைகளைப் பிணைத்து மோதி, களைப்புடன் தரணியில் ஒன்றாக விழுந்தனர்.(19) பிறகு எழுந்த அவ்விரு வீரர்களும், அன்யோன்யம் வீசியெறிந்தும், பல்வேறு யுத்த மார்க்கங்களில் மீண்டும் மீண்டும் வலம் வந்தும், திறனுடனும், வலிமையுடனும் சோர்வின்றி போரிட்டுக் கொண்டிருந்தனர்.(20) சிறந்த வாரணங்களை {யானைகளைப்} போன்றவர்களான அவர்கள், வாரணத்தின் துதிக்கைகளுக்கு ஒப்பான தங்கள் சிறந்த கரங்களால் ஒருவரையொருவர் தள்ளிக் கொண்டு நீண்ட நேரம் மண்டல[3] மார்க்கத்தில் திரிந்தனர்.(21) பக்ஷிக்கும் அர்த்தம் கொண்ட {உணவுக்காக மோதிக் கொள்ளும்} இருபூனைகளைப் போல, பரஸ்பரம் கொல்ல ஏற்ற சமயத்தைத் தேடிய அவர்கள் மீண்டும் மீண்டும் நெருங்கியும், விலகியும் நின்றனர்.(22)

[3] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "மண்டலமென்பது - சாரி, கரணம், கண்டம், மஹாமண்டலம் என்று நான்கு வகைப்படும். ஒரு காலைப் பயன்படுத்தி முன்னேறுவது சாரி ஆகும். இரண்டு கால்களை அடுத்தடுத்துப் பயன்படுத்துவது கரணமாகும். கரணத்தைப் போலவே சில குறிப்பிட்ட அசைவுகளைக் கொண்டது கண்டமாகும். இரண்டு, அல்லது மூன்று கண்டங்களைச் சேர்த்துப் பயன்படுத்துவது மஹாமண்டலமாகும்" என்றிருக்கிறது.


விசித்திரமான மண்டலங்களிலும், விதவிதமான ஸ்தானங்களிலும், கோமூத்திரம் போன்று வளைவாக அசைந்தும், முன்வந்தும், விலகியும்,{23} குறுக்கும் நெடுக்குமாக பக்கத்தில் நகர்ந்தும், பின் நகர்ந்தும், அடிகளைத் தவிர்த்துத் திரும்பியும், தாக்குதலைத் தடுத்தும், ஓடியும்,{24} மோதியும், குதித்தும், அசைவற்று உறுதியாக நின்றும், தங்கள் கால்களை உயர்த்தியபடியே விரைந்தும், நகர்ந்தும்,{25} கைகளை மடக்கியும், யுத்தமார்க்கத்தில் விசாரதர்களான வானரேந்திரன் {சுக்ரீவன்}, ராவணன் இருவரும் அன்யோன்யம் தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.(23-26)

அதேநேரத்தில், ராக்ஷசன் {ராவணன்} தனது மாயா பலத்தை வெளிப்படுத்தத் தொடங்குவதை அறிந்த வானராதிபன் {சுக்ரீவன்} சோர்வில் இருந்து விடுபட்டு[4],{27} வெற்றியாளனாக ஆகாசத்தில் தாவியபோது, ஹரிராஜனால் {குரங்கு மன்னன் சுக்ரீவனால்} வஞ்சிக்கப்பட்ட ராவணன் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.(27,28) பிறகு அர்க்கனின் {சூரியனின்} மகனும், போர்களில் கீர்த்தியடைந்தவனும், ஹரிக்களின் {குரங்குகளின்} சிறந்த நாதனுமான அவன், வெற்றியடைந்தவனாக, நிசிசரபதியை சிரமமடையச் {இரவுலாவிகளின் தலைவனான ராவணனைக் களைப்படையச்} செய்துவிட்டு,[5] அதிவிசாலமான ககனத்தை லங்கனம் செய்து {வானத்தைக் கடந்து}, ஹரிகணபலத்தின் {குரங்குக்கூட்டத்தினருடைய படையின்} மத்தியில் ராமனின் அருகில் வந்து நின்றான்[6].(29)

[4] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "ராவணன் மாயைக்குத் தொடங்குவதே ஸுக்ரீவன் வெற்றி பெற்றமையை அறிவிக்கின்றது" என்றிருக்கிறது.


[5] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "'அத² ஹரிவரநாத²꞉ ப்ராப்தஸங்க்³ராமகீர்தி | ர்நிஷி²சரபதிமாஜௌ யோஜயித்வா ஷ்²ரமேண | க³க³னமதிவிஷா²லம் லங்க⁴யித்வார்கஸூநு | ர்ஹரிக³ணப³லமத்⁴யே ராமபார்ஷ்²வம் ஜகா³ம் ||' என்பது மூலம். (ஹரிவரநாத²꞉) க்ஷணத்தில் ராவணனை முடிக்கவல்ல வானர பரிகரத்திற்கு நியாமகனாயிருப்பவன் {வானரப் படையைச் செலுத்துபவனாக இருப்பவன்}. இப்படிப்பட்ட பரிகரம் இருக்கையில் தானே ராவணன்மேல் எதிர்த்துப் போவதற்கு ராமபக்தியே ஹேதுவென்று கருத்து (ப்ராப்தஸங்க்³ராமகீர்தி |) ராமனுக்கு யுத்தத்தில் வருங்கீர்த்தியைத் தானே பெற்றானென்று கருத்து. (நிஷி²சரபதிம்) ராவணனைப் போன்றவர் பலர் இருப்பினும் அவர்களெல்லோரையும் த்ருணீகாரஞ் செய்து அவனோடேயே யுத்தஞ் செய்தானென்று கருத்து. (ஆஜௌ) ராவணனைப் போல் கபட யுத்தஞ் செய்பவனல்லன். (யோஜயித்வா ஷ்²ரமேண) இதுவரையில் அவனுக்குத் தெரியாத இளைப்புடன் கூட்டி ஒருவனுக்கு ஒன்றைக் கைகூடுவிக்கையாவது அவனிடமில்லாத வஸ்துவுக்கே பொருந்தும், ராவணனுக்கு சிரமம் பலித்தது, தனக்கோ கீர்த்தியென்று கருத்து. (க³க³னமதிவிஷா²லம் லங்க⁴யித்வார்கஸூம |) தான் ஸூர்ய புத்ரனென்பதை அறிவிக்கும் பொருட்டு ஆகாயத்தை அநாயாஸமாகக் கடந்து வந்தனன். (அர்க்கஸூநு |) ஸூர்யனைப் போல் அறிய முடியாத நடைவேகமுடையவன் (ஹரிக³ணப³லமத்⁴யே) வணக்கத்துடன் கூடித் தன் பெருமையை வெளிக்காட்டாமல் வானரர்களில் ஒருவன் போல் இருந்தானென்றபடி. (ராமபார்ஷ்²வம் ஜகா³ம்) 'ராவணன் தலையைக் கொண்டு வராத நான் எப்படி இவன் முன்னே நிற்பது?' என்று பக்கத்தில் வந்து நின்றான். ராவணனுக்கு சிரமத்தை விளைத்து வந்தானென்கையால், ராமன் தானே ராவணனைக் கொல்ல வேண்டுமென்ற ப்ரதிஜ்ஞைக்கு ஹானி நேராதிருக்கும்பொருட்டு ராவணனைக் கொல்லாமலே வந்தானென்று தெரிகிறது. ராவணன் மாயைக்குத் தொடங்கினவுடனே தானும் மாயைக்குத் தொடங்கினால் ராமனுக்குக் கோபம் வருமென்று வந்துவிட்டானென்று கருத்து" என்றிருக்கிறது.


[6] என்று அவன் இரங்கும் காலத்து இருவரும் ஒருவர் தம்மின்
வென்றிலர் தோற்றிலாராய் வெஞ் சமம் விளைக்கும் வேலை
வன்திறல் அரக்கன மௌலி மணிகளை வலியால் வாங்கி
பொன்றினென் ஆகின் நன்று என்று அவன் வெள்க இவனும் போந்தான்{6926}
கொழு மணி முடிகள்தோறும் கொண்ட நல்மணியின் கூட்டம்
அழுது அயர்வுறுகின்றான்தன் அடித்தலம் அதனில் சூட்டி
தொழுது அயல் நாணி நின்றான் தூயவர் இருவரோடும்
எழுபது வெள்ளம் யாக்கைக்கு ஓர் உயிர் எய்திற்று அன்றே{6927}

- கம்பராமாயணம் 6926ம் பாடல், யுத்த காண்டம், மகுடபங்கப் படலம்

பொருள்: {சுக்ரீவன் திரும்பவில்லையே} என ராமன் இரங்கி வருந்தும்போது, {இராவணன், சுக்ரீவன்} இருவரும் ஒருவருக்கொருவர் வெற்றி, தோல்வி இல்லாதவராகக் கடும்போர் புரியும் காலத்தில், வல்லமைவாய்ந்த ராவணனின் மகுடத்தில் உள்ள {மாணிக்க} மணிகளைத் தன் வலிமையால் பறித்து, அவன் {ராவணன்}, "நான் இனி இறந்து போதலே நல்லது" என்று வெட்கும் வகையில் இவனும் {சுக்ரீவனும்} வந்தடைந்தான்.{6926} உயர்வான மணிகள் பதிக்கபெற்ற {பத்து} மகுடங்களில் இருந்து பறித்துக் கொண்டு வரப்பட்ட நல்ல மணிகளின் கூட்டத்தை, தன்னைக் காணாது அயர்வுற்றிருப்பவனின் {ராமனின்} கால்களில் (அணியாகச்) சூட்டி, வணங்கி, வெட்கமடைந்து தூரத்தில் {சுக்ரீவன்} நின்றான். தூயவரான இருவரையும் {ராமலக்ஷ்மணரையும்}, எழுபது வெள்ளம் வானர சேனையையும் உள்ளடக்கிய உடலில் உயிரும் வந்தடைந்தது.{6927}


அந்த சவித்ருவின் மகன் {சூரியனின் மகனான சுக்ரீவன்}, அங்கே அந்த கர்மத்தைச் செய்துவிட்டு, பவனகதியில் {காற்றின் போக்கில்} மகிழ்ச்சியுடன் படைக்குள் பிரவேசித்தான். இரகுவரநிருப மகனின் {ரகு குல மன்னர்களில் சிறந்த தசரதனின் மகனான ராமனின்} யுத்தமகிழ்ச்சியை அதிகரித்த அந்த ஹரீசன் {குரங்குகளின் தலைவனான சுக்ரீவன்}, தருமிருக கண முக்யர்களால் பூஜிக்கப்பட்டான் {மரத்தில் வாழும் விலங்குக் கூட்டத்தினரில் சிறந்தவர்களால் வழிபடப்பட்டான்}.(30)

யுத்த காண்டம் சர்க்கம் – 040ல் உள்ள சுலோகங்கள்: 30

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை