Wives of the King | Sundara-Kanda-Sarga-09 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராவணனின் அந்தப்புரம் குறித்த வர்ணனை; இராவணனின் மனைவியர் நிறைந்த ஒரு மண்டபத்தின் வழியாகக் கடந்து சென்ற ஹனுமான்...
மாருதாத்மஜனான ஹனுமான், அந்தச் சிறந்த ஆலயத்தின் மத்தியில், நெடியதும், விரிந்து பரந்ததுமான சிறந்த பவனத்தை {வீட்டைக்} கண்டான்.(1) ஏராளமான பிராசாதங்களால் {மாடங்களால்} நிறைந்திருந்த ராக்ஷசேந்திரனின் அந்த பவனம், அரை யோஜனை விஸ்தீரணம் கொண்டதாகவும், ஒரு யோஜனை நெடியதாகவும் இருந்தது.(2) அரிசூதனனான {பகைவரை அழிப்பவனான} ஹனுமான், வைதேஹியும் {விதேஹ ராஜனின் மகளும் / இளவரசியும்}, நீள்விழியாளுமான சீதையைத் தேடும்பொருட்டு அனைத்துப் பக்கங்களிலும் சுற்றிவந்தான்.(3) லக்ஷ்மீவானான ஹனுமான், ராக்ஷசர்களின் உத்தம வசிப்பிடத்தைப் பார்த்த பிறகு, ராக்ஷசேந்திரனின் நிவேசனத்தை நெருங்கினான்.{4} நான்கு தந்தங்களுடையவற்றாலும், அப்படியே மூன்று தந்தங்கள் உடையவற்றாலும், இரண்டு தந்தங்கள் உடையவற்றாலும் {யானைகளாலும்}, இடைவெளிவிட்டு நின்ற ஆயுதம் ஏந்தியவர்களாலும் {ராக்ஷசர்களாலும்} அது ரக்ஷிக்கப்பட்டிருந்தது.(4,5)
இராவணனின் பத்தினிகளான ராக்ஷசிகளாலும், விக்கிரமத்தால் கொண்டுவரப்பட்ட ராஜகன்னிகைகளாலும் சூழப்பட்டிருந்த அந்த நிவேசனமானது,{6} முதலைகளாலும், மகரங்களாலும், திமிங்கலங்களாலும், பிற மீன்களாலும் நிறைந்திருப்பதும், பன்னகங்களுடன் {பாம்புகளுடன்} கூடியதும், வாயு வேகத்தால் அசைவதுமான சாகரத்தைப் போல இருந்தது.(6,7) எந்த லக்ஷ்மி {செழிப்பு} வைஷ்ரவணனிடத்தில் {குபேரனிடத்தில்} இருக்கிறதோ, எது ஹரிவாஹனனான {பச்சை நிறக் குதிரைகளைக் கொண்ட} இந்திரனிடத்தில் இருக்கிறதோ அவை {அந்தந்த செல்வங்கள்} அனைத்தும் ராவணனின் கிருஹத்தில் நித்தியம் வற்றாதவையாக இருந்தன.(8) எது ராஜா குபேரன், யமன், வருணன் ஆகியோரிடம் இருக்கிறதோ, அதே ஐசுவரியம், அல்லது அதைவிட அதிகமான பெருஞ்செல்வம் அங்கே ராக்ஷசகிருஹத்தில் இருந்தது.(9) பவனாத்மஜன் {வாயு மைந்தனான ஹனுமான்}, நன்கு நிர்மாணிக்கப்பட்டதும், மதங்கொண்ட யானைகள் நிறைந்ததுமான அந்த மாளிகையின் மத்தியில் மற்றொரு வேஷ்மத்தைக் கண்டான்.(10)
புஷ்பகம் என்ற பெயரைக் கொண்டதும், சர்வ ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டதுமான எந்த திவ்ய விமானம், திவத்தில் {சொர்க்கத்தில்} பிரம்மனின் அர்த்தத்திற்காக விஷ்வகர்மனால் செய்யப்பட்டதோ,{11} பெருந்தபத்தின் மூலம் பிதாமஹனிடமிருந்து {பிரம்மனிடம் இருந்து} குபேரன் எதை அடைந்தானோ, அதை, வலிமையின் மூலம் குபேரனை வென்று ராக்ஷசேஷ்வரன் {ராவணன்} அடைந்தான்.(11,12) ஓநாய்களின் சித்திரங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், வெள்ளி மற்றும் ஸ்வர்ண வர்ணம் கொண்டவையும், செழிப்பின் ஒளியால் நன்கு அமைக்கப்பட்டவையுமான ஸ்தம்பங்களால் {தூண்கள்} ஆதரிக்கப்பட்டிருந்தது.{13} சுபமான வடிவில் அம்பரத்தை {வானத்தைத்} தொட்டுவிடுவதைப் போல, மேருவுக்கும், மந்தரத்திற்கும் இணையான கூடங்களுடனும் {கோபுரங்களுடனும்}, சிகரங்களுடனும் சுற்றிலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(13,14) ஹேமத்தாலான {தங்கத்தாலான} படிக்கட்டுகளுடனும், அழகியவையும், சிறந்தவையுமான வேதிகைகளுடனும், ஜுவலனுக்கும் {அக்னிக்கும்}, அர்க்கனுக்கும் {சூரியனுக்கும்} ஒப்பாக விஷ்வகர்மனால் நன்கு செய்யப்பட்டிருந்தது.(15)
காஞ்சனம், ஸ்படிகங்களாலான ஜாலங்கள் {சாளரங்கள்}, வாதானங்களுடனும் {காற்றோடிகளுடனும்}, இந்திர நீலம், மஹாநீலம் முதலிய சிறந்த மணிகளாலான வேதிகைகளுடனும் இருந்தது.(16) ஒப்பற்றவையான மணிகளுடனும், மஹா மதிப்புமிக்க மணிகளுடனும், விசித்திரமான வைடூரிய வண்ணத்திலான தலங்களுடனும் {தரைகளுடனும்} அஃது ஒளிர்ந்து கொண்டிருந்தது.(17) சிவப்பாகவும், புடம்போட்ட பொன்னுக்கு ஒப்பாகவும், சந்தனத்தின் புண்ணிய கந்தத்துடனும், இளம் ஆதித்யனுக்கு ஒப்பாகவும் திகழ்ந்து கொண்டிருந்தது.(18) கூடாகாரங்களால் {கோபுரங்கள், சிகரங்களால்} அலங்கரிக்கப்பட்டதும், சிறந்த வடிவம் கொண்டதும், திவ்யமானதுமான அந்த புஷ்பக விமானத்தில் மஹாகபி {பெருங்குரங்கான ஹனுமான்} ஏறினான்.(19) அப்போது அங்கிருந்தவன் {ஹனுமான்}, பானங்கள், பக்ஷியங்கள் {தின்பண்டங்கள்}, அன்னங்களின் {உணவுகளின்} மூலம் உண்டாகி, அனைத்துப் பக்கங்களிலும் பரவிய, அநிலரூபத்திலான {காற்றின் வடிவிலான} திவ்யமான கந்தத்தை {தெய்வீக நறுமணத்தை} நுகர்ந்தான்.(20) அந்த ராவணன் எங்கேயிருக்கிறான் என்பதைக் காட்ட ஒரு பந்து {உறவினன்}, மற்றொரு உத்தம பந்துவிடம், “இங்கே வா” என்பதைப் போல, அந்த கந்தம், அவனை {ஹனுமானை} அழைப்பதைப் போலிருந்தது.(21)
அங்கிருந்து புறப்பட்டவன் சுபமானதும், ஸ்திரீகளில் சிறந்த காந்தைகளைப் போல ராவணனின் மனத்தைக் கவர்ந்ததுமான மஹத்தான சாலையை {பெரும் மண்டபத்தைக்} கண்டான்.(22) மத்தியில் தந்தங்களாலான ரூபங்கள் பதிக்கப்பட்டதும், ஸ்படிக்கத்தாலானதுமான தரையுடனும், மணிகள் பதிக்கப்பட்ட படிக்கட்டுகளுடனும் அமைக்கப்பட்டு, ஹேம ஜாலங்களால் {பொற்சாளரங்களால்} அலங்கரிக்கப்பட்டிருந்தது.(23) முத்துக்களாலும், பவளங்களாலும், வெள்ளியாலும், பொன்னாலும், மணிகளாலும் நன்கு அலங்கரிக்கப்பட்ட ஸ்தம்பங்களாலும் {தூண்களாலும்}, இன்னும் ஏராளமான ஸ்தம்பங்களாலும் அஃது {அந்த மண்டபம்} அலங்கரிக்கப்பட்டிருந்தது.(24) சற்றே வளைந்தவையும், நேரானவையும், உயர்ந்தவையும், நன்கு அலங்கரிக்கப்பட்டவையுமாக எங்குமிருந்த ஸ்தம்பங்களால் நீண்ட சிறகுகளுடன் திவத்திற்கு {சொர்க்கத்திற்குப்} புறப்படுவதுபோலத் தெரிந்தது.(25)
{ஆறுகள், மலைகள், கடல்கள், கானகங்கள் உள்ளிட்ட} பிருத்வியின் லக்ஷணங்கள் அனைத்துடன் கூடிய மஹத்தான கம்பளத்தால் அது {அந்த மண்டபம்} மறைக்கப்பட்டிருந்தது, ராஷ்டிரங்கள், கிருஹங்களின் மாலைகளுடன் {வரிசைகளுடன்} கூடிய விஸ்தீரணமான பிருத்வியை {பரந்த பூமியைப்} போலிருந்தது.(26) மதங்கொண்ட பறவைகளின் நாதம் எதிரொலிப்பதும், திவ்யகந்தத்தால் வாசனையூட்டப்பட்டதும், மிகச்சிறந்த திரைச்சீலைகள் தொங்குவதுமான அது ராக்ஷசாதிபனால் சேவிக்கப்பட்டது.(27) அகில் தூபத்தின் புகையுடன் அஃது இருந்தது; ஹம்சத்தை {அன்னப்பறவையைப்} போல வெண்ணிறத்தில் இருந்தது; புஷ்ப ஆபரணங்களால் சித்திரமாக இருந்தது; கல்மாஷியை {தெய்வீகப் பசுவைப்} போல நல்ல பிரபையுடன் இருந்தது.(28) மனத்தில் மகிழ்ச்சியை ஜனிக்கச் செய்வது; திவ்யமானது; அழகிய வண்ணம் கொண்டது; ஸ்ரீயை ஜனிக்கச் செய்வதைப் போல சோகத்தை நாசம் செய்வது.(29) மாதாவைப் போல, ராவணனால் பாலிதம் செய்யப்படுவது, பஞ்சேந்திரங்களுக்குரிய உத்தம அர்த்தங்களால் {புலன்நுகர் பொருட்களால்} பஞ்சேந்திரியங்கள் அனைத்திற்கும் திருப்தியை உண்டாக்கியது[1].(30)
[1] நரசிம்மாசாரியர் பதிப்பில், “ராவணனால் பாதுகாக்கப்பட்டதாகிய அந்த க்ருஹம், ஸுக ஸ்பர்சமுடைய வாயுவும், கண்களுக்கினிய உருவங்களும், செவிக்கினிய மதுர கானங்களும் மிகுந்த ருசியுள்ள பக்ஷ்யாதிகளும், மனத்திற்கினிய வாஸனையும் அமையப்பெறிருக்கையால் அங்குப் புகுபவருடைய பஞ்சேந்த்ரியங்களுக்கும் தன்னிடமிருக்கிற சிறந்த சப்த, ஸ்பர்ச, ரூப, ரஸ, கந்தங்களென்னும் ஐவகை விஷயங்களால், பெற்ற தாய் தன் குமாரனுக்கு த்ருப்தியை விளைவிப்பது போல் மிகுதியும் த்ருப்தியை விளைவித்தது” என்றிருக்கிறது.
மாருதி, “இது ஸ்வர்க்கம்; இது தேவலோகம்; இதுவே இந்திரபுரி; இது பராசித்தியாக[2] இருக்கவுங்கூடும்” என்று நினைத்தான்.(31) சூதாட்டத்தில் பெருஞ்சூதாடியிடம் தோல்வியடைந்த சூதாடிகள், அசையாமல் சிந்திப்பதைப் போல, காஞ்சன வண்ண தீபங்கள் அசையாமல் இருப்பதைப் பார்த்தான்.(32) “பூஷணங்களின் ஒளியாலும், ராவணனின் தேஜஸ்ஸாலும், தீபங்களின் பிரகாசத்தாலும் அது {மண்டபம்} ஒளிர்ந்து கொண்டிருக்கிறது” என்று நினைத்தான்.(33)
[2] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், “இது கந்தர்வ நகராகவாவது இருக்க வேண்டும்” என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், “அல்லது, “பராஸித்தி” என்று புகழத்தகுந்த ப்ரஹ்ம லோகமோ” என்றிருக்கிறது.
நானாவேஷங்களில் அலங்கரிக்கப்பட்டவர்களும், நானாவர்ண ஆடைகளுடன் கம்பளங்களில் கிடப்பவர்களுமான ஆயிரக்கணக்கான நாரீமணிகளை {சிறந்த பெண்களைக்} கண்டான்.(34) ராத்திரி வரை விளையாடிவிட்டு, அர்த்தராத்திரியில் ஓய்ந்து போன அவர்கள், பானம், நித்திரை ஆகியவற்றின் வசமடைந்து மெய்மறந்து தூங்கினார்கள்.(35) அணிந்திருந்த ஆபரணங்கள் ஒலியெழுப்பாத வகையில் தூங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்கள் கூட்டம், அமைதியான ஹம்சங்களுடனும் {அன்னப்பறவைகளுடனும்}, வண்டுகளுடனும் கூடிய மஹத்தான பத்ம வனம் போல் ஒளிர்ந்து கொண்டிருந்தது.(36) {உதடுகளால்} பற்களை மறைத்தவர்களும், கண்களை மூடிக் கொண்டிருந்தவர்களும், பத்ம கந்தத்துடன் கூடியவர்களுமான அந்தப் பெண்மணிகளின் முகங்களை மாருதி கண்டான்.(37) காலையில் முற்றும் மலர்ந்து, ராத்திரியில் இதழ்கள் குவியும் பத்மங்களைப் போல அப்போது அவை {அவர்களின் முகங்கள்} ஒளிர்ந்து கொண்டிருந்தன.(38) “மதங்கொண்ட ஷட்பதங்கள் {வண்டுகள்}, முற்றும் மலர்ந்த அம்புஜங்களைப் போன்ற அந்த பத்ம முகங்களை மீண்டும் மீண்டும் {வட்டமிட} விரும்புகின்றன”.(39) ஸ்ரீமானான அந்த மஹாகபி இவ்வாறு நினைத்துவிட்டு, மீண்டும், “அவை {அந்த முகங்கள்} தங்கள் குணங்களால் தாமரைகளுக்கு இணையானவையாகவே இருக்கின்றன” என்றும் நினைத்தான்.(40)
சரத்காலத்தில் தாரைகளுடன் {நட்சத்திரங்களுடன்} சோபிக்கும் தெளிந்த வானத்தைப் போல, அவனது {ராவணனின்} அந்த சாலை {மண்டபம்}, அந்த ஸ்திரீகளால் ஒளிர்ந்து கொண்டிருந்தது.(41) அவர்களால் சூழப்பட்டிருந்த அந்த ராக்ஷசாதிபன் {ராவணன்}, தாரைகளால் சூழப்பட்ட ஸ்ரீமான் உடுபதியை {சந்திரனைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(42) அப்போது அந்த ஹரி {ஹனுமான்}, “எந்தெந்த தாரைகள், எஞ்சிய புண்ணியத்துடன் கூடியவையாக அம்பரத்திலிருந்து {வானிலிருந்து| விழுந்தனவோ அவை அனைத்தும் சேர்ந்து இந்தப் பெண்களாகியிருக்கின்றன” என்று நினைத்தான்.(43) அங்கே அந்த யோசிதைகளின் {பெண்களின்} பிரபாவமும் {காந்தியும்}, வர்ணமும், பிரசாதமும் {அருளும்} /அழகும், சுபமான ஒளியை வெளியிடும் மகத்தான தாரைகளைப் போன்று தெளிவாக இருந்தன.(44)
பானம் பருகும்போதோ, நாட்டியமாடும் காலத்திலோ அடர்ந்த பெரும் மாலைகள் கலைந்தும், சிறந்த பூஷணங்கள் புரட்டப்பட்டும் இருந்தவர்கள், நித்திரையால் களவாடப்பட்ட நனவை அடைந்தவர்களாக இருந்தனர்.(45) பரமயோசிதைகள் சிலர், நெற்றியில் ஆச்சரியக் குறியுள்ளவர்களாக {திலகம் அழிந்தவர்களாக} இருந்தனர்; வேறு சிலர் நூபுரங்கள் {சிலம்புகள்} கழன்றவர்களாக இருந்தனர்; வேறு சிலர் ஹாரங்கள் ஒரு பக்கம் நழுவியவர்களாக இருந்தனர்.(46) வேறு சிலர், முத்தாரங்களின் சுழலில் அகப்பட்டவர்களாக இருந்தனர், இன்னும் சிலர், வஸ்திரங்கள் நழுவியவர்களாக இடை ஆபரணங்களைக் கட்டிக் கொண்டு கிஷோர்யங்களுக்கு {பெண் குதிரைகளுக்கு} ஒப்பாக நடந்து கொண்டிருந்தனர்.(47) நல்ல குண்டலங்களைத் தரித்திருந்த வேறு சிலர், மஹாவனத்தில் கஜேந்திரனால் மிதிக்கப்பட்ட லதையை {கொடியைப்} போல அறுந்து கசங்கிய மாலைகளுடன் இருந்தனர்.(48)
சந்திரக் கிரணங்களுடன் கூடிய பெரிய ஹாரங்கள், சில யோசிதைகளுடைய ஸ்தனங்களின் மத்தியில் உறங்கிக் கொண்டிருக்கும் ஹம்சங்களை {அன்னப்பறவைகளைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தன.(49) வேறு சிலரின் வைடூரியங்கள், காதம்ப பக்ஷிகளை {மீன்குத்திப் பறவைப்} போன்றும், வேறு சிலரின் ஹேமசூத்திரங்கள் {பொன்னரி மாலைகள்}, சக்கரவாகங்களைப் போன்றும் {அந்தப் பெண்களின் மார்பின் மத்தியில்} இருந்தன.(50) மணற்குன்றுகளைப் போன்ற அவர்களின் ஜகனங்கள் {பின்பகுதிகள்}, ஹம்ச, காரண்டவ பக்ஷிகளால் நிறைந்தவையும், சக்கரவாகங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான ஆபகங்களை {ஆறுகளைப்} போலிருந்தன.(51) இவ்வாறு கிங்கிணி ஜாலங்கள் {சதங்கைகள்} பிரகாசிக்க உறங்கிக் கொண்டிருந்தவர்கள், முகங்களையே ஹைமஅம்புஜங்களாகவும் {பொற்றாமரைகளாகவும்}, பாவங்களையே {காமக்குறிப்புகளையே} முதலைகளாகவும், புகழையே {அழகையே} தீரமாகவும் கொண்ட நதிகளைப் போல உறங்கிக் கொண்டிருந்தனர்.(52)
சிலரின் மிருதுவான அங்கங்களிலும், முலைமுகங்களிலும் இருந்த மங்கல பூஷணக் கோடுகளும் {நகைவடுக்களும்} பூஷணங்களைப் போலவே தோன்றின.(53) சிலரின் முகத்தில் வெளிப்படும் மாருதத்தால் {மூச்சுக்காற்றால்} ஆடைத்தலைப்புகள் அசைந்து, மீண்டும் மீண்டும் அவர்களின் முகங்களின் மேல் வீசின.(54) நானாவர்ணங்களிலான அவை {அந்தத் தலைப்புகள்}, அழகிய பிரபையுடன் கூடிய பதாகைகள் {வெற்றிக் கொடிகள்} ஏற்றப்பட்டதைப் போல {ராவணனின்} பத்தினிகளின் கன்னங்களில் சுவர்ணமாக ஒளிர்ந்து கொண்டிருந்தன.(55) அங்கே பெரும் மகிமைமிக்க சில அழகிய யோசிதைகளின் {பெண்களின்} குண்டலங்களும், முகமாருதத்தின் {மூச்சுக்காற்றின்} காரணமாக மெதுமெதுவாக ஆடிக் கொண்டிருந்தன.(56) அப்போது இயல்பாகவே சுகமான மணம் கமழும் அவர்களின் வதன சுவாசம், ராவணனுக்குக் கொடுக்கப்படும் சர்க்கராஸவ {சர்க்கரையில் தயாரிக்கப்படும் மதுவின்} கந்தத்துடன் இருந்தது.(57)
இராவணனின் யோசிதைகள் சிலர், சபத்தினிகளின் {சகமனைவிகளின் / சக்களத்திகளின்} முகங்களையே ராவணனின் முகமென நினைத்து மீண்டும் மீண்டும் முகர்ந்தனர்.(58) அந்தச் சிறந்த ஸ்திரீகள், ராவணனிடம் பெரிதும் அர்ப்பணிப்புள்ள மனத்துடன் ஸ்வதந்திரமற்றவர்களாக அப்போது சபத்தினிகளுக்கே {சக்களத்திகளுக்கே} பிரியத்தைச் செய்தனர்[3].(59) இரம்மியமான ஆடைகளுடன் கூடிய வேறு சில பிரமதைகள் {பெண்கள்}, வளையல்கள் அணிந்த தங்கள் கைகளையே தலையணையாக வைத்துக் கொண்டு அங்கே உறங்கிக் கொண்டிருந்தனர்.(60) ஒருத்தி மற்றொருத்தியின் மார்பிலும், வேறொருத்தி தோள்களிலும், இன்னுமொருத்தி மடியிலும், வேறொருத்தி நிதம்பங்களிலும்,(61) மதத்தாலும், ஸ்னேகத்தாலும் தொடைகள், பக்கங்கள், இடைகள், பிருஷ்டங்கள் என பரஸ்பரம் அங்கங்களைப் போட்டுக் கொண்டு கிடந்தனர்.(62)
[3] நரசிம்மாசாரியர் பதிப்பில், “அப்பொழுது ராவண பார்யைகளிற் சிலர் மத்யபானஞ் செய்த மயக்கத்தினால் ராவணனுடைய முகமென்று ப்ரமித்துத் தமது சக்களத்திகளின் முகங்களை அடிக்கடி ஆக்ராணஞ் செய்தனர். அம்மடந்தையர்கள் ராவணனிடத்தில் மிகுதியும் மனப்பற்றுடையவராகையால் மத்யபானத்தினாலும், தூக்க மயக்கத்தினாலும் ஸ்வாதந்த்ரியமின்றி அங்ஙனம் தமது முகத்தைச் சக்களத்திகள் ஆக்ராணஞ் செய்யும்பொழுது ராவணனே ஆக்ராணஞ் செய்கிறானென்று நினைத்துத் தாமும் அவரது முகத்தை ஆக்ராணச் செய்து அவர்க்கு ப்ரியத்தையே செய்தனர்” என்றிருக்கிறது.
அன்யோன்யம் புஜசூத்திரங்களால் {தோள்களெனும் கயிறுகளால்} கட்டப்பட்டிருந்த அந்த ஸ்திரீ மாலை, சூத்திரங்களில் {நூல்களில்} கட்டப்பட்டதும், மதங்கொண்ட வண்டுகள் மொய்ப்பதுமான மலர்மாலையைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.(63) மாதவ {வைகாசி} மாசத்தில், வாயுவின் வருடலில் முற்றும் மலர்ந்த லதைகளில் {கொடிகளில்}, மலர்க்குவியல்களைக் கலந்து, அன்யோன்யம் மாலையாகக் கட்டப்பட்டு,{64} {தேனீக்களால் மொய்க்கப்பட்டு} அன்யோன்யம் கூந்தலால் வருடப்படும் அழகிய தோள்களெனும் கிளைகளைக் கொண்ட உயர்ந்த வனத்தைப் போல ராவணனின் அந்த ஸ்திரீ வனம் திகழ்ந்தது.(64,65)
அப்போது அந்த யோசிதைகளின் {பெண்களின்} ஆபரணங்கள், அங்கங்கள், வஸ்திரங்கள், மாலைகள் ஆகியவை இருக்க வேண்டிய இடங்களில் இருந்துங்கூட, இன்னின்ன இன்னின்னாருடையவை என்பதைத் தெளிவாக அறியமுடியவில்லை.(66) எரியும் காஞ்சன தீபங்கள், ராவணன் சுகமாகத் உறங்குகையில் விதவிதமான பிரபைகளுடன் கூடிய அந்த ஸ்திரீகளை இமைகொட்டாமல் பார்ப்பதைப் போலிருந்தது.(67) இராஜரிஷிகள், பித்ருக்கள், தைத்தியர்கள், கந்தர்வர்கள் ஆகியோரின் பெண்களும், ராக்ஷசர்களின் கன்னிகைகளும் காமவசமடைந்தவர்களாக அவனிடம் சென்றிருந்தனர்.(68) அந்த ஸ்திரீகள் அனைவரும், யுத்தத்தில் ஆசையுள்ள ராவணனால் அபகரித்துக் கொண்டுவரப்பட்டவர்கள்; {இளமையெனும்} மதமேறிய சிலரோ மதனனால் மோஹமடையச் செய்யப்பட்டவர்களாகத் தானாகவே வந்தவர்கள்.(69) அங்கே அந்த ஜனகாத்மஜையைத் தவிர, ஒரேயொரு பிரமதையாவது {பெண்ணாவது} பலவந்தமாகக் கொண்டுவரப்பட்டவளல்ல. பெண்களில் சிறந்தவர்கள் குணத்தாலேயே கொண்டு வரப்பட்டனர். அங்கே வேறொருவன் மீது ஆசை கொண்ட ஒருத்தியுமில்லை; அதேபோல அங்கே வேறொரு காதலைக் கொண்டவள் ஒருத்தியுமில்லை.(70) நல்ல குலத்தைச் சாராதவள் எவளும், ரூபநளினமில்லாத எவளும், திறனில்லாத எவளும், சேவிக்கப்படாத எவளும், ஈன புத்தி கொண்டவள் எவளும், காமத்தைத் தூண்டாத காந்தையர் எவளும் அவனது பாரியையாக இல்லை.(71)
சாதுபுத்தி கொண்ட ஹரீஷ்வரனுக்கு {ஹனுமானுக்கு}, “இராக்ஷச ராஜபாரியைகளான இவர்களைப் போலவே, ராகவரின் தர்மபத்தினியும் {தனது பர்த்தாவுடன்} விடப்பட்டிருந்தால் இவனுக்கு {ராவணனுக்கு} நன்மையே நேர்ந்திருக்கும்” என்ற புத்தி உண்டானது.(72) துக்கத்துடன் கூடியவன், “சீதை நிச்சயம் மேலான நற்குணங்களைக் கொண்டவள்; மஹாத்மாவான இந்த லங்கேஷ்வரனே அவளிடம் அநாரியமாக நடந்து கொண்டான். கஷ்டம்” என்று மீண்டும் இவ்வாறு சிந்தித்தான்.(73)
சுந்தர காண்டம் சர்க்கம் – 09ல் உள்ள சுலோகங்கள்: 73
Previous | | Sanskrit | | English | | Next |