Dream of Trijata | Sundara-Kanda-Sarga-27 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: தன் கனவை விவரித்துச் சொன்ன திரிஜடை; ராமனின் வெற்றியையும், ராவணனின் தோல்வியையும் கனவாகக் கண்டது...
இவ்வாறு சீதை சொன்னதும், ராக்ஷசிகள் கோபத்தால் மூர்ச்சித்தனர். அவர்களில் சிலர், துராத்மாவான ராவணனிடம் அதைச் சொல்லச் சென்றனர்.(1) பிறகு, கோரதரிசனந்தரும் ராக்ஷசிகள், சீதையை அணுகியபோது, ஒரே அர்த்தத்துடன் கூடிய அனர்த்த அர்த்தங்களை {பின்வருமாறு} கடுமையாகப் பேசினார்கள்:(2) “அநாரியையே, பாபவிநிஷ்சயே {பாபம் செய்வதில் உறுதியாக இருப்பவளே}, சீதே, இன்றே, இப்போதே, உன்னுடைய இந்த மாமிசத்தை இவர்கள் சுகமாக பக்ஷிப்பார்கள்” என்றனர்.(3)
அப்போது, அந்த அநாரியைகளால் மிரட்டப்படும் சீதையைக் கண்டவளும், சயனித்துக் கொண்டிருந்தவளுமான திரிஜடை என்ற ராக்ஷசி, {இந்த} வாக்கியத்தைப் பேசினாள்:(4) “அநாரியைகளே, உங்களையே தின்னுங்கள். ஜனகனின் இஷ்டமகளும், தசரதனின் மருமகளுமான சீதையை பக்ஷிக்கமாட்டீர்கள்.(5) ரோமஹர்ஷணத்தை {மயிர்ச்சிலிர்ப்பை} ஏற்படுத்துவதும், ராக்ஷசர்களின் அழிவுக்கானதும், இவளது பர்த்தாவின் {சீதையின் கணவனான ராமனின்} நன்மைக்கானதுமான பயங்கர ஸ்வப்னத்தை {கனவை} நான் இப்போது கண்டேன்” {என்றாள் திரிஜடை}.(6)
திரிஜடை இவ்வாறு சொன்னதும், பீதியடைந்த சர்வ ராக்ஷசிகளும் அந்தத் திரிஜடையிடம் இந்தச் சொற்களைச் சொன்னார்கள்:(7) “நீ கண்ட இந்த ஸ்வப்னம் எப்படிப்பட்டது? சொல்வாயாக” {என்றனர்}.
அந்த ராக்ஷசிகளின் முகத்திலிருந்து {வாயில் இருந்து} வெளிப்பட்ட வசனத்தைக் கேட்ட திரிஜடை, ஸ்வப்னம் தொடர்பானதை {இந்த வசனத்தை} உரிய காலத்தில் {நேரத்தில் பின்வருமாறு} பேசினாள்:(8,9அ) “வெண்மாலைகளும், அம்பரங்களும் {ஆடைகளும்} தரித்த ராகவன், கஜதந்தமயமானதும் {தந்தத்தாலானதும்}, ஆயிரம் ஹம்சங்கள் {அன்னப்பறவைகள்} பூட்டப்பட்டதும், அந்தரிக்ஷத்தில் {வானத்தில்} செல்வதுமான சிபிகையில், லக்ஷ்மணனுடன் சேர்ந்து தானே ஏறி வந்தான்[1].(9ஆ,10) நான் இப்போது கண்ட ஸ்வப்னத்தில், சீதையும், வெண் அம்பரங்கள் {வெள்ளாடை} உடுத்திக் கொண்டு, சாகரத்தால் சூழப்பட்ட ஸ்வேத பர்வதத்தில் {வெண்மலையில்}, அமர்ந்திருந்தாள்.(11) பாஸ்கரனுடன் பிரபையை {சூரியனுடன் ஒளியைப்} போல ராமனை சீதை அடைந்தாள். சைலத்திற்கு {மலைக்கு} ஒப்பானதும், நான்கு தந்தங்களுடன் கூடியதுமான மஹாகஜத்தில் ஏறி, லக்ஷ்மணனுடன் ராமன் திரிவதையும் நான் கண்டேன்.(12) அப்போது, தங்கள் தேஜஸ்ஸால் ஒளிர்பவர்களும், வெண்மாலைகளையும், அம்பரங்களையும் {வெள்ளாடைகளையும்} தரித்தவர்களுமான அவ்விரு நரசார்தூலர்களும் {மனிதர்களில் புலிகளான ராமலக்ஷ்மணர்கள்} ஜானகியை நெருங்கினார்கள்.(13,14அ) பிறகு, அந்த மலையின் உச்சியில் இருந்த ஜானகி, ஆகாயத்தில் தன் பர்த்தா {கணவன் ராமன்} இருக்கும் தந்தினத்தின் ஸ்கந்தத்தில் {யானையின் முதுகில்} ஏறி அமர்ந்தாள்.(14ஆ,15அ) அப்போது, அந்த கமலலோசனை தன் பர்த்தாவின் {தாமரை போன்ற கண்களைக் கொண்ட சீதை தன் கணவனான ராமனின்} மடியில் இருந்து எழுந்து தன் கைகளால் சந்திர சூரியர்களை மென்மையாகத் தீண்டினாள்.(15ஆ,16அ) அந்த குமாராப்யர்களும் {இளவரசர்களான ராமலக்ஷ்மணர்களும்}, விசாலாக்ஷியான சீதையும் இருந்த அந்த உத்தமகஜம், லங்கையின் மேல் நின்றது.(16ஆ,17அ)
[1] நரசிம்மாசாரியர் பதிப்பில், ஸ்வப்ன சாஸ்திரத்தின் மூலத்தைக் கொடுத்துவிட்டு, “ஸ்வப்னங்களில் பசு, எருது, யானை, உப்பரிகை, பர்வதத்தின் நுனி, வ்ருக்ஷம் இவற்றின் மேல் ஏறுதலும், அமேத்யத்தைப் பூசிக் கொள்ளுதலும், அழுதலும், மரணமும், புணரத்தகாத மடந்தையைப் புணர்தலும் சுபகரங்கள் என்று ஸ்வப்ன சாஸ்திரம் சொல்கிறது” என்று விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
காகுத்ஸ்தன் {ராமன்}, தன் பாரியை சீதை சகிதனாக, வெண்ரிஷபங்கள் பூட்டப்பட்ட ரதத்தில் தானே இங்கே வந்தான்.(17ஆ,18அ) வீரியவானான புருஷோத்தமன், தன்னுடன் பிறந்த லக்ஷ்மணனுடனும், சீதையுடனும் சேர்ந்து சூரியனுக்கு ஒப்பாகப் பிரகாசிக்கும் திவ்ய புஷ்பகவிமானத்தில் ஏறி, உத்தர {வடக்குத்} திசையை நோக்கிச் சென்றான்.(18ஆ,19) விஷ்ணுபராக்கிரமனும் {விஷ்ணுவின் வல்லமையுடையவனும்}, ராகவனுமான ராமன், தன்னுடன் பிறந்த லக்ஷ்மணனுடனும், சீதையுடனும் இவ்வாறே ஸ்வப்னத்தில் {கனவில்} என்னால் காணப்பட்டான்.(20) ஸ்வர்க்கத்தை {வெல்ல முடியாத} பாபஜனங்கள் போல, ஸுரர்களாலோ {தேவர்களாலோ}, ராக்ஷசர்களாலோ, பிறராலோ மஹாதேஜஸ்வியான ராமனை வெல்ல இயலாது.(21)
தைலம் {எண்ணெய்} தெளிக்கப்பட்ட தரையில், செவ்வாடையுடனும், கரவீரங்களால் செய்யப்பட்ட {அலரிப்பூ} மாலையுடனும் கிடக்கும், குடியால் வெறி கொண்ட ராவணனையும் நான் கண்டேன்.(22) மேலும் இப்போது, கரிய அம்பரங்கள் {ஆடைகள்} உடுத்திய முண்டனாக {மொட்டைத்தலையுடன் கூடியவனாக} புஷ்பக விமானத்தில் இருந்து புவியில் விழுந்த ராவணன், ஒரு ஸ்திரீயால் இழுத்துச் செல்லப்படுவதைக் கண்டேன்.(23) சிவந்த மாலைகளையும், களிம்புகளையும் சூடிக் கொண்டு, தைலத்தைப் பூசிக் கொண்டு, குடித்த பிராந்த சித்தத்துடன், இந்திரியங்கள் கலங்கியவனாக சிரித்தபடியே நர்த்தனம் செய்து கொண்டு, கழுதைகள் பூட்டப்பட்ட ரதத்தில் சென்றான்.(24) மேலும், கழுதையில் தக்ஷிண {தெற்குத்} திசையை நோக்கி சீக்கிரமாகச் சென்றவனும், ராக்ஷசேஷ்வரனுமான ராவணன், பயத்தால் மோஹித்துக் கழுதையில் இருந்து தலைகீழாக விழுந்தான்.(25,26அ) சட்டென எழுந்து, உள்ளங்கலங்கி, பயத்தால் பீடிக்கப்பட்டு, மதத்தால் {மதுவெறியால்} தூண்டப்பட்டு,{26ஆ} உன்மத்தனைப் போல திக்வாசனாகி {பைத்தியக்காரனைப் போல ஆடையில்லாதவனாகி}, ஏராளமான துர்வாக்கியங்களைப் பிதற்றிக் கொண்டு, சகிக்கமுடியாத துர்கந்தம் கொண்டதும், கோரமானதும், இருள்நிறைந்ததும், நரகத்திற்கு ஒப்பானதுமான{27} மலபங்கத்தில் {மலச்சேற்றில்} பிரவேசித்த உடனேயே அதில் மூழ்கிப் போனான்.(26ஆ-28அ)
புழுதியால் பூசப்பட்ட அங்கங்களைக் கொண்டவளும், கரியவளும், செவ்வாடை அணிந்தவளுமான பிரமதை, தசக்ரீவனை கண்டத்தில் {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணனை தொண்டையில்} கட்டி யாம்ய {எமன் இருக்கும் தெற்குத்} திசையில் இழுத்துச் சென்றாள்.(28ஆ,29அ) அதில் {அந்தக் கனவில்}, நிசாசரனான கும்பகர்ணனையும் நான் இவ்வாறே கண்டேன். இராவணனின் மகன்கள் அனைவரையும் தைலம் {எண்ணெய்} பூசப்பட்ட நிலையில் கண்டேன்.(29ஆ,30அ) தசக்ரீவன் வராஹத்திலும், இந்திரஜித் முதலையிலும், கும்பகர்ணன் ஒட்டகத்திலும் தக்ஷிண {தெற்குத்} திசைக்குப் பிரயாணித்தனர்.(30ஆ,31அ) அவர்களில் விபீஷணன் ஒருவனே, வெண்குடையுடனும், வெண்மாலைகளையும், அம்பரங்களையும் {ஆடைகளையும்} தரித்தவனாக, வெண்கந்தக் களிம்புகள் பூசப்பட்டவனாகக் காணப்பட்டான்.(31ஆ,32அ) சங்குகள், துந்துபிகளின் கோஷங்களுடன், நர்த்தன, கீதங்களுடனும் அலங்கரிக்கப்பட்டவனாக,{32ஆ} மலைக்கு ஒப்பானதும், மேகத்தின் இடியொலியைப் போல் கர்ஜிப்பதும், நான்கு தந்தங்களுடன் கூடியதுமான திவ்ய கஜத்தின் மீது விபீஷணன் ஏறி அமர்ந்து,{33} தன் மந்திரிமார்கள் நால்வருடன் ஆகாயத்தை அடைந்தான்.(32ஆ-34அ)
இராக்ஷச சமாஜத்தினரும் {கூட்டத்தினரும்}, தைலம் பருகி, சிவந்த மாலைகள் தரித்து, செவ்வாடை உடுத்தியவர்களாக, கீத, வாத்திய ஒலிகளுடன் கூடியவர்களாக என்னால் காணப்பட்டனர்.(34ஆ,35அ) வாஜி, ரத, குஞ்சரங்களுடன் {குதிரை, தேர், யானைகளுடன்} கூடிய ரம்மியமான இந்த லங்காபுரியும், பங்கமடைந்த கோபுர, தோரணங்களுடன் சாகரத்தில் விழுவது காணப்பட்டது.(35ஆ,36அ) இரவணனால் ரக்ஷிக்கப்படும் லங்கை, துரிதனும், ராம தூதனுமான வானரனால் எரிக்கப்படுவதும் என் ஸ்வப்னத்தில் {கனவில்} காணப்பட்டது.(36ஆ,37அ) பஸ்மமாகி பயங்கரமாகக் கிடந்த லங்கையில், சர்வ ராக்ஷச ஸ்திரீகளும், தைலத்தைப் பருகி, மஹாஸ்வனத்துடன் மகிழ்ச்சியாகச் சிரித்து, ஆடிக் கொண்டிருந்தனர்.(37ஆ,38அ) கும்பகர்ணன் முதலிய இந்த ராக்ஷசபுங்கவர்கள் அனைவரும், செவ்வாடை உடுத்திக் கொண்டு, கோமயஹ்ரதத்தில் {மாட்டுச் சாணியாலான மடுவுக்குள்} பிரவேசித்தனர்.(38ஆ,39அ)
சென்றுவிடுங்கள், தொலைந்து போங்கள். {இல்லையெனில்}, சீதையை அடையும் ராகவன், பெருங்கோபத்துடன் ராக்ஷசர்களுடன் சேர்த்து உங்களையும் கொல்வான்.(39ஆ,40அ) வனவாசத்தில் பின்தொடர்ந்தவளும், பெரிதும் மதிக்கத்தகுந்தவளுமான தன் பிரியத்திற்குரியவளுமான பாரியை {மனைவி சீதை}, அச்சுறுத்தப்படுவதையோ, மிரட்டப்படுவதையோ ராகவன் அனுமதிக்கமாட்டான்.(40ஆ,41அ) எனவே, குரூர வாக்கியங்கள் போதும். சாந்தமாகப் பேசுங்கள். வைதேஹியிடம் வேண்டிக் கொள்வோம். இதுவே எனக்கு ஏற்புடையதாகும்.(41ஆ,42அ) எவள் துக்கத்தில் இருக்கும்போது, இவ்வித ஸ்வப்னம் காணப்படுகிறதோ, அவள் விதவிதமான துக்கங்களில் இருந்து விடுபட்டு, ஒப்பற்ற மகிழ்ச்சியை அடைவாள்.(42ஆ,43அ) இராக்ஷசிகளே, அச்சுறுத்தப்பட்டவளை யாசியுங்கள். பேசவிரும்புவதால் ஆகப்போவதென்ன? இராகவனிடமிருந்து ராக்ஷசர்களுக்கு கோரபயம் நேரப்போகிறது.(43ஆ,44அ)
இராக்ஷசிகளே, ஜனகாத்மஜையான இந்த மைதிலி, வேண்டி வணங்கப்படுவதற்கும், மஹத்தான பயத்தில் இருந்து {நம்மைக்} காப்பதற்கும் தகுந்தவள்.{44ஆ,45அ} மேலும், மிகநுட்பமான ரூப லக்ஷணச் சிதைவோ, வேறேதேனுமொன்றோ கூட விசாலாக்ஷியான இவளிடம் {நீள்விழியாளான இந்த சீதையிடம்} காணப்படவில்லை.(44ஆ-46அ) ஆகாயத்தில் வந்தவளும், துக்கத்திற்குத் தகாதவளுமான இந்த தேவி, துக்கம் அடைந்ததால் மாத்திரமே மேனியொளி மங்கியது என சந்தேகமடைகிறேன்.(46ஆ,47அ) வைதேஹியின் அர்த்தசித்தியும், ராக்ஷசேந்திரனின் நாசமும், ராகவனின் விஜயமும் நெருங்கி வருவதை நான் பார்க்கிறேன்.(47ஆ,48அ) அவளது மஹத்தான பிரியத்தை {அவள் விரும்பியது நிகழ்வதைக்} கேட்பதற்குரிய நிமித்தமாக, பத்ம இதழ்களைப் போன்று நீளமாக இருக்கும் இந்தக் கண் {இடது கண்} துடிப்பதை நான் காண்கிறேன்.(48ஆ,49அ) தக்ஷிணையான {தகுதிவாய்ந்தவளான} இந்த வைதேஹியின் அதக்ஷிணபாஹு {இடது கரம்}, திடீரெனச் சிலிர்த்து மெதுவாகத் துடிக்கிறது.(49ஆ,50அ) கரேணுவின் ஹஸ்தத்தை {பெண் யானையின் துதிக்கையைப்} போன்றதும், ஒப்பற்றதுமான இடது தொடை துடிப்பது, ராகவன் முன்னே நிற்கப் போவதைக் குறிக்கிறது.(50ஆ,51அ) சாகை நிலயத்தில் மீண்டும் மீண்டும் பிரவேசித்து உத்தம சாந்தவாதம் செய்யும் பக்ஷியும் {கிளைக்கூட்டில் மீண்டும் மீண்டும் நுழைந்து, மென்மையான குரலை எழுப்பும் பறவையும்}, மீண்டும் மீண்டும் ஸுஸ்வாகதத்திற்குரிய {வரவேற்புக்குரிய} சொற்களை மகிழ்ச்சியுடன் சொல்லி {சீதையைத்} தூண்டிவிடுவதைப் போலிருக்கிறது.(51ஆ,இ,ஈ,உ)
சுந்தர காண்டம் சர்க்கம் – 27ல் உள்ள சுலோகங்கள்: 51
Previous | | Sanskrit | | English | | Next |