Starting out | Kishkindha-Kanda-Sarga-45 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சுக்ரீவனின் ஆணையும், வானரர்களின் போர்க்கூச்சலும்...
பிலவகரிஷபனான ராஜா {தாவிச் செல்லும் குரங்குகளில் காளையான அரசன்} சுக்ரீவன், சர்வ பிலவகர்களையும் {தாவிச் செல்பவர்கள் அனைவரையும்} அழைத்து, ராமனுடைய காரியத்தின் அர்த்தம் சித்திக்கும் {ராம காரியம் நிறைவேறும்} பொருட்டு அவர்கள் அனைவரிடமும் {பின்வருமாறு} பேசினான், “வானர உத்தமர்களே, நீங்கள் இவ்வாறே இதை {பூமியைத்} தேட வேண்டும்” {என்றான்}.(1,2அ)
தலைவனின் அந்த உக்கிர சாசனத்தை {கட்டளையைப்} புரிந்து கொண்ட ஹரிபுங்கவர்கள் {குரங்குகளில் மேலானவர்கள்}, சலபங்களை {வெட்டுக்கிளிகளைப்} போல மேதினியை முழுமையாக மறைத்துப் புறப்பட்டுச் சென்றனர்.(2ஆ,3அ) இராமனும், லக்ஷ்மணனும், சீதையை அடைவதற்கான அந்த மாசத்தை எதிர்பார்த்து அந்தப் பிரஸ்ரவணத்திலேயே வசித்திருந்தனர்.(3ஆ,4அ)
பிறகு, வீரஹரியான சதபலி, கிரிராஜனால் சூழப்பட்ட ரம்மியமான உத்தர {வடக்குத்} திசைக்கு வேகமாகப் புறப்பட்டுச் சென்றான்.(4ஆ,5அ) ஹரியூதபனான வினதன், பூர்வ {கிழக்குத்} திசைக்குப் புறப்பட்டுச் சென்றான். ஹரியூதபனும், பவனாத்மஜனுமான பிலவகன் {குரங்குக்குழுத்தலைவனும், வாயு தேவனின் புதல்வனும், தாவிச் செல்லும் குரங்குமான ஹனுமான்}, தாரன், அங்கதன் சகிதனாக, அகஸ்தியரிடம் செல்லும் தக்ஷிணத்தை {அஹஸ்தியர் வசிக்கும் தென்திசையை} நோக்கிச் சென்றான்.(5ஆ,6) பிலவகேஷ்வரனும், ஹரிசார்தூலனுமான சுஷேணன், வருணனால் பாலிக்கப்படும் திசையும், கோரமானதுமான பஷ்சிம {மேற்குத்} திசையை நோக்கிப் புறப்பட்டுச் சென்றான்.(7)
வீரனான ராஜா {சுக்ரீவன்}, கபி சேனாபதிகள் எப்படியோ அப்படியே சர்வ திசைகளிலும் அனுப்பிவிட்ட திருப்தியுடன் சுகமாக மகிழ்ச்சியடைந்தான்.(8) இராஜாவால் இவ்வாறு ஊக்கத்துடன் அனுப்பப்பட்ட சர்வ வானர யூதபர்களும், தங்கள் தங்கள் திசைக்குச் செல்ல ஆயத்தமாகி, துரிதமாகப் புறப்பட்டுச் சென்றனர்.(9) மஹாபலம் வாய்ந்தவர்களான அந்தப் பிலவங்கமர்கள் {தாவிச் செல்லும் குரங்குகள்}, நாதம் செய்து கொண்டும், உரத்த நாதம் செய்து கொண்டும், சிங்கங்களைப் போல கர்ஜித்துக் கொண்டும், விசித்திர நாதங்களை எழுப்பிக் கொண்டும் விரைந்து சென்றனர்.(10)
இராஜனால் இவ்வாறு ஊக்கப்படுத்தப்பட்ட சர்வ வானர யூதபர்களும், “சீதையை அடைவோம், ராவணனைக் கொல்வோம்” என்றனர்.(11) “நான் ஒருவனே போர்க்களம் வாய்க்கும்போது ராவணனை வதம் செய்து, உடனே ஜனகாத்மஜையைக் கொண்டு வரப் போகிறேன்” என்றும்,(12) “சிரமத்தால் நடுங்கும் ஜானகி பாதாளத்தில் இருந்தாலும் நான் ஒருவனே கொண்டு வருவேன். இப்போது இங்கேயே இருங்கள்” என்றும்,(13) “நான் விருக்ஷங்களை முழுமையாக முறிப்