Vibheeshana coronated | Yuddha-Kanda-Sarga-019 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வானத்தில் இருந்து இறங்கி வந்து, ராமனிடம் சரணாகதி அடைந்த விபீஷணன்; இராமன் விசாரித்ததன் பேரில் ராவணனைக் குறித்த அனைத்தையும் சொன்னது...
இராகவனால் அபயமளிக்கப்பட்டவனும், மஹாபிராஜ்ஞனும், ராவணானுஜனுமான {அனைத்தையும் அறிந்தவனும், ராவணனின் தம்பியுமான} விபீஷணன், சுற்றிலும் நோக்கிவிட்டுக் குனிந்து பூமியைப் பார்த்தான்.(1) தர்மாத்மாவான அந்த விபீஷணன், அனுசரர்களான பக்தர்கள் {தன்னைப் பின்தொடர்வோர்} சகிதனாக, வானத்திலிருந்து மகிழ்ச்சியுடன் அவனியில் இறங்கி, ராமனின் பாதங்களில் விழுந்தான்.(2) பிறகு நான்கு ராக்ஷசர்களுடன் சரணடைந்த விபீஷணன், {ராமனின்} பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து, தர்மத்திற்கு இணக்கமானதும், பொருத்தமானதும், பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலானதும், நம்பிக்கையுடன் கூடியதுமான {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(3,4அ) "இராவணரின் அனுஜன் {தம்பி} நான். {இராவணரால்} அவமானப்படுத்தப்பட்டு, சர்வபூதங்களின் சரண்யரான {உயிரினங்கள் அனைத்தின் புகலிடமான} உம்மிடம் நான் சரணாகதியடைகிறேன்.(4ஆ,5அ) இலங்கையும், மித்ரர்களும் {நண்பர்களும்}, தனங்களும் என்னால் கைவிடப்பட்டன. {இனி} என் ராஜ்ஜியமும், ஜீவிதமும், சுகமும் உமது வசமே" {என்றான் விபீஷணன்}.(5ஆ,6அ)
இராமன், சாந்தப்படுத்தும் வகையில் அமைந்த அவனது வசனத்தைக் கேட்டு, கண்களால் பருகிவிடுபவனைப் போல, {பின்வரும்} வசனத்தைக் கூறினான், "இராக்ஷசர்களின் பலாபலம் குறித்து {பலங்கள், பலவீனங்கள் ஆகியவற்றை} உள்ளபடியே எனக்குச் சொல்வாயாக" {என்றான் ராமன்}.(6ஆ,7)
களைப்பில்லாமல் செயல்படக்கூடியவனான ராமன் இவ்வாறு உரைத்தபோது, ராக்ஷசன் {விபீஷணன்}, ராவணனின் அனைத்து பலங்களையும் {பின்வருமாறு} சொல்லத் தொடங்கினான்.(8) "இராஜபுத்திரரே, தசக்ரீவர், ஸ்வயம்பூவின் வரதானத்தால் {பத்துக் கழுத்துகளுடைய ராவணர், பிரம்மனிடம் பெற்ற வரத்தால்}, கந்தர்வர்கள், உரகர்கள், பக்ஷிகளாலும், சர்வபூதங்களாலும் {உயிரினங்கள் அனைத்தாலும்} வதைக்கப்பட முடியாதவராக இருக்கிறார்.(9) உடன்பிறந்தவர்களில் ராவணருக்கு அடுத்தவரும் {இளையவரும்}, எனக்கு மூத்தவரும், வீரியவானும், மஹாதேஜஸ்வியுமான கும்பகர்ணர், யுத்தத்தில் சக்ரனையே {இந்திரனையே} எதிர்க்கவல்ல பலங்கொண்டவராவார்.(10) இராமரே, கைலாஸத்தில் நடந்த போரில் மணிபத்ரனை வென்றவனும், அவரது {ராவணரின்} சேனாபதியுமான பிரஹஸ்தரைக் குறித்து நீர் கேள்விப்பட்டிருப்பீர்.(11) உடும்புத்தோலாலான விரலுறையை அணிந்தவனும், துளைக்கமுடியாத கவசத்தைப் பூண்டவனும் எவனோ, அந்த இந்திரஜித், தனுவை ஏந்திக் கொண்டு, {கண்களுக்குப்} புலப்படாதவனாக யுத்தம் செய்வான்.(12) இராகவரே, ஸ்ரீமான் இந்திரஜித் ஹுதாசனனை {அக்னிதேவனை} திருப்தியடையச் செய்துவிட்டு, போரின் மஹாவியூகத்தில் {பெரும் அணிவகுப்பில்}, அந்தர்தானகதியடைந்து {கண்களுக்குப் புலப்படாத நிலையை அடைந்து, பகைவரைத்} தாக்குவான்.(13)
இராக்ஷசர்களில் மஹோதரர், மஹாபார்ஷ்வர், அகம்பனர் ஆகியோர், யுத்தத்தில் லோகபாலர்களுக்குச் சமமானவர்கள். இவர்களே அவரது ஆனீகஸ்தர்கள் {ராவணரின் படையணித் தலைவர்களாவர்}.(14) காமரூபிகளும், மாமிசம், சோணிதம் பக்ஷிப்பவர்களுமான {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களும், இறைச்சியை உண்பவர்களும், குருதியைப் பருகுபவர்களுமான} பத்தாயிரங்கோடி ராக்ஷசர்கள், லங்காபுரவாசிகளாக இருக்கின்றனர் {லங்கையில் வசிக்கின்றனர்}.(15) அந்த ராஜா {ராவணர்}, அவர்கள் சகிதராகவே, லோகபாலர்களுக்கு[1] எதிராகப் போர் தொடுத்தார். தேவர்களுடன் கூடிய அவர்கள் {லோகபாலர்கள்} துராத்மாவான ராவணரால் பங்கம் செய்யப்பட்டனர் {வீழ்த்தி முறியடிக்கப்பட்டனர்}", {என்றான் விபீஷணன்}.(16)
[1] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இவர்கள் மண்டலங்களைப் பாதுகாக்கும் தேவர்களாவர். அல்லது, சூரியன், சந்திரன், நெருப்பு {அக்னி}, காற்று {வாயு}, இந்திரன், யமன், வருணன், குபேரன் ஆகியோராவர்" என்றிருக்கிறது.
இரகுசத்தமன் {ரகு வம்சத்தில் சிறந்தவனான ராமன்}, விபீஷணனின் அந்தச் சொற்களைக் கேட்டு, மனத்தில் அனைத்தையும் ஆராய்ந்து, இந்த வசனத்தைக் கூறினான்:(17) "விபீஷணா, ராவணனின் கர்மபதங்களென {மூலங்கள்} எவை சொல்லப்பட்டனவோ, அவற்றை உள்ளபடியே நான் அறிகிறேன்.(18) நான், பிரஹஸ்தனுடனும், ஆத்மஜனுடனும் {தன் மகன் இந்திரஜித்துடனும்} கூடிய தசக்ரீவனை {ராவணனைக்} கொன்று உன்னை ராஜனாக்குவேன். இந்த சத்தியத்தை என்னிடம் இருந்து கேட்டுக் கொள்வாயாக.(19) இராவணன், ரசாதலம் பாதாளம்[2] ஆகியவற்றுக்குள் பிரவேசித்தாலும், பிதாமஹனின் {பிரம்மனின்} முன்னிலையை அடைந்தாலும், என்னிடமிருந்து ஜீவனுடன் தப்பமாட்டான்.(20) போரில், புத்திர ஜனங்களுடனும், பந்துக்களுடனும் {உறவினர்களுடனும்} கூடிய ராவணனைக் கொல்லாமல், அயோத்யைக்குள் நான் பிரவேசிக்கமாட்டேன் என்று என்னுடன் பிறந்த அந்த மூவரின் மீது சபதமிடுகிறேன் {பரதன், லக்ஷ்மணன், சத்ருக்னன் மீது ஆணையாகச் சொல்கிறேன்}", {என்றான் ராமன்}.(21)
[2] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இது நாகர்களும், அசுரர்களும், தைத்தியர்களும் வசிப்பவையும், பூமிக்கடியில் உள்ளவையுமான ஏழு கொடும்பகுதிகளில் ஒன்றாகும். அந்த ஏழு பிரிவுகளில் பாதாளமே அடியில் உள்ள பகுதியாகும்" என்றிருக்கறது. அந்த ஏழு கீழ் உலகங்கள், அதலம், விதலம், சுதலம், ரசாதலம், தலாதலம், மகாதலம், பாதாளம் ஆகியனவாகும். ஏழு மேல் உலகங்கள், பூ, புவர், சுவர், மஹர், ஜனஸ், தபஸ், சத்தியம் ஆகியனவாகும். ஆக, பதினான்கு லோகங்கள் என்று சொல்லப்படுபவை இவையே ஆகும்.
களைப்பின்றி கர்மங்களைச் செய்பவனான அந்த ராமனின் வசனத்தைக் கேட்ட தர்மாத்மா, சிரம்பணிந்து, {விபீஷணன், தலைவணங்கிப் பின்வருமாறு} பேசத் தொடங்கினான்:(22) "என் பிராணனாலான மட்டும் வாஹினிக்குள் {படைக்குள்} பிரவேசித்து, லங்கையைத் தாக்குவதிலும், ராக்ஷசர்களைக் கொல்வதிலும் நான் சஹாயம் {உதவி} செய்வேன்" {என்றான் விபீஷணன்}.(23)
இவ்வாறு {அவன்} பேசியதில் பிரீதியடைந்த ராமன், விபீஷணனைத் தழுவிக் கொண்டு, லக்ஷ்மணனிடம் {பின்வருமாறு} கூறினான்[3], "சமுத்திரத்தில் இருந்து ஜலம் கொண்டு வருவாயாக.(24) மானதா {மாண்புமிக்கவனே}, நான் மகிழ்ச்சியடைந்தேன். அதைக் கொண்டு {நீ கொண்டு வரும் நீரைக் கொண்டு}, மஹாப்ராஜ்ஞனான {அனைத்தையும் அறிந்தவனான} இந்த விபீஷணனை ராக்ஷச ராஜாவாக சீக்கிரமே அபிஷேகிப்பாயாக" {என்றான் ராமன்}.(25)
[3] ஆழியான் அவனை நோக்கி அருள் சுரந்து உவகை கூரஏழினோடு ஏழாய் நின்ற உலகும் என் பெயரும் எந்நாள்வாழும் நாள் அன்றுகாறும் வாள் எயிற்று அரக்கர் வைகும்தாழ் கடல் இலங்கைச் செல்வம் நின்னதே தந்தேன் என்றான்- கம்பராமாயணம் 6503ம் பாடல், யுத்த காண்டம், வீடணன் அடைக்கலப் படலம்பொருள்: {ஆணை என்ற} சக்கரத்தை உடையவன், அவனை {ராமன், விபீஷணனை} நோக்கி, அருள் பொங்க, மகிழ்ச்சியடைந்து, "ஏழுடன் ஏழாய் நிற்கும் {பதினான்கு} உலகங்களும், எனது பெயரும் எந்த நாள் வரை நிலைத்திருக்குமோ, அதுவரை ஒளிபொருந்திய பற்களை உடைய அரக்கர்கள் வாழ்வதும், கீழே ஆழமான கடலில் உள்ளதுமான இலங்கை {அரசு எனும்} செல்வத்தை உனக்கே தந்தேன்" {என்று கூறினான் ராமன்}.
இவ்வாறு சொல்லப்பட்டதும், சௌமித்ரி {சுமித்திரையின் மகனான லக்ஷ்மணன்}, வானர முக்கியர்களின் மத்தியில், ராம சாசனத்தின் பேரில், விபீஷணனை {லங்கையின்} ராஜனாக அபிஷேகம் செய்து வைத்தான்.(26) இராமனின் அந்த உடனடி அருளைக் கண்டு, மகிழ்ச்சியில் திளைத்த பிலவங்கமர்கள் {தாவிச் செல்பவர்களான வானரர்கள்}, அந்த மஹாத்மாவிடம் {ராமனிடம்}, "சாது, சாது {நன்று, நல்லது}" என்று உரக்கச் சொன்னார்கள்.(27)
பிறகு, ஹனுமானும், சுக்ரீவனும், விபீஷணனிடம் {பின்வருமாறு} கூறினர், "மஹௌஜசர்களான {பெரும் வலிமைமிக்க} வானரர்களின் சைனியம் சூழ நாம் அனைவரும், கலங்கடிக்கப்படமுடியாததும், வருணாலயமுமான சாகரத்தை எப்படிக் கடக்கப் போகிறோம்?(28,29அ) சைனியத்துடன் கூடிய நாம் அனைவரும், நதநதீபதியான வருணாலயத்தை சர்வ சைனியத்துடன் கடக்கும் உபாயத்தைக் கண்டடைய வேண்டும்" {என்று கேட்டனர்}.(29ஆ,30அ)
இவ்வாறு சொல்லப்பட்டதும், தர்மாத்மாவான விபீஷணன், {பின்வரும்} மறுமொழியைச் சொன்னான், "இராஜா ராகவர் {ராமர்} சமுத்திரத்திடம் சரணம் அடைவதே தகுந்தது.(30ஆ,31அ) அளவிடமுடியாத இந்த மஹோததி {பெருங்கடல்}, சகரனால் தோண்டப்பட்டது.[4] ஞாதியான {சகரனின் உறவினனான} ராமனுக்கான காரியத்தைச் செய்வதும் மஹோததிக்குத் தகுந்ததே" {என்றான் விபீஷணன்}.(31ஆ,32அ)
[4] தேசிராஜு ஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "ஸகரன் ராமனின் மூதாதையரில் ஒருவனாவான். அவனது கதை பாலகாண்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது" என்றிருக்கிறது. பாலகாண்டம் 38 முதல் 41ம் சர்க்கம் வரை ஸகரனின் கதை சொல்லப்பட்டிருக்கிறது.
கல்விமானான ராக்ஷசன் விபீஷணனால் இவ்வாறு சொல்லப்பட்ட பிறகு, சுக்ரீவன், லக்ஷ்மணனும், ராமனும் இருக்குமிடத்தை வந்தடைந்தான்.(32ஆ,33அ) அப்போது விபுலக்ரீவனான {அகன்ற கழுத்துடைய} சுக்ரீவன், சாகரத்தை அணுகுமாறு விபீஷணன் சொன்ன சுபமான சொற்களைச் சொல்லத் தொடங்கினான்.(33ஆ,34அ) இயல்பில் தர்மசீலனான அந்த ராமனுக்கும் அது பிடித்திருந்தது. அவன் {ராமன்}, மஹாதேஜஸ்வியும், செயல்பாட்டில் நிபுணனுமான லக்ஷ்மணனிடமும், சுக்ரீவனிடமும் நற்காரியம் நடந்த புன்னகையுடன் {பின்வருமாறு} சொன்னான்:(34ஆ,35) "இலக்ஷ்மணா, விபீஷணனின் இந்த மந்திரம் {ஆலோசனை}, எனக்குப் பிடித்திருக்கிறது. பண்டிதனான சுக்ரீவன், நித்தியம் மந்திரவிசாரதனான நீ {எப்போதும் ஆலோசனை சொல்வதில் சமர்த்தனான நீ} ஆகிய உங்கள் இருவருக்கும் சம்பிரதாயப்படி {தொன்று தொட்ட வழக்கத்தின்படி} பிடித்தது எதுவோ, அதைச் சொல்வீராக" {என்றான் ராமன்}.(36,37அ)
இவ்வாறு சொல்லப்பட்ட பிறகு, வீரர்களான சுக்ரீவன், லக்ஷ்மணன் ஆகியோர் இருவரும், மதிப்புமிக்க ஆசாரங்களுக்கு {வாழ்வின் நெறிகளுக்குப்} பொருந்தும் வகையில் {பின்வரும்} இந்த வசனத்தைக் கூறினார்கள்:(37ஆ,38அ) "நரவியாகரரே {மனிதர்களில் புலியே}, ராகவரே, இந்தக் காலத்தில் சுகத்தை அளிக்கவல்ல விபீஷணனின் சொற்கள் எங்களுக்கு ஏன் பிடிக்காமல் போகும்?(38ஆ,39அ) வருணாலயமான இந்த கோர சாகரத்தில் சேதுவைக் கட்டாமல், லங்கையை அடைவது ஸுராஸுரர்களுக்கும் {தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் கூட} சாத்தியமல்ல.(39ஆ,40அ) சூரனான விபீஷணனின் சொற்களின்படி யதார்த்தமாக {தகுந்த முறையில்} செயல்பட வேண்டும்.{40ஆ} காலத்தை வீணடித்தது போதும். இராவணன் பாலிதம் செய்யும் புரீயை {லங்காநகரத்தை} சைனியம் அடைவது எப்படியோ, அப்படியே சாகரத்தை வேண்டுவீராக" {என்றனர்}.(40ஆ,41)
இவ்வாறு சொல்லப்பட்ட பிறகு, ஹுதாசனன் வேதிகையில் {அக்னிதேவன் வேள்வியில் அமர்வது} போல, ராமனும் குசப்புற்களால் {தர்ப்பையால்} மறைக்கப்பட்ட நதநதீபதியின் தீரத்தில் {கடற்கரையில்} அமர்ந்தான்.(42)
யுத்த காண்டம் சர்க்கம் – 019ல் உள்ள சுலோகங்கள்: 42
Previous | | Sanskrit | | English | | Next |