Thursday 1 February 2024

ஹனுமானின் வருத்தம் | சுந்தர காண்டம் சர்க்கம் - 16 (32)

Hanuman's grief | Sundara-Kanda-Sarga-16 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சீதையின் நிலை கண்டு வருந்திய ஹனுமான்...

Hanuman thinking of Seetha's plight

ஹரிபுங்கவன் {குரங்குகளில் மேன்மையான ஹனுமான்}, புகழத்தகுந்தவளான அந்த சீதையையும், குணங்களால் இனியவனான ராமனையும் புகழ்ந்துவிட்டு, மீண்டும் கவலையுடன் சிந்தனையில் ஆழ்ந்தான்.(1) 

தேஜஸ்வியான அந்த ஹனுமான், ஒரு முஹூர்த்தம் போல யோசித்துவிட்டு, கண்ணீர் நிறைந்த கண்களுடன் {பின்வருமாறு மனத்தால் நினைத்து} சீதைக்காக அழுதான்:(2) “குருவிடம் {அண்ணனான ராமரிடம்} பணிவுள்ள லக்ஷ்மணரால் மதிக்கப்படுபவளும், குரு பிரியையுமான {பெரியவரின் [ராமரின்] அன்புக்குரியவளுமான} ஒருத்தி, துக்கத்தால் பீடிக்கப்படுவாளெனில் காலம் கடப்பதற்கரியதே ஆகும்.(3) இராமர், மதிமிக்கவரான லக்ஷ்மணர் ஆகியோரின் வியவசாயத்தை {முயற்சியை} அறிந்திருக்கும் தேவி {சீதை}, {மழைக்காலத்தில்} மேகங்களின் வருகையால் {கலங்காத} கங்கையைப் போலவே அதிகம் கலங்கமாட்டாள்.(4) இராகவர், சீலத்தாலும் {ஒழுக்கத்தாலும்}, வயதாலும், விருத்தத்தால் {நடத்தையாலும்} வைதேஹிக்குத் துல்லியமானவர். இந்தக் கரியவிழியாளும், மரபு வழியிலும், லக்ஷணத்திலும் அவருக்குத் துல்லியமானவள்” {என்று நினைத்தான் ஹனுமான்}.(5)

நவஹேமத்தின் ஒளியுடன் கூடியவளும் {புத்தம்புது பொன்போல் பிரகாசிப்பவளும்}, ஸ்ரீயை {லட்சுமி தேவியைப்} போன்றவளுமான லோககாந்தையைக் கண்டவன் {உலகை ஈர்க்கும் சீதையைக் கண்ட ஹனுமான்}, மனத்தால் ராமனிடம் சென்று, {பின்வரும்} இந்த வசனத்தையும் சொன்னான்[1]:(6) “விசாலாக்ஷியான இவளின் நிமித்தமாகவே மஹாபலம் நிறைந்த வாலி கொல்லப்பட்டார்; வீரியத்தில் ராவணனுக்கு ஒப்பான கபந்தனும் வீழ்த்தப்பட்டான்;(7) மஹேந்திரனால் {கொல்லப்பட்ட} சம்பரன் போல, பீம விக்கிரமம் கொண்ட விராதன், வனத்தில் நேர்ந்த போரில், ராமரின் விக்கிரமத்தால் கொல்லப்பட்டான்;(8) ஜனஸ்தானத்தில் பீம கர்மங்களை {பயங்கரச் செயல்களைச்} செய்தவர்களான பதினான்காயிரம் ராக்ஷசர்கள், அக்னி சிகைக்கு {தீயின் நாவுகளுக்கு} ஒப்பான சரங்களால் கொல்லப்பட்டனர்.(9) விதிதாத்மரான {எல்லாமறிந்த மதியுடைய} ராமரால் கரன் கொல்லப்பட்டான்; திரிசரனும், மஹாதேஜஸ்வியான தூஷணனும் போரில் வீழ்த்தப்பட்டனர்.(10) இவளின் நிமித்தமாகவே, உலகத்தால் மதிக்கப்படுவதும், அடைதற்கரியதும், வாலியால் பாலிதம் செய்யப்பட்டதுமான வானரர்களின் ஐஷ்வரியத்தை சுக்ரீவர் அடைந்தார்.(11) 

[1] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், “அடுத்தடுத்து வரும் வாக்கியங்கள் ராமனிடம் சொல்வதைப் போலிருப்பதைவிட ஹனுமானின் உரத்த சிந்தனையை வெளிப்படுத்துவதாகவே தெரிகிறது” என்றிருக்கிறது.

விசாலாக்ஷியான இவளுக்காகவே, நத, நதி பதியான சாகரன் என்னால் கடக்கப்பட்டான்; இந்தப் புரீயும் {நகரமும் என்னால்} உற்று நோக்கப்பட்டது.(12) “இராமர், இவளுக்காக, சமுத்திரத்தை அந்தமாகக் கொண்ட மேதினியையும், ஜகத்தையும் சேர்த்துப் புரட்டிப் போட்டாலும் பொருத்தமானது” என்பதே என் மதியாகும் {கருத்து}.(13) திரிலோகங்களிலும், ராஜ்ஜியமா? ஜனகாத்மஜையான சீதையா? என்றால், சகல திரிலோக ராஜ்ஜியமும் சீதையின் ஒரு கலைக்கும் {பதினாறில் ஒரு பங்குக்கும்} ஈடாகாது[2].(14) பர்த்தாவிடம் {கணவரிடம்} திட விரதம் பூண்டிருக்கும் இவளே, மஹாத்மாவும், தர்மசீலருமான மிதிலை ராஜனின் {ஜனகனின்} மகளான அந்த சீதையாவாள்.(15) கலப்பையால் உழப்பட்ட க்ஷேத்திரத்தில் {நிலத்தில்}, பத்மத்தின் மகரந்தம் போன்ற சுபமான வயல்புழுதியால் மறைக்கப்பட்ட மேதினியைப் பிளந்து உதித்தவள் இவளே.(16) ஆரியசீலரும், போரில் புறமுதுகிடாத விக்கிராந்தருமான தசரத ராஜாவின் புகழ்பெற்ற மூத்த மருமகள் இவளே.(17) 

[2] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், “நிலவுக்குப் பதினாறு கலைகள் உள்ளன. பதினாறு பகுதிகளை உள்ளடக்கிய இதுவே அனைத்திற்கும் பொருத்திப் பார்க்கப்படுகிறது. மூவுலகங்களின் பதினாறு பங்குகளும், சீதையின் பதினாறில் ஒரு பங்குக்கு ஈடாகாது என்பது இங்கே பொருள்” என்றிருக்கிறது.

தர்மஜ்ஞரும், கிருதஜ்ஞரும், விதிதாத்மருமான {அறமறிந்தவரும், நன்றிமறவாதவரும், தன்னை அறிந்தவருமான} ராமரின் அன்புக்குரிய பாரியையான இவள், ராக்ஷசிகளின் வசத்தை அடைந்திருக்கிறாள்.(18) பர்த்தாவிடம் கொண்ட சினேகத்தால் கட்டாயம் சர்வ போகங்களையும் கைவிட்டு, துக்கங்களைக் குறித்துச் சிந்திக்காமல், ஜனங்களற்ற வனத்தில் பிரவேசித்து,{19} பழங்களையும், கிழங்குகளையும் உண்டு மகிழ்ந்து, பர்த்தாவிற்குப் பரமத் தொண்டாற்றி, பவனத்தில் இருப்பதைப் போல வனத்திலும் பரமபிரீதியை அடைந்திருந்தவள் எவளோ,{20} அந்தக் கனக வர்ண அங்கீயும் {பொன்னிற மேனியளும்}, நித்தியம் புன்னகையுடன் பேசுபவளும், அநர்த்தங்களுக்கு {துரதிர்ஷ்டங்களுக்குத்} தகாதவளுமான இவள், இவை யாவற்றையும் சகித்துக் கொண்டிருக்கிறாள்.(19-21)

இராகவர், தாகமுற்றவனால் {பீடிக்கப்படும்} தண்ணீர்ப் பந்தலைப் போல, ராவணனால் துன்புறுத்தப்படுபவளும், சீலம் நிறைந்தவளுமான இவளைக் காண விரும்புகிறார்.(22) இராஜ்ஜியத்தைத் தொலைத்துவிட்டு, மேதினியை மீண்டும் அடையும் ராஜாவைப் போலவே, நிச்சயம் ராகவரும் மீண்டும் இவளை அடைவதில் பிரீதியடைவார்.(23) காம, போகங்களைக் கைவிட்டு, பந்து ஜனங்களையும் பிரிந்து, அவர்களைச் சந்திக்கும் ஏக்கத்திலேயே இவள் தேஹத்தைத் தரித்திருக்கிறாள்.(24) ராக்ஷசிகளையோ, புஷ்பங்களையோ, பழங்களையோ, மரங்களையோ பார்க்காமல், ஒரே ஹிருதயத்துடன் இவள் ராமரை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறாள். இது நிச்சயம்.(25) பூஷணங்களைவிட ஒரு பெண்ணுக்குப் பரம பூஷணம் பர்த்தாவே ஆவான். இவள் சோபனத்திற்கு {அலங்காரத்திற்குத்} தகுந்தவளாக இருந்தாலும், அவர் இல்லாமல் சோபிக்கவில்லை.(26) பிரபுவான ராமர், இவளைப் பிரிந்தாலும், சோகத்தில் மூழ்காமல் தன் தேஹத்தைத் தரித்திருந்து செயற்கரிய செயலைச் செய்திருக்கிறார்.(27) கரிய நுனியுடைய கேசத்துடனும், நூறு இதழ் தாமரைக்கு ஒப்பான கண்களுடனும் கூடியவளும், சுகத்திற்குத் தகுந்தவளுமான இவளை துக்கத்தில் இருப்பவளாக அறிந்து என் மனமும் வருந்துகிறது.(28)

பூமியைப் போன்ற பொறுமையுடனும், புஷ்கரத்திற்கு ஒப்பான கண்களுடனும் கூடிய எவள் ராமலக்ஷ்மணர்களால் ரக்ஷிக்கப்பட்டாளோ, அவள் இப்போது விருக்ஷத்தின் அடியில், விகாரமான கண்களைக் கொண்ட ராக்ஷசிகளால் காவல்காக்கப்படுகிறாள்.(29) பனியால் வாடும் நளினி சோபிக்காததை {ஒளியிழப்பதைப்} போலத் தொடர்ச்சியான விசனங்களால் ஒடுக்கப்படும் ஜனகசுதை {ஜனகனின் மகளான சீதை}, துணையில்லா சக்கரவாகியைப் போல, கிருபைக்குரிய {பரிதாப} நிலையில் இருக்கிறாள்.(30) புஷ்பங்களால் வளைந்த சாகைகளுடன் {கிளைகளுடன்} கூடிய அசோகங்கள் {அசோக மரங்கள்} இவளுக்கு அதிக சோகத்தை உண்டாக்குகின்றன; பனி உருகியதால், ஆயிரங்கதிர்களுடன் உதிக்கும் சீதரஷ்மியும் {குளிர்ந்த கதிரோனும் / சந்திரனும் சோகத்தை} உண்டாக்குகிறான்” {என்று நினைத்தான் ஹனுமான்}.(31) 

பலவானும், ஹரிக்களில் ரிஷபனும் {குரங்குகளில் காளையும்}, வேகமுடையவனுமான அந்தக் கபி {குரங்கான ஹனுமான்}, இவ்வாறு அர்த்தம் செய்து கொண்டு, “இவளே சீதை” என்று புத்தியில் உறுதியடைந்து, அந்த விருக்ஷத்தில் சாய்ந்து அமர்ந்தான்.(32) 

சுந்தர காண்டம் சர்க்கம் – 16ல் உள்ள சுலோகங்கள்: 32


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை