Tuesday, 6 August 2024

அபயமளித்த ராமன் | யுத்த காண்டம் சர்க்கம் - 018 (39)

Rama accepts the seek for refuge | Yuddha-Kanda-Sarga-018 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தன்னிடம் சரணாகதி அடைந்த விபீஷணனைக் கைவிட முடியாது என்று சொன்ன ராமன்...

Vibheeshana comes seeking refuge to Rama

அப்போது, வெல்வதற்கரியவனான ராமன், வாயுசுதன் {வாயு மைந்தனான ஹனுமான்} சொன்னதைக் கேட்டு, மனம் தெளியப்பெற்று, தன் கருத்தில் உறுதியடைந்து {பின்வருமாறு} பதிலளித்தான்:(1) "விபீஷணனைக் குறித்து நானும் கொஞ்சம் சொல்ல விரும்புகிறேன். இங்கிருக்கும் திடமான நலம் விரும்பிகளான நீங்களும், அதைக் கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன்.(2) அவன் தோஷமுள்ளவன் என்றாலும் மித்ரபாவத்துடன் வந்திருக்கிறான் என்பதால் நான் கைவிடமாட்டேன். இவை யாவும் நன்மக்களின் நிந்தனைக்குள்ளாகாது" {என்றான் ராமன்}.(3)

அப்போது, ஹரிபுங்கவனான சுக்ரீவன், சொல்லப்பட்ட அந்த வாக்கியம் குறித்து கவனமாக ஆராய்ந்துவிட்டு, சுபத்திரமான {மங்கலமான பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(4) "இந்த ரஜனீசரன் துஷ்டனாகவோ, அதுஷ்டனாகவோ {துஷ்டத்தனமற்றவனாகவோ} இருந்தால் என்ன? இத்தகைய விசனத்தில் தன்னுடன் பிறந்தவனையே கைவிடுபவன் எவனோ,{5} அத்தகைய ஒருவன் யாரைத்தான் கைவிடமாட்டான்?" {என்றான் சுக்ரீவன்}[1].(5,6அ)

[1] கூற்றுவன் தன்னொடு எவ்வுலகும் கூடி வந்து
ஏற்றன என்னினும் வெல்ல ஏற்றுளம்
மாற்றவன் தம்பி நம் மருங்கு வந்து இவண்
தோற்றுமோ அன்னவன் துணை ஆகுமோ

- கம்பராமாயணம் 6429ம் பாடல், யுத்த காண்டம், வீடணன் அடைக்கலப் படலம்

பொருள்: "யமனுடன் சேர்ந்து எவ்வுலகத்தினரும் கூடி வந்து நமக்கு எதிராக நின்றாரெனினும், வெல்வோம் என்ற முடிவை ஏற்றுள்ளோம். பகைவனின் தம்பி {விபீஷணன்} நம் பக்கம் வந்து சேர்வது தகுமோ? அவன்தான் நம் துணைவன் ஆகிவிடுவானோ?" {என்றான் சுக்ரீவன்}

வானராதிபதியின் {சுக்ரீவனின்} வாக்கியத்தைக் கேட்டு, அனைவரையும் பார்த்து,{6ஆ} சற்றே புன்னகைத்தவனும், சத்யபராக்கிரமனுமான காகுத்ஸ்தன் {ராமன்}, புண்ணிய லக்ஷணம் வாய்ந்த லக்ஷ்மணனிடம் இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(6ஆ,7) "ஹரீஷ்வரன் {சுக்ரீவன்} எதை சொல்கிறானோ, அதை சாஸ்திரங்களைக் கற்காமலோ, பெரியோருக்குத் தொண்டாற்றாமலோ இவ்வாறு பேசுவது சாத்தியமில்லை.(8) {லக்ஷ்மணனிடம் இதைச் சொல்லிவிட்டு, மீண்டும் சுக்ரீவனிடம்}, சர்வ ராஜாக்களிடமும் பிரத்யக்ஷமாகக் காணப்படக்கூடியதும், லௌகீகர்கள் மத்தியிலும் நிகழக்கூடியதுமான இது சூக்ஷ்மமானது {நுட்பமானது} என்று எனக்குத் தோன்றுகிறது[2].(9) ஒரே குலத்தைச் சார்ந்தவர்களும், அடுத்தடுத்த தேசங்களைச் சார்ந்தவர்களும் விசனங்களில் {கஷ்ட காலங்களில்} தாக்கிக் கொள்வார்கள் என்பதால் அமித்ரர்கள் {நண்பர்களல்லர்} என்று சொல்லப்படுகிறார்கள். அதனால்தான், அவன் {விபீஷணன்} இங்கே வந்திருக்கிறான்.(10) ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களில் பாபம் செய்யாதவர்கள், தங்கள் ஹிதம் விரும்புகிறவர்களை மதிப்பார்கள். ஆனாலும், பொதுவாக நரேந்திரர்கள் சோபனர்களிடமும் {நல்லவர்களிடமும்} சந்தேகங்கொள்வார்கள்.(11) 

