Entrance entered | Sundara-Kanda-Sarga-04 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இலங்கைக்குள் இடதுகாலை வைத்து நுழைந்த ஹனுமான்; இராவணனின் பலத்தைக் கண்டுணர்ந்தது...
This picture was created using Artificial Intelligence in Bing website and edited elsewhere | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் உண்டாக்கி திருத்தப்பட்ட படம் |
கபிசத்தமனும், மஹாதேஜஸ்வியும், மஹாபாஹுவுமான அந்த ஹனுமான், காமரூபிணிகளில் சிறந்தவளான அந்த லங்கையை {லங்கினியை} விக்கிரமத்தால் வென்று, துவாரமில்லாத பிராகாரத்தை {வாயில் இல்லாத மதிற்சுவற்றைத்} தாண்டிச் சென்றான்[1].(1,2அ) கபிராஜனுக்கு ஹிதம் செய்பவன் {சுக்ரீவனுக்கு நன்மை செய்யும் ஹனுமான்}, லங்கா நகரில் பிரவேசித்து, சத்ருக்களின் தலையில் இடது பாதத்தை வைத்தான்[2].(2ஆ,3அ) சத்வசம்பன்னனான {பெரும்வலிமை நிறைந்த} அந்த மாருதாத்மஜன் {வாயு மைந்தன் ஹனுமான்}, நிசியில் பிரவேசித்து,{3ஆ} முத்துக்கள், புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட மஹாபாதையை {பெரும் நெடுஞ்சாலையை} அடைந்தான். பிறகு அந்தக் கபி {குரங்கான ஹனுமான்}, அந்த ரம்மியமான லங்காம்புரீயில் திரிந்து கொண்டிருந்தான்.(3ஆ,4)
[1] நரசிம்மாசாரியர் பதிப்பில், “கோட்டையுள்ள வாசற்படி வழியாக நுழையாமல் அதன் சுவர் மேலேறிக் கிளம்பினான்” என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், “சாஸ்திரங்கள், “பகைவனுடைய க்ராமத்தையாவது, நகரத்தையாவது, பட்டணத்தையாவது த்வாரத்தின் வழியாய் ப்ரவேசிக்கலாகாது. விசேஷித்து, அவற்றை ஜயிக்க விரும்பும் ஸமயத்தில் அங்ஙனங் கூடாது” என்று சொல்லுகிறதாகையால், அந்த நியமத்தைப் பற்றி ஹனுமான் வாசற்படி வழியாக இலங்கையில் ப்ரவேசிக்கவில்லையென்று தெரிகிறது” என்றிருக்கிறது.
[2] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "வானர அரசரின் நன்மையைச் செய்பவரான அவர், இலங்கை நகரில் நுழைந்து, சத்துருக்களின் பிரதான ஸ்தலத்திலேயே இடது காலின் அடிவைப்பையே மங்களமாய் முதலில் வைத்தார்” என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், “லங்கையில் ப்ரவேசிக்க முயன்று, கபிராஜனாகிய ஸுக்ரீவனுக்கு மேன்மையைச் செய்ய விரும்பி, ராவணனுக்குக் கெடுதியைச் செய்ய நினைத்தவனாகையால், முதல்முதலில் தன் இடக்காலைச் சத்ருக்களின் சிரஸில்வைத்தனன்” என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், “ப்ரயாணகாலத்திலும், க்ருஹப்ரவேசத்திலும், விவாஹகாலத்திலும் வலக்காலை எடுத்து வைக்க வேண்டும். சத்ரு பட்டணத்தில் ப்ரவேசிக்கும்பொழுது முதலில் இடக்காலை எடுத்து வைக்க வேண்டும் என்று ப்ரஹஸ்பதி சொல்லியிருப்பது பற்றி ராவணனுக்குக் கெடுதியை விளைவிக்கும் பொருட்டு முதலில் இடக்காலை வைத்து லங்கையில் புகுந்தானென்றுணர்க. சத்ருதேசத்தில் ப்ரவேசிக்கும்பொழுது முதலில் இடக்காலை வைப்பது, அந்தச் சத்ருவின் சிரசில் வைப்பது போலவேயாகுமென்று ராஜசாஸ்த்ரஞ் சொல்லுகையால் சத்ருக்களின் சிரஸில் வாமபதத்தை {இடதுபாதத்தை} வைத்தானென்று கூறப்பட்டது” என்றிருக்கிறது.
வஜ்ரஜாலங்களால் {வைரத்தாலான சாளரங்களால்} அலங்கரிக்கப்பட்டவையும், மேகங்களைப் போன்றவையுமான கிருஹங்களில் {வீடுகளில்}, மகிழ்ச்சி ஆரவாரங்களுடனும் {பெருஞ்சிரிப்பொலிகளுடனும்}, உள்ளறைகளில் தூரிய கோஷங்களுடனும் கூடிய அந்த ரம்மியபுரி {லங்காநகரம்}, வஜ்ரத்தாலான அங்குசத்திற்கு நிகரான மேகங்களுடன் கூடிய வானத்தைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.(5,6அ) வெண்மேகங்களுக்கு நிகரானவையும், சித்திரமானவையும், பத்ம {தாமரை}, ஸ்வஸ்திக வடிவங்களைக் கொண்டவையுமான நவீன சுப கிருஹங்களான ராக்ஷசகணங்களின் கிருஹங்களால் {அரக்கர்களின் வீடுகளால்} எங்கும் அலங்கரிக்கப்பட்டு அஃது {லங்கா நகரம்} ஒளிர்ந்து கொண்டிருந்தது.(6ஆ,7)
கபிராஜனுக்கு {சுக்ரீவனுக்கு} ஹிதம் செய்பவனும், ராகவனின் {ராமனின்} அர்த்தத்திற்காகத் திரிபவனுமான ஸ்ரீமான் {ஹனுமான்}, சித்திரமான மாலைகளை ஆபரணங்களாகக் கொண்டதை {லங்கா நகரத்தைக்} கண்டு ஆனந்தமடைந்தான்.(8) பவனத்திலிருந்து பவனத்திற்குச் சென்ற பவனாத்மஜன் {வாயு மைந்தன் ஹனுமான்}, அனைத்துப் பக்கங்களிலும் விதவிதமான ரூபங்களிலான பவனங்களை {வீடுகளைக்} கண்டான்.(9) திவத்தின் {சொர்க்கத்தின்} அப்சரஸுகளைப் போலவே, மதத்தால் நிறைந்த ஸ்திரீகளால், மூன்று சுவரங்களில் அலங்கரிக்கப்பட்ட மதுரமான கீதத்தைக் கேட்டான்[3].(10) ஆங்காங்கே அந்த மஹாத்மாக்களின் பவனங்களில், இடையில் சுமக்கும் காஞ்சன மணிகளுடன் கூடிய நூபுரங்களின் ஒலிகளுடன், படிகளை ஏறும் ஒலிகளையும், கைகளைத் தட்டும் ஒலிகளையும், சிரிப்பொலிகளையும் கேட்டான்.(11,12அ) அங்கே ராக்ஷச கிருஹங்களில் ஜபிக்கப்படும் மந்திரங்களைக் கேட்டான். ஸ்வாத்யாயங்களில் ஈடுபட்டிருக்கும் {தங்களுக்குரிய அத்யயனங்களைச் செய்கிற / வேதகல்வியில் ஈடுபட்டிருக்கும்} யாதுதானர்களை {ராக்ஷசர்களைக்} கண்டான். இராவணஸ்துதிகளை கர்ஜிக்கும் ராக்ஷசர்களையும் கண்டான்.(12ஆ,13) மஹத்தான ராக்ஷச பலத்தால் {பெரும் ராக்ஷசப் படையால்} சூழப்பட்டிருக்கும் ராஜமார்க்கத்தின் {நெடுஞ்சாலையின்} மத்தியப் பகுதியில், ராவணனின் ஏராளமான சாரர்களையும் {ஒற்றர்களையும்}, கண்டான்.(14)
[3] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "தேவலோகத்தில் அப்ஸரஸ்தீர்களை ஒத்த மதமுற்ற ஸ்திரீகளுடைய (தலை, கண்டம், மார்பு என்ற இந்த) மூன்றிடங்களிலிருந்துண்டாகும் (தாரம், மத்தியமம், மந்திரம் என்கிற) மூன்று ஸ்வரங்களால் அலங்கரிக்கப்பட்ட இனிய கானத்தைச் செவியுற்றார்” என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், “மேலும் யௌவனமதம் நிறைந்து தாமரையிதழ்போன்ற கண்களையுடைய மடந்தையர் மணிகள் மார்பு, கண்டம், சிரஸு என்னும் மூன்று ஸ்தானங்களினின்றுண்டாகி மந்த்ர, மத்யம, தாரங்களென்னும் மூன்று ஸ்வரங்ளோடுகூடி விளங்குமாறு தேவலோகத்து அப்ஸர மடந்தையர் போல் மிக மதுரமாகப்பாடுகிற மெதுவான கானத்தைக் கேட்டுக் கொண்டு போயினன்” என்றிருக்கிறது.
தீக்ஷிதர்களையும் {பல்வேறு வேத நடைமுறைகளைப் பின்பற்றத் தொடங்கியவர்களையும்}, ஜடாதாரிகளையும், முண்டர்களையும் {தலைமயிரை மழித்திருப்பவர்களையும்}, பசுத்தோல் முதலிய பிறவற்றைத் தரித்தவர்களையும், ஒரு பிடி தர்ப்பத்தையே ஆயுதமாகக் கொண்டவர்களையும், அதே போல, அக்னிகுண்டங்களையே ஆயுதமாகக் கொண்டவர்களையும்,{15} கூடம் {சம்மட்டி}, முத்கரம் {சம்மட்டி போன்ற ஆயுதம்} போன்ற ஆயுதங்களைக் கையில் தரித்தவர்களையும், தண்டாயுதம் தரித்தவர்களையும், ஒற்றைக்கண் கொண்டவர்களையும், ஒற்றைக்காது கொண்டவர்களையும், தொங்கும் வயிறுகளும், மார்புகளும் கொண்டவர்களையும்,{16} அதேபோல, பயங்கரர்களையும், கோணல் வாய் கொண்டவர்களையும், விகடர்களையும் {கேலிக்குரிய தோற்றமுடையவர்களையும்}, உயரம் குறைந்தவர்களையும் {வாமனர்களையும்}, தன்விகளையும் {வில் தரித்தவர்களையும்}, சதக்னி, முஸலம் {உலக்கை} முதலிய ஆயுதங்களைக் கொண்டவர்களையும், வாளுடையவர்களையும்,{17} உத்தம பரிகங்களை {இரும்புத்தடிகளைக்} கையில் கொண்டவர்களையும், விசித்திரமான கவசங்களுடன் ஒளிர்பவர்களையும், மிகவும் பெருக்காதவர்களையும், மிகவும் இளைக்காதவர்களையும், மிகநெடியவரல்லாதவர்களையும், உயரம் குறைந்தவரல்லாதவர்களையும்,{18} மிகவெண்மையாக இல்லாதவர்களையும், மிகக் கருமையாக இல்லாதவர்களையும், முதுகு வளைந்தவர்கள் அல்லாதவர்களையும், வாமனர்கள் {உயரம் குறைந்தவர்கள்} அல்லாதவர்களையும், விரூபர்களையும் {வடிவம் குலைந்தவர்களையும்}, பல வடிவங்கள் அமையப்பெற்றவர்களையும், அழகிய வடிவம் கொண்டவர்களையும், நல்லொளி கொண்டவர்களையும்,{19} த்வஜங்களைப் பிடித்துக் கொண்டிருப்பவர்களையும், சிறு பதாகைகளைப் ஏந்திக் கொண்டிருப்பவர்களையும், விதவிதமான ஆயுதங்களைத் தரித்தவர்களையும், சக்திகளையும் {வேல்களையும்}, விருக்ஷங்களையும் ஆயுதமாகக் கொண்டவர்களையும், பட்டிசங்களையும் {கூரிய நுனி கொண்ட இரும்புத்தடிகளையும்}, அசனிகளையும் {வஜ்ரங்களையும்} தரித்திருப்பவர்களையும் கண்டான்.{20}
க்ஷேபணீ, பாசம் {கவண், சுருக்குக் கயிறு} ஆகியவற்றைத் தரித்தவர்களையும் அந்த மஹாகபி {பெருங்குரங்கான ஹனுமான்} கண்டான். மலர்மாலைகளைச் சுமப்பவர்களையும், சந்தனம் பூசப்பட்டவர்களையும், சிறந்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களையும்,{21} நானாவேஷங்களில் {பலவிதமான தோற்றங்களில்} சுதந்திரமாகத் திரிந்து கொண்டிருக்கும் ஏராளமானோரையும், கூரிய சூலங்கள், வஜ்ரங்களுடன் கூடிய பலவான்களையும்,(15-22) இராக்ஷசாதிபதியின் ஆணையின்பேரில் அந்தப்புரத்தின் எதிரில், விழிப்புடன் கூடிய நூறாயிரம் பேர் கொண்ட மத்தியக் காவற்படையையும் அந்தக் கபி {குரங்கான ஹனுமான்} கண்டான்.(23) இவ்வாறு கண்ட பிறகு, பொன்னாலான மஹத்தான தோரணத்துடன் {நுழைவாயிலுடன்} கூடியதும், மலையுச்சியில் நிலைகொண்டிருப்பதும், புகழ்பெற்றதுமான ராக்ஷசேந்திரனின் அந்த கிருஹம்,{24} தாமரை மலர்கள் நிறைந்த அகழிகளால் அலங்கரிக்கப்பட்டதாகவும், பிராகாரங்களால் {மதிற்சுவர்களால்} சூழப்பட்டதாகவும் இருப்பதை அந்த மஹாகபி கண்டான்.(24,25)
திவ்யமானதும், சொர்க்கத்திற்கு ஒப்பானதும், வாஜிகளின் திவ்ய {குதிரைகளின் மங்கல} கனைப்பொலிகளால் நிறைந்ததும், ஆபரணங்களால் ஒலிக்கப்பெறுவதும்{26}, ரதங்களாலும் {தேர்களாலும்}, யானங்களாலும் {சிவிகைகளாலும்}, விமானங்களாலும், அதேபோல, சுபஹயகஜங்களாலும் {மங்கலக் குதிரைகளாலும், யானைகளாலும்} அலங்கரிக்கப்பட்டதும், நான்கு தந்தங்களுடன் கூடியவையும், வெண்மேகக் கூட்டங்களுக்கு ஒப்பானவையுமான பெரும் வாரணங்களால் {யானைகளால்} பாதுகாக்கப்பட்டதும்[4],{27} மதங்கொண்ட மிருகபக்ஷிகளுடன் கூடிய அழகிய துவாரத்தால் {வாயிலால்} அலங்கரிக்கப்பட்டதும், நல்ல மஹாவீர்யமுடைய ஆயிரக்கணக்கான யாதுதானர்களால் {ராக்ஷசர்களால்} ரக்ஷிக்கப்பட்டதுமான ராக்ஷசாதிபதியின் அழகிய கிருஹத்திற்குள் அந்த மஹாகபி ரகசியமாக நுழைந்தான்.(26-28) ஜாம்பூநதத்தாலான {பொன்னாலான} சக்ரவாளத்துடன் {புறக்கடையுடன்} கூடியதும், உயர்ந்த முத்துக்களாலும், மணிகளாலும் அலங்கரிக்கப்பட்டதும், சிறந்த அகில், சந்தனங்கலந்த நீரால் தெளிக்கப்பட்டு மணங்கமழ்வதுமான ராவணனின் அந்தப்புரத்திற்குள் நுழைந்தான்.(29)
[4] போர் இயன்றன தோற்ற என்று இகழ்தலின் புறம்போய்நேர் இயன்ற வன்திசைதொறும் நின்றமா நிற்கஆரியன்தனி ஐங்கரக் களிறும் ஓர் ஆழிச்சூரியன் தனித்தேருமே இந்நகர் தொகாத- கம்பராமாயணம், 4845ம் பாடல், ஊர் தேடு படலம்பொருள்: போரிட முயன்று தோற்றன என்று {ராவணன்} இகழ்ந்ததால் வெளியே சென்று, எதிரெதிராக உள்ள வலிமைமிக்க திசைகள் தோறும் ஒதுங்கி நிற்கும் யானைகளில் ஆரியன் {சிவன்} பெற்ற ஒப்பற்ற ஐந்து கரங்களைக் கொண்ட யானையும் {விநாயகரும்}, தேர்களில், சூரியனின் ஒரு சக்கரத்தை உடைய ஒப்பற்ற தேரும் இந்நகரைச் சாராதவையாகும்.
சுந்தர காண்டம் சர்க்கம் – 04ல் உள்ள சுலோகங்கள்: 29
Previous | | Sanskrit | | English | | Next |