The joy of Sugreeva | Sundara-Kanda-Sarga-63 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: மதுவன அழிவைக் குறித்துக் கவலையுற வேண்டாமென ததிமுகனிடம் சொன்ன சுக்ரீவன்; ஹனுமான், அங்கதன் உள்ளிட்டோரை உடனே அனுப்புமாறு கேட்டுக் கொண்டது...
தலை {தன் காலில்பட} விழும் வானரத்தை {ததிமுகனைக்} கண்ட வானரரிஷபன் {சுக்ரீவன்}, கலங்கிய ஹிருதயத்துடன் இந்த வாக்கியங்களைக் கூறினான்:(1) "எழுவீர், எழுவீராக. நீர் என் பாதத்தில் விழுவது ஏன்? உமக்கு அபயம் அளிக்கிறேன். வீரரே, அனைத்தையும் உண்மையாகச் சொல்வீராக" {என்றான் சுக்ரீவன்}.(2)
மஹாபிராஜ்ஞனான {பெரும் ஞானியான} அந்த ததிமுகன், மஹாத்மாவான அந்த சுக்ரீவனால் நம்பிக்கை அளிக்கப்பட்டவனாக எழுந்து {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(3) "இராஜாவே, ரிக்ஷராஜாவாலோ, உன்னாலோ, வாலியாலோ வனத்தில் பிறர் புக பூர்வத்தில் அனுமதிக்கப்பட்டதில்லை. அதை {வனத்தை} வானரர்கள் பக்ஷிக்கிறார்கள்.(4) வனரக்ஷகர்களான இவர்கள் அச்சுறுத்தியபோதும், வானரர்கள் அதைச் சிந்தனையிலும் கொள்ளாமல் {பழங்களை} பக்ஷித்துக் கொண்டும், மதுவைப் பருகிக் கொண்டும் இருக்கிறார்கள்.(5) சிலர் எஞ்சியவற்றை {எஞ்சிய மதுவை / தேனை} அங்கேயே வீசி எறிகிறார்கள். இன்னும் வேறு சிலர் பக்ஷிப்பதைத் தடுத்த அனைவரிடமும் தங்கள் புருவங்களை {நெரித்துக்} காட்டுகின்றனர்.(6) இவர்கள் கோபமடைந்து அந்த வனத்தில் இருந்து அவர்களை விரட்டியபோது, குரோதமடைந்த அந்த வானரபுங்கவர்களால் அச்சுறுத்தப்பட்டனர்.(7) வானரரிஷபா, சிவந்த நயனங்களுடன் கூடிய அந்த வானரவீரர்கள் பலரும், குரோதத்துடன் இந்த ஹரயர்களை விரட்டிவிட்டனர்.(8) சிலர் கைகளால் அறையப்பட்டனர்; சிலர் முழங்கால்களால் உதைக்கப்பட்டனர்; விரும்பியவாறு பிடித்திழுக்கப்பட்டு தேவமார்க்கம் காட்டப்பட்டனர் {வானத்தில் தூக்கி வீசப்பட்டனர்}.(9) நீ தலைவனாக இருக்கும்போது இந்த சூரர்களை அவர்கள் தாக்கியிருக்கின்றனர். மொத்த மதுவனமும் விரும்பியவாறு முழுமையாக பக்ஷிக்கப்படுகிறது" {என்றான் ததிமுகன்}.(10)
வானரரிஷபனான அந்த சுக்ரீவனிடம் இவ்வாறு {ததிமுகனால்} சொல்லப்பட்டபோது, பகைவீரர்களைக் கொல்பவனும், மஹாபிராஜ்ஞனுமான {பெரும் ஞானியுமான} லக்ஷ்மணன், {பின்வருமாறு} கேட்டான்:(11) "இராஜனே, வனபனான {வனத்தின் பாதுகாவலனான} இந்த வானரன் ஏன் வந்திருக்கிறான்? எந்த அர்த்தத்தைச் சுட்டிக் காட்டும் வாக்கியத்தை துக்கத்துடன் பேசினான்?" {என்று கேட்டான் லக்ஷ்மணன்}.(12)
மஹாத்மாவான லக்ஷ்மணன் இவ்வாறு உரைத்ததும், வாக்கியவிசாரதனான சுக்ரீவன் இந்த வாக்கியத்தை லக்ஷ்மணனிடம் மறுமொழியாகச் சொன்னான்:(13) "ஆரியரே, லக்ஷ்மணரே, வீரக்கபியான ததிமுகர், அங்கதன் முதலிய வீரர்கள் மதுவை பக்ஷிப்பதாகச் சொல்கிறார்.{14} தக்ஷிண திசையில் {சீதையைத்} தேடிச் சென்ற ஹரிபுங்கவர்கள் {குரங்குகளில் முதன்மையானவர்கள்} திரும்பிவிட்டார்கள்.(14,15அ) செய்ய வேண்டியதைச் செய்யாமல், இவர்கள் இத்தகைய உபக்கிரமத்தில் {செயல்பாட்டில்} ஈடுபடமாட்டார்கள். வந்திருக்கும் அந்த வானரர்களால் மொத்த வனமும் அலைக்கழிக்கப்படுகிறது; ஆக்கிரமித்துப் பயன்படுத்தப்படுகிறது.(15ஆ,16) எப்போது இவர்கள் வனத்தை நெருங்கினார்களோ, {அப்போதே} வானரர்களால் கர்மம் சாதிக்கப்பட்டது {என்றாகிறது}; ஹனூமதனால் தேவி காணப்பட்டிருப்பாள்; வேறொருவனாலும் முடியாது; சந்தேஹமில்லை.(17) இந்தக் கர்மத்திற்கு ஹேதுவானவன் ஹனூமதனைத் தவிர வேறொருவனும் இல்லை. அந்த வானரபுங்கவனிடம் காரிய சித்திக்கான மதியும்,{18} வியவசாயமும் {விடாமுயற்சியும்}, வீரியமும், கேள்வியும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன.(18,19அ) எதில் ஜாம்பவான் நேதாவாகவும் {தலைவராகவும்}, மஹாபலவானான அங்கதன் பலத்தின் ஈஷ்வரனாகவும் {படைத்தலைவனாகவும்}, ஹனுமான் அதிஷ்டனாகவும் {நிர்வாகியாகவும்} இருப்பார்களோ அதன் கதி வேறாகிப் போகாது.(19ஆ,இ) அங்கதன் முதலிய வீரர்களால் மதுவனம் அழிக்கப்பட்டதாகவும், தடுத்தவர்கள் சகிதராக முழங்கால்களில் தாக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.(20,21அ) விக்கிரமத்திற்காக கொண்டாடப்படுபவரும், ததிமுகர் என்ற பெயரில் புகழ்பெற்றவருமான ஹரி {குங்கானவர்}, இதன் அர்த்தத்தை மதுரவாக்கில் சொல்வதற்காக இங்கே வந்திருக்கிறார்.(21ஆ,22அ) மஹாபாஹுவே, சௌமித்ரே, சீதை காணப்பட்டாள் என்ற தத்துவத்தை {உண்மையை உள்ளபடியே} உணர்வீராக. சர்வ வானரர்களும் ஒன்று கூடி மது பருகுவதையும் பார்ப்பீராக.(22ஆ,23அ) புருஷரிஷபரே {மனிதர்களில் காளையே}, புகழ்பெற்றவர்களான வனௌகசர்கள், வைதேஹியைக் காணவில்லையெனில், வரமாக தத்தம் செய்யப்பட்ட திவ்யமான வனத்திற்குள் அத்துமீறியிருக்கமாட்டார்கள்" {என்றான் சுக்ரீவன்}.(23ஆ,24அ)
அப்போது தர்மாத்மாவான லக்ஷ்மணனும், ராகவனும் மகிழ்ச்சியடைந்தனர்.{24ஆ} சுக்ரீவனின் வதனத்தில் இருந்து வந்தவையும், காதுகளுக்கு சுகமானவையுமான சொற்களைக் கேட்டு ராமன் பெரும் மகிழ்ச்சியடைந்தான். மஹாபலவானான லக்ஷ்மணனும் பெரும் மகிழ்ச்சியடைந்தான்.(24ஆ,25) ததிமுகனின் இந்த சொற்களைக் கேட்டு சுக்ரீவன் பெரும் மகிச்சியடைந்து, மீண்டும் வனபாலனிடம் {ததிமுகனிடம், பின்வரும்} வாக்கியத்தை மறுமொழியாகச் சொன்னான்:(26) "கர்மங்களை நிறைவேற்றியவர்களான அவர்களால் வனம் அனுபவிக்கப்படுவதில் நான் பிரீதியடைகிறேன். கர்மங்களை நிறைவேற்றியவர்களின் செயல்பாடுகள் பொறுத்துக் கொள்ளத்தகுந்தவையே. பொறுத்துக்கொள்ளவும்படுகிறது.(27) மிருகராஜனின் செருக்கைக் கொண்டவனும், கிருதார்த்தனுமான {நோக்கம் நிறைவேறியவனுமான} ஹனுமதனை முதன்மையாகக் கொண்ட அந்த சாகை மிருகங்களை, ராகவர்கள் {ராமலக்ஷ்மணர்கள்} சகிதனாகச் சென்று சீக்கிரமே காணவும், சீதையை மீட்பதில் அவர்களின் பிரயத்னத்தைக் கேட்கவும் விரும்புகிறேன்" {என்றான் சுக்ரீவன்}.(28)
அந்த வானரர்களின் ராஜா {சுக்ரீவன்}, பிரீதியால் வரிந்த கண்களுடனும், பெரும்மகிழ்ச்சியுடனும் கூடியவர்களும், சித்தார்த்தர்களுமான {நோக்கம் நிறைவேறியவர்களுமான} குமாரர்களை {ராமலக்ஷ்மணர்களைக்} கண்டும், கர்மசித்தியானது தங்கள் கைகளை நெருங்குவதை அறிந்தும் பெரிதும் ஆனந்தம் அடைந்தான்; அங்கமெங்கும் பெரும் மகிழ்ச்சியடைந்தான்.(29)
சுந்தர காண்டம் சர்க்கம் – 63ல் உள்ள சுலோகங்கள்: 29
Previous | | Sanskrit | | English | | Next |