[2] ஆங்கில மொழிபெயர்ப்புகளில், தேசிராஜு ஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பில், "மன்னர்கள் அனைவரின் வாழ்விலும் தெளிவாகக் காணக்கூடியதும், சாதாரணர்களின் வாழ்விலும் காணக்கூடியதுமான இந்தச் சூழ்நிலையில் ஏதோ விசேஷம் இருப்பதாக என் மனத்தில் தோன்றுகிறது" என்றிருக்கிறது. வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில், "மன்னர்கள் அனைவரிடமும் வெளிப்படையாகத் தெரியக்கூடியது, அல்லது குறைந்தபட்சம் உலகத்தின் கண்ணோட்டத்தில் நுட்பமான முறையில் அறியப்படக்கூடியது என்றே இது சம்பந்தமாக எனக்குப் படுகிறது" என்றிருக்கிறது. மன்மதநாததத்தர் பதிப்பில், "இருப்பினும், எனக்கு இரண்டு நுட்பமான காரணங்கள் தெரிகின்றன. மன்னர்களில் சகோதரர்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளில் ஒன்று வெளிப்படையானது, மற்றொன்று சாதாரணமானது" என்றிருக்கிறது. விவேக் தேவ்ராய் பதிப்பில், இந்த சர்க்கத்தில், இந்தக் குறிப்பிட்ட பகுதி இல்லை. தமிழ் மொழிபெயர்ப்புகளில், தர்மாலயப் பதிப்பில், "எனக்கு இவ்விஷயத்தில் தோன்றுகிறது எதுவோ அந்த ஒன்று மிக சூக்ஷ்மமாக இருக்கிறது. ஆயினும் எல்லா ராஜாக்களிடத்திலும், லோகசித்தமாயும், பிரத்யக்ஷமாயும் விளங்குகிறது" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "அண்ணனை விட்டு இவன் வந்ததில் நீதிசாஸ்த்ரத்தைப் பின்சென்றதும் அதிஸூக்ஷ்மமுமாகிய ராஜதர்மம் ஒன்று உளதேயன்றி இல்லாமல் போகவில்லை. அது ப்ரத்யக்ஷமாகப் புலப்படுவதும், லோகவ்யவஹரா ஸித்தமாயிருப்பதே. அது ராஜாக்களனைவரிடத்திலும் உண்டானது. இது தான் எனக்கும் தோற்றுகிறதேயன்றி வேறில்லை" என்றிருக்கிறது. கோரக்பூர் கீதாபிரஸ் பதிப்பில், "ஆனால், (வீடணன், அண்ணனை உதறிவிட்டு வந்தவன் என்ற) இந்த விஷயத்தில், எனக்கு ஒரு நுட்பமான கருத்து இருக்கிறது. (நான் சொல்லப் போவது ஒன்றும் புதிதல்ல). இந்த இயல்பு எல்லா மன்னர்களிடத்திலும் இருக்கிறது. மக்களுக்கும் இது தெரியும்" என்றிருக்கிறது.

அரிபலத்தை {பகைவனின் படையைச்} சேர்ந்தவனை ஏற்பதில், எதை தோஷம் என்று நீ சொல்கிறாயோ, அதை சாத்திரப்படி நான் உனக்குச் சொல்கிறேன். இதைக் கேட்பாயாக.(12) நாம் அந்தக் குலத்தைச் சார்ந்தவர்களல்லர். இராக்ஷசர்களில் ராஜ்ஜியம் விரும்புகிறவர்களும் இருக்கலாம், பண்டிதர்களும் இருக்கலாம். எனவே விபீஷணன் ஏற்கப்படத்தகுந்தவனே.(13) சங்கதர்கள் {ஒன்றுசேர்ந்தவர்கள்}, கவலையின்றி, மகிழ்ச்சியுடன் ஒன்றாக வாழமாட்டார்கள். எனவே, தங்களுக்குள் பேதம் கற்பிப்பார்கள். அந்த பயத்தாலேயே {மன்னன், சந்தேகத்துடன் நல்லோனிடம் பேதங்கற்பித்த அந்த ஆபத்தாலேயே} இவன் வந்திருக்கிறான். இந்த மஹா பிரணாதமும் {உரத்த கோரிக்கையும்} அதற்காகத்தான். எனவே, விபீஷணன் ஏற்கப்படத்தகுந்தவனே.(14,15அ) தாதா {ஐயா}, உடன்பிறந்தவர்கள் அனைவரும் பரதனுக்கு ஒப்பானவர்களல்லர், பிதாவின் புத்திரர்கள் {அனைவரும்} என்விதமானவர்களுமல்லர், நண்பர்களும் உன்விதமானவர்களல்லர்" {என்றான் ராமன்}.(15ஆ,16அ)

இராமன் இவ்வாறு உரைத்ததும், மஹா பிராஜ்ஞனான லக்ஷ்மணனுடன் இருந்த சுக்ரீவன், கூப்பிய கைகளுடன் எழுந்து நின்று, இந்த வாக்கியத்தைக் கூறினான்:(16ஆ,17அ) "அந்த நிசாசரன் {இரவுலாவியான விபீஷணன்}, ராவணனால் அனுப்பப்பட்டவன் என்பதை அறிவீராக. க்ஷமவதாம்வரரே {பொறுமைசாலிகளில் சிறந்தவரே}, அவனுக்கு நிக்ரஹமே {தண்டனை அளிப்பதே} தகுந்தது என்று நான் நினைக்கிறன்.(17ஆ,18அ) கோணல் புத்தியுடன் கூடிய ராக்ஷசனால் {ராவணனால்} அனுப்பப்பட்டே, இவன் {விபீஷணன்} இங்கே வந்திருக்கிறான்.{18ஆ} அனகரே {பாவமற்றவரே}, மஹாபாஹுவே, விசுவாசத்துடன் {நம்பிக்கையுடன்} கூடிய உம்மையோ, விசுவாசத்துடன் கூடிய என்னையோ, லக்ஷ்மணரையோ தாக்குவதற்காக அனுப்பப்பட்டிருக்கும் இவன், தன் அமைச்சர்கள் சஹிதனாக வதைக்கப்பட வேண்டும்.{19} விபீஷணன், கொடியவனான ராவணனுடன் பிறந்தவன் ஆவான்" {என்றான் சுக்ரீவன்}.(18ஆ-20அ)

வாக்கியஜ்ஞனான சுக்ரீவன், ரகுசிரேஷ்டனிடம் {ரகு குலத்தில் சிறந்தவனான ராமனிடம்} இவ்வாறு சொன்ன பிறகு மௌனம் அடைந்தான்.(20ஆ,21அ) சுக்ரீவனின் அந்த வாக்கியத்தைக் கேட்ட ராமன், ஆலோசித்த பிறகு, ஹரிபுங்கவனிடம் {குரங்குகளில் முதன்மையான சுக்ரீவனிடம், பின்வரும்} சுபமான வாக்கியத்தைச் சொன்னான்:(21ஆ,22அ) "இந்த ரஜனீசரன் துஷ்டனாகவோ, அதுஷ்டனாகவோ {துஷ்டத்தன்மையற்றவனாகவோ} இருந்தாலும், எவ்விதத்திலும் எனக்கு சூக்ஷ்மமான அஹிதத்தையும் {மிகச்சிறிய தீங்கையும்} செய்யவல்லவனா என்ன?(22ஆ,23அ) ஹரிகணேஷ்வரே {குரங்குக்கூட்டத்தின் தலைவா}, பிருத்வியிலுள்ள பிசாசர்களையும், தானவர்களையும், யக்ஷர்களையும், ராக்ஷசர்களையும் நான் விரும்பினால் அங்குலிநுனியால் {விரல்நுனியால்} கொன்றுவிடுவேன்.(23ஆ,24அ)

ஒரு கபோதம் {புறா}, தன்னிடம் சரணமடைந்த {அடைக்கலமாக வந்த} சத்ருவை {பகைவனான வேடனை} வரவேற்று, நியாயப்படியான விருந்தோம்பலுடன் தன் மாமிசத்தை கொடுத்தது என்று கேள்விப்படுகிறோம்.(24ஆ,25அ) வானரசிரேஷ்டா, அந்தப் புறா, தன் பாரியையை {மனைவியை} அபகரித்து வந்த அவனை வரவேற்றது[3]. என்விதமான ஜனத்தைக் குறித்து என்ன சொல்வது?(25ஆ,26அ) 

[3] தர்மாலயப் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஓர் வேடன் ஓர் வனத்தில் விலங்கினங்களையும் புள்ளினங்களையும் வருத்தி உயிர்வதைக்கும் கொடியனாய் வாழங்கால், புயலோடு மழையொருநாள் பொழிய குளிர் நடுக்கங்கொண்ட அவ்வேடன் வழியில் மழையால் மதிமயங்கிக் கிடக்கும் ஓர் பெண்புறாவை கண்டெடுத்து, கூட்டில் அடைத்துக் கொண்டு, குளிர் காயவும், பசி தீர்க்கவும் வழிகாணாதவனாய், அருகில் ஓர் மரத்தடிக்கேக, அங்கு தனது புறாப்பேடு வாரா வருத்தத்தால் வாடும் ஆண்புறாவை நோக்கி, கூட்டிலிருக்கும் பெண்புறா, நான், "இதோ சத்துரு கைப்பட்டேன். எனக்காக வருந்தாதே. சத்துருவாயினும் இவன் குளிரைப் போக்கவும் உணவை வேண்டியும் நமது மரத்தடிக்கு அதிதியாய் வந்திருக்கிறான். அவனை உபசரித்து நலம் பெறுவாய் என்று சொல்லக்கேட்ட ஆண் கபோதம், விறகுகளைக் கூட்டித் தீமூட்டி வேடனை வேண்டி குளிர்காய்வித்து உணவின் பொருட்டு உடலையுமீய மீண்டும் சருகுகளைக் கொளுத்தி அதில் வீழ்ந்தது என்பது கதை" என்றிருக்கிறது. மஹாபாரதம், சாந்தி பர்வம், பகுதி 143 முதல், 149 வரையில் இந்தக் கதை விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பரசுராமர் முசுகுந்தனுக்கு இந்தக் கதையைச் சொன்னதாக பீஷ்மர், யுதிஷ்டிரனுக்குச் சொல்கிறார். இங்கே ராமனும் இதே கதையைத் தான் சுக்ரீவனுக்குச் சுட்டிக் காட்டுகிறான்.

பூர்வத்தில் கண்வரிஷியின் புத்திரரும், சத்தியவாதியும், பரமரிஷியுமான கண்டு பாடிய தர்மிஷ்டமான பாடலைக் கேட்பாயாக.(26ஆ,27அ) பரந்தபா {பகைவரை எரிப்பவனே}, "தீனனாக வந்து, சரணாகதி அடைந்து, கைக்கூப்பி யாசிப்பவன் சத்ருவாகவே இருந்தாலும், கொடுமையின்மை என்ற ஓர் அர்த்தத்திற்காகவே கொல்லப்படக்கூடாது.(27ஆ,28அ) பிறரால் ஒடுக்கப்பட்டோ, செருக்குற்றோ சரணாகதி அடைந்தவன், பகைவனாக இருந்தாலும், பிராணனைக் கைவிட்டாவது கிருதாத்மனால் {செயல்களால் சாதித்த ஒருவனால்} ரக்ஷிக்கப்பட வேண்டும்.(28ஆ,29அ) அவன் {கிருதாத்மன்}, பயத்தாலோ, மோஹத்தாலோ {அறியாமையாலோ}, காமத்தாலோ {வேறு ஏதேனும் விருப்பத்தாலோ} உள்ளபடியே தனது சக்தியைக் கொண்டு ரக்ஷிக்கவில்லையென்றால், அந்தப் பாபம் உலகத்தால் நிந்திக்கப்படும்.(29ஆ,30அ) இரக்ஷிக்கக்கூடியவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, சரணாகதன் ரக்ஷிக்கப்படாமல் அழிந்தால், அவனது {பாதுகாக்காதவனின்} மொத்த சுக்ருதத்தையும் {புண்ணியத்தையும்} அவன் {பாதுகாக்கப்படாதவன்} பெற்றுக் கொள்வான்" {என்பது கண்வரின் பாடல்}.(30ஆ,31அ) 

இவ்வாறு, இந்த அரக்ஷணத்தில் {இப்படிப் பாதுகாக்காமல் விடுவதில்} மஹா தோஷம் இருக்கிறது. இது ஸ்வர்க்கத்தைத் தராது; இது புகழை அழிக்கும்;  இது பலத்தையும் வீரியத்தையும் நாசமடையச் செய்யும்.(31ஆ,32அ) யதார்த்தமான {உள்ளபடியே இருக்கும் இந்த} ரிஷி கண்டுவின் உத்தம வசனத்தை நான் பின்பற்றுகிறேன். தர்மிஷ்டமானது, புகழைத் தருவதும், ஸ்வர்க்கத்திற்கு வழிநடத்துவதுமான இது, பலனைத் தருவதாகவும் தெரிகிறது.(32ஆ,33அ) பாதுகாப்பை வேண்டி, "நான் உன்னவன்" என்று ஒரேயொருமுறை யாசிப்பவனுக்கும், சர்வ பூதங்களிடமிருந்தும் நான் அபயம் அளிப்பேன். இஃது என் விரதமாகும்.(33ஆ,34அ) ஹரிசிரேஷ்டா {குரங்குகளில் சிறந்தவனே}, சுக்ரீவா, அவன் விபீஷணனாகவோ, ராவணனாகவோதான் இருக்கட்டும், அவனுக்கு நான் அபயம் அளிக்கிறேன். அவனை என்னிடம் அழைத்து வருவாயாக" {என்றான் ராமன்}.(34ஆ,35அ) 

பிலவகேஷ்வரனான {தாவிச் செல்பவர்களின் தலைவனான} சுக்ரீவன், ராமனின் சொற்களைக் கேட்டு, நட்பில் ஆழ்ந்து, காகுத்ஸ்தனிடம் {ராமனிடம், பின்வருமாறு} மறுமொழி கூறினான்:(35ஆ,36அ) "தர்மஜ்ஞரே {தர்மத்தை அறிந்தவரே}, லோகநாத சிகாமணியே, சத்பாதையில் {நன்னெறியில்} நிலைபெற்றிருக்கும் சத்வவந்தரான நீர் ஆரியம் {உன்னதமானவற்றைப்} பேசுவதில் இங்கே ஆச்சர்யமென்ன இருக்கிறது?(36ஆ,37அ) அனுமானத்தினாலும், பாவத்தினாலும் {உணர்வினாலும்}, அனைத்து வகையிலும் நன்கு பரீக்ஷிக்கப்பட்ட விபீஷணன், சுத்தமானவனே என்று என்னுடைய இந்த அந்தராத்மாவில் உணர்கிறேன்.(37ஆ,38அ) எனவே, ராகவரே, மஹா பிராஜ்ஞனான {அனைத்தையும் அறிந்தவனான} விபீஷணன், சீக்கிரமே நமக்குத் துல்லியனாகட்டும் {நமக்கு நிகரானவன் ஆகட்டும்}. நம்முடனான நட்பையும் அனுபவிக்கட்டும்" {என்றான் சுக்ரீவன்}.(38ஆ,39அ)

சுக்ரீவனின் சொற்களைக் கேட்ட நரேஷ்வரன் {மனிதர்களின் தலைவனான ராமன்}, அந்த ஹரீஷ்வரனால் {குரங்குத் தலைவன் சுக்ரீவனால்} ஏற்றுக்கொள்ளப்பட்டதைப் போலவே, பதத்ரிராஜனுடன் புரந்தரனைப் போன்ற சங்கமத்தை விபீஷணனுடன் நடத்தினான் {கருடனுடன் இந்திரனைப் போன்ற சந்திப்பை விபீஷணனுடன் ஏற்படுத்திக் கொண்டான்}.(39ஆ,இ)

யுத்த காண்டம் சர்க்கம் – 018ல் உள்ள சுலோகங்கள்: 39

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை