Ravana went to see Seetha | Sundara-Kanda-Sarga-18 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராவணன், தன் மனைவியருடன், அசோக வனத்திற்குள் நுழைவதைக் கண்ட ஹனுமான்...
புஷ்பித்த புஷ்பங்களுடன் கூடிய {அசோக} வனத்தில், சுற்றிலும் நோக்கியவன் {ஹனுமான்} வைதேஹியைத் தேடிக் கொண்டிருந்தபோது, நிசி கொஞ்சம் எஞ்சியிருந்தது.(1) சிறந்த யாகங்களைச் செய்பவர்களும், சாஷ்டாங்க வேதங்களை[1] நன்கறிந்தவர்களுமான பிரம்மராக்ஷசர்களுக்குரிய[2] விராத்திரியில் அவன் {ராத்திரி கொஞ்சமே எஞ்சியிருக்கும் வேளையில் / விடிவதற்கு முன் வேளையில் ஹனுமான்} பிரம்மகோஷங்களை {வேதவொலிகளைக்} கேட்டான்.(2)
[1] ஆறு அங்கங்களுடன் கூடிய வேதங்கள் என்பது இங்கே பொருள். மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இலக்கணம் {வியாகரணம்}, உச்சரிப்பு முறைவிளக்கம் {சிக்ஷை}, வான சாஸ்திரம் {ஜோதிடம்}, சொல் இலக்கணம் {நிருக்தம்}, செய்யுள் இலக்கணம் {சந்தஸ்}, செயல்முறை / வேள்விக்குரிய, அல்லது சடங்குகளுக்குரிய தந்திரங்கள் {கல்பம்} ஆகியவை" என்றிருக்கிறது.
[2] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "பிரம்மராக்ஷசர்கள் என்பவர்கள், பிராமணர்களாக இருந்து ராக்ஷசர்களாக மாறியவர்களாவர்" என்றிருக்கிறது.
அப்போது, மஹாபாஹுவும் {பெருந்தோள்களைப் படைத்தவனும்}, மஹாபலமிக்கவனுமான தசக்ரீவன் {பத்துக் கழுத்துடைய ராவணன்}, கேட்பதற்கு மனோஹரமான மங்கல வாத்தியங்களின் சப்தத்தால் விழித்தெழுந்தான்.(3) பிரதாபவானான ராக்ஷசேந்திரன் {ராவணன்}, உரிய காலத்தில் விழித்தெழுந்ததும், நழுவும் மாலையாம்பரங்களை {மலர்மாலைகளையும், ஆடைகளையும்} தரித்தவனாக வைதேஹியைக் குறித்துச் சிந்தித்தான்.(4) அவளைக் குறித்த நினைவில் மதனனால் {காமதேவனான மன்மதனால்} அதிகம் பீடிக்கப்பட்டவனும், மதோத்கடத்தால் {மிகுந்த வெறியால்} தூண்டப்பட்டவனுமான அந்த ராக்ஷசனால், அந்தக் காமத்தை ஆத்மாவுக்குள் {ஆசையைத் தனக்குள்} அடக்கிக் கொள்ள இயலவில்லை.(5)
மகிமை பொருந்திய சர்வ ஆபரணங்களையும் பூண்டவன், சர்வ புஷ்ப, பழங்களுடன் கூடிய ஏராளமான மரங்களைக் கொண்டவையும்,(6) புஷ்கரணிகளுடன் கூடியவையும், நானாவித புஷ்பங்களால் சோபிப்பவையும், மதங்கொண்ட விஹகங்களுடன் {பறவைகளுடன்} எழில் கொஞ்சுபவையும், பரம அற்புதமானவையும்,(7) கண்களுக்கு மனோஹரமானவையும், விதவிதமான செயற்கை மிருகங்களால் நிறைந்தவையும், மணிகளால் {ரத்தினங்களால்} இழைக்கப்பட்ட காஞ்சனத் தோரணங்கள் நிறைந்தவையுமான வீதிகளைப் பார்த்தவாறே,{8} நானாவித மிருகங்கள் {மான்கள்} நிறைந்திருப்பதும், பழங்களை உதிர்க்கும் மரங்கள் நிறைந்திருப்பதுமான அசோக வனிகைக்குள் பிரவேசித்தான்.(8,9) அவ்வாறு செல்கையில், மஹேந்திரனை {தொடரும்} தேவ, கந்தர்வ யோசிதைகளை {பெண்களைப்} போல, அந்தப் பௌலஸ்தியனை[3] நூறு அங்கனைகள் {புலஸ்திய குலத்தைச் சார்ந்த ராவணனை நூறு பெண்கள்} பின்தொடர்ந்து சென்றனர்.(10)
[3] ராவணன், புலஸ்தியரின் குலவழி வந்தவனாவான். அதனால் பௌலஸ்தியன் என்று அழைக்கப்படுகிறான்.
அங்கே சில யோசிதைகள் {பெண்கள்}, காஞ்சன தீபிகைகளை {பொன்னாலான விளக்குகளைச்} சுமந்து சென்றனர், சிலர் பனையிலைகளாலான விசிறிகளையும், வேறு சிலர் வெண்சாமரங்களையும் தங்கள் கைகளில் கொண்டிருந்தனர்.(11) காஞ்சனத்தாலான சிறுகுடுவைகளில் {கிண்டிகளில்} நீரைக் கொண்டு சென்றனர், இன்னும் சிலர் வட்ட வடிவமான தலையணைகளை எடுத்துக் கொண்டு பின்னே சென்றனர்.(12) வலப்புறத்தில் இருந்த ஒரு பாமினி {அழகிய பெண்}, வலது கையில் ரத்தினங்களாலானதும், பூரணமானதுமான பானஸ்தாலியை {மதுக்குடத்தைப்} பிடித்திருந்தாள்.(13) மற்றொருத்தி, ராஜஹம்சத்திற்கு {அழகான அன்னப்பறவையின் வெண்மைக்கு} நிகரானதும், பூர்ணசசியின் {முழு நிலவின்} பிரபையுடனும், சௌவர்ண தண்டத்துடனும் {தங்கப்பிடியுடனும்} கூடியதுமான ஒரு குடையை எடுத்துக் கொண்டு பின்னே சென்றாள்.(14) தூங்கி வழியும் விழிகளைக் கொண்ட ராவணனின் உத்தம ஸ்திரீகள், மேகத்தை {தொடரும்} மின்னற்கொடிகளைப் போலத் தங்கள் வீர பதியைப் பின்தொடர்ந்து சென்றனர்.(15)
கலைந்த ஹாரங்களுடனும், கேயூரங்களுடனும் {தோள்வளைகளுடனும்} கூடியவர்களும், {சந்தனப்} பூச்சழிந்தவர்களும், கேசம் {கூந்தல்} அவிழ்ந்தவர்களும், அதேபோல, வியர்வை அரும்பிய முகத்துடன் கூடியவர்களும்,{16} மதசேஷத்தாலும் {கள்வெறியாலும்}, நித்திரையாலும் தள்ளாடுபவர்களும், அழகிய முகம் படைத்தவர்களும், வியர்வையால் கசங்கிய மலர்களுடன் கூடியவர்களும், அழகான மலர்கள் சூடிய கூந்தலுடையவர்களும்,{17} மதிரலோசனைகளும் {கள்வெறி கொண்ட / மதிமயக்கும் கண்களைக் கொண்டவர்களும்}, பிரிய பாரியைகளுமான நாரியைகள் {அன்புக்குரிய மனைவிகளுமான பெண்கள்}, பஹுமானத்தாலும் {மதிப்பாலும்}, காமத்தாலும் {காதலின் மிகுதியாலும்} அந்த நைருதபதி {இரவுலாவிகளின் தலைவனான ராவணன்} செல்கையில், அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(16-18) அவர்களின் பதியும் {தலைவனும் / கணவனும்}, மஹாபலவானும், காமத்துக்கு அடிபணிந்தவனும், சீதையிடம் விருப்பம் கொண்ட மனத்துடன் கூடியவனுமான மந்தன் {ராவணன்}, அழகிய மந்த கதியில் ஒளிர்ந்து கொண்டிருந்தான்[4].(19)
[4] உருப்பசி உடைவாள் எடுத்தனள் தொடர மேனகை வெள்ளடை உதவசெருப்பினைத் தாங்கித் திலோத்தமை செல்ல அரம்பையர்குழாம் புடைசுற்றகருப்புரச்சாந்தும் கலவையும் மலரும் கலந்து உமிழ் பரிமளகந்தம்மருப்புடைப்பொருப்பு ஏர் மாதிரக் களிற்றின் வரிக்கைவாய் மூக்கிடை மடுப்ப- கம்பராமாயணம் 5147ம் பாடல், காட்சிப்படலம்பொருள்: ஊர்வசி, உடைவாளை எடுத்துக்கொண்டு தொடர, மேனகை வெற்றிலையை வழங்க, திலோத்தமை செருப்பைச் சுமந்தபடி செல்ல, தேவமகளிர் கூட்டம் பக்கங்களில் சூழ, கற்பூரங்கலந்த சந்தனமும், குங்குமம் கலந்த சாந்தும், பலவகை பூக்களும் கலந்து வெளிப்படும் நறுமணம், சிகரங்களுடன் கூடிய மலைகளுக்கு ஒப்பான திக்கு யானைகளின் கோடுகளைப் பெற்ற துதிக்கையில் வாய்த்த மூக்கில் கலக்கவும் {ராவணன் சென்றான்}.
அப்போது, மாருதாத்மஜனான அந்தக் கபி {வாயு மைந்தனும், குரங்குமான ஹனுமான்}, அந்தப் பரம ஸ்திரீகளுடைய காஞ்சினிகளின் {தங்கத்தாலான இடைக்கச்சைகளின்} நாதத்தையும், நூபுரங்களின் சுவனத்தையும் கேட்டான்.(20) ஒப்பற்ற கர்மங்களை {செயல்களைச்} செய்பவனும், சிந்தனைக்கரிய பலத்தையும், பௌருஷத்தையும் {ஆண்மையையும்} கொண்டவனுமானவன் {ராவணன்}, துவாரதேசத்தை {அசோகவனத்தின் நுழைவாயிலை} அடைந்ததைக் கபியான ஹனுமான் கண்டான்.(21) கந்த தைலத்தில் நனைந்தவையும், முன்னே சுமந்து செல்லப்படுபவையுமான ஆநேக தீபிகைகளால் {நறுமணமிக்க எண்ணெயுடன் கூடிய பல விளக்குளால்} எங்கும் பிரகாசிப்பவனும்,(22) காமதர்ப்பமதத்துடன் {காமம் / செருக்கு / வெறி ஆகியவற்றுடன்} கூடியவனும், வளைந்தவையும், சிவந்தவையுமான நீண்ட விழிகளைக் கொண்டவனும், வில்லைத் தரியாத கந்தர்ப்பனை {மன்மதனைப்} போன்றவனும்,(23) பிழிந்த அம்ருதத்தின் {பாலின்} வெண்ணுரை போன்ற களங்கமற்ற உத்தம வஸ்திரத்தை விளையாட்டாக சீரமைப்பவனும், அங்கதங்களுடன் கூடியவனும்,(24) சமீபத்தை அடைபவனுமான அவனை {அருகில் வருபவனுமான ராவணனை}, தழை பரந்ததும், இலைகளாலும், புஷ்பங்களாலும் மறைக்கப்பட்டதுமான கிளையில் ஒளிர்பவனுமானவன் {ஹனுமான்}, கவனிக்கத் தொடங்கினான்.(25) அதன்பிறகு, எங்கும் நோக்கிக் கொண்டிருந்த கபிகுஞ்சரன் {குரங்குகளில் சிறந்த ஹனுமான்}, ரூப, யௌவனம் நிறைந்த வரஸ்திரீகளை {வடிவமும், இளமையும் நிறைந்த சிறந்த பெண்களைக்} கண்டான்.(26)
பெரும் புகழ் பெற்றவனும், நல்ல ரூபங்கொண்டவர்களால் {பெண்களால்} சூழப்பட்டவனுமான ராஜா {ராவணன்}, மிருகபக்ஷிகளால் ஒலிக்கப்பெற்றதான அதற்குள் {அசோக வனத்திற்குள்} பிரவேசித்தான்.(27) வெறி கொண்டவனும், விசித்திர ஆபரணங்களுடன் கூடியவனும், ஷங்குகர்ணனும் {கூரிய காதுகளுடன் கூடியவனும்}, மஹாபலவானும், விஷ்ரவஸின் புத்திரனுமான ராக்ஷசாதிபனை அவன் {ஹனுமான்} கண்டான்.{28} தாரைகளுடன் {நட்சத்திரங்களுடன்} கூடிய சந்திரனைப் போலப் பரம நாரீகளுடன் கூடியவன் {சிறந்த பெண்களுடன் கூடிய ராவணன்}, மஹாதேஜஸ்வியான மஹாகபியால் {பெருங்குரங்கான ஹனுமானால்}, காணப்பட்டான்.(28,29)
மஹாதேஜஸ்வியும், மாருதாத்மஜனுமான வானரன் ஹனுமான், “மஹாபாஹுவான இவனே ராவணன்” என்று சிந்தித்துக் கீழே குதித்தான்.(30) உக்கிர தேஜஸ்ஸுடன் கூடிய ஹனுமான், அவனுடைய {ராவணனின்} தேஜஸ்ஸில் மூழ்கியவனைப் போல, அடர்ந்த இலைக்கூட்டங்களுக்குள் அடங்கி மறைந்து கொண்டான்.(31)
அந்த ராவணன், கரிய கேசத்தையும் {கருங்குழலையும்}, அழகிய நிதம்பங்களையும், நன்கமைந்த ஸ்தனங்களையும், கரிய கடைக்கண்களையும் கொண்டவளை {சீதையைக்} காணவிரும்பி {அவளை} நெருங்கினான்.(32)
சுந்தர காண்டம் சர்க்கம் – 18ல் உள்ள சுலோகங்கள்: 32
Previous | | Sanskrit | | English | | Next |