A reward for penance | Sundara-Kanda-Sarga-08 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: புஷ்பக விமானத்தைக் குறித்த அதிக வர்ணனை...
அந்த பவனத்தின் மத்தியில் நிறுத்தப்பட்டிருக்கும் மஹத்தான விமானம், மணி, வஜ்ரங்களால் சித்திரமாக அமைக்கப்பட்டிருப்பதையும், புடம்போட்ட ஜாம்பூநத ஜாலங்களால் {தங்கச் சாளரங்களால்} அலங்கரிக்கப்பட்டிருப்பதையும் பவனாத்மஜனான {வாயு மைந்தனான} அந்த வீரக் கபி கண்டான்.(1) ஒப்பில்லாத வகையிலான அழகுடன் செய்யப்பட்டதும், விஷ்வகர்மனால் தானே புகழும் வகையில் இயற்றப்பட்டதும், வானத்தை அடையவல்லதும், வாயு பாதையில் நிறுத்தப்பட்டதுமான அஃது, ஆதித்ய பாதைக்கான லக்ஷ்மியை {சூரியப் பதவிக்கான அடையாளத்தைப்} போல் ஒளிர்ந்து கொண்டிருந்தது.(2)
பிரயத்னத்தால் {முயற்சியால்} செய்யப்படாத ஏதும் அதில் இல்லை; ரத்தினங்களில் சிறந்தவற்றைத் தவிர வேறேதும் அதில் இல்லை; ஸுரேஷ்வர்களிடமும் {தேவர்களிடமும்} அந்த விசேஷங்கள் நியதமாக {உறுதியாக} இல்லை; மஹாவிசேஷம் இல்லாதது ஏதும் அதில் இல்லை.(3) தபஸ்ஸின் பராக்கிரமத்தால் அஃது அடையப்பட்டது; குவிந்த மனத்தின் எண்ணங்களால் இயக்கப்படுவது; அனேக ஸ்தான விசேஷங்களால் நிர்மாணிக்கப்பட்டது; ஆங்காங்கேயுள்ள விசேஷங்களுக்கு இணையான தோற்றத்தைக் கொண்டிருந்தது.(4)
விசேஷமான பொருட்களால் விசேஷமாக ஏற்படுத்தப்பட்டது; விசித்திர கூடத்தை {அற்புத முகட்டுடன் கூடிய மலையைப்} போன்ற ஏராளமான கூடங்களால் அலங்கரிக்கப்பட்டது; மனத்தை ஈர்க்கும் சரத்காலம் போல நிர்மலமானது {களங்கமற்ற அமைதியுடன் கூடியது}; கிரி சிகரங்களைப் போன்ற விசித்திரக் கூடங்களுடன் {அற்புதமான சிறு முகடுகளுடன்} கூடியது.(5)
குண்டலங்களால் முகங்கள் சோபிப்பவர்களும், மஹாசனர்களும் {பெருந்தீனிக்காரர்களும்}, வானில் திரிபவர்களுமான நிசாசரர்களும் {இரவுலாவிகளான ராக்ஷசர்களும்}, உருண்டு அகன்ற விகாரமான கண்களுடனும், மஹாவேகத்துடனும் கூடிய ஆயிரக்கணக்கான பூதகணங்களும் அதைச் சுமக்கின்றனர் {பாதுகாக்கின்றனர்}[1].(6) வசந்த கால புஷ்பங்களுடன் அழகிய தோற்றந்தரும் புஷ்பகம் எனும் அந்த உத்தம விமானத்தை அங்கே வானரவீரசத்தமனானவன் {ஹனுமான்} கண்டான்.(7)
[1] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், “இங்கு, வஹந்தி யம் குண்ட³ஷோ²பி⁴தானனா | மஹாஷ²னா வ்யோமசரா நிஷா²சரா꞉ | விவ்ருʼத்தவித்⁴வஸ்தவிஷா²லலோசனா | மஹாஜவா பூ⁴தக³ணா꞉ ஸஹஸ்ரஷ²꞉ ||” என்று மூலம். ராவணாந்தப்புரத்தில் விமானம் இருக்கின்றது. தானே போகும்படியான அவ்விமானம் புருஷர்களால் தூக்கப்படுகை அஸங்கதமாகையால் (பூ⁴தக³ணா꞉) என்று சொல்லப்பட்ட பூதகணங்களென்பது கோபுரந்தாங்கிகள் போன்ற ப்ரதிமைகளென்று தெரிகின்றது. அல்லது சேதனர்கள் தூண்டதலின்றி அசேதனம் தானாகவே போவது அனுசிதமாகையால் பல்லக்கெடுப்பவர் போல் அவ்விமானத்திற்குப் பூதகணங்கள் வாஹகர்களாயிருந்தார்களென்றுணர்க” என்றிருக்கிறது. சீதையைக் கடத்திவந்தபோது ராவணன் பயன்படுத்தியது கோவேறு கழுதைகள் பூட்டப்பட்ட திவ்யமான மஹாரதமாகும். அஃது ஆரண்ய காண்டம், 51ம் சர்க்கம், 15ம் சுலோகத்தில் {3:51:15ல்} ஜடாயுவால் அடித்து நொறுக்கப்பட்டது.
சுந்தர காண்டம் சர்க்கம் – 08ல் உள்ள சுலோகங்கள்: 7
Previous | | Sanskrit | | English | | Next |