Seetha crying | Sundara-Kanda-Sarga-25 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராக்ஷசிகளின் அச்சுறுத்தலைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அழுதுபுலம்பிய சீதை...
கொடியவர்களான அந்த ராக்ஷசிகள் மிகக் கடுமையாகவும், பயங்கரமாகவும் பேசிக் கொண்டிருந்தபோது, ஜனகாத்மஜை {சீதை} அழுது கொண்டிருந்தாள்.(1) இராக்ஷசிகளால் இவ்வாறு சொல்லப்பட்ட மனஸ்வினியான {நல்ல மனம் கொண்டவளான} வைதேஹி, உச்சக்கட்ட திகிலை அடைந்து கண்ணீரால் தடைபட்டக் குரலுடன் {பின்வருமாறு} சொன்னாள்:(2) “மானுஷி, ராக்ஷசனுக்குப் பாரியையாகத் தகாதவள். அனைவரும் உங்கள் விருப்பப்படியே என்னைத் தின்னுங்கள். நீங்கள் சொல்வதை நான் செய்யமாட்டேன்[1]” {என்றாள் சீதை}.(3)
[1] சென்ற சர்க்கத்தின் 8ம் சுலோகத்திலும் இதே வசனம்தான் இருக்கிறது.
இராக்ஷசிகளின் மத்தியில் இருந்தவளும், ராவணனால் அச்சுறுத்தப்பட்டவளும், ஸுரர்களின் {தேவர்களின்} மகளுக்கு ஒப்பானவளுமான அந்த சீதை, துக்கத்தால் பீடிக்கப்பட்டவளாக மன அமைதியை அடைந்தாளில்லை.(4) யூதத்தில் {மந்தையில்} இருந்து தொலைந்து, ஓநாய்களால் பீடிக்கப்பட்ட வனத்து மிருகத்தை {மானைப்} போலவும், துக்கத்தால் தன் அங்கத்தில் {உடலுக்குள்} புதைந்துவிடுபவளைப் போலவும் அவள் அதிகம் நடுங்கினாள்.(5) சோகத்தால் பங்கமடைந்த மனத்துடன் கூடிய அவள் {சீதை}, அகலமானதும், புஷ்பித்ததுமான அசோகத்தின் சாகையை {ஓர் அசோக மரத்தின் கிளையைப்}[2] பற்றிக் கொண்டே பர்த்தாவைக் குறித்துச் சிந்தித்தாள்.(6)
[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், “ஹனுமானிருக்கிற சிம்சுபா வ்ருக்ஷத்தின் கிளையும் அசோக வ்ருக்ஷத்தின் கிளையும் ஸமீபத்திருக்கையால் ஒன்றோடொன்று பின்னிக் கொண்டிருந்தது பற்றி ஸீதை சிம்சுபா வ்ருக்ஷத்தினடியில் சேர்ந்திருப்பினும் சிம்சுபா வ்ருக்ஷத்தினருகிலுள்ள அசோக வ்ருக்ஷத்தின் கிளையைப் பிடித்துக் கொள்ள நேர்ந்ததென்று தெரிகிறது” என்றிருக்கிறது.
அப்போது, நேத்திர ஜலப் பெருக்கால் பருத்த ஸ்தனங்களை {கண்ணீர்ப்பெருக்கால் மார்பகங்களை} நனைத்தபடியே சிந்திந்துக் கொண்டிருந்தவள், சோகத்தின் அந்தத்தை {எல்லையை} அடைந்தாளில்லை.(7) அவள், இராக்ஷசிகளின் மிரட்டலில் நேர்ந்த பயத்தால், வதன வர்ணமிழந்தவளாக {முகம் வெளிறி}, புயற்காற்றில் விழும் கதலியை {வாழைமரத்தைப்} போல நடுங்கிக் கொண்டிருந்தாள்.(8) நடுங்கிக் கொண்டிருந்த அந்தச் சிறந்த ஸ்திரீயின், நீண்டகன்று அசையும் தலைப்பின்னல், அங்குமிங்கும் அலையும் வியாளத்தை {பாம்பைப்} போலத் தெரிந்தது.(9) சோகத்தால் பீடிக்கப்பட்ட சித்தத்துடன், துக்கத்தில் மூழ்கிய அந்த மைதிலி, வேதனையுடன் பெருமூச்சுவிட்டபடியே கண்ணீர் சிந்தி கதறி அழுதாள்.(10)
துக்கத்தால் பீடிக்கப்பட்ட பாமினி {அழகிய பெண்ணான சீதை}, “ஹா ராமரே” என்றும், மீண்டும், “ஹா லக்ஷ்மணரே, ஹா என் மாமியாரான கௌசல்யே, ஹா சுமித்ரே,(11) “ஸ்திரீக்கோ, புருஷனுக்கோ அகாலத்தில் மரணம் நேர்வது அரிது” என்ற சொல்லப்படும் உலகப்பொதுமொழி சத்தியமானதே.{12}, இராமரைப் பிரிந்து, குரூர ராக்ஷசிகளால் இவ்வாறு வேதனையுடன் துக்கப்படும் இந்த முஹூர்த்தத்திலும் நான் ஜீவிக்கிறேன்[3].(12,13)
[3] நரசிம்மாசாரியர் பதிப்பில், “நான் இப்படி இங்குத் தயையில்லாத ராக்ஷஸிகளால் பீடிக்கப்பட்டு வருந்தி ராமனைப் பிரிந்து பரிதாபமுற்று முஹூர்த்தமாயினும் ப்ராணன்களை வைத்துக் கொண்டிருக்கின்றேனே. ஆகையால், “ஸ்த்ரீக்காயினும் புருஷனுக்காயினும் ஈஸ்வர இச்சை இல்லாதபொழுது மரணம் நேராது” என்று பண்டிதர் சொல்லுகிற லோகவார்த்தை ஸத்யமாகவே இருக்கிறது” என்றிருக்கிறது.
அல்பபுண்ணியமுள்ளவளும், கிருபைக்குரியவளுமான இவள் {நான்}, சமுத்திர மத்தியில் வாயு வேகத்தால் தாக்கப்பட்ட நவத்தை {ஓடத்தைப்} போல அநாதையாக நாசமடையப் போகிறாள்.(14) என் பர்த்தாவான அவரைப் பார்க்க முடியாமல், ராக்ஷசிகளின் வசத்தை அடைந்து, நீரால் இடியும் தீரத்தை {கரையைப்} போல சோகத்திலேயே அழிவடையப் போகிறேன்.(15) மலர்ந்த பத்ம இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவரும், சிங்க நடை நடப்பவரும், கிருதஜ்ஞரும், பிரியவாதியுமான என் நாதரானவரை {என் தலைவரான ராமரை}, தன்னியவான்களே {நற்பேறு பெற்றவர்களே} பார்த்துக் கொண்டிருப்பார்கள்.(16)
கொடிய விஷத்தை உண்டவளைப் போல, விதிதாத்மரான அவரில்லாத {அனைத்தையும் அறிந்த ராமரிடமிருந்து பிரிந்த} நான், எல்லாவகையிலும் ஜீவிப்பது துர்லபமே {வாழ்வதரிதே}.(17) கோரமானதும், வருத்தத்தை உண்டாக்குவதுமான இந்த துக்கத்தை நான் ஏன் அடைந்தேன்? ஜன்மாந்தரத்தில் {முற்பிறவியில்} நான் எப்படிப்பட்ட மஹாபாபத்தைச் செய்தேனோ?(18) மஹத்தான சோகத்தை அடைந்திருக்கும் நான் ஜீவிதத்தைக் கைவிட விரும்புகிறேன். இராக்ஷசிகளால் நன்றாக ரக்ஷிக்கப்படும் {கடுங்காவல் காக்கப்படும்} என்னால் ராமரை அடைய முடியாது.(19) மானுஷ்ய நிலைக்கு ஐயோ {மானிடப்பிறவி இழிவானது}, பிறர் வசப்பட்டிருக்கும் நிலைக்கு ஐயோ {பிறரின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்நிலை இழிவானது}, ஆத்மவிருப்பத்தின் பேரில் ஜீவிதத்தைக் கைவிடும் {நான் விருப்பத்துடன் உயிரைவிடும்} சாத்தியமும் இல்லையே?” {என்றாள் சீதை}.(20)
சுந்தர காண்டம் சர்க்கம் – 25ல் உள்ள சுலோகங்கள்: 20
Previous | | Sanskrit | | English | | Next |