Tears of Joy | Sundara-Kanda-Sarga-17 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சீதையைச் சூழ்ந்திருக்கும் ராக்ஷசிகளைக் கண்ட ஹனுமான்; சீதையைக் கண்ட ஆனந்தத்தில் கண்ணீர் வடித்தது...
குமுதமலர்க்கூட்டங்களின் ஒளிக்கு நிகரான நிர்மலமான உதயத்துடன் கூடிய சந்திரன், அப்போது, நீல நீரை அடையும் ஹம்ஸத்தை {அன்னப்பறவையைப்} போல, நிர்மலமான நபத்தை {தெளிந்த வானத்தை} அடைந்தான்.(1) நிர்மலமான பிரபையுடன் கூடிய அந்தச் சந்திரன், தன் பிரபையால் உதவி புரிவதைப் போல, குளிர்ந்த கதிர்களுடன் பவனாத்மஜனுக்கு {வாயு மைந்தன் ஹனுமானுக்குத்} தொண்டாற்றினான்.(2) அப்போது அவன் {ஹனுமான்}, பூர்ணச் சந்திரனின் முகமுடைய சீதையை, பாரத்தால் நீரில் மூழ்கும் நாவத்தை {ஓடத்தைப்} போல, சோகபாரத்தால் வீழ்ந்திருப்பவளாகக் கண்டான்.(3)
வைதேஹியைக் காண விரும்பிய மாருதாத்மஜன் {வாயு மைந்தன் ஹனுமான்}, கோர தரிசனந்தரும் ராக்ஷசிகள் {சீதையின்} அருகில் இருப்பதைக் கண்டான்.{4} ஒற்றைக் கண்ணுள்ளவள், ஒற்றைக் காதுள்ளவள், அதே போல காதுகளால் {மேனி} மறைக்கப்பெற்றவள், சங்கு போன்ற காதுள்ளவள், தலைவழியே சுவாசிக்கும் நாசியுள்ளவள்,{5} நீண்ட, மெலிந்த கழுத்துள்ளவள், குச்சிகளைப் போன்ற கேசமுள்ளவள், அதேபோல கேசமில்லாதவள், கம்பளம்போல் கேசம் தரித்தவள்,{6} நீண்ட காதுகளும், தொங்கிவிழும் நெற்றியுமுள்ளவள், தொங்கும் முலைகளும், வயிறுமுள்ளவள், தொங்கும் உதடுகளுள்ளவள், கன்னத்தில் உதடுகளுள்ளவள், தொங்கும் முகமுள்ளவள், தொங்கும் முழங்கால்களுள்ளவள்,{7} உயரக்குறையுடன் பருத்தவள், உயரமானவள், குப்ஜை {கூனுள்ளவள்}, விகடை {குறுகிய அங்கங்கள் கொண்டவள்}, வாமனை {குள்ளமானவள்}, அதேபோல, உயர்ந்த பற்களுடையவள், கோணல் வாயுடையவள் {முகமுடையவள்}, பிங்காக்ஷி {பச்சை / மஞ்சள் நிறக் கண்களையுடையவள்}, விக்ருதானனை {விகார முகம் கொண்டவள்} ஆகியோர் {சீதையின் அருகில்} இருந்தனர்.(4-8)
விக்ருதைகள் {விகாரமானவர்கள்}, பிங்களைகள் {அடர் மஞ்சள் / பச்சை நிறம் கொண்டவர்கள்}, குரோதனைகள் {கோபம் கொண்டவர்கள்}, கலஹப்ரியைகள் {சச்சரவுகளை விரும்புகிறவர்கள்}, இரும்பாலான சூலம் {ஈட்டி}, கூடம் {சம்மட்டி}, முத்கரதாரிணிகள் {கலப்பைகளைத் தரித்தவர்கள்},{9} வராக, மிருக, சார்தூல, மஹிஷ, ஆஜ, ஷிவ முகீகள் {பன்றி, மான், புலி, எருமை, ஆடு, குள்ளநரி ஆகியவற்றின் முகங்களைக் கொண்டவர்கள்}, கஜம் {யானை}, ஒட்டகம், ஹய பாதீகள் {குதிரை ஆகியவற்றின் கால்களைக் கொண்டவர்கள்}, உடலுக்குள் புதைந்த சிரசுள்ளவர்கள் {தலையுள்ளவர்கள்},{10} ஒற்றைக் கைக் கால்களைக் கொண்டவர்கள், கரகர்ணிகள் {கழுதைக் காதுடையவர்கள்}, அஷ்வகர்ணிகள் {குதிரைக் காதுடையவர்கள்}, கோகர்ணிகள் {பசுவின் காதுகளைக் கொண்டவர்கள்}, ஹஸ்திகர்ணிகள் {யானையின் காதுகளைக் கொண்டவர்கள்}, மேலும் சில ஹரிகர்ணிகள் {குரங்குக் காதுள்ளவர்கள்},{11} நாசியில்லாதவர்கள் {மூக்கில்லாதவர்கள்}, பெரும் நாசி படைத்தவர்கள், குறுக்காக நாசி அமைந்தவர்கள், சிதைந்த நாசியுள்ளவர்கள், கஜங்களைப் போன்ற {துதிக்கையுடன் கூடிய} நாசியுள்ளவர்கள், நெற்றியில் நாசி அமைந்தவர்கள்,{12} ஹஸ்திபாதைகள் {யானையைப் போன்ற காலுள்ளவர்கள்}, மஹாபாதைகள் {பெருங்கால்களைக் கொண்டவர்கள்}, கோபாதைகள் {பசுக்களைப் போன்ற கால்களைக் கொண்டவர்கள்}, பாதசூளிகைகள் {கால்களில் மயிருள்ளவர்கள்}, பெரும் தலைகளையும், கழுத்துகளையும் கொண்டவர்கள், பெரும் முலைக்காம்புகளையும், பெரும் வயிறுகளையும் கொண்டவர்கள்,{13} பெரும் வாய்களையும், விழிகளையும் கொண்டவர்கள், நீண்ட நாவுகளையும், நகங்களையும் கொண்டவர்கள், அதேபோல, ஆஜமுகீகள் {ஆட்டு முகம் கொண்டவர்கள்}, ஹஸ்திமுகீகள் {யானை முகம் கொண்டவர்கள்}, கோமுகீகள் {பசுவின் முகம் கொண்டவர்கள்}, ஸூகரீமுகீகள் {பெண் பன்றி முகம் கொண்டவர்கள்},{14} ஹயம் {குதிரை}, ஒட்டகம், கரவக்தரைகள் {கழுதை ஆகியவற்றின் வாய் படைத்தவர்கள்}, கோர தரிசனம் தரும் ராக்ஷசிகள், சூலங்கள், முத்கரங்கள் {இரும்புத்தடி} ஆகியவற்றைக் கையில் ஏந்தியவர்கள், குரோதனைகள் {கோபமுடையவர்கள்}, கலஹப்ரியைகள் {சச்சரவுகளில் விருப்பமுள்ளவர்கள்},{15} கோரைப் பற்களை உடையவர்கள், புகை போன்ற கேசமுடையவர்கள், சிதைந்த முகமுடையவர்கள், சதா பிபந்தி {ஒரு வகை மது} பானம் பருகுபவர்கள், சதா மாமிச, ஸுரா பிரியைகள் {எப்போதும் இறைச்சியையும், மதுவையும் விரும்பி உண்டு பருகுபவர்கள்},{16} மாமிசத்தாலும், சோணிதத்தாலும் {ரத்தத்தாலும்} பூசப்பட்ட அங்கங்களைக் கொண்டவர்கள், மாமிச சோணித போஜனைகள் {மாமிசத்தையும், சோணிதத்தையும் {ரத்தத்தையும்} உணவாகக் கொண்டவர்கள்}, தங்கள் தோற்றத்தாலேயே ரோமஹர்ஷணத்தை {மயிர்க்கூச்சத்தை} ஏற்படுத்தக் கூடியவர்கள் ஆகியோரை அந்தக் கபிசிரேஷ்டன் {குரங்குகளில் சிறந்தவனான ஹனுமான்} கண்டான்.{17} அவர்கள் ஸ்கந்தவந்தத்துடன் கூடிய ஒரு வனபதியை {பெரும் தண்டுடன் கூடிய ஒரு பெரும் மரத்தைச்} சூழ்ந்து அமர்ந்திருந்தனர்.(9-18அ)
அதனடியில் {அந்த மரத்தினடியில்} இருந்தவளும், நிந்திக்கத்தகாதவளும், ராஜபுத்திரியும், ஜனகாத்மஜையுமான அந்த தேவியை {சீதையை இலக்காகக் கொண்டு}, லக்ஷ்மீவானான ஹனுமான் கவனித்தான்.(18ஆ,19அ) பிரபையற்றவளும், சோகசந்தாபத்துடனும், புழுதிநிறைந்த தலைமுடியுடனும் கூடியவளும், {சொர்க்கத்திலிருந்து} பூமியில் வீழ்ந்த தாரையை {நட்சத்திரத்தைப்} போலப் புண்ணியம் தீர்ந்தவளும்,(19ஆ,20அ) நடத்தையின் புகழால் வளம்பெற்றவளும், பர்த்தாவை {கணவனைப்} பிரிந்ததால் வளங்குன்றியவளும், உத்தம பூஷணங்களற்றவளும் {நல்லாபரணங்களற்றவளும்}, பர்த்தாவின் வாத்சல்யத்தையே பூஷணமாக {கணவனின் அன்பையே ஆபரணமாகக்} கொண்டவளும்,(20ஆ,21அ) யூதமில்லா {மந்தையுடன் இல்லாத} நிலையில் சிம்ஹத்தால் கைப்பற்றப்பட்ட கஜவதுவை {பெண் யானையைப்} போல, பந்துக்களற்றவளாகச் செய்யப்பட்டு, ராக்ஷசாதிபனால் {ராக்ஷசர்களின் தலைவனான ராவணனால்} கைப்பற்றப்பட்டவளும்,(21ஆ,22அ) மழைக்கால முடிவில், மேகங்களால் மறைக்கப்பட்ட சந்திரனைப் போன்றவளும், தொடர்பில்லாததால், ரூபம் இழந்து, மீட்டப்படாமல் இருக்கும் வல்லகீயை {வீணையைப்} போன்றவளும்,(22ஆ,23அ) தன் பர்த்தாவுக்கு {கணவனுக்குத்} தகுந்தவளுமான சீதை, சோக சாகரத்தில் மூழ்கியவளாக, அசோக வனிகையின் மத்தியில் ராக்ஷசிகளின் வசத்தில் இருந்தாள்.(23ஆ,24அ) கிரஹங்களுடன் கூடிய ரோஹிணியைப் போல, அவர்களால் {ராக்ஷசிகளால்} சூழப்பட்ட அந்த தேவி {சீதை}, குசுமங்களற்ற லதையை {மலர்களற்றக் கொடியைப்} போன்றிருப்பதை ஹனுமான் கண்டான்.(24ஆ,25அ) புழுதி படிந்த அங்கங்களுடன் கூடியவளும், {இயற்கையாக அமைந்த} தன் மேனியழகினால் அலங்கரிக்கப்பட்டவளுமானவள், சேற்றில் மலர்ந்த தாமரையைப் போல ஒளிர்ந்தும், ஒளிர்ந்தாளில்லை.(25ஆ,26அ) கபியான ஹனுமான், கரிய கண்களைக் கொண்டவளும், புழுதி படிந்த வஸ்திரத்தால் போர்த்தப்பட்டவளும், மான்விழியாளும், தீனவதனையும் {இரங்கத்தக்க முகத்தைக் கொண்டவளும்}, பர்த்தாவின் தேஜஸ்ஸால் தீனமடையாதவளும் {கணவனின் வலிமையை நினைத்து மனந்தளராதவளும்}, தன் சீலத்தால் {ஒழுக்கத்தால்} தன்னை ரக்ஷித்துக் கொள்பவளுமான அந்த சீதா தேவியைக் கண்டான்.(26ஆ-28அ)
மான்விழியாளும், பெண் மான்போல் அச்சப் பார்வை பார்ப்பவளுமான சீதையை ஹனுமான் கண்டான்.{28ஆ,இ} துக்கத்தில் உதித்த அலைகளைப் போலவும், சோகத்தின் குவியலைப் போலவும், தன் பெருமூச்சுகளால் இளந்தளிர்கள் துளிர்க்கும் விருக்ஷங்களை எரித்துவிடுபவளைப் போலவும்,(28ஆ,29) ஆபரணமில்லாமலேயே சோபிப்பவளும் {ஒளிர்பவளும்}, நன்கு வகுக்கப்பட்ட அங்கங்களைக் கொண்டளும், {பூமியைப் போன்ற} பொறுமையுள்ளவளுமான அந்த மைதிலியைக் கண்டதும், மாருதி {வாயுமைந்தனான ஹனுமான்}, அளவற்ற மகிழ்ச்சியடைந்தான்.(30) மதிமயக்கும் கண்களைக் கொண்டவளை {சீதையை} அங்கே கண்ட ஹனுமான், ஆனந்தக் கண்ணீர் வடித்து, ராகவனை நமஸ்கரித்தான்.(31) வீரியவானான ஹனுமான், சீதா தரிசனத்தால் பெரும் மகிழ்ச்சியடைந்து, ராமனையும், லக்ஷ்மணனையும் நமஸ்கரித்தபடியே, {இலைகளால்} தன்னை மறைத்துக் கொண்டான்.(32)
சுந்தர காண்டம் சர்க்கம் – 17ல் உள்ள சுலோகங்கள்: 32
Previous | | Sanskrit | | English | | Next |