Hanuman fears | Sundara-Kanda-Sarga-54 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: நகரம் சாம்பலானதைக் கண்ட ஹனுமான், சீதை உயிரிழந்திருக்கக்கூடும் என்று நினைத்தது; நல்ல சகுனங்களைக் கண்டும், அவள் நலமாக இருப்பதை சாரணர்கள் மூலம் அறிந்தும் ஆறுதலடைந்த ஹனுமான்...
வானரனான ஹனுமான், அச்சத்தால் பீடிக்கப்பட்ட ராக்ஷசர்களுடன் கொழுந்துவிட்டெரியும் லங்காம்புரியைக் கண்டு, கவலையுடன் சிந்தனையில் ஆழ்ந்தான்.(1) பெருந்திகிலடைந்த அவன் {ஹனுமான்}, தன்னைத் தானே நிந்திக்கும் வகையில் தனக்குள்ளேயே, "இலங்கையை நான் எரித்துவிட்டேன். இஃது என்ன கர்மம் {செயல்}?(2)
எரியும் அக்னியை நீரால் அணைப்பது போல், உதிக்கும் கோபத்தை தங்கள் புத்தியால் அடக்கிக் கொள்பவர்களே தன்யர்கள் {நற்பேறுபெற்றவர்கள்}.(3) குரோதன் {கோபவசமடைந்தவன்} எவன்தான் பாபத்தைச் செய்யாதிருப்பான்? குரோதர்கள் குருக்களையுங்கூட {பெரியோரையுங்கூடக்} கொன்றுவிடுவார்கள். குரோதர்களான நரர்கள், கடுஞ்சொற்களால் சாதுக்களை {நல்லோரை} நிந்திப்பார்கள்.(4) கோபவசப்பட்டவன், தகுந்த சொற்களையும், தகாத சொற்களையும் ஒருபோதும் அறியமாட்டான். குரோதனுக்கு தகாத காரியமென்று ஏதுமில்லை; தகாத சொல்லென்றும் ஒன்றுமில்லை.(5)
முதிர்ந்த தோலை உரிக்கும் உரகத்தை {பாம்பைப்} போல, திடீரென எழும் குரோதத்தைப் பொறுமையால் கைவிடுபவன் எவனோ, அவனே புருஷன் என்று அழைக்கப்படுகிறான்.(6) அந்த சீதையைக் குறித்துச் சிந்திக்காமல், துர்ப்புத்தியுடனும், லஜ்ஜையில்லாமலும் {வெட்கமில்லாமலும்} அக்னியை மூட்டி, ஸ்வாமிக்கு {தலைவர் ராமருக்குத்} தீங்கிழைத்த பாபிகளில் முதன்மையானவனான எனக்கு ஐயோ.(7) இந்த லங்கை எரிக்கப்பட்டால், ஆரியையான ஜானகியும் {சீதையும்} நிச்சயம் எரிந்துவிடுவாள் என்பதை அறியாதவனான என்னால், தலைவரின் {ராமரின்} காரியம் பாழானது.(8) எந்த அர்த்தத்திற்காக அந்தக் காரியம் இப்படி ஆரம்பமானதோ, அது பாழானது. இலங்கையை எரித்த நான், சீதையைக் காத்தேனில்லை.(9) {சீதை இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து, ராமரிடம் தெரிவிக்கும்படியான} இந்தக் காரியம், {சீதையைக் கண்டுபிடித்தும் அவளைக் காக்க முடியாமல்} அற்ப காரியமாக முடிந்துவிட்டது. குரோதத்தில் மூழ்கிய நான், அதன் மூலத்தை {அந்தக் காரியத்தின் வேரை} அழித்துவிட்டேன். இதில் ஐயமில்லை.(10)
இலங்கையில் எரியாத தேசம் {இடம்} ஏதும் காணப்படவில்லை. சர்வ புரீயும் பஸ்மமாக்கப்பட்டது {சாம்பலாக்கப்பட்டது}. ஜானகி {ஜனகனின் மகளான சீதை} நிச்சயம் அழிந்திருப்பாள்.(11) என்னுடைய பிரஜ்ஞையின்மையால் {விவேகமின்மையால்} அந்தக் காரியம் பாழாகியிருந்தால், இங்கேயே, இப்போதே {என்} பிராணனைக் கைவிடுவதே எனக்கு மகிழ்ச்சியைத் தரும்.(12) இப்போது அக்னியில் விழட்டுமா? அல்லது, வடவாமுகத்திலா?[1] {வடவாமுக அக்னியில் குதிக்கட்டுமா}? அஹோ, சாகரத்தில் வசிக்கும் சத்வங்களுக்கு {உயிரினங்களுக்கு என்} சரீரத்தைக் கொடுக்கட்டுமா?(13) நான் ஜீவிக்கும்போதே, சர்வ காரியத்தையும் பாழாக்கிவிட்டு, ஹரீஷ்வரரையோ {சுக்ரீவரையோ}, புருஷசார்தூலர்களான அவ்விருவரையோ {மனிதர்களில் புலிகளான ராமலக்ஷ்மணர்கள் இருவரையோ} எப்படி பார்ப்பேன்?(14) நிலையின்மைக்காக மூவுலகங்களிலும் பிரசித்தி பெற்ற இந்தக் கபித்வம் {குரங்குத்தனம்}, கோபத்தால் உண்டான தோஷத்தில் இதோ வெளிப்பட்டது.(15)
[1] பிபேக்திப்ராய் {விவேக் தேவ்ராய்} பதிப்பில், "வடவாமுகம் என்பது, பெருங்கடலில் உள்ள பாதாள நெருப்பாகும்" என்றிருக்கிறது. வடவாமுகம், படபாமுகம் என்பன குறித்து மஹாபாரதம், ஹரிவம்சம் ஆகியவற்றில் விரிவாகக் காண முடியும்.
கட்டற்றதும், நிலையற்றதுமான ராஜச பாவத்திற்கு ஐயோ[2]. பாதுகாக்கவல்லவனாக இருந்தும், சினத்தின் வசப்பட்ட நான், சீதையைக் காக்காமல் போனேன்.(16) சீதை அழிந்தால், அவ்விருவரும் {ராமலக்ஷ்மணர்கள் இருவரும்} அழிவார்கள். அவர்கள் அழிந்தால், சுக்ரீவரும், அவரது பந்துக்களும் {உற்றார் உறவினரும்} அழிந்து போவார்கள்.(17) பர்த்தாவின் {தலைவர் ராமரின்} மீது அன்பு கொண்டவரும், தர்மாத்மாவும், சத்ருக்னருடன் கூடியவருமான பரதரால் இந்தச் சொற்களைக் கேட்டு, எப்படி ஜீவித்திருக்க இயலும்?(18) தர்மிஷ்டர்களான இக்ஷ்வாகு வம்சத்தினர் நாசமடைந்தால், சர்வ பிரஜைகளும் {குடிமக்களும்} சோகசந்தாபத்தால் பீடிக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.(19) எனவே, பாக்கியமற்றவனும், தர்ம, அர்த்தங்களின் பெருமையை இழந்தவனும், கோபத்தில் உண்டான தோஷத்தால் மனம் நிறைந்தவனுமான நான், உலகத்தை அழிப்பவன் ஆகிவிட்டேன் என்பது தெளிவாகிறது" {என்று நினைத்தான் ஹனுமான்}.(20)
[2] பிபேக்திப்ராய் {விவேக் தேவ்ராய்} பதிப்பில், "சத்வம் (நல்லியல்பு), ராஜஸம் (ஆசை, சக்தி), தாமஸம் (செயலின்மை, இருள்) ஆகியவை முக்குணங்களாலும்" என்றிருக்கிறது.
இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே, பூர்வத்தில் கண்ட நிமித்தங்கள் மீண்டும் தெளிவாகத் தோன்றுவதைக் கண்டவன் {ஹனுமான், மீண்டும் பின்வருமாறு} சிந்தித்தான்:(21) "அல்லது, சாருசர்வாங்கியும் {அனைத்து அங்கங்களிலும் அழகில் மிளிர்பவளும்}, சொந்த தேஜஸ்ஸால் ரக்ஷிக்கப்படுபவளுமான கல்யாணி {தன் மகிமையால் காக்கப்படுபவளும், மங்கலமானவளுமான சீதை} நசிவடைந்திருக்க மாட்டாள். அக்னியில், அக்னி எரிவதில்லை.(22) அமிர்ததேஜஸ்வியும் {அளவில்லா மகத்துவம் கொண்டவளும்}, தன் நடத்தையால் {ஒழுக்கத்தால்} பாதுகாக்கப்படுபவளும், அந்த தர்மாத்மாவின் {ராமரின்} பாரியையுமான அவளைப் பாவகனால் {அக்னியால்} தீண்டவே முடியாது.(23) தஹனகர்மனான அத்தகைய இந்த ஹவ்யவாஹனன் {எரிப்பதையே தன் தொழிலாகக் கொண்டவனும், வேள்வியில் அர்ப்பணிக்கப்படும் ஹவிஸ்ஸை அதனதனுக்குரிய தெய்வங்களுக்குச் சுமந்து செல்பவனுமான அக்னி}, நிச்சயம் ராமரின் பிரபாவத்தாலும் {மேன்மையினாலும்}, வைதேஹியின் ஸுக்ருதத்தாலுமே {நற்செயல்களாலுமே} என்னை எரிக்காமல் இருக்கிறான்.(24) உடன்பிறந்தவர்களில் பரதர் முதலான மூவருக்கு {பரதர், லக்ஷ்மணர், சத்ருக்னர் ஆகியோருக்கு} தேவதையும், ராமரின் மனத்தைக் கவர்ந்தவளும் எவளோ, அவள் {அந்த சீதை} எப்படி நசிந்து போவாள்?(25) அல்லாமலும், எங்கும் பரவியிருப்பவனும், அழிவில்லாதவனுமான இந்த தஹனகர்மன் {எரிப்பதையே தொழிலாகக் கொண்ட அக்னி தேவன்}, என் லாங்கூலத்தை {வாலை} எரிக்கவில்லையே! {அத்தகையவன்} ஆரியையை {உன்னதமான சீதையை} எப்படி எரிப்பான்?" {என்று நினைத்தான் ஹனுமான்}.(26)
அப்போது ஹனுமான், ஜலமத்தியில், தான் வியப்புடன் கண்ட ஹிரண்யநாப கிரியை {மைனாக மலையைக்} குறித்து மீண்டும் சிந்தித்தான்[3].(27) "அவள் {சீதை}, தன் தபஸ்ஸினாலும், சத்தியவாக்கினாலும், பர்த்தாவிடம் கொண்ட அனன்யத்வத்தாலும் {கணவனைத் தவிர வேறொன்றையும் நினைக்காமல், அவனாகவே மாறிவிட்ட தன்மையினாலும்} அக்னியையே எரித்துவிடுவாள். அக்னி அவளை எரிக்கமாட்டான்" {என்று நினைத்தான் ஹனுமான்}.(28)
[3] நரசிம்மாசாரியர் பதிப்பில், "ஹனுமான் அவ்விஷயத்தில் ஆச்சர்யம் அடைந்து, மீளவும் அப்பொழுது ஸமுத்ரஜலமத்யத்தில் தனக்கு மைனாகபர்வதம் தோற்றினதை நினைத்தனன்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தர் பதிப்பில், "அப்போது ஹனுமான், நீருக்கடியில் தங்கமலை தென்பட்டதை ஆச்சரியத்துடன் நினைத்துப் பார்த்தான்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "சீதையின் நிமித்தம், மைனாக மலையைத் தான் கண்ட நிகழ்வை நினைவுகூர்ந்த ஹனுமான், {அவ்வாறு நினைத்ததன் மூலம்} சீதையின் மீமானிட சக்தியைக் குறித்துத் தன் மனத்தில் இருத்திக் கொண்டான்" என்றிருக்கிறது. ஹனுமான் மைனாக மலையைச் சந்தித்த நிகழ்வு, சுந்தரகாண்டம் முதல் சர்க்கத்தில் 91 முதல் 136ம் சுலோகம் வரை சொல்லப்பட்டிருக்கிறது.
தேவியின் தர்ம பரிக்ரஹத்தை {சீதை செய்த மிகையான தர்மத்தைக்} குறித்து, இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்த ஹனுமான், மஹாத்மாக்களான சாரணர்களின் {பின்வரும்} வாக்கியத்தைக் கேட்டான்:(29) "அஹோ, ராக்ஷச வேஷ்மங்களில் {ராக்ஷசர்களின் வீடுகளில்} மிகப் பயங்கரமான அக்னியை வீசி, ஹனூமதன் மிகக் கடினமான கர்மத்தைச் செய்துவிட்டான்.(30) {உயிருக்குப் பயந்து} ஓடும் ராக்ஷசர்களுடன், அவர்களின் ஸ்திரீகள், பாலர்கள், விருத்தர்களால் நிறைந்த ஜனங்களின் கோலாஹல ஒலியானது, மலைக்குகையில் அழுவதைப் போலிருக்கிறது.(31) சாட்டங்கள் {கடைத்தெருக்கள்}, பிராகாரங்கள் {மதில்களுடன் கூடிய கோட்டைகள்}, தோரணங்களுடன் {நுழைவாயில்களுடன்} கூடிய இந்த சர்வ நகரமும் எரிக்கப்பட்டது. ஜானகி எரிக்கப்படவில்லை. இந்த அற்புதம் எங்களுக்கு வியப்பளிக்கிறது" {என்றனர் சாரணர்கள்}[4].(32)
[4] விட்டு உயர் விஞ்சையர் வெந்தீவட்ட முலைத் திருவைகும்புள்திரள் சோலை புறத்தும்சுட்டிலது என்பது சொன்னார்- கம்பராமாயணம், 6003ம் பாடல், சுந்தர காண்டம், இலங்கை எரியூட்டு படலம்பொருள்: அவ்விடம் விட்டு மேலே சென்ற வித்யாதரர்கள், "{ஹனுமான் வாலில் வைத்த} கொடிய நெருப்பானது, வட்டமான முலைகளையுடைய திருமகள் {சீதை} இருப்பதும், பறவைக்கூட்டங்கள் திரள்வதுமான சோலையின் வெளிப்புறத்தைக் கூடச் சுடவில்லை" என்று சொன்னார்கள்.
அந்த ஹனுமான், பயன்களுடனும், மஹாகுணங்களுடனும் கூடிய நிமித்தங்களாலும், அவற்றின் காரணங்களாலும், ரிஷி வாக்கியத்தாலும் {சாரணர்கள் சொன்ன வார்த்தைகளாலும் சீதைக்குக் கெடுதி உண்டாகவில்லை என்று நினைத்து} மனத்தில் பிரீதியடைந்தான்.(33) மனோரதம் {விருப்பம்} நிறைவேறியவனும், அந்த ராஜஸுதை {ராஜகுமாரியான சீதை} தீங்கற்றிருப்பதை அறிந்தவனுமான கபி {குரங்கான ஹனுமான்}, மீண்டும் பிரத்யக்ஷமாக அவளை {நேரடியாக சீதையைக்} கண்டுவிட்டுத் திரும்பிச் செல்ல தன் மதியை அமைத்துக் கொண்டான்.(34)
சுந்தர காண்டம் சர்க்கம் – 55ல் உள்ள சுலோகங்கள்: 34
Previous | | Sanskrit | | English | | Next |