New wings | Kishkindha-Kanda-Sarga-63 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சிறகுகளை மீண்டும் அடைந்த சம்பாதி; மகிழ்ச்சியடைந்த வானரர்கள் தெற்கு நோக்கிச் சென்றது...
This picture was generated using Artificial Intelligence in Bing website | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் உண்டாக்கப்பட்ட படம் |
{அங்கதனிடம் சம்பாதி தொடர்ந்தான்}, “வாக்கியவிசாரதரானவர் {பேச்சில் வல்லவரான நிசாகரர்}, இவற்றையும், இன்னும் பிறவற்றையும், பல வாக்கியங்களில் சொல்லி, என்னைப் பாராட்டி, எனக்கு விடைகொடுத்தனுப்பி, தன் ஆலயத்திற்குள் {ஆசிரமத்திற்குள்} பிரவேசித்தார்.(1) நான் பர்வதத்தின் குகையில் இருந்து, மெல்ல மெல்ல வெளியேறி, விந்தியத்தில் ஏறி, உங்களுக்காக {உங்கள் வரவுக்காகக்} காத்திருந்தேன்.(2) முனிவரின் சொற்களை ஹிருதயத்தில் எண்ணிய இந்தக் காலம் முதல் இப்போது வரை, கடந்த நூறு வருஷங்களுக்கும் சற்றே அதிகமாக[1] தேசகாலங்களை {தகுந்த இடத்தையும், நேரத்தையும்} எதிர்பார்த்து நான் காத்திருக்கிறேன்.(3)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “நிசாகரர் வாழ்ந்தது, இறந்தது, அந்த முனிவர் இறந்த பிறகு சம்பாதி அந்த மலையில் தொடர்ந்து இருந்தது ஆகியவற்றைக் கணக்கிடுவதில் இங்கே முரண் தெரிகிறது. 40-60-9ல், சம்பாதி, “அந்த ரிஷி இல்லாமல் இந்த கிரியில் வசித்து வரும் எனக்கு எட்டாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன” என்று சொல்கிறான். இங்கேயோ, நூறு ஆண்டுகள் கடந்திருப்பதாகச் சொல்கிறான். வேறு சில பதிப்புகளில், “நிசாகரர் எட்டாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் இறந்து முன்னூறு ஆண்டுகள் ஆகின்றன. நூறு ஆண்டுகளாக நான் உங்களுக்காகக் காத்திருக்கிறேன்” என்று பொருள்படும்படியான சுலோகம் இருக்கிறது” என்றிருக்கிறது. இந்த அடிக்குறிப்பையும், பின்வரும் சுலோகங்களின் பொருளையும், தமிழ்ப்பதிப்புகளில் உள்ள வாக்கியங்களையும் ஒப்பு நோக்கி, இந்த வாக்கியத்தின் சொற்றொடர் சற்றே முன்னும், பின்னுமாக மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.
நிசாகரர், மஹாபிரஸ்தானம் {நெடும்பயணம்} சென்று ஸ்வர்க்கத்தை அடைந்தார். தர்க்கமற்ற பல எண்ணங்களால் சூழப்பட்ட நான், சந்தாபத்தில் {மனத்துயரில்} எரிந்து கொண்டிருந்தேன்.(4) மரணத்தில் உதித்த புத்தியை, முனி வாக்கியங்களால் அடக்கி, என் பிராணன்களையும் ரக்ஷித்துக் கொண்டேன். அவர் {நிசாகரர்} எனக்கு எந்த புத்தியை தத்தம் செய்தாரோ, அது {அந்த புத்தி} சுடர்மிகும் அக்னியின் சிகையானது இருளை {போக்குவதைப்} போல என் துக்கத்தைப் போக்கியது.(5,6அ)
துராத்மாவான ராவணனின் வீரியத்தை புத்தியில் அடைந்த {எண்ணிப் பார்த்த} நான், “மைதிலியை எவ்வாறு காக்காமல் விட்டாய்?” என்ற வார்த்தைகளால் புத்திரனை {சுபார்ஷ்வனைக்} கண்டித்தேன்.(6ஆ,7அ) அவள் அழுததைக் கேட்டும், அவ்விருவரும் {ராமலக்ஷ்மணர்கள்} சீதையைப் பிரிந்ததையும், எனக்கும், தசரதனுக்கும் இடையிலான ஸ்னேகத்தையும் அறிந்தும்[2] என் புத்திரன் {சுபார்ஷ்வன்} நான் விரும்பியதைச் செய்யாதிருந்துவிட்டான்” என்றான் சம்பாதி.(7ஆ,8அ)
[2] 4:56:24ல், “அந்த தசரதன் என்னுடன் பிறந்தவனின் சகாவானது {ஜடாயுவின் தோழனானது} எவ்வாறு?” என்று கேட்கிறான். அதாவது, தசரதனுக்கும், சம்பாதிக்கும் ஏற்கனவே நட்பிருந்தது என்றும், ஜடாயுவுக்கு தசரதனுடன் ஏற்பட்ட நட்பு, சம்பாதியின் சிறகெரிந்த பிறகு ஏற்பட்டிருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் தெரிகிறது.
அப்போது தன்னைச் சூழ்ந்திருந்த வானரர்கள் மத்தியில் அவன் {சம்பாதி} இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, அந்த வனசாரிகளின் {காடுகளில் திரிபவர்களின்} கண்களுக்கு முன்பாகவே அவனுக்கு {சம்பாதிக்குப்} பறப்பதற்கான சிறகுகள் முளைத்தன.(8ஆ,9அ) அருணத்தால் {செவ்வண்ணத்தால்} மறைக்கப்பட்ட அவன் {சம்பாதி}, சிறகுகள் முளைத்ததும், தன் உடலைக் கண்டதும் ஒப்பற்ற மகிழ்ச்சியை அடைந்து வானரர்களிடம் இதைச் சொன்னான்:(9ஆ,10அ) “அமித ஓஜஸரும், ராஜரிஷியுமான நிசாகரரின் பிரபாவத்தால், ஆதித்யனின் கதிர்களால் எரிந்த சிறகுகள் இரண்டும் மீண்டும் முளைத்துவிட்டன.(10ஆ,11அ) யௌவனத்தில் {இளமையில்} நான் கொண்டிருந்த பராக்கிரமமும் {ஆற்றலும்}, பலமும், பௌருஷமும் {ஆண்மையும்} இதுதான்.(11ஆ,12அ) அனைத்து வகையான யத்தனங்களையும் {முயற்சிகளையும்} செய்து, சீதையை நீங்கள் கண்டடைய வேண்டும். என்னுடைய இந்தச் சிறகுகளை அடைந்ததால், உங்கள் அனைவரின் மூலமும் நான் காரியசித்தியடைந்துவிட்டேன்” {என்றான் சம்பாதி}.(12ஆ,13அ)
பதகோத்தமனான {பறவைகளில் மேன்மையான} சம்பாதி, அந்த ஹரிக்கள் அனைவரிடமும் இவ்வாறு சொல்லிவிட்டு, கிரிசிருங்கத்தில் இருந்து, ஆர்வத்துடன் எழுந்து, வானத்தில் பறப்பவர்களின் {பறவைகளின்} கதியை அடைந்தான்.(13ஆ,14அ) ஹரிசார்தூலர்கள் {குரங்குகளில் புலிகள்} அவனது அந்த வசனத்தைக் கேட்டதன் பயனாக மனத்தில் மகிழ்ச்சியடைந்து, விக்கிரமத்தை அடையும் ஆவலுடையவர்கள் ஆனார்கள்.(14ஆ,இ) பிறகு, பவனனுக்கு {வாயு தேவனுக்கு} சமமான விக்கிரமத்துடன், பௌருஷத்தை {ஆண்மையை} மீட்டுக் கொண்ட பிலவகவரர்கள் {தாவிச் செல்லும் குரங்குகளில் சிறந்தவர்கள்}, அபிஜித்தை {நல்ல வேளையை} எதிர்பார்த்து ஜனகசுதையை {ஜனகனின் மகளான சீதையைத்} தேடும் மார்க்கத்தை நோக்கிய திசையில் {தென் திசையில்} சென்றனர்.(15)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 63ல் உள்ள சுலோகங்கள்: 15
Previous | | Sanskrit | | English | | Next |