Friday 4 October 2024

சுவேல மலை | யுத்த காண்டம் சர்க்கம் - 038 (19)

Mountain Suvela | Yuddha-Kanda-Sarga-038 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இலக்ஷ்மணன், சுக்ரீவன், விபீஷணன் ஆகியோருடன் சுவேல மலையில் ஏறி, அங்கிருந்து லங்கா நகரத்தைப் பார்வையிட்ட ராமன்...

Rama in the peak of Suvela mountain


இலக்ஷ்மணனால் பின்தொடரப்பட்ட அந்த ராமன், சுவேலத்தில் ஏற மனத்தை அமைத்துக் கொண்டு, சுக்ரீவனிடமும், தர்மஜ்ஞனும் {தர்மத்தை அறிந்தவனும்}, அன்புள்ளவனும், நிசாசரனும் {இரவுலாவியும்}, மந்திரஜ்ஞனும் {ஆலோசனைகளில் நிபுணனும்}, விதிஜ்ஞனுமான {விதிமுறைகளை அறிந்தவனுமான} விபீஷணனிடமும் இந்த மென்மையான சொற்களை உரத்த குரலில் சொன்னான்:(1,2) "நூற்றுக்கணக்கான தாதுக்களுடன், நன்றாக ஒளிரும் சைலேந்திரமான {தலைமை மலையான} இந்த சுவேலத்தில் நாம் அனைவரும் ஏறுவோம். இந்த நிசியில் அங்கேயே இருப்போம்.(3) மரணத்தை அந்தமாகக் கொண்ட எந்த துராத்மா என் பாரியையை அபகரித்தானோ, எவன் தர்மத்தையும், ஒழுக்கத்தையும், அதேபோல குலத்தையும் அறியாதிருக்கிறானோ, ராக்ஷச நீச புத்தியுடன் எவன் கண்டிக்கத்தக்கதைச் செய்தானோ, அந்த ராக்ஷசனின் நிலயமான லங்கையை நாம் காண்போம்.(4,5) எந்த நீசனின் அபராதத்தால் ராக்ஷசர்களின் வதம் காணப்படுகிறதோ, அந்த ராக்ஷசாதமனின் பெயரைச் சொன்னதும் என் கோபம் பொங்குகிறது.(6) ஒருவனே கால பாச வசத்தை {எமனின் பாசக்கயிற்றை} அடைந்து பாபம் செய்தான். நீசனான அவனது ஆத்ம அபசாரத்தால் குலமே அழியப்போகிறது" {என்றான் ராமன்}[1].(7)

[1] கதம் மிகுந்து இரைத்துப் பொங்கும்
கனை கடல் உலகம் எல்லாம்
புதைவு செய் இருளின் பொங்கும்
அரக்கர்தம் புரமும், பொற்பும்
சிதைவு செய் குறியைக் காட்டி
வடதிசைச் சிகரக் குன்றின்
உதயம் அது ஒழியத் தோன்றும்
ஒரு கரு ஞாயிறு ஒத்தான்.

- கம்பராமாயணம் 6838ம் பாடல், யுத்த காண்டம், இலங்கை காண் படலம்

பொருள்: கோபம் மிகுந்து இரைந்து பொங்கும் ஆர்ப்பொலிமிக்க கடல் சூழ்ந்த உலகம் எங்கும், தம் அகத்தே அழுந்தி மறையச் செய்யும் இருளைப் போல பொங்கும் அரக்கர்தம் நகரத்தையும் {இலங்கையையும்}, அதன் அழகையும் அழிக்கப் போகும் குறிப்பைக் காட்டி உதய மலை சிகரத்தில் உதிப்பதை நீக்கி வட திசையில் உள்ள சிகரத்தில் உதிக்கும் ஒரு கரிய சூரியனைப் போலிருந்தான் {ராமன்}.


இராமன், ராவணனைக் குறித்துக் குரோதத்துடன் இவ்வாறே பேசிவிட்டு, சுவேலத்தில் ஓய்ந்திருக்க அதன் அழகிய தாழ்வரைகளில் ஏறினான்.(8) விக்ரமத்தை வெளிப்படுத்துபவனான லக்ஷ்மணனும், சரத்துடன் கூடிய சாபத்தை {வில்லைக்} கையில் கொண்டு, விழிப்புடன் பின்தொடர்ந்து சென்றான். அமைச்சர்களும், விபீஷணனும், சுக்ரீவனும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(9,10அ) ஹனுமான், அங்கதன், நீலன், மைந்தன், துவிவிதன் ஆகியோரும்,{10ஆ} கஜன், கவாக்ஷன், கவயன், சரபன், கந்தமாதனன், பனசன், குமுதன் ஆகியோரும், ஹரன், யூதபனான ரம்பன்,{11} ஜாம்பவான், சுஷேணன், மஹாமதிமிக்க ரிஷபன், மஹாதேஜஸ்வியான துர்முகன், கபியான சதவலி ஆகியோரும்,{12} இன்னும் சீக்கிரமாகச் செல்லும் கிரிசாரிகளும், வாயு வேகத்தில் செல்பவர்களுமான அனைத்து வானரர்களும்,{13} நூற்றுக்கணக்கில் அங்கே ராகவனுடன் அந்த சுவேல கிரியில் ஏறினர்.(10ஆ-14அ)

அவர்கள் அனைவரும் குறுகிய காலத்தில் அந்த கிரியின் சிகரத்தில் ஏறி, வானத்தில் தொங்கிக் கொண்டிருப்பது போலிருக்கும் அந்த புரீயை {லங்காபுரியைக்} கண்டனர்.(14ஆ,15அ) ஹரியூதபவர்கள், அழகிய துவாரங்களுடனும் {வாயில்களுடனும்}, சோபித்துக் கொண்டிருக்கும் பிராகாரங்களுடனும் {மதில்களுடன்}, சம்பூர்ணமான ராக்ஷசர்களுடனும் சுபமாகத் திகழ்ந்த அந்த லங்கையைக் கண்டனர்.(15ஆ,16அ) அந்த ஹரிசிரேஷ்டர்கள், பிராகாரத்தின் {மதில்} மேல் நிற்கும் அந்த நீல {கரிய} ராக்ஷசர்கள் மற்றொரு பிராகாரமாக {மதிலாக} நிலைத்திருப்பதைக் கண்டனர்.(16ஆ,17அ) அந்த வானரர்கள் அனைவரும் யுத்தத்தில் ஆவலுடன் கூடிய ராக்ஷசர்களைக் கண்டு, அங்கே ராமனின் முன்னிலையில் விதவிதமான நாதங்களைச் செய்தனர் {ஆரவாரக் கூச்சலிட்டனர்}.(17ஆ,18அ) அப்போது சூரியன் சந்தியா வேளையில் சிவந்து அஸ்தமனமடைந்தான். இரவு வந்ததும் விளக்கு போல பூர்ணச்சந்திரன் ஒளிரத் தொடங்கினான்[2].(18ஆ,19அ)

[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கு, " பூர்ண சந்த்³ர ப்ரதீ³பா ச க்ஷபா ஸமபி⁴வர்ததே" என்பது மூலம். இரவில் பூர்ணிமையினன்று ஸுவேல பர்வதத்தில் ஏறுதலும், மற்றைநாள் ப்ரதமையினன்று யுத்தாரம்பமென்றும் சொல்வார்கள். "பூர்ண சந்த்³ர ப்ரதீ³பா" என்கிற பாடத்தைக் கொண்டு பூர்ணசந்த்ரன் போன்ற தீபமுடையதென்றும் பொருள் கூறலாகும். வானரஸேனையிலும் வெளிச்சத்திற்காக விளக்கு ஏற்றியிருக்கக்கூடும். இங்ஙனம் கோவிந்தராஜர்" என்றிருக்கிறது.


பிறகு, அந்த ராமனும் ஹரிவாஹினிபதியும் {சுக்ரீவனும்}, வணங்கித் தொண்டாற்றிய விபீஷணனும், லக்ஷ்மணனும், யூத யூதபர்கள் சூழ சுவேலத்தின் உச்சியில் சுகமாக வசித்திருந்தனர்.(19ஆ,இ)

யுத்த காண்டம் சர்க்கம் – 038ல் உள்ள சுலோகங்கள்: 19

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை