Sage Kandhu | Kishkindha-Kanda-Sarga-48 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராவணன் என்று நினைத்து ஓர் அசுரனைக் கொன்ற அங்கதன்; விந்தியத்தில் சீதையைத் தேடிய ஹனுமான், அங்கதன் முதலிய வானர்கள் கவலையடைந்தது; கவலையில் அமர்ந்த துருப்புகள்...
Bing - Artificial Intelligence Picture | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் உண்டாக்கிய படங்களின் தொகுப்பு |
தாரன், அங்கதன் உள்ளிட்டோருடன் கூடிய கபியான {குரங்கான} ஹனுமான், சுக்ரீவன் எப்படிக் குறிப்பிட்டானோ, அப்படியே அந்தந்த தேசங்களை அணுகினான்.(1) அவன் {ஹனுமான்}, அந்த சர்வ கபிசத்தமர்களுடன் {பலம்வாய்ந்த குரங்குகளுடன் சேர்ந்து} தூரங்களைக் கடந்து, விந்தியத்தின் குகைகளிலும், கஹனங்களிலும் {ஆழ்ந்த காடுகளிலும்}, நதிகளால் கடக்க முடியாத பர்வதங்களிலும், சரஸ்களிலும் {பொய்கைகளிலும்}, பெரும் மரங்களிலும், விருக்ஷங்கள் அடர்ந்த காடுகளிலும், மரங்கள் நிறைந்த வனங்களுடன் கூடிய விதவிதமான பர்வதங்களிலும் தேடினான்.(2,3)
வீரர்களான அந்த வானரர்கள் திசைகளெங்கும் தேடினாலும், மைதிலியும், ஜனகாத்மஜையுமான {மிதிலையைச் சேர்ந்தவளும், ஜனகனின் மகளுமான} சீதையைக் காணவில்லை.(4) வெல்லப்படமுடியாதவர்களான அவர்கள், தங்கள் தேடலில் விதவிதமான கிழங்குகளையும், பழங்களையும் பக்ஷித்துக் கொண்டே ஆங்காங்கே திரிந்து கொண்டிருந்தனர்.(5) அடைவதற்கரிய குகைகளுடன் கூடிய அந்த மஹாதேசம், தேடுவதற்கு அரிதானதாகவும், ஜலமற்ற, ஜனங்களற்ற, சூனியமான கஹனத்துடன் {ஆழ்ந்த கானகத்துடன்} கூடியதாகவும் கோரதரிசனந்தந்து கொண்டிருந்தது.(6) அதைக் கடந்ததும், வேறு அரண்யங்களில் தேடியும் {சீதைக் காணப்படாததால் அந்த வானரர்கள்} அதிகம் பீடிக்கப்பட்டனர். குகைகளும், மஹா கஹனங்களும் நிறைந்த அந்த தேசமும் தேடுவதற்கு அரிதானதாகவே இருந்தது.(7)
சர்வ ஹரியூதபர்களும் {குரங்குக் குழுத் தலைவர்களும்} அந்த தேசத்தைக் கைவிட்டப் பிறகு, எவ்வகையிலும் பயமற்றவர்களாக புகுதற்கரிய வேறு தேசத்திற்குள் புகுந்தனர்.(8) எங்கே பழங்களற்ற, புஷ்பங்களற்ற, இலைகளற்ற விருக்ஷங்கள் இருக்குமோ, எங்கே சரிதங்கள் {நதிகள்} நீரில்லாமல் இருக்குமோ, எங்கே கிழங்குகள் கிடைப்பதற்கரிதாக இருக்குமோ,(9) எங்கே மஹிஷங்கள் {எருமைகள்} இல்லையோ, மிருகங்களும் இல்லையோ, ஹஸ்திசார்தூலங்கள் {யானைகள், புலிகள்} இல்லையோ, பக்ஷிகளும் இல்லையோ, வனத்தில் திரியும் வேறு எதுவும் இல்லையோ,(10) எங்கே விருக்ஷங்கள் இல்லையோ, ஔஷதங்கள் {மூலிகைகள் / பச்சிலைகள்}, வள்ளிகள் {கொடிகள்}, வீருதங்கள் {பூண்டுகள்} இல்லையோ, அங்கே அந்த ஸ்தலத்தில், சுகந்தமும் {நறுமணமும்}, மென்மையான இலைகளும், முற்றாக மலர்ந்த பங்கஜங்களும் இல்லாதவையும், வண்டுகளால் கைவிடப்பட்டவையுமான பத்மினிகள் {ஓடைகள்} இருந்தன.(11,12அ)
சத்தியவாதியும், மஹாபாக்கியவானும், தபோதனரும் {தபத்தையே செல்வமாகக் கொண்டவரும்}, கடுங்கோபம் கொண்டவரும், நியமங்களால் அணுகப்படமுடியாதவரும், கந்து என்ற பெயரைக் கொண்டவருமான மஹரிஷி {முன்பொருசமயம்} அங்கே இருந்தார்.(12ஆ,13அ) அவரது புத்திரனான பத்து வயதுடைய பாலகன், அந்த வனத்தில் ஜீவனை இழந்தான். இதனால் அந்த மஹாமுனி கோபமடைந்தார்.(13ஆ,14அ) அதன் பிறகு, அந்த மஹத்தான வனம் முழுவதும் வசிப்பதற்கேற்றதாக இல்லாததாக, அடைதற்கரியதாக, மிருகபக்ஷிகளால் முழுமையாக புறக்கணிக்கப்பட்டதாக அந்த தர்மாத்மாவால் சபிக்கப்பட்டது.(14ஆ,15அ)
சமாஹிதத்துடன் கூடிய அவர்கள் {வானரர்கள்}, அந்த கானகத்தின் அந்தங்களிலும், கிரிகளிலும், குகைகளிலும், நதிகளிலும், பிரபாவங்களிலும் {நீரூற்றுகளிலும்} தேடினர்.(15ஆ,16அ) சுக்ரீவனுக்குப் பிரியமான காரியங்களைச் செய்பவர்களான அந்த மஹாத்மாக்கள், அங்கேயும் ஜனகாத்மஜையையும் {சீதையையும்}, அவளைக் கடத்திய ராவணனையும் காணவில்லை.(16ஆ,17அ) லதைகள் {கொடிகள்}, குல்மங்கள் {புதர்கள்} நிறைந்த மற்றொரு பயங்கர இடத்திற்குள் பிரவேசித்து, பீமகர்மங்களை {பயங்கரச் செயல்களைச்} செய்பவனும், ஸுரர்களிடம் {தேவர்களிடம்} அச்சமில்லாதவனுமான ஓர் அசுரனைக் கண்டனர்.(17ஆ,18அ) சைலம் போல் திடமாக நின்று கொண்டிருந்தவனும், கோரமானவனுமான அந்த அசுரனை சர்வ வானரர்களும் கண்டனர். பர்வதத்திற்கு ஒப்பானவனைக் கண்டதும், அவர்கள் தங்கள் இடைக்கச்சையை இறுகக் கட்டிக் கொண்டனர்.(18ஆ,19அ) அந்த பலவான், “நீங்கள் செத்தீர்கள். இருங்கள்” என்று அந்த வானரர்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு, பெருங்குரோதத்துடன் முஷ்டிகளைப் பொத்தி உயர்த்திக் கொண்டு, அவர்களை நோக்கி விரைந்தான்.(19ஆ,20அ)
அப்போது, வாலிபுத்திரனான அங்கதன், {அப்படி} வந்து கொண்டிருந்தவன் மீது பாய்ந்து, ‘இவனே ராவணன்’ என்று அறிந்து {நினைத்து}, விரைவாகத் தன் உள்ளங்கையால் அவனை அறைந்தான்.(20ஆ,21அ) வாலி புத்திரனால் தாக்கப்பட்ட அந்த அசுரன், வாயில் இருந்து ரத்தம் கக்கியபடியே, இடிந்து விழும் பர்வதத்தைப் போல பூமியில் விழுந்தான்.(21ஆ,22அ) அவன் மூச்சைவிட்டபோது, வெற்றியால் பிரகாசித்துக் கொண்டிருந்தவர்கள் {வானரர்கள்} அனைவரும் அங்கே ஒன்றுகூடி, அந்த கிரியிலும், அதன் குகைகளிலும் தேடினார்கள்.(22ஆ,23அ) {இவ்வாறு} தேடிக்கொண்டிருந்த அந்த கானக ஓகசர்கள் {காட்டுவாசிகளான குரங்குகள்} அனைவரும், ஒன்றைவிட்டு மற்றொன்றாக கோரமான மலைக்குகைகளில் நுழைந்தனர்.(23ஆ,24அ) மீண்டும் தேடிவிட்டுக் கவலையுடன் வெளியே வந்து ஒன்றுகூடிய அவர்கள், தீன மனத்துடன் ஏகாந்தமான விருக்ஷத்தின் {தனிமையான ஒரு மரத்தின்} அடியில் அமர்ந்தனர்.(24ஆ,இ)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 48ல் உள்ள சுலோகங்கள்: 24
Previous | | Sanskrit | | English | | Next |