Sunday, 19 September 2021

ஸகரன் | பால காண்டம் சர்க்கம் - 38 (24)

Sagara | Bala-Kanda-Sarga-38 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனின் முப்பாட்டன் சகரன்; அறுபதாயிரம் பிள்ளைகளைப் பெற்ற சகரன்...

King Sagaras boon and Bhrighu muni

கௌசிகர் {விசுவாமித்ரர்}, இந்தக் கதையை {கார்த்திகேயனின் கதையை} ராமனிடம் சொல்லிவிட்டு, மேலும் இந்த மதுர அக்ஷரங்களை {இனிய சொற்களை} அந்தக் காகுத்ஸ்தனிடம் சொன்னார்:(1) "பூர்வத்தில் வீரனாகவும், தர்மாத்மாவாகவும் புகழ்பெற்றவனும், அயோத்யாபதியும், ஸகரன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு நராதிபதி {மனிதர்களின் தலைவன்} இருந்தான்.(2) இராமா, விதர்ப்பனின் மகளும், கேசினி என்ற பெயர் படைத்தவளுமான சகரனின் ஜேஷ்ட பத்தினி {மூத்த மனைவி}, தர்மிஷ்டையாகவும், சத்தியவாதினியாகவும் இருந்தாள்.(3) அரிஷ்டநேமியின் {கசியபரின்} மகளும், கருடனுடன் பிறந்தவளும், சுமதி என்ற பெயரில் குறிப்பிடப்படுபவளுமான ஒருத்தி ஸகரனின் இரண்டாம் பத்தினியாக இருந்தாள்.(4) பத்தினிகள் இருவருடன் கூடிய அந்த மஹாராஜா {ஸகரன்}, ஹிமவந்தத்தை {இமய மலைத் தொடரை} அடைந்து, பிருகுப்ரஸ்ரவணம்[1] என்ற மலையில் சந்ததிக்காகத் தவமிருந்தான்.(5)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இமய மலைத்தொடரில் உள்ள பிருகுப்ரஸ்ரவணம் என்ற மலை, பிருகுவின் அன்பால் எப்போதும் நீர் நிறைந்ததாக இருக்கிறது" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "பிருகு மஹரிஷி ஸ்நானஞ்செய்து வருவது பற்றிப் பிருகுப்ரஸ்ரவணமென்னும் பேர்ப்பெற்ற ஒரு சிறிய பர்வதம்" என்றிருக்கிறது.

அவ்வாறே நூறு வருடங்கள் பூர்ணமடைந்ததும் தவத்தால் ஆராதிக்கப்பட்டவரும் சத்தியவாதிகளில் சிறந்தவருமான பிருகு முனி அந்த ஸகரனுக்கு வரமளித்தார்:(6) "அநகனே {பாவமற்றவனே / புண்ணியவானே}, போற்றத்தக்க சந்ததி லாபத்தை நீ அடைவாய். புருஷரிஷபா {மனிதர்களில் காளையே}, உலகில் ஒப்பற்ற புகழை நீ அடைவாய்.(7) ஐயா, {உன் மனைவிகளில்} ஒருத்தி உன் வம்சத்தை விளங்கச் செய்யும் ஒரு புத்திரனைப் பெறுவாள். மற்றொருத்தி அறுபதினாயிரம் புத்திரர்களைப் பெறுவாள்" {என்றார் பிருகு}.(8)

அப்போது பரமபிரீதியடைந்த ராஜபுத்திரிகள் {சகரனின் மனைவியர்}, தங்கள் கரங்களைக் குவித்து இதைச் சொன்ன மஹாத்மாவின் {பிருகுவின்} அருளைப் பெற அவரிடம் பேசினார்கள்:(9) "பிராமணரே, எவள் ஒருவனைப் பெறுவாள்? எவள் பலரைப் பெறுவாள்? பிராமணரே, இதைக் கேட்க விரும்புகிறோம். உமது வசனம் சத்தியமாகட்டும்" {என்று கேட்டனர்}.(10)

பரமதார்மீகரான பிருகு, அவர்களின் வசனத்தைக் கேட்டு மேன்மையான குரலில் பேசினார், "இதில் சுய விருப்பம் விதியாகட்டும்.(11) வம்சத்தை விளங்கச் செய்யும் ஒரு மகனையோ, மஹாபலம்வாய்ந்தவர்களும், கீர்த்திமான்களும், மஹா உற்சாகம் கொண்டவர்களுமான பல மகன்களையோ உங்கள் இருவரில் எவரும் விரும்பலாம்" {என்றார் பிருகு}.(12)

இரகுநந்தனா, ராமா, முனிவசனத்தைக் கேட்ட கேசினி வம்சத்தை விளங்கச் செய்யும் புத்திரனை மன்னனின் முன்னிலையில் வேண்டினாள்.(13) அப்போது, சுபர்ணனின் {கருடனின்} சகோதரியான சுமதி, மஹா உற்சாகம் வாய்ந்தவர்களும், கீர்த்திமான்களுமான அறுபதாயிரம் புத்திரர்களை மகன்களாக வேண்டினாள்.(14) இரகுநந்தனா, பாரியைகளுடன் கூடிய ராஜா {சகரன்} அந்த ரிஷியை பிரதிக்ஷிணம் செய்து {வலம் வந்து}, சிரம் பணிந்து தன் நகரத்துக்கு {அயோத்திக்குச்} சென்றான்.(15)

இவ்வாறே காலம் கடந்ததும் மூத்தவளான கேசினி அஸமஞ்சன் என்ற பெயரில் அறியப்பட்ட சகரனின் மகனைப் பெற்றாள்.(16) நரவியாகரா {மனிதர்களில் புலியே}, சுமதியோ சுரைக்காயைப் போன்ற கர்ப்பத்தைப் பெற்றெடுத்தாள். அந்தச் சுரைக்காயை உடைத்துக் கொண்டு அறுபதாயிரம் புத்திரர்கள் பிறந்தனர்.(17) செவிலிகள் அவர்களை {அந்த அறுபதாயிரம் மகன்களை} நெய் நிறைந்த கும்பங்களில் வளர்த்தனர். அவர்கள் அனைவரும் குறிப்பிட்ட காலத்தில் யௌவனமடைந்தனர் {இளைஞர்களாகினர்}.(18)

நீண்ட காலத்திற்குப் பிறகு ஸகரனின் அறுபதாயிரம் மகன்களும் இளமையுடன் கூடிய வடிவ அழகையும் பெற்றனர்.(19) நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே}, ரகுநந்தனா, ஸகரனின் மூத்த மகன் {அஸமஞ்சன்}, நித்தம் பாலர்களை {எப்போதும் குழந்தைகளைப்} பிடித்து, சரயுவின் ஜலத்தில் {சரயு ஆற்று நீரில்} வீசி, அவர்கள் நீரில் மூழ்குவதைக் கண்டு சிரிப்பவனாக இருந்தான்.(20,21அ) இவ்வழியில் நல்ல ஜனங்களுக்குப் பாதகத்தையும், நகரவாசிகளுக்குத் தீங்கையும் செய்தவனை அவனது பிதா {தந்தையான ஸகரன்} நகரத்தில் {அயோத்தியில்} இருந்து விரட்டினான்.(21ஆ,22அ)

அஸமஞ்சனின் புத்திரனும், அம்சுமான் என்ற பெயர் படைத்தவனுமான ஒரு வீரியவான், உலகத்தில் உள்ள அனைவராலும் ஏற்கத் தகுந்தவனாகவும், அனைவருக்கும் பிரியமானவனாகவும் இருந்தான்.(22ஆ,23அ) நரசிரேஷ்டா, நீண்ட காலத்திற்குப் பிறகு ஸகரனிடம், "நான் யஜ்ஞம் செய்வேன்" என்ற எண்ணம் தோன்றியது.(23ஆ,24அ) அப்போது வேதங்களை அறிந்தவனான அந்த ராஜா உபாத்யாயகணங்களுடன் {புரோஹிதக் கூட்டத்தாருடன்} யஜ்ஞ கர்மங்களை {வேள்வி நடைமுறைகளை} நிச்சயம் செய்து கொண்டு சடங்கு காரியங்களைத் தொடங்கினான்" {என்றார் விஷ்வாமித்ரர்}.(24ஆ,இ)

பாலகாண்டம் சர்க்கம் – 38ல் உள்ள சுலோகங்கள் : 24

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அசுவபதி அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அனசூயை அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இல்வலன் உமை கங்கை கசியபர் கபந்தன் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் குஹன் கேசினி கைகேயி கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபளை சரபங்கர் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திலீபன் தூஷணன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாரீசன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விராதன் விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஹனுமான் ஹிமவான்