Jewel for head | Sundara-Kanda-Sarga-38 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமன் அறிந்து கொள்ளக்கூடிய நினைவுச்சின்னத்தைத் தருமாறு சீதையிடம் கேட்ட ஹனுமான்; காகாசுரன் கதையைச் சொல்லிவிட்டு, சூடாமணியை ஹனுமானிடம் கொடுத்த சீதை...
வாக்கிய விசாரதனான அந்தக் கபிசார்தூலன் {குரங்குகளில் புலியான ஹனுமான்}, அந்த வாக்கியத்தைக் கேட்ட போது மகிழ்ச்சியடைந்து {பின்வருவனவற்றை} சீதையிடம் சொன்னான்:(1) “சுபத்தோற்றம் உடையவளே, தேவி, உன்னால் சொல்லப்பட்டது பொருத்தமானதே. ஸ்திரீ சுபாவத்திற்கும், சாத்விகளின் விநயத்திற்கும் {அடக்கத்திற்கும்} தகுந்ததே.(2) நூறு யோஜனை அகன்ற, விஸ்தீரணமான சாகரத்தை என் மீது ஏறிக் கடப்பது உண்மையில் ஸ்திரீத்வத்திற்கு சமர்த்தமானதல்ல {பெண்தன்மைக்கு சாத்தியமானதல்ல}.(3) ஜானகி, “ராமரைத் தவிர அந்நியனை ஸ்பரிசிக்கமாட்டேன்” என்று எதை இரண்டாம் காரணமாக விநயத்துடன் {அடக்கத்துடன்} சொன்னாயோ,{4} அஃது, அந்த மஹாத்மாவின் {ராமரின்} பத்தினியான உனக்குத் தகுந்ததே. தேவி, உன்னைத்தவிர வேறு எவள் இத்தகைய அம்ருத வசனத்தைப் பேசுவாள்?(4,5)
தேவி, என் முன்னே உன்னால் பேசப்பட்டதும், செய்யப்பட்டதும் எவையோ, அவை அனைத்தையும் காகுத்ஸ்தர் ஒன்றுவிடாமல் கேட்கப் போகிறார்.(6) தேவி, பல்வேறு காரணங்களைக் கொண்டு, ராமருக்குப் பிரியமானதைச் செய்யும் விருப்பத்தாலும், சினேகத்தில் நனைந்த மனத்தாலும் நான் அப்படிச் சொன்னேன்.(7) புகுதற்கரிய லங்கையாலும், கடப்பதற்கரிய மஹோததியாலும் {பெருங்கடலாலும்}, என் சாமர்த்தியத்தாலும் இஃது என்னால் சொல்லப்பட்டது.(8) பந்துவான ரகுவிடம் {உறவினரான ராமரிடம்} இப்போதே உன்னைக் கொண்டு போக விரும்பினேன். குருசினேகத்தாலும், பக்தியாலும் இப்படி பேசினேனேயன்றி வேறு அர்த்தத்திலல்ல.(9) அநிந்திதே {நிந்திக்கத்தகாதவளே}, நீ என்னுடன் வரத் துணியவில்லையெனில், ராகவர் அறிந்து கொள்ளும் வகையில், ஏதேனுமோர் அடையாளத்தைக் கொடுப்பாயாக” {என்றான் ஹனுமான்}.(10)
ஹனுமதன் இவ்வாறு சொன்னதும், ஸுரஸுதைக்கு {தேவர்களின் மகளுக்கு} ஒப்பான சீதை, கண்ணீர் வழிந்தோட மந்தமாக {பின்வரும்} வசனத்தைச் சொன்னாள்:{11} “என் பிரியரிடம் அடையாளமாக சிரேஷ்டமான {சிறந்ததான} இதை நீ சொல்வாயாக.(11,12அ) “சித்திரகூட சைலத்தின் வடகிழக்கில் உள்ள தாழ்வரையில்,{12ஆ} பழங்களும், கிழங்குகளும், உதகமும் {நீரும்} ஏராளமாக கிடைக்கப்பெறும் தாபஸ ஆசிரமத்தில் {நாம்} வசித்திருந்தோம். அந்த சித்த ஆசிரம தேசம் {சித்தர்கள் வசிக்கும் ஆசிரமம் உள்ள அவ்விடம்} மந்தாகினியின் {மந்தாகினி ஆற்றின்} அருகில் அமைந்திருந்தது.{13} நானாவித புஷ்பங்களின் சுகந்தத்துடன் கூடிய அந்த உபவனப் பகுதியில் விளையாடிய நான், சலிலத்தில் {நீரில்} நனைந்தவளாக உமது மடியில் அமர்ந்தேன். இதையொட்டி பரதாக்ரஜரான {பரதனின் அண்ணனான} நீர் என் மடியில் உறங்கினீர்.(12ஆ-14)
அப்போது மாமிசத்தில் விருப்பமுள்ள வாயஸம் {காகம், என்னைத் தன் அலகால்} குத்தியது. நான் ஒரு மண்ணாங்கட்டியை எடுத்து அந்த வாயஸத்தை {காகத்தைத்} தடுத்தேன்.(15) பலியை போஜனமாக {படையல் செய்யப்படுவதை உணவாகக்} கொள்ளும் அந்தக் காகம், மாமிசத்தைக் கைவிடாமல் என்னைக் குத்திக் கிழித்துவிட்டு, உணவுக்கான பசியுடன் அங்கேயே காத்திருந்தது.(16) அந்த பக்ஷியின் மீது குரோதத்துடன் கயிற்றை {அரைநூலை} இழுக்கையில் என் வஸ்திரம் நழுவியது. அப்போது, நான் உம்மால் காணப்பட்டேன்.(17) நீர் சிரித்ததில் வெட்கத்தால் நான் கோபமடைந்தேன். உணவுக்கான பசியுடன் இருந்த காகத்தால் குத்திக்கிழிக்கப்பட்ட நான் உம்மிடம் வந்தேன்.(18) சோர்வடைந்த நான், மீண்டும் உமது மடியில் அமர்ந்தேன். மகிழ்ச்சியால் நிறைந்த நீர், குரோதமடைந்தவளைப் போலிருந்த என்னை ஆறுதல்படுத்தினீர்.(19) நாதரே, வாயஸத்தால் {காகத்தால்} கோபமடைந்து, கண்ணீர் நிறைந்த முகத்தையும், கண்களையும் மந்தமாக {மெதுவாகத்} துடைத்தபோது நான் உம்மால் பார்க்கப்பட்டேன்[1].(20)
[1] சில பதிப்புகளில் சீதை நேரடியாக ராமனிடமே பேசுவதைப் போலும், வேறு பதிப்புகளில் சீதை ஹனுமானிடம் ராமனுக்கும், தனக்கும் இடையில் நடந்த நிகழ்வைச் சொல்வது போலவும் இந்த 17 முதல் 20ம் சுலோகம் வரையுள்ள பகுதி மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 21ம் சுலோகம் முதல் 38ம் சுலோகம் வரை ராமரைக் குறித்து ஹனுமானிடம் சொல்வதாகவே அனைத்துப் பதிப்புகளிலும் தொடர்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், “சீதை சில வேளைகளில் ராமனை நேரடியாகவும், சிலவேளைகளில் மறைமுகமாகவும் குறிப்பிடுகிறாள்” என்றிருக்கிறது.
களைப்பினால் வெகுநேரம் ராகவரின் அங்கத்தில் {மடியில்} உறங்கிவிட்டேன். பதிலுக்கு பரதாக்ரஜர் என் அங்கத்தில் {பரதரின் அண்ணனான ராமர் என் மடியில்} உறங்கினார்.(21) அப்போது, மீண்டும் அந்த வாயஸம் {காகம்} அங்கே வந்தது. இராமரின் மடியில் இருந்த நான், உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டேன்.{22} பிறகு, திடீரென்று வந்த வாயஸம், ஸ்தனாந்தரத்தில் {காகம், மார்புப்பிளவில்} கீறிவிட்டு, மேலும் உயரப்பறந்து மீண்டும் மீண்டும் என்னை அதிகமாகக் குத்திக்கிழித்தது.(22,23) வாயஸத்தால் {காகத்தால்} கடும் வேதனையை அடைந்தபோது, ராமர் மீது சோணிதபிந்துக்கள் {ரத்தத்துளிகள்} தெறித்தன.{24} பிறகு, ஸ்ரீமானும், பரந்தபரும் {பகைவரை அழிப்பவரும்}, சுகமாக உறங்கிக் கொண்டிருந்தவருமான அவர், {அந்தக் காகத்தால் கடுமையாகத் துன்புறுத்தப்பட்ட} என்னால் விழிப்பை அடைந்தார்.(24,25அ)
மஹாபாஹுவான அவர், ஸ்தனங்களில் காயமடைந்த என்னைக் கண்டபோது, குரோதமடைந்த பாம்பைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டே {பின்வரும்} வாக்கியத்தைப் பேசினார்[2]:(25ஆ,26அ) “யானையின் துதிக்கையைப் போன்ற தொடைகளைக் கொண்டவளே, ஸ்தனாந்தரத்தில் காயமேற்படுத்தியது யார்? கோபங்கொண்ட ஐந்து தலை பாம்புடன் விளையாடுவது யார்?” {என்று கேட்டார்}.(26ஆ,27அ)
[2] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், “செம்பதிப்பில் சில சுலோகங்கள் இங்கே விடுபடுவதால் தொடர்ச்சி தடைபடுகிறது. காக்கை சீதையை மார்புகளுக்கிடையில் கொத்தி அவளைக் காயப்படுத்தியிருக்கிறது” என்றிருக்கிறது. இந்த இடத்தைப் பொறுத்தவரையில் செம்பதிப்புக்கும் பிற பதிப்புகளுக்கும் இடையில் பெரிய வேறுபாடு ஏதும் தெரியவில்லை.
சுற்றிலும் பார்வையைச் செலுத்தியபோது, உதிரத்தால் நனைந்த கூரிய நகங்களுடன் என் முன்னே இருக்கும் அந்த வாயஸத்தை {காக்கையைக்} கண்டார்.(27ஆ,28அ) மலைகளில் திரிவதும், சீக்கிர கதியில் பவனனுக்கு சமமானதும் {வேகமாகச் செல்வதில் வாயுவுக்கு நிகரானதும்}, பறவைகளில் சிறந்ததுமான அந்த வாயஸம், சக்ரனின் புத்திரனை {இந்திரனின் மகனைப்} போலத் தெரிந்தது[3].(28ஆ,29அ) பிறகு, மதிமான்களில் சிறந்த அந்த மஹாபாஹு {பெருந்தோள்களைக் கொண்ட ராமர்}, கோபத்தில் கண்கள் சுழல அந்தக் குரூர வாயஸத்தை {காகத்தைக்} குறித்து ஒரு தீர்மானத்திற்கு வந்தார்.(29ஆ,30அ) படுக்கையில் இருந்து ஒரு தர்ப்பையை எடுத்தவர், அதை பிரம்மாஸ்திரமாகப் பயன்படுத்தினார். காலாக்னியைப் போல ஒளிர்ந்த அது {அந்தப் புல்லானது}, அந்தப் பறவையின் முன்னிலையில் சுடர்விட்டு எரிந்தது.(30ஆ,31அ) ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த தர்ப்பையை அந்த வாயஸத்தை {காகத்தை} நோக்கி அவர் வீசினார். அப்போது அந்த தர்ப்பையானது, அம்பரத்தில் அந்த வாயஸத்தை {வானத்தில் அந்தக் காகத்தை} விரட்டிச் சென்றது.(31ஆ,32அ) அப்படி விரட்டப்பட்ட காகம், விதவிதமான கதிகளில் சென்றது. பாதுகாப்பு நாடி இந்த உலகம் முழுவதிலும் திரிந்தது.(32ஆ,33அ) மூவுலகங்களில் திரிந்தும் பிதாவாலும் {இந்திரனாலும்}, மஹாரிஷிகளுடன் கூடிய ஸுரர்களாலும் {தேவர்களாலும்} கைவிடப்பட்ட அஃது {அந்தக் காகம்}, அவரிடம் {ராமரிடமே} சரணாகதியடைந்தது.(33ஆ,34அ)
[3] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், “இங்கு இந்த்ர புத்ரனாகிய ஜயந்தன் வாயஸ உருவந்தரித்து வந்தானென்பர் சிலர். சிலர் இவன் இந்த்ரனுக்கு வேறொரு புதல்வனென்பர். இந்த்ர புத்ரனென்பதை, ராமன் இவனை ரக்ஷித்த பின்பு ஸீதைக்குத் தெரிவிக்கையால் அவளும் இங்கு ஹனுமானுக்குத் தெரிவிக்கிறாளென்றுணர்க” என்றிருக்கிறது.
சரண்யரான அந்தக் காகுத்ஸ்தர் {ராமர்}, வதம் செய்யப்படத்தகுந்ததாக இருப்பினும், சரணாகதியடைந்து, பூமியில் விழுந்த அதை {அந்தக் காகத்தைக்} கிருபையுடன் காத்தார்.(34ஆ,35அ) களைத்துப் போய் விசனத்துடன் வந்த அதனிடம் அவர், “பிரம்மாஸ்திரம் வீண் செய்ய முடியாதது என்பதால் {நான்} செய்ய வேண்டியதைச் சொல்வாயாக” என்றார்.(35ஆ,36அ) அப்போது அஃது {அந்தக் காகம்}, “உமது சரம் என் வலது கண்ணை அழிக்கட்டும்” என்றது.{36ஆ} அப்போது அஃது {அந்த பிரம்மாஸ்திரம்} அந்தக் காகத்தின் வலது கண்ணை அழித்தது. {இவ்வாறு அந்தக் காகம்} வலது கண்ணை தத்தம் செய்து, பிராணன்களைக் காத்துக் கொண்டது.(36ஆ,37) ராமரையும், தசரத ராஜாவையும் நமஸ்கரித்த பிறகு, அந்த வீரரால் விடைகொடுத்து அனுப்பப்பட்டு தன் ஆலயத்தை அஃது {அந்தக் காகம்} அடைந்தது[4].(38)
[4] இனி 39 முதல் 43ம் சுலோகம் வரை, சீதை நேரடியாக ராமரிடம் பேசுவது போல் இருக்கிறது.
மஹீபதியே, எனக்காக வெறும் காகத்தின் மீதே பிரம்மாஸ்திரம் ஏவப்பட்டது. உம்மிடமிருந்து என்னை அபகரித்தவன் எவனோ, அவனை ஏன் பொறுத்துக் கொள்கிறீர்?(39) நரரிஷபரே, அத்தகைய மஹா உற்சாகம் கொண்டவரான நீர், என்னிடம் கிருபை காட்டுவீராக. நாதரே, உம்மாலான நாதவதீ {உம்மை நாதனாகக் கொண்ட நான்}, அநாதையைப் போலத் தெரிகிறேன்.(40) ஆநிருஷம்ஸ்யமே பரம தர்மம் {கொடூரமின்மையை உயர்ந்த அறம்} என்று உம்மிடமே நான் கேட்டிருக்கிறேன். மஹாவீரியமும், மஹா உற்சாகமும், மஹாபலமும் பொருந்தியவர் நீர் என்பதை நான் அறிவேன்.{41} நீர் எல்லையற்ற தன்மை உடையவர்; அடக்கப்படமுடியாதவர்; சாகரத்திற்கு ஒப்பான கம்பீரத்தைக் கொண்டவர்; சமுத்திரங்களுடன் கூடிய தரணியின் தலைவர்; வாசவனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பானவர் {என்பதையும் நான் அறிவேன்}.(41,42)
இராகவரே, இவ்வாறு அஸ்திர வித்தையில் சிறந்தவராகவும், சத்தியவானாகவும், பலவானாகவும் இருந்தாலும், ராக்ஷசர்கள் மீது அஸ்திரங்களை ஏன் பயன்படுத்தாமல் இருக்கிறீர்?[5](43)
[5] இனி 44 முதல் 48ம் சுலோகம் வரை, சீதை ராமலக்ஷ்மணர்களைக் குறித்து ஹனுமானிடம் பேசுவது போல் இருக்கிறது.
சமரில் {போரில்} ராமரின் வேகத்தை எதிர்கொள்ள நாகர்கள் சக்தர்களல்ல; கந்தர்வர்களும் அல்ல; அசுரர்களும் அல்ல; மருத்கணங்களும் அல்ல.(44) அந்த வீரியவானுக்கு என்னைக் குறித்த அவசரம் ஏதும் இருந்தால், கூரிய சரங்களால் ஏன் ராக்ஷசர்களை அழிக்காமல் இருக்கிறார்?(45) பரந்தபரும், மஹாபலவானும், வீரருமான லக்ஷ்மணரும், தன் பிராதாவின் {உடன் பிறந்த ராமரின்} ஆணையை ஏற்று ஏன் என்னைக் காக்காதிருக்கிறார்?(46) புருஷவியாகரர்களான அவ்விருவரும் {ராமலக்ஷ்மணர்கள் இருவரும்}, வாயு, அக்னி ஆகியோரின் சம தேஜஸ் கொண்டவர்களாகவும், தேவர்களாலும் வெல்லப்படமுடியாதவர்களாகவும் இருப்பினும் என்னை ஏன் புறக்கணிக்கிறார்கள்?(47) என்னால் ஏதோ மஹத்தான தவறு செய்யப்பட்டிருக்க வேண்டும். சந்தேகமில்லை. எனவேதான், பரந்தபர்களான அவ்விருவரும், சமர்த்தர்களாக இருந்தும், என்னை பார்க்காமல் இருக்கிறார்கள்” {என்றாள் சீதை}.(48)
அப்போது, மாருதாத்மஜனும் {வாயு மைந்தனும்}, மஹாதேஜஸ்வியுமான ஹனுமான், கருணைக்குரிய வகையில் கண்ணீருடன் வைதேஹியால் பேசப்பட்ட வசனத்தைக் கேட்டு {பின்வருமாறு} கூறினான்:(49) “தேவி, சத்தியத்தின் பேரில் உன்னிடம் சபதம் செய்கிறேன். உன்னால் உண்டான சோகத்தில், ராமர் வெறுப்புற்ற நிலையில் இருக்கிறார். இராமர் துக்கத்தில் மூழ்கியிருக்கையில் லக்ஷ்மணரும் பரிதபித்துக் கொண்டிருக்கிறார்.(50) அநிந்திதே, எப்படியோ உன்னைப் பார்த்துவிட்டேன். இது குறை சொல்வதற்கான காலமில்லை. இந்த முஹூர்த்தத்திலேயே {தருணத்திலேயே} துக்கங்களின் அந்தத்தை {முடிவைக்} காணப் போகிறாய்.(51) புருஷவியாகரர்களும், மஹாபலவான்களுமான அவ்விருவரும் உன்னைக் காண ஆவலுடன் இருக்கிறார்கள். இராஜபுத்திரர்களான அவ்விருவரும் லங்கையை பஸ்மமாக்கிவிடுவார்கள் {எரித்து சாம்பலாக்கிவிடுவார்கள்}.(52) விசாலாக்ஷி, குரூரனான ராவணனை உறவினர்களுடன் சேர்த்துக் கொன்று, ராகவர் தன் சொந்த புரீக்கு {நகரத்திற்கு} உன்னை அழைத்துச் செல்வார்.(53) இராகவரிடமும், மஹாபலம்வாய்ந்த லக்ஷ்மணரிடமும், தேஜஸ்வியான சுக்ரீவரிடமும், ஹரயர்களிடமும் {குரங்குகளிடமும்} நான் என்ன சொல்ல வேண்டும் என்பதைச் சொல்வாயாக” {என்றான் ஹனுமான்}.(54)
அவனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், ஸுரஸுதைக்கு {தேவர்களின் மகளுக்கு} ஒப்பான சீதை, சோகசந்தாபத்துடன், பிலவங்கமனான ஹனுமந்தனிடம் {பின்வருமாறு} சொன்னாள்:(55) “என் அர்த்தத்தில் {என்சார்பாக}, மனஸ்வினியான கௌசல்யை உலகத்தலைவரான எவரைப் பெற்றாளோ, அவரை சிரசால் வணங்கி, {அவரது} சுகத்தைக் கேட்பாயாக.(56) மலர்மாலைகளையும், சர்வ ரத்தினங்களையும், எவர் பிரியத்திற்குரியவரோ அந்த வராங்கணைகளையும் {அழகிய பெண்களையும்}, அடைவதற்கரிய ஐஷ்வர்யத்தையும், விசாலமான பூமியையும்,{57} பிதாவையும், மாதாவையும் மதித்து, வேண்டி விடைபெற்றுக் கொண்டவர் எவரோ, அந்த சுமித்ராஸுப்ரஜரும் {சுமித்திரையின் நன்மகனான லக்ஷ்மணரும்}, நாடு கடந்த {வனவாசத்தில்} ராமரைப் பின்தொடர்ந்தார்.(57,58) உத்தம சுகத்தைக் கைவிட்டு, பிராதாவான காகுத்ஸ்தரைப் பின்தொடர்ந்து, பாதுகாக்கும் அந்த தர்மாத்மா {லக்ஷ்மணர்}, வனத்தில் அவருக்கு {ராமருக்கு} அனுகூலமாக இருக்கிறார்.(59)
சிம்ஹஸ்கந்தரும், மஹாபாஹுவும், மனஸ்வியும், பிரிய தரிசனந்தருபவருமான அவர் {சிங்கம் போன்ற தோள்களையும், வலிமைமிக்க கைகளையும், நிலையான மனத்தையும் கொண்டவரும், காண்பதற்கு இனியவருமான லக்ஷ்மணர்}, பிதாவிடம் போல ராமரிடம் நடந்து கொண்டு, என்னை மாதாவைப் போலப் பார்த்துக் கொண்டார்.(60) நான் கடத்தப்பட்டதை வீரரான லக்ஷ்மணர் அறியமாட்டார். பெரியோரை சேவிப்பவர்; லக்ஷ்மீவான்; சக்தர்; அதிகம் பேசாதவர்;{61} என் மாமனாரையே {தசரதரையே} போன்றவர்; பிரிய, சிரேஷ்ட {பிரியத்திற்குரிய சிறந்த} ராஜபுத்திரர்.(61,62அ) இராமரின் பிராதாவான {ராமருடன் பிறந்தவரான} லக்ஷ்மணர், நித்தியம் என் பிரியத்திற்குரியவர்; எத்தகைய பணியில் நியமிக்கப்பட்டாலும் அவற்றை நிறைவேற்றும் வீரர்.(62ஆ,63அ) எவரைக் கண்டால் ராகவர் முதிர்ந்த ஆரியரையும் {தன் தந்தையான தசரதரையும்} நினைவுகூரமாட்டாரோ அத்தகையவரிடம், என் அர்த்தத்தில் {என் சார்பாக} என் வசனமாக குசலத்தை விசாரிப்பாயாக.(63ஆ,64அ) மிருதுவானவரும், நித்தியம் தூய்மையானவரும், திறமைவாய்ந்தவரும், ராமருக்குப் பிரியருமான லக்ஷ்மணர்,{64ஆ} எப்படி துக்கங்களுக்கான முடிவைக் கொண்டு வருவாரோ, அப்படியே, வானரசிரேஷ்டா, ஹரிசத்தமா, இந்தக் காரியம் நிறைவேறுவதற்கு நீயே பிரமாணம் {பொறுப்பு}.(64ஆ,65)
இராகவர், உன் முயற்சியால் எனக்காக யத்னம் செய்ய வேண்டும். சூரரும், என் நாதருமான ராமரிடம் மீண்டும் மீண்டும் {பின்வரும்} இதைச் சொல்வாயாக:(66) “தசரதாத்மஜரே, ஒரு மாசம் ஜீவிதம் தரித்திருப்பேன். ஒரு மாசத்திற்கு மேல் ஜீவிக்கமாட்டேன் என்பதை நாம் உமக்கு சத்தியமாகச் சொல்கிறேன்.(67) வீரரே, பாபகர்மம் செய்பவனான ராவணனால் சிறைபிடிக்கப்பட்டிருக்கும் என்னை, பாதாளத்திலிருந்து கௌசிகியைப் போலக்[6] காக்கத்தகுந்தவர் நீரே” {என்று ராமரிடம் சொல்வாயாக என்றாள் சீதை}.(68)
[6] நரசிம்மாசாரியர் பதிப்பில், “வீரா, முன்பு இந்த்ரனது லக்ஷ்மி பாதாளம் புகுகையில், ஸ்ரீமஹாவிஷ்ணு தேவதைகளால் ப்ரார்த்திக்கப்பட்டு அதைக் கொண்டு வந்தாற்போல, பாபகர்மாவாகிய ராவணனால் வஞ்சனை செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கிற என்னை விடுவித்து ரக்ஷிக்க வேண்டும் என்று மொழிந்தேனென்றுரைப்பாயாக” என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், “வீர, நீர் (யமுனாநதியில் ஸ்நானம் செய்து கொண்டிருக்கையில் வருணதேவனால் பாதாள லோகத்திற்குத் திருடிக் கொண்டு போகப்பட்டவளும், உசத்தியர் என்பவரது மனையாளுமான) கௌசிகியை பாதாளத்திலிருந்து (உசத்தியர் பாதாள லோகம் சென்று அதைச் சோஷணம் செய்து அவளை மீட்டு வந்தது) எப்படியோ அப்படியே தீத்தொழில் புரியும் அற்பனான ராவணனால் சிறைசெய்யப்பட்டிருக்கின்ற என்னை மீட்க அருள் புரிய வேண்டும்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், “இது இருவழிகளில் பொருள்கொள்ளப்படுகிறது. இந்திரன் விருத்திரனைக் கொன்றபோது, லக்ஷ்மி பூமிக்குள் நுழைந்தாள்; விஷ்ணு அவளைக் காத்து இந்திரனிடம் அளித்தான். இந்திரனுடைய பெயர்களில் கௌசிகன் என்பதும் இருப்பதால், இந்தப் பொருளின்படி கௌசிகி என்பது லக்ஷ்மி {செல்வம்} ஆகும். மற்றொரு வகையில், கௌசிகி என்பவள் உதத்தியரின் மனைவியாவாள். அவளை வருணன் பாதாளத்திற்குக் கொண்டு செல்கிறான். ஆனால் உதத்தியர் அவளைக் காக்கிறார்” என்றிருக்கிறது.
பிறகு, வஸ்திரத்தில் முடிந்திருந்ததும், சுபமானதும், திவ்யமானதுமான சூடாமணியை அவிழ்த்தெடுத்து[7], “இராகவரிடம் கொடுப்பாயாக” என்று சொல்லி ஹனுமனிடம் கொடுத்தாள்.(69) உத்தம மணிரத்தினத்தைப் பெற்றுக் கொண்ட வீரன் {ஹனுமான்}, அது தன் புஜத்திற்குப் பொருந்தாததால், விரலில் போட்டுக் கொண்டான்[8].(70)
[7] சூடையின்மணி கண்மணி ஒப்பது தொல்நாள்ஆடையின்கண் இருந்தது பேர் அடையாளம்நாடி வந்து எனதின் உயிர் நல்கினை நல்லோய்கோடி என்று கொடுத்தனள் மெய்ப்புகழ் கொண்டாள்- கம்பராமாயணம் 5427ம் பாடல், சூடாமணிப்படலம்பொருள்: "சூடாமணி என்பது நீண்ட நாள்கள் முதல் எனது கண்ணின் மணி போல், என் ஆடையில் பொதிந்து வைக்கப்பட்ட பேரடையாளமாகக் கொள்வாயாக . நல்லவனே, விருப்பத்துடன் வந்து எனது இன்னுயிரைக் கொடுத்தாய்" என்று கொடுத்து, உண்மையான புகழைப் பெற்றாள் {சீதை}.
[8] பல பதிப்புகளின் அடிக்குறிப்புகளில், “ஹனுமான் சிறிய வடிவத்தில் இருந்ததால் அந்தச் சூடாமணி அவனது தோள்களுக்குப் பொருந்தவில்லை; அதனால் விரலில் போட்டுக் கொண்டான்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிறிய வடிவில் இருக்கும் ஒருவனுக்கு, ஒரு பெண்ணின் நெற்றிச்சுட்டி தோள்களுக்குப் பொருந்தினாலும், விரல்களுக்கு எப்படிப் பொருந்தும்? இங்கே அனைத்துப் பதிப்புகளிலும் ஏதோ பிழை இருப்பதுபோலத்தான் தெரிகிறது. பெருவடிவை எடுத்திருந்த ஹனுமானுக்கு, சிறிய வடிவில் இருந்த சீதையின் அணிகலன் தோள்களில் பொருந்தவில்லை என்பதால் விரல்களில் சூடினான் என்றால் அது பொருத்தமானதாகவே இருக்கும்.
மணிரத்தினத்தைப் பெற்றுக் கொண்ட கபிவரன் {சிறந்த குரங்கான ஹனுமான்}, சீதையைப் பிரதக்ஷிணம் செய்து, பக்கத்தில் நின்று வணங்கினான்.(71) சீதையைத் தரிசித்ததால் பெரும் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தவன் {ஹனுமன்}, சரீரத்தால் அங்கே இருந்தாலும் ஹிருதயத்தால் ராமனை அடைந்தான்.(72) ஜனகநிருபாத்மஜை {ஜனகமன்னனின் மகளான சீதை} அணிந்திருந்ததும், பெரும் மதிப்புக்குரியதுமான அந்த மணிரத்தினத்தைப் பெற்றுக்கொண்டு, பவனனால் குலுக்கப்பட்ட கிரியைப் போல மகிழ்ச்சியான மனத்துடன் திரும்பப் புறப்பட்டான்.(73)
சுந்தர காண்டம் சர்க்கம் – 38ல் உள்ள சுலோகங்கள்: 73
Previous | | Sanskrit | | English | | Next |