Saturday 23 December 2023

மந்தோதரி | சுந்தர காண்டம் சர்க்கம் - 10 (54)

Mandodari| Sundara-Kanda-Sarga-10 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனை முதன் முறையாகக் கண்ட ஹனுமான்; ராவணனின் மனைவியர் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டது; மந்தோதரியின் அழகையும் வசீகரத்தையும் கண்டு, அவளே சீதை என நினைத்த ஹனுமான்...

Hanuman sees Ravana sleeping with his wives

அங்கே, சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்த ஹனுமான், முக்கிய ஸ்படிகங்களாலானவையும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், தேவலோகத்தில் இருப்பனவற்றுக்கு ஒப்பானவையுமான சயனங்களையும், ஆசனங்களையும்  கண்டான்.{1} அவை, தந்தங்கள், காஞ்சனத்தாலான சித்திரமான அங்கங்களுடன் கூடியும், வைடூரியங்களால் இழைக்கப்பட்ட விலையுயர்ந்த மெத்தைகளால் மறைக்கப்பட்டும் இருந்தன.(1,2) அங்கே {அந்த மண்டபத்தின்} ஒரு பகுதியில் சிறந்த மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், தாராதிபதிக்கு {நட்சத்திரங்களின் தலைவனான சந்திரனுக்கு} ஒப்பானதுமான வெண்குடையை அவன் கண்டான்.(3) ஜாதரூபத்தாலானதும் {தங்கத்தாலானதும்}, சித்திரபானுவுக்கு {அக்னிக்கு} ஒப்பான ஒளியுடன் கூடியதும், அசோக மாலைகள் பரப்பப்பட்டதுமான பரமாசனம் {உயர்ந்த படுக்கை} ஒன்றையும் கண்டான்.(4) அது, சுற்றிலும் வெண்சாமரங்களைக் கொண்ட ஸ்திரீகளால் விசிறப்பட்டு, விதவிதமான கந்தங்களாலும் {பலவித வாசனைகளாலும்}, சிறந்த தூபங்களாலும் மணங்கமழப்பெற்றிருந்தது.(5) ஆட்டுத் தோலினால் செய்யப்பட்ட மிக உயர்ந்த விரிப்பு அதில் விரிக்கப்பட்டிருந்தது. மேன்மையான மாலைகளின் வரிசைகளால் சுற்றிலும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.(6)

மேகத்திற்கு ஒப்பானவனும், பிரகாசமாக ஒளிரும் குண்டலங்களுடனும், சிவந்த கண்களுடனும், நீண்ட கைகளுடனும்,  பொன்வஸ்திரங்களுடனும் கூடியவனும்,(7) அந்திவேளை சிவந்த ஆகாசத்தில் மின்னல்களுடன் கூடிய மேகத்தைப் போல செஞ்சந்தனத்தால் பூசப்பட்ட அங்கங்களைக் கொண்டவனும்,(8) திவ்ய ஆபரணங்களுடன் கூடியவனும், நல்ல ரூபம் கொண்டவனும், விரும்பிய ரூபத்தை ஏற்கும் திறனுள்ளவனும், மரங்கள், புதர்கள் அடர்ந்து {அசையாமல்} உறங்கிக் கொண்டிருக்கும் மந்தரத்தை {மந்தர மலையைப்} போன்றவனும்,(9) ராத்திரியில் விளையாடிக் களைத்தவனும், சிறந்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனும், ராக்ஷச கன்னிகையருக்குப் பிரியனும், ராக்ஷசர்களுக்கு சுகத்தை விளைவிப்பவனும்,(10) வீரனுமான ராக்ஷசாதிபன் {ராவணன்}, மது பருகி அழகிய சயனத்தில் ஓய்ந்து உறங்கிக் கொண்டிருப்பதை அந்த மஹாகபி {பெருங்குரங்கான ஹனுமான்} கண்டான்.(11) அந்த வானரரிஷபன், ராவணனை நெருங்கியதும் பெரிதும் கலங்கி, பீதியால் அங்கிருந்து நழுவிச் சென்று, நாகத்தைப் போல பெருமூச்சு விட்டான்.(12) பிறகு, படியில் ஏறி, வேறொரு வேதிகையில் {திண்ணையில்} தஞ்சமடைந்து, உறங்கிக் கொண்டிருக்கும் ராக்ஷச சார்தூலனை {ராக்ஷசர்களில் புலியான ராவணனை} மீண்டும் பார்த்தான்.(13) இராக்ஷசேந்திரன் உறங்கிக் கொண்டிருந்த உத்தம சயனமானது, மதங்கொண்ட ஹஸ்தி {யானை} உறங்கும் மஹத்தான பிரஸ்ரவணத்தை {அருவிகளுடன் கூடிய மலையைப்} போலத் திகழ்ந்தது.(14) 

மஹாத்மாவான ராக்ஷசேந்திரனின் புஜங்கள் {கைகள்}, காஞ்சனத்தாலானவையும், இந்திரத் துவஜத்திற்கு ஒப்பானவையுமான தளர்ந்த தோள்வளைகளுடனும்,(15) {இந்திரனின் யானையான} ஐராவதத்தின் கூரிய தந்தங்களால் குத்தப்பட்ட தழும்புகளுடனும், வஜ்ரம் {வஜ்ராயுதம்} உராய்ந்த பருத்த தோள்களுடனும், விஷ்ணு சக்கரத்தால் தாக்கப்பட்ட தடத்துடனும்,(16) உடலின் விகிதத்திற்கு ஏற்ப நன்கு பருத்து, சமமாக இருந்த பலமிக்க தோள்களுடனும், நல்ல கட்டைவிரல்களுடனும், முழங்கைமூட்டுகளுடனும், நல்ல விரல்களுடனும், உள்ளங்கைகளுடனும்,(17) நல்ல பலமான கணுக்களுடனும், பரிகத்தின் வடிவத்துடனும், யானைகளின் துதிக்கைகளுக்கு ஒப்பாகவும், சுபமான சயனத்தில் கிடக்கும் பஞ்ச சிர உரகங்களை {ஐந்து தலை பாம்புகளைப்} போன்றவையாகவும் {ராவணனின் புஜங்கள்} இருந்தன.(18) முயலின் ரத்தத்திற்கு ஒப்பானதும், குளிர்ந்ததும், நல்ல கந்தம் கொண்டதுமான சிறந்த சந்தனத்தால் நன்கு பூசப்பட்டும், நன்கு அலங்கரிக்கப்பட்டும்,{19} உத்தம ஸ்திரீகளால்  பிடித்துவிடப்பட்டும், உத்தம கந்தத்தால் சேவிக்கப்பட்டும், யக்ஷர்கள், பன்னகர்கள், கந்தர்வர்கள், தேவர்கள், தானவர்கள் ஆகியோரை ராவணஞ்செய்ய வைத்ததுமான {கதறச் செய்ததுமான}(19,20) {ராவணனின்} கைகள், மந்தரத்தின் அந்தரத்தில் கோபத்தில் உறங்கும் மஹா சர்ப்பங்களைப் போல அங்கே மஞ்சத்தில் கிடப்பதை அந்தக் கபி {குரங்கான ஹனுமான்} கண்டான்.(21) அசலத்திற்கு {மலைக்கு} ஒப்பான அந்த ராக்ஷசேஷ்வரன் {ராவணன்}, பரிபூர்ணமான கட்டமைப்பில் ஒளிரும் அந்த புஜங்களால், சிருங்கங்களுடன் கூடிய மந்தரத்தைப் போல திகழ்ந்தான்.(22)

மாம்பூ, புன்னை மலர் ஆகியவற்றின் மணத்தாலும், உத்தம மகிழம்பூ, சமைக்கப்பட்ட அன்னங்கள், பானங்கள் ஆகியவற்றின் கந்தத்தாலும் {உணவு வகைகள் மற்றும் மது வகைகளின் மணத்தாலும்},{23} அங்கே சயனித்துக் கொண்டிருந்த ராக்ஷசசிம்ஹனின் {ராக்ஷசர்களில் சிங்கமான ராவணனின்} மஹாமுகத்தில் வெளிப்பட்ட சுவாசமானது அந்த கிருஹத்தை நிறைத்தது.(23,24)

முத்துக்களாலும், நன்மணிகளாலும், காஞ்சனத்தாலும் விசித்திரமாகச் செய்யப்பட்டதும், சற்றே நழுவியிருப்பதுமான மகுடத்தால் ஒளிர்ந்து கொண்டிருந்ததும், குண்டலங்களால் ஜுவலிப்பதுமான முகத்துடன் கூடியவனும்,{25} செஞ்சந்தனம் பூசப்பட்டு, ஹாரங்களால் சோபிப்பதும், பருத்துத் திரண்டு அகன்றிருப்பதுமான மார்புடன் ஒளிர்பவனும்,{26} வெள்ளை நிறம் கொண்டதும், நழுவி விழுந்திருப்பதுமான பட்டு உத்தரீயத்துடனும், ரத்தம் போல் சிவந்த கண்களுடனும், மிக விலையுயர்ந்த, மஞ்சள் வஸ்திரத்தை அழகாக உடுத்தியிருப்பவனும்,{27} மாஷராஷிப்ரதீகாஷத்துடன் கூடியவனும் {கரிய உளுந்துக் குவியலுக்கு நிகரான நிறமுடையவனும்}, புஜங்கத்தை {பாம்பைப்} போல் மூச்சு விடுபவனும், மஹத்தான கங்கை நீரின் மத்தியில் நன்றாக உறங்கும் குஞ்சரத்தை {யானையைப்} போன்றவனும்,{28} காஞ்சனமயமான தீபங்களால் நான்கு திசைகளும் பிரகாசிக்கப்பெற்று, மின்னல்களால் ஒளிரும் மேகம் போன்ற அங்கத்தை கொண்டவனும்,{29} நல்ல மஹாத்மாவும், பார்யைகளிடம் பிரியம் கொண்டவனுமான அந்த ராக்ஷசபதியின் {ராவணனின்} கிருஹத்தில், பாதமூலத்தில் {அவனது கால்களின் அடியில்} படுத்திருக்கும் {அவனது} பத்தினிகளையும் அவன் {ஹனுமான்} கண்டான்.(25-30)

சசியின் {சந்திரனின்} பிரகாசத்துடன் கூடிய வதனங்களுடன் கூடியவர்களும், அழகிய குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களும், தேயாத மாலையாபரணங்களுடன் கூடியவர்களுமான அவர்களை ஹரியூதபன் {ராவணனின் பத்தினிகளை குரங்குக் குழுத் தலைவனான ஹனுமான்} கண்டான்.(31) நிருத்தவாத்திய குசலர்களும் {ஆடல் பாடல்களில் வல்லவர்களும்}, ராக்ஷசேந்திரனின் புஜங்களை அடைந்தவர்களும், சிறந்த ஆபரணங்களைத் தரித்தவர்களுமான அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதை அந்த ஹரி {குரங்கான ஹனுமான்} கண்டான்.(32) காதுகளின் நுனிகளில் இருந்தவையும், வஜ்ர, வைடூரியங்கள் பதிக்கப்பட்டவையும், பசும்பொன்னாலானவையுமான அந்த யோசிதைகளின் {பெண்களின்} குண்டலங்களையும், அங்கதங்களையும் {தோள்வளைகளையும்} கண்டான்.(33) லலித {மெல்லிய அழகு} குண்டலங்களுடன் கூடியவையும், சந்திரனுக்கு ஒப்பானவையுமான முகங்களால் சுபமான அந்த விமானம் {மாளிகை}, தாராகணங்களுடன் கூடிய நபத்தை {நட்சத்திரங்களுடன் கூடிய வானத்தைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.(34) மெல்லிடைகளைக் கொண்ட அந்த ராக்ஷசேந்திரனின் யோசிதைகள் {மகளிர்}, மதத்தால் {குடிவெறியால் / காமவெறியால்} களைப்படைந்த அந்தந்த அவகாசத்தில் {அந்தந்த இடங்களிலேயே, அந்தந்த நேரங்களிலேயே} உறங்கினர்.(35) 

நிருத்தசாலினியும் {நடனத்தில் திறமையுள்ளவளும்}, வரவர்ணினியுமான {சிறந்த நிறம் கொண்டவளுமான} ஒருத்தி, ஆடல் அசைவுகளில் அனைத்து அங்கங்களும் இயங்குவதைப் போலவே, கோமளமான அங்க அபினயங்களுடன் {ஒயிலாக} உறங்கிக் கொண்டிருந்தாள்.(36) வீணையைத் தழுவியபடியே உறங்கிக் கொண்டிருந்த ஒருத்தி, மஹாநதியால் வீசப்பட்டு, ஓடத்தை அடைந்த நளினியை {தாமரைக் கொடியைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தாள்.(37) கக்கத்தில் மட்டுகத்தை {மட்டுக வாத்தியத்தை} வைத்துக் கொண்டு உறங்கும் கரிய கண்களைக் கொண்ட மற்றொருத்தி, பாலபுத்திரனை {சிறுவனை} அன்புடன் சுமக்கும் பாமினியை {அழகிய பெண்ணைப்} போல ஒளிர்ந்தாள்.(38) சர்வ அங்கங்களிலும் அழகுடன் கூடியவளும், சுப ஸ்தனங்களைக் கொண்டவளுமான ஒரு பாமினி {அழகிய பெண்}, நீண்ட காலத்திற்குப் பிறகு அடைந்த ரமணனை {காதலனைத்} தழுவிக் கொள்வதைப் போல படஹத்தை {படஹ வாத்தியத்தை} இறுக்கமாகத் தழுவியபடியே உறங்கிக் கொண்டிருந்தாள்.(39) கமலம் போன்ற கண்களைக் கொண்ட இன்னொருத்தி, ரகசியமாகப் பிரியனை கிரஹிக்கும் காமங்கொண்ட காமினியைப் போல, புல்லாங்குழலை அணைத்துக் கொண்டே உறங்கினாள்.(40) நிருத்தசாலினியான {நடனத்தில் திறமையுள்ளவளான} மற்றொருத்தி, காதலனுடன் கூடிய பாமினியை {அழகிய பெண்ணைப்} போல நியதமாக விபஞ்சியைப்[1] பற்றிக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள்.(41) 

[1] இங்கே மூலத்தில் ஆங்காங்கே கொடுக்கப்பட்டுள்ள இசைக்கருவிகளின் பெயர்கள் அப்படியே அந்தந்த இடங்களிலேயே கொடுக்கப்பட்டிருக்கின்றன. இங்கே குறிப்பிடப்படும் மட்டுகம், படஹம் ஆகியவை சிறு பறைகளைப் போன்ற மேள வாத்தியங்களாகும். விபஞ்சி என்பது வீணை போன்ற ஒரு தந்தி வாத்தியமாகும். 

மத்தலோசனையான {மதத்துடன் கூடிய கண்களைக் கொண்ட} மற்றொருத்தி, மிருதுவானவையும், பருத்தவையும், கனகத்திற்கு ஒப்பானவையும், மனோஹரமானவையுமான அங்கங்களில் {மார்புகளில்} மிருதங்கத்தைத்[2] தழுவியபடி உறங்கிக் கொண்டிருந்தாள்.(42) நிந்திக்கத்தகாதவளும், கிருஷோதரியுமான {மெலிந்த வயிற்றைக் கொண்டவளுமான} ஒருத்தி, புஜங்களுக்கிடையில் கக்கத்தை அடைந்த பணவத்துடன் {தம்பட்டம்} கூடியவளாக, காமத்தால் விளைந்த களைப்பில் உறங்கிக் கொண்டிருந்தாள்.(43) அருகில் டிண்டிமத்துடன் {உடுக்கையுடன்} கூடிய மற்றொருத்தி, இளம் குழந்தையைக் கட்டியணைக்கும் பாமினியைப் போல அந்த டிண்டிமத்தை அடைந்து உறங்கினாள்.(44) கமலபத்ராக்ஷியான வேறொரு நாரீ {தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட மற்றொரு பெண்}, ஆடம்பரத்தை[3] மதமோஹிதத்துடன் தோள்களில் அணைத்தவாறே உறங்கிக் கொண்டிருந்தாள்.(45)

[2] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், “இங்கே பலவகையான மேளவகைகளின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை அனைத்தையும் நாம் மேளம் என்றே மொழிபெயர்த்திருக்கிறோம்” என்றிருக்கிறது. 

[3] ஆடம்பரம் என்பது போரிலும், திருமண விழாக்களிலும் பயன்படுத்தப்படும் ஒருவகை முரசாகும்.

கலசத்தைக் கவிழ்த்து வைத்து உறங்கிக் கொண்டிருந்த வேறொரு பாமினி {அழகிய பெண்}, வசந்த காலத்தில் மங்கலநீர் தெளிக்கப்பட்ட, விசித்திர வண்ண புஷ்பங்களாலான மாலையைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தாள்.(46) பலமான நித்திரையில் மூழ்கியிருந்த மற்றொரு அபலை, ஸ்வர்ண கலசங்களுக்கு ஒப்பான தன் மார்புகளைக் கைகளால் மறைத்தபடியே உறங்கிக் கொண்டிருந்தாள்.(47) பூர்ணச் சந்திரனுக்கு ஒப்பான முகத்துடன் கூடிய கமலபத்ராக்ஷியான {தாமரை இதழ் கண்களைக் கொண்டவளான} மற்றொருத்தி, மதத்தில் மூழ்கியவளாக, அழகிய இடையைக் கொண்ட மற்றொருத்தியை ஆலிங்கணம் செய்தபடியே உறங்கிக் கொண்டிருந்தாள்.(48) சிறந்த ஸ்திரீகள் சிலர், காமாந்தகர்களுடன் காமினிகளைப் போல விசித்திரமான வாத்தியங்களைத் தங்கள் மார்புகளில் தழுவியபடியே உறங்கிக் கொண்டிருந்தனர்.(49)

Ravanas bedroom

அவர்களில் ரூபத்தையே சம்பத்தாகக் கொண்டவளும், அருகில் தனியாக ஏற்படுத்தப்பட்டிருந்த சுபமான சயனத்தில் உறங்கிக் கொண்டிருப்பவளுமான ஒரு ஸ்திரீயை அந்தக் கபி {குரங்கான ஹனுமான்} கண்டான்.(50) முத்துக்களாலும், மணிகளாலும் இயற்றப்பட்ட ஆபரணங்களால் நன்கு அலங்கரிக்கப்பட்டவளும், அந்த ஆபரணங்களாலும், இயல்பாக அமைந்த தன்னொளியாலும் அந்த உத்தம பவனத்தை {சிறந்த மாளிகையை} அலங்கரிப்பவளும்,{51} கௌரியும் {பசும்நிறமுடையவளும்}, கனகவர்ணத்தில் ஒளிர்பவளும், {கணவனுக்கு} இஷ்டையும், அந்தப்புரேஷ்வரியும் {அந்தப்புரத்தின் ஈஸ்வரி/தலைவியும்}, சாருரூபிணியுமான {அழகிய வடிவம் கொண்டவளுமான} மந்தோதரி {மண்டோதரி} அங்கே சயனித்துக் கொண்டிருந்தாள்.(51,52) மஹாபாஹுவான அந்த மாருதாத்மஜன், அலங்காரத்துடன் கூடிய அவளைக் கண்டான். “ரூபமும், யௌவனமும் {வடிவழகும், இளமையும்} நிறைந்திருக்கும் தர்க்கத்தின் அடிப்படையில் இவளே சீதைஎன்று {நினைத்து}[4],{53} அந்த ஹரியூதபன் {குரங்குக் குழுத் தலைவனான ஹனுமான்} மஹத்தான மகிழ்ச்சியுடன் ஆனந்தமடைந்தான்.(53,54அ) 

[4] இன்னதன்மையின் எரிமணி விளக்கங்கள்
எழில்கெடப் பொலிகின்ற
தன்னது இன்னொளிதழைப்புறத் துயில்வுறு
தையலை தகைவு இல்லான்
அன்னள் ஆகிய சானகி இவள் என
அயிர்த்து அகத்து எழு வெந்தீ
தன்னும் ஆர்உயிர் உடலொடு சுடுவது ஓர்
துயர்உழுந்து இவை சொன்னான்.

- கம்பராமாயணம் 5033ம் பாடல், ஊர் தேடு படலம்

பொருள்: இப்படிப்பட்ட சிறப்புடன் ஒளியைப் பெற்ற மாணிக்க விளக்குகளின் பெருமிதம் கெடும்படி பொலிகின்ற தனது இனிய ஒளியானது தழைக்கும் வகையில் உறக்கத்தை மேற்கொண்ட பெண்ணை {மண்டோதரியைக் குறித்து}, தடுக்கப்பட முடியாதவனுக்கு {ஹனுமானுக்கு}, “அப்படிப்பட்ட சானகி {சீதை} இவள்” என அகத்தில் எழுந்த சந்தேகத்தால், வெந்தீ தன் உடலுடன் நெருகிய அரிய உயிரைச் சுடக்கூடிய துன்பத்துடன் வருந்தி இவற்றையும் சொன்னான்.

இவ்வாறு கம்பராமாயணத்தில் மண்டோதரியை சீதை என எண்ணி ஹனுமான் வருந்துகிறான். வால்மீகியிலோ பின்வருமாறு குரங்குச் சேட்டையில் ஈடுபடுகிறான்.

தோள்களைக் கொட்டியும், வாலை முத்தமிட்டும், ஆனந்தமாகத் துள்ளிக் குதித்தும், பாடியும், ஓடியும் கபிக்களின் {குரங்குகளின்} இயல்பைக் காட்டியபடியே, ஸ்தம்பங்களில் {தூண்களில்} ஏறி, பூமியில் குதித்தான்.(54ஆ,இ,உ)

சுந்தர காண்டம் சர்க்கம் – 10ல் உள்ள சுலோகங்கள்: 54


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை