Friday 8 March 2024

பெருவடிவம் | சுந்தர காண்டம் சர்க்கம் - 37 (66)

Large form | Sundara-Kanda-Sarga-37 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சீதையைப் பின்னே ஏற்றிக் கொண்டு இராமரிடம் செல்வதாகச் சொன்ன ஹனுமான்; சீதையின் சந்தேகம்; பெரும் வடிவை ஏற்ற ஹனுமான்; தன் கணவனை லங்கைக்கு அழைத்து வரும்படி சீதை வேண்டியது...

Hanuman assumes a gigantic form before Seetha

பூர்ணச்சந்திரனுக்கு ஒப்பான முகத்துடன் கூடிய அந்த சீதை, ஹனுமந்தன் சொன்னதைக் கேட்டு, தர்ம, அர்த்த சகிதமான இந்த சொற்களை ஹனுமந்தனிடம் சொன்னாள்:(1) “வானரா, ‘ராமர் வேறு எதையும் மனத்தில் கொள்ளாமல் இருக்கிறார்’ என்றும், ‘சோகத்தில் முழுமையாக மூழ்கியிருக்கிறார்’ என்றும் அம்ருதமும், விஷமும் கலந்து பேசுகிறாய்.(2) கிருதாந்தமானது {வினைப்பயனானது / விதியானது}, மிக விஸ்தீரணமான ஐஷ்வர்யத்திற்கோ, அதிபயங்கர விசனத்திற்கோ உள்ளே ஒரு புருஷனை {மனிதனைக்} கயிறு போல் கட்டி இழுக்கிறது.(3) பிலவகோத்தமா {தாவிச் செல்பவர்களில் உத்தமனே}, பிராணிகளால் விதியை நிச்சயம் தவிர்க்கமுடியாது. சௌமித்ரியும் {லக்ஷ்மணரும்}, நானும், ராமரும் விசனத்தால் கலங்கிப்போயிருப்பதைப் பார்.(4) 

சாகரத்தில் அடியுண்டு {முறிந்த ஓடத்தில் இருந்து} நீந்தி இளைப்புற்றவரைப் போல, ராகவர் இந்த சோகத்தின் மறுகரையை எப்போது அடையப்போகிறார்?(5) என் பதி {கணவரான ராமர்}, ராக்ஷசர்களை வதம் செய்து, ராவணனையும் கொன்று, லங்கையை நிர்மூலம் செய்த பிறகு, என்னை எப்போது காணப்போகிறார்?(6) இந்த ஒருவருட காலம் பூர்ணமடையாதிருப்பது எதுவரையோ, அதுவரையே  என் ஜீவிதம் நிலைக்கும் என்பதால், விரைந்து வர வேண்டுமென்று அவரிடம் சொல்வாயாக.(7) பிலவங்கமா {தாவிச் செல்பவனே},  கொடூரனான ராவணன் எனக்கு கொடுத்திருக்கும் சமயம் {கெடு} எதுவோ அதில் பத்தாம் மாசம் நடந்து வருகிறது. எஞ்சியிருப்பது இரண்டே {இரு மாதங்களே}.(8) 

பிராதாவான {ராவணனுடன் பிறந்தவனான} விபீஷணன், என்னைத் திருப்பிக் கொடுப்பது குறித்து பிரயத்னத்துடன் வற்புறுத்தியும், அந்த புத்தி அவனுக்கு உண்டாகவில்லை {அந்த புத்திமதியை அவன் ஏற்றுக் கொள்ளவில்லை}.(9) என்னைத் திருப்பிக் கொடுப்பது ராவணனுக்கு ஏற்புடையதாக இல்லை. காலவசமடைந்த ராவணனைப் போரில் மிருத்யு {யமதேவன்} தேடிக்கொண்டிருக்கிறான்.(10) கபியே {குரங்கே}, விபீஷணனின் மகள்களில் மூத்த கன்னிகையும், தன் மாதாவால் சுயமாக அனுப்பப்பட்டவளுமான அனலையே இதை என்னிடம் சொன்னாள்[1].(11) ஹரிசிரேஷ்டா, என் பதி சீக்கிரமே என்னை அடைவார் என்பதில் சந்தேகமில்லை. பல குணங்களுடன் {நற்குணங்களுடன்} கூடிய என்னுடைய அந்தராத்மாவும், அவருடையதும் {அவருடைய அந்தராத்மாவும்} தூய்மையானவை.(12)

[1] செம்பதிப்பான பிபேக்திப்ராய் பதிப்பில் இதன் பின்னே ஓர் அதிகசுலோகம் வருகிறது, அதன் பொருள் பின்வருமாறு: “இராக்ஷசர்களில் காளையும், அவிந்தியன் என்ற பெயரைக் கொண்டவனும், நுண்ணறிவுமிக்கவனுமான ஒருவன் இருக்கிறான். அவன் பொறுமையுள்ளவனாகவும், நல்லொழுக்கமுடையவனாகவும், ராவணனால் அதிகம் மதிக்கப்படுபவனாகவும், முதியவனாகவும் இருக்கிறான். இராமரிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காக, அவனும் இதுகுறித்து ராக்ஷசனிடம் {ராவணனிடம்} வேண்டினான். ஆனால் அந்த துராத்மா {ராவணன்}, அவனது {அவிந்தியனின்} நல்வார்த்தைகளைக் கேட்டானில்லை” என்றிருக்கிறது. அந்த அதிகசுலோகத்தின் அடிக்குறிப்பில், “அனலை மற்றும் அவிந்தியன் ஆகியோரைக் குறித்த செய்திகள் இங்கே பொருத்தமானவையாகத் தெரியவில்லை {இவை இடைச்செருகலாக இருக்க வேண்டும்}” என்றிருக்கிறது.

வானரா, உற்சாகம், பௌருஷம் {ஆண்மை}, சத்வம் {வலிமை}, கொடூரமின்மை {கருணை}, கிருதஜ்ஞதம் {செய்நன்றி மறவாமை}, விக்ரமம் {வீரம்}, பிரபாவம் {செல்வாக்கு / சக்தி} ஆகியவை ராகவரிடம் உள்ளன.(13) பிராதா {உடன் பிறந்த லக்ஷ்மணர்} இல்லாமலேயே ஜனஸ்தானத்தில் பதினான்காயிரம் ராக்ஷசர்களைக் கொன்றவர் எவரோ, அவருக்கு நடுங்காத சத்ரு {பகைவன்} எவன் இருப்பான்?(14) புருஷரிஷபரான அவரை விசனங்களால் அசைத்துவிடமுடியாது. புலோமஜை சக்ரனை {இந்திராணியான சசிதேவி இந்திரனை அறிந்ததைப்} போல, நான் அவரது பிரபாவத்தை அறிந்திருக்கிறேன்.(15) கபியே, சூரரான ராமதிவாகரர் {ராமன் எனும் சூரியன்}, கதிர்கள் போன்ற தன் சரஜாலங்களால் {கணைத்தொகுதியால்} சத்ருக்களான ராக்ஷசர்கள் எனும் நீரை வற்றச் செய்திடுவார்” {என்றாள் சீதை}.(16)

கண்ணீர் நிறைந்த நயனங்களுடன் {கண்களுடன்}, இவ்வாறு பேசிக் கொண்டே, ராமனுக்கான சோகத்தில் சோர்வடைந்தவளிடம் {அந்த சீதையிடம்}, கபியானவன் {குரங்கான ஹனுமான் பின்வரும்} வசனத்தைச் சொன்னான்:(17) “என் சொற்களைக் கேட்ட உடனேயே, ஹரி, ரிக்ஷ கணங்கள் {குரங்குக்கூட்டமும், கரடிக்கூட்டமும்} நிறைந்த மஹத்தான சம்முவை {படையைத்} திரட்டிக் கொண்டு, சீக்கிரமே ராகவர் வந்துவிடுவார்.(18) அல்லது, அழகிய முகம் கொண்டவளே, இப்போது இந்த துக்கத்தில் இருந்து உன்னை நான் விடுவிக்கிறேன். அநிந்திதே {நிந்திக்கத்தகாதவளே}, என் பிருஷ்டத்தில் {பின்புறம்} ஏறிக் கொள்வாயாக.(19) நான், உன்னைப் பிருஷ்டத்தில் ஏற்றிக் கொண்டு சாகரத்தைக் கடப்பேன். உண்மையில் லங்கையுடன் சேர்த்து ராவணனையும் சுமக்கும் சக்தி எனக்குண்டு.(20) மைதிலி, அனலன் {அக்னி}, ஹோமம் செய்யப்பட்ட ஹவிஸ்ஸை சக்ரனிடம் {இந்திரனிடம் கொடுப்பதைப்} போலவே, பிரஸ்ரவணத்தில் {பிரஸ்ரவண மலையில்} உள்ள ராகவரிடம் இப்போதே {இன்றே} உன்னை நான் சேர்ப்பேன்.(21) 

வைதேஹி, தைத்தியர்களை வதம் செய்யும் {கொல்ல ஆயத்தமாகும்} விஷ்ணுவைப் போல, வியவசாயத்திற்கு {பெரும் முயற்சிக்கு} ஆயத்தமாகும் ராகவரையும், உடனிருக்கும் லக்ஷ்மணரையும் இப்போதே {இன்றே} நீ பார்ப்பாய்.(22) நாகராஜனின் மூர்த்தத்தில் {யானையரசான ஐராவதத்தின் முதுகில்} அமர்ந்திருக்கும் புரந்தரனை {பகை நகரங்களை அழிக்கும் இந்திரனைப்} போல அந்த மஹாபலவான் {ராமர்}, உன்னைக் காணும் ஆவலுடன் ஆசிரமத்தில் இருக்கிறார்.(23) சோபனையே, தேவி, சசாங்கனிடம் {சந்திரனிடம் செல்லும்} ரோஹிணியைப் போல, ராமரைச் சேரும் விருப்பத்துடன் தயக்கமில்லாமல் என் பிருஷ்டத்தில் ஏறுவாயாக.(24) என் பிருஷ்டத்தில் ஏறி, சந்திரனுடனும், பேரொளி கொண்ட சூரியனுடனும் பேசுவதைப்போல ஆகாசத்தையும், மஹார்ணவத்தையும் {பெருங்கடலையும்} கடப்பாயாக.(25) ஆங்கனே {மங்கையே}, இங்கிருந்து உன்னை அழைத்துக்கொண்டு, விரைந்து செல்லும் என் கதியைப் பின்தொடர்வதற்கு, சர்வலங்காவாசிகளும் {லங்கையில் வசிக்கும் எவரும்} சக்தர்களல்லர்.(26) வைதேஹி, நான் இங்கே எப்படி வந்து சேர்ந்தேனோ, அப்படியே உன்னை ஆகாயமார்க்கமாக கொண்டு செல்லப் போவதைப் பார். இதில் சந்தேகம் வேண்டாம்” {என்றான் ஹனுமான்}.(27)

ஹரிசிரேஷ்டனிடம் {குரங்குகளில் சிறந்தவனிடம்} இருந்து வந்த அற்புதமான வசனத்தைக் கேட்டு, சர்வ அங்கங்களிலும் மகிழ்ச்சி பொங்கியவளான மைதிலி, ஹனுமந்தனிடம் {பின்வருமாறு} கூறினாள்:(28) “ஹனுமானே, நீ எப்படி வெகுதூரம் என்னைச் சுமந்து செல்ல விரும்புகிறாய்? ஹரியூதபா {குரங்குக் குழுத் தலைவா}, அதுவே உன் கபித்வம் {குரங்குத்தனம்} என்று உண்மையில் நினைக்கிறேன்.(29) பிலவகரிஷபா {தாவிச் செல்பவர்களில் காளையே}, அற்ப சரீரத்துடன் கூடிய நீ எப்படி இங்கிருந்து, மானவேந்திரரான என் பர்த்தாவின் {மனிதர்களின் தலைவரான என் கணவர் ராமரின்} முன்னிலைக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறாய்?” {என்று கேட்டாள்}.(30)

மாருதாத்மஜனும், லக்ஷ்மீவானுமான ஹனுமான், சீதையின் வசனத்தைக் கேட்டு, நவபரிபவத்தைக் குறித்து {புதிய அவமதிப்பைக் குறித்துப் பின்வருமாறு} சிந்தித்தான்:(31) “அசிதேக்ஷணை {இந்தக் கருவிழியாள்} என் சத்வத்தையோ {வலிமையையோ}, பிரபாவத்தையோ அறிந்தாளில்லை; எனவே, நான் எந்த ரூபத்தைத் தரிக்க விரும்புகிறேனோ, அதை வைதேஹி பார்க்கட்டும்” {என்று ஹனுமான் நினைத்தான்}.(32) அரிந்தமனும் {பகைவரை அழிப்பவனும்}, பிலவகசத்தமனுமான {தாவிச் செல்பவர்களில் சிறந்தவனுமான} ஹனுமான், இவ்வாறு நினைத்த பிறகு, தன் ஸ்வரூபத்தைக் காட்டினான்.(33) பிறகு, மதிமிக்கவனும், பிலவகரிஷபனுமான அவன், அந்த மரத்தில் இருந்து கீழே குதித்து {அப்புறஞ்சென்று}[2], சீதைக்கு நம்பிக்கையளிக்கும் காரணத்திற்காக வளர {பெரும் வடிவமெடுக்க} ஆரம்பித்தான்.(34) மேருவுக்கும், மந்தரத்திற்கும் ஒப்பாகப் புலப்பப்பட்ட வானரோத்தமன் {வானரர்களில் சிறந்த ஹனுமான்}, ஜொலிக்கும் அக்னியைப் போல ஒளிர்ந்தபடியே சீதையின் முன்பு நின்றான்.(35)

[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், “இங்கு வளரும்பொருட்டு மரத்தினின்று கீழ் இழிந்ததாகத் தெரியவருகின்றது. இதைப்பற்றி முன்பு மரத்தினின்று இறங்கினானென்றால் - மரத்தின் நுனியிலிருந்து ஸீதையின் ஸமீபத்திலுள்ள கிளைக்கு இறங்கினானென்று தெரிகின்றது. இங்ஙனம் கோவிந்தராஜர். மரத்தின் கீழிருப்பவன் அங்கேயே வளரத் தொடங்கினால், அவ்வேகத்தில் மரத்தின் கிளைகள் முறிந்து ஸங்கதி ராக்ஷஸர்களுக்குத் தெரியவருமென்று நினைத்து, மரத்தடியினின்று அப்புறஞ் சென்று வளர்ந்தா னென்றுணர்க. இங்ஙனம் மஹேஷ்வர தீர்த்தர். இப்பக்ஷத்தில் -  “ஸ தஸ்மாத் பாத³பாத் தீ⁴மான் ஆப்லுத்ய” என்னும் மூலத்திற்கு - அம்மரத்தடியினின்று அப்புறஞ் சென்று - என்று பொருள் கொள்ள வேண்டும்” என்றிருக்கிறது. மரத்திலிருந்தவரை இயல்புக்கும் சிறிய வடிவில் இருந்த ஹனுமான், கீழே குதித்தவுடன் சொந்த வடிவத்தை அடைந்து, அதன்பிறகு தன்னைப் பெருக்கிக் கொண்டு, சீதையின் முன்னிலையில் பெரும் வடிவத்தை எடுத்ததையே இந்த சுலோகம் உணர்த்துகிறது.

Hanuman assumes a gigantic form before Seetha

பர்வதத்திற்கு ஒப்பான ஹரியும் {குரங்கும்}, சிவந்த முகத்தையும், வஜ்ரம் போன்ற பற்களையும், கண்களையும் கொண்டவனுமான அந்த மஹாபலவான் {ஹனுமான்}, சீதையிடம் இதைக் கூறினான்:(36) “பர்வத, வன, தேசங்களுடனும், மாளிகைகள், பிராகாரங்கள் {மதில்கள்}, தோரணங்களுடனும் {கோபுரங்களுடனும்} கூடிய இந்த லங்கையுடன் சேர்த்து, இதன் நாதனையும் {ராவணனையும்} எடுத்துச் செல்லும் சக்தி என்னிடம் உள்ளது.(37) எனவே, தேவி, சந்தேகமடைந்தது போதும்; புத்தியை நிலைநிறுத்திக் கொள்வாயாக. வைதேஹி, ராகவரையும், லக்ஷ்மணரையும் சோகம் விலகியவர்களாகச் செய்வாயாக” {என்றான் ஹனுமான்}.(38)

பத்மபத்ர விசாலாக்ஷியான ஜனகாத்மஜை {தாமரை இதழ்களுக்கு ஒப்பான நீண்ட விழிகளைக் கொண்டவளும், ஜனகனின் மகளுமான சீதை}, பயங்கரத் தோற்றமுடையவனும், மாருதனின் ஔரஸஸுதனுமான {வாயுதேவனின் அம்சமாகப் பிறந்தவனுமான} அவனைப் பார்த்துக் கொண்டே {பின்வருமாறு} சொன்னாள்[3]:(39) “மஹாகபியே {பெருங்குரங்கே}, உன் சத்வத்தையும் {வலிமையையும்}, பலத்தையும், வாயு போன்ற கதியையும், அக்னியைப் போன்ற அற்புத தேஜஸ்ஸையும் நான் அறிவேன்.(40) வானரபுங்கவா, அடியற்ற உததியின் {பெருங்கடலின்} கரையில் உள்ள இந்த பூமிக்கு பிராக்ருத அந்நியனால் {சாதாரணமான வேறு ஒருவனால்} எப்படி வரமுடியும்?(41) என்னைக் கொண்டு செல்லும் உன் சக்தியை நான் தெரிந்து கொண்டேன். மஹாத்மாவின் காரியசித்தியைக் குறித்து {ராமரின் காரியம் தடைபடாமல் நிறைவேறுவதை} உடனே கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.(42) 

[3] வஞ்சி அம்மருங்குல் அம்மறு இல் கற்பினாள்
கஞ்சமும் புரைவனகழலும் கண்டிலாள்
துஞ்சினர் அரக்கர் என்று உவக்கும் சூழ்ச்சியாள்
அஞ்சினென் இவ்வுரு அடக்குவாய் என்றாள்.

- கம்பராமாயணம் 5333ம் பாடல், உருக்காட்டுப்படலம்

பொருள்: வஞ்சிக்கொடி போன்ற இடையையும், குற்றமற்ற கற்பையும் கொண்ட அவள் {சீதை}, தாமரைக்கு ஒப்பான அவனது {ஹனுமானின்} கால்களையும் கண்டாளில்லை. “அரக்கர்கள் மடிந்தனர்” என்று மகிழ்ச்சியடையும் எண்ணகொண்ட அவள், “இந்த உருவத்தைக் கண்டு அஞ்சுகிறேன். அடக்கிக் கொள்வாயாக” என்றாள்.

அனகா {குற்றமற்றவனே}, கபிசிரேஷ்டா {குரங்குகளில் சிறந்தவனே}, உன்னுடன் வருவது எனக்கு யுக்தமல்ல {முறையல்ல}. வாயுவேகத்திற்கு ஒப்பான உன் வேகம் என்னை மயக்கங்கொள்ளச் செய்யும்.(43) சாகரத்திற்கு மேலே உயர்ந்து, ஆகாசத்தை அடைந்ததும், வேகமாகச் செல்லும் உன்னுடைய பிருஷ்டத்தில் இருந்து நான் பயத்திலேயே விழுந்துவிடுவேன்.(44) திமிங்கலங்களும், முதலைகளும், பெரும் மீன்களும் நிறைந்த சாகரத்திற்குள் வசமில்லாமல் விழும் நான், விரைவில் அந்த நீர்வாழ் உயிரினங்களுக்கான உத்தம அன்னமாகிவிடுவேன் {சிறந்த உணவாகி விடுவேன்}.(45) சத்ருவிநாசனா, உன்னுடன் வருவதற்கான சக்தி எனக்கில்லை. காக்க வேண்டிய பொருளுடன் செல்லும் உனக்கு {ஆபத்து நேரக்கூடும் என்ற} சந்தேகத்திற்குரிய நிலையுண்டாகும்.(46) 

நான் கொண்டுபோகப்படுவதைக் காணும் பீமவிக்கிரம ராக்ஷசர்கள், துராத்மாவான ராவணனுடைய ஆணையின்பேரில் பின்தொடர்வார்கள்.(47) வீரா, சூலங்களையும், முத்கரங்களையும் கையில் ஏந்திய அந்த சூரர்களால் நீ சூழப்படுவாய். காக்கப்பட வேண்டிய பொருளோடு கூடிய உனக்கு என்னால் {ஆபத்து நேரக்கூடும் என்ற} சந்தேகத்திற்குரிய நிலையுண்டாகும்.(48) ஆயுதங்களுடன் கூடிய பல ராக்ஷசர்கள் வானில் இருப்பார்கள். நிராயுதபாணியான உனக்கு, என்னை ரக்ஷித்துக் கொண்டே செல்வது எப்படி சாத்தியம்?(49) கபிசத்தமா, குரூர கர்மங்களைச் செய்பவர்களான அந்த ராக்ஷசர்களுடன் நீ யுத்தம் செய்கையில், பயத்தால் உன் பிருஷ்டத்தில் இருந்து நிச்சயம் நான் விழுந்துவிடுவேன்.(50) 

அதன்பிறகு, கபிசத்தமா, பயங்கரமானவர்களும், மஹத்தான உடல் படைத்தவர்களும், பலவான்களுமான ராக்ஷசர்கள் எப்படியாவது போரில் உன்னை ஜயிக்கக்கூடும் {வெல்லக்கூடும்}.(51) அல்லது, நீ {என்னைப்} பாராமல் யுத்தத்தில் ஈடுபடும்போது விழுந்துவிடுவேன். நான் கீழே விழும்போது, பாபராக்ஷசர்கள் என்னை எடுத்துக் கொண்டு செல்வார்கள்.(52) உன்னிடமிருந்து என்னை எடுத்துச் செல்வார்கள், அல்லது என்னைக் கொல்வார்கள். யுத்தத்தில் ஜயமும், அபஜயமும் தெளிவற்றவையாகவே தெரிகின்றன.(53) அல்லது, ஹரிசிரேஷ்டா, ராக்ஷசர்களால் அச்சுறுத்தப்படும்போது, நான் விபத்தை அடையலாம். உன் பிரயத்னம் பயனற்றதாகக்கூடும்.(54) 

சர்வ ராக்ஷசர்களையும் கொல்வதற்குப் போதுமானவனாக நீ இருப்பாயென விரும்பினாலும், ராக்ஷசர்களை நீ கொல்வதால், ராகவரின் புகழ் குறையும்.(55) அல்லது, என்னைக் கொண்டு போகும் ராக்ஷசர்கள், ஹரயர்களோ, ராகவர்களோ {குரங்குகளோ, ராமலக்ஷ்மணர்களோ} அறியாத இடத்தில் {என்னை} மறைத்து வைப்பார்கள்.(56) பிறகு, என் அர்த்தத்திற்காக {எனக்காக} நீ செய்த முயற்சி அர்த்தமற்றதாகப் போகும். உன்னுடன் ராமர் வருவதே மஹா குணம் பொருந்தியது.(57) மஹாபாஹுவே, மஹாத்மாவான ராகவரின் ஜீவிதமும், பிராதாக்களுடையனவும் {உடன்பிறந்தோரின் வாழ்வும்}, உன்னுடையதும் {உன் வாழ்வும்}, ராஜகுலத்தினுடையதும் {ராஜ குலத்தின் வாழ்வும்} என்னைச் சார்ந்தே இருக்கின்றன.(58) 

சோகசந்தாபத்தில் மெலிந்திருப்பவர்களான அவர்கள் {ராமலக்ஷ்மணர்கள்}, சர்வ ரிக்ஷ ஹரிக்கள் {அனைத்துக் கரடி, குரங்குகள்} சகிதராக, நிராசையடைந்து, தங்கள் பிராணன்களைக் காப்பதைக் கைவிடுவார்கள்.(59) வானரா, வானரோத்தமா, பர்த்தாவிடம் {கணவரிடம்} கொள்ளும் பக்தியை மதிப்பவளான நான், ராமரைத் தவிர அந்நியனின் {வேறொருவனின்} உடலை ஸ்பரிசிக்கவும் விரும்பேன்.(60) பலவந்தமாக அபகரிக்கப்பட்டபோது, ராவணனின் உடலை நான் ஸ்பரிசிக்கும்படி ஆனது. நாதனைப் பிரிந்தவளும், ஆதரவற்றவளும், வசமிழந்தவளும், சதீயுமான {கற்புடைய பெண்ணுமான} நான் என்ன செய்ய முடியும்?(61) இராமர், இங்கே பந்துக்களுடன் {உறவினர்களுடன்} கூடிய தசக்ரீவனை {பத்துக் கழுத்துகளையுடைய ராவணனைக்} கொன்று, இங்கிருந்து என்னை அழைத்துச் செல்ல வேண்டும். அதுவே அவருக்குத் தகுந்ததாக இருக்கும்.(62) 

போரில் பகைவரை அழிக்கும் அந்த மஹாத்மாவின் பராக்கிரமத்தை நான் கேட்டுமிருக்கிறேன்; கண்டுமிருக்கிறேன். தேவர்களும், கந்தர்வர்களும், புஜங்கர்களும் {பாம்புகளான நாகர்களும்}, ராக்ஷசர்களும் போரில் ஒருபோதும் ராமருக்கு சமமாக மாட்டார்கள்.(63) சித்திர கார்முகத்துடன் {அழகிய வில்லுடன்} கூடியவரும், மஹாபலம் பொருந்தியவரும், வாசவனுக்கு {இந்திரனுக்குத்} துல்லியமான விக்கிரமத்தைக் கொண்டவரும், அநிலனால் வீசப்படும் ஹுதாசனனை {காற்றால் தூண்டப்படும் அக்னியைப்} போல, லக்ஷ்மணருடன் கூடியவருமான அந்த ராகவரைப் போரில் கண்டும் சகிக்கக்கூடியவன் {தாக்குப்பிடிக்கக்கூடியவன்} எவன்?(64) வானரமுக்கியா, யுகாந்த {யுக முடிவில் தோன்றும்} சூரியனுக்கு ஒப்பானவரும், லக்ஷ்மணருடன் கூடியவரும், போரில் அழிவை உண்டாக்குபவரும், மதங்கொண்ட திசாகஜத்தை {திசைகளைக் குறிக்கும் யானைகளைப்} போல் நிற்பவரும், சூரியக்கதிர்களைப் போன்ற சரங்களைக் கொண்டவருமான ராகவரைப் போரில் சகிப்பவன் {தாக்குப்பிடிக்கக்கூடியவன்} எவன்?(65) ஹரிசிரேஷ்டா, லக்ஷ்மணருடனும், யூதபர்களுடனும் {குழுத்தலைவர்களுடனும்} கூடிய என் பதியை {கணவர் ராமரை} சீக்கிரமே இங்கே அழைத்து வருவாயாக. வானரமுக்கியா, நீண்ட காலமாக ராமரைக் குறித்த சோகத்தில் மெலிந்திருக்கும் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பாயாக” {என்றாள் சீதை}.(66) 

சுந்தர காண்டம் சர்க்கம் – 37ல் உள்ள சுலோகங்கள்: 66


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை