Arishta mountain | Sundara-Kanda-Sarga-56 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சீதையிடம் விடைபெற்றுக் கொண்ட ஹனுமான்; வடக்குக் கடற்கரை நோக்கிப் புறப்பட்டது; அரிஷ்ட மலை குறித்த வர்ணனை...
பிறகு, சிம்சுபத்தினடியில் {நூக்கம் / கருங்காலி மரத்தினடியில்} நின்று கொண்டிருந்த ஜானகியை வணங்கிவிட்டு, "அதிர்ஷ்டவசமாக நீ இங்கு காயமின்றி இருப்பதைப் பார்க்கிறேன்" என்றான் {ஹனுமன்}.(1)
அப்போது, புறப்பட்டுக் கொண்டிருந்த அந்த ஹனூமந்தனை மீண்டும் மீண்டும் பார்த்த சீதை, பர்த்தாவிடம் கொண்ட சினேஹத்தினால் {தன் கணவன் ராமனின் மீது கொண்ட அன்பால், பின்வரும்} வாக்கியத்தைக் கூறினாள்:(2) "பரவீரக்னா {பகைவீரர்களை அழிப்பவனே}, இந்தக் காரியத்தை நிறைவேற்ற நிச்சயம் நீ மட்டுமே போதும். உன் பெரும்பலம் புகழத்தக்கது.(3) ஆனால், படைகளை அழிக்கவல்லவரான அந்த காகுத்ஸ்தர் {ராமர்}, தன் சரங்களால் லங்கையை நிறைத்து, என்னை அழைத்துச் செல்வதே அவருக்குத் தகுந்ததாக இருக்கும்.(4) எனவே, போரில் சூரரான மஹாத்மா {ராமர்}, தனக்குத் தகுந்த விக்ராந்தத்தை வெளிப்படுத்துவது எப்படியோ, அப்படியே நீ செயல்படுவாயாக" {என்றாள் சீதை}.(5)
ஹனுமான், அர்த்தம் பொதிந்ததும், காரணங்கள் அமைந்ததும், அவள் அடக்கத்துடன் சொன்னதுமான அந்த வாக்கியத்தைக் கேட்டு, {பின்வரும்} வாக்கியத்தை மறுமொழியாகக் கூறினான்:(6) "காகுத்ஸ்தர் {ராமர்}, ஹரிக்கள், ரிக்ஷங்களின் {குரங்குகள், கரடிகளின்} தலைவர்கள் சூழ சீக்கிரமே வருவார். யுத்தத்தில் பகைவரை வீழ்த்தி, உன் சோகத்தைப் போக்குவார்" {என்றான் ஹனுமான்}.(7) மாருதாத்மஜனான ஹனுமான், இவ்வாறு வைதேஹியை ஆசுவாசப்படுத்திவிட்டு, புறப்படுவதில் தன் மதியை அமைத்துக் கொண்டு, வைதேஹியை வணங்கினான்[1].(8)
[1] பார்த்தனள் சானகி பாராவேர்த்து எரிமேனி குளிர்ந்தாள்வார்த்தை என் வந்தனை என்னாபோர்த்தொழில் மாருதி போனான்- கம்பராமாயணம் 6005ம் பாடல், சுந்தர காண்டம் இலங்கை எரியூட்டு படலம்பொருள்: சீதை பார்த்தாள். பார்த்தவுடன் (ஹனுமானுக்கு என்ன ஆயிற்றோ என) வியர்த்துக் கொதிக்கின்ற தன் உடல் குளிர்ந்தவளானாள். "நான் சொல்ல வேண்டியது ஏதும் உள்ளதா?" என்றாள். "வணக்கம்" என்று சொல்லிவிட்டுப் போர்த்தொழில் செய்யும் மாருதி {ஹனுமான்} புறப்பட்டுச் சென்றான்.
பிறகு, அரிமர்தனனான அந்தக் கபிசார்தூலன் {பகைவரை அழிப்பவனும், குரங்குகளில் புலியுமான ஹனுமான்}, ஸ்வாமியை {தன் தலைவன் ராமனை} தரிசிக்கும் உற்சாகத்துடன், அரிஷ்டம் எனும் சிறந்த கிரியில் {அரிஷ்ட மலையில்} ஏறினான்[2].(9) நெடிது வளர்ந்த பத்மகங்களுடன் {மரங்களுடன் / யானைகளுடன்} கூடிய நீலமயமான {அடர்ப்பச்சை வர்ணத்திலான} வனங்களால் மறைக்கப்பட்டிருந்ததும், சிருங்கங்களுக்கிடையில் உத்தரீயம் {சிகரங்களுக்கிடையில் மேலாடை} போல தொங்கும் மழைமேகங்களுடன் கூடியதும்,(10) ஆங்காங்கே சிதறியிருக்கும் தாதுக்களால், கண்கள் சிமிட்டுவதைப் போலிருந்ததும், சுபமான திவாகரனின் {சூரியக்} கதிர்களால் பிரீதியுடன் துயிலெழுவதைப் போலிருந்ததும்,(11) நானாவித பிரஸ்ரவணங்களில் {மலையருவிகளில்} தெளிவான நீர் பாய்ந்து விழும் உரத்த ஒலியால் பாடுவதைப் போலும், சாத்திரங்களை ஓதத் தொடங்குவதைப் போலும் அந்தப் பர்வதம் {அரிஷ்ட மலை} இருந்தது.(12)
[2] இப்போது இலங்கையில் இரம்பொடை கிராமம் (Ramboda Village) இருக்கும் பகுதியில் இந்த அரிஷ்ட மலை இருந்தது என்று நம்பப்படுகிறது.
ஓங்கி வளர்ந்த தேவதாருக்களுடன் {தேவதாரு மரங்களுடன்}, கைகளை உயர்த்தி நிற்கும் தவசியைப் போலிருந்ததும், பாய்ந்தோடும் ஜலத்தின் கோஷத்தை எங்கும் எதிரொலித்தபடியே உரக்கக் கதறுவதைப் போலிருந்ததும்,(13) வேணுவை {புல்லாங்குழலைப்} போல காற்றில் ஆடும் கீசகங்களால் {மூங்கில்களால்} கூவுவதைப் போலிருந்ததும், அசையும் கரிய சரத்கால வனங்களுடன் நடுங்குவதைப் போலத் தெரிந்ததும்,(14) கொடும் விஷமுடைய பாம்புகள் சீற்றத்துடன் பெருமூச்சுவிடுவதைப் போலிருந்ததும், பனியால் மறைக்கப்பட்ட கம்பீரமான {ஆழமான} குகைகளில் தியானம் செய்வது போலிருந்ததும்,(15) மேகங்கள் சூழ்ந்த சிகரங்களால் ஆகாசத்தில் பரவி இருப்பதைப் போலும், பாதங்களுடன் {தாழ்வரைகளுடன்} அனைத்துப் பக்கங்களிலும் பயணம் புறப்படுவது போல் இருந்ததும்,(16) சாலம், தாலம் {பனை}, அசுவகர்ணங்கள், மூங்கில்கள் ஆகியன பல்வேறு இடங்களில் பரவியிருக்கப்பெற்ற, ஏராளமான குகைகளால் அலங்கரிக்கப்பட்ட கூடங்களுடன் அது {முகடுகளுடன் அந்த அரிஷ்ட மலை} சோபித்துக் கொண்டிருந்தது.(17)
விதவிதமான புஷ்பங்களுடன் கூடிய லதைகளால் {கொடிகளால்} அலங்கரிக்கப்பட்டதும், நானாவித மிருகங்களால் நிறைந்ததும், தாதுப் பெருக்கால் அலங்கரிக்கப்பட்டதும்,(18) ஏராளமான பிரஸ்ரவணங்களுடன் {மலையருவிகளுடன்} கூடியதும், கற்குவியல்களால் அடர்ந்திருந்ததும், மஹரிஷிகள், யக்ஷ, கந்தர்வ, கின்னர, உரகர்களால் சேவிக்கப்பட்டதும்,(19) கொடிகளாலும், மரங்களாலும் நிறைந்ததும், சிங்கங்கள் வசிக்கும் குகைகளுடன் கூடியதும், புலிக்கூட்டங்களால் நிறைந்ததும், சுவையுள்ள கிழங்குகளுடனும், பழங்களுடனும் கூடிய மரங்களைக் கொண்டதுமான(20) அந்தப் பர்வதத்தில் {அரிஷ்ட மலையில்}, பவனாத்மஜனான ஹனுமான், சீக்கிரமே ராமனை தரிசிக்கும் ஆவலில், பெரும் மகிழ்ச்சியுடன் ஏறினான்.(21)
அப்போது, ரம்மியமான கிரிச்சாரல்களில், அவனது பாதத்தின் அடிப்பகுதியில் அழுந்தி, கோஷத்துடன் நொறுங்கிய பாறைகள் துண்டுகளாகச் சிதறி விழுந்தன.(22) லவணாம்பசத்தின் தக்ஷிணத்திலிருந்து உத்தர கரையை {உப்புநீரின் கொள்ளிடமான பெருங்கடலின் தெற்கிலிருந்து, வடகரையை} அடைய விரும்பிய மஹாகபி {பெருங்குரங்கான ஹனுமான்}, அந்த சைலேந்திரத்தில் ஏறி வளர்ந்தான் {தன் உடலைப் பெருக்கிக் கொண்டான்}.(23) வீரனான பவனாத்மஜன் {வாயு மைந்தன் ஹனுமான்}, பர்வதத்தில் {அரிஷ்ட மலையில்} ஏறிய பிறகு, மீன்களாலும், உரகங்களாலும் {பாம்புகளாலும்} சேவிக்கப்படும் பயங்கரமான சாகரத்தைக் கண்டான்.(24) மாருதனின் ஆத்மசம்பவனான அந்த ஹரிசார்தூலன் {வாயுவின் மைந்தனும், குரங்குகளில் புலியுமான அந்த ஹனுமான்}, ஆகாசத்தில் மாருதனைப் போல, தக்ஷிணத்திலிருந்து உத்தர திசையை {தெற்கிலிருந்து வட திசையை} நோக்கிப் புறப்பட்டான்.(25)
அப்போது அந்தக் கபியால் {குரங்கான ஹனுமானால்} பீடிக்கப்பட்ட அந்த பர்வதோத்தமன் {உத்தம மலையான அரிஷ்ட மலையானவன்}, நடுங்கும் சிகரங்களுடனும், {முறிந்து} வீழும் மரங்களுடனும் பேரிரைச்சலிட்டபடியே, தன்னில் இருந்த பல்வேறு உயிரினங்களுடன் வசுதாதலத்திற்குள் {பூமிக்குள்} பிரவேசித்தான்.(26,27அ) புஷ்பங்களுடன் கூடிய மரங்கள், அவனுடைய {ஹனுமானுடைய} தொடைகளின் வேகத்தால் குலுங்கி, சக்ரனின் ஆயுதத்தால் {இந்திரனின் ஆயுதமான இடியால்} வீழ்த்தப்பட்டதைப் போல் பூதலத்தில் முறிந்து விழுந்தன.(27ஆ,28அ) குகைகளின் மத்தியில் அகப்பட்டுப் பீடிக்கப்பட்டவையும், பேராற்றல் வாய்ந்தவையுமான சிம்ஹங்களின் அந்தப் பயங்கர நாதம், வானத்தைப் பிளப்பதைப் போலக் கேட்டது.(28ஆ,29அ) அச்சமடைந்தவர்களும், கலைந்த ஆடைகளுடன் கூடியவர்களும், பூஷணங்கள் {ஆபரணங்கள்} சிதறியவர்களுமான வித்யாதரிகள் தரணிதரத்திலிருந்து {மலையில் இருந்து} உடனே மேலெழுந்தனர்.(29ஆ,30அ) அதிபிரமாணமுடையவையும் {பேருடல் வாய்த்தவையும்}, எரியும் நாவுகளுடன் கூடியவையும், மஹாவிஷங் கொண்டவையுமான பெரும்பாம்புகள், நசுங்கிய சிரங்களுடனும், கிரீவங்களுடனும் {தலையுடனும், கழுத்துடனும்} ஒன்றாகச் சுருண்டன.(30ஆ,31அ) அப்போது, கின்னர, உரக, கந்தர்வ, யக்ஷ, வித்யாதரர்கள் ஆகியோர், பீடிக்கப்பட்ட அந்தச் சிறந்த மலையைக் கைவிட்டு ககனத்தில் {வானத்தில்} உயர்ந்தனர்.(31ஆ,32அ)
அந்த பலவானால் பீடிக்கப்பட்டவனும், மரங்களால் மகுடம் சூட்டப்பட்ட உயர்ந்த சிகரங்களுடன் கூடியவனும், பூமிதரனுமான {மலையுமான} அந்த ஸ்ரீமான் {அரிஷ்ட மலையானவன்}, ரசாதலத்திற்குள் பிரவேசித்தான்.(32ஆ,33அ) பத்து யோஜனைகள் விஸ்தாரத்துடனும், முப்பது யோஜனைகள் உயரத்துடனும் கூடிய அந்த தராதரன் {அரிஷ்ட மலையானவன்}, முழுமையாக தரணியின் {பூமியின்} மட்டத்தைக் கொண்டவனானான்.(33ஆ,34அ) அந்த ஹரி {குரங்கான ஹனுமான்}, அலைகள் மோதும் கரைகளைக் கொண்ட, பயங்கரமான லவணார்ணவத்தை {உப்புநீர்க்கடலை} விளையாட்டாகத் தாண்ட விரும்பி நபத்தில் {வானத்தில்} தாவினான்.(34ஆ,35)
சுந்தர காண்டம் சர்க்கம் – 56ல் உள்ள சுலோகங்கள்: 35
Previous | | Sanskrit | | English | | Next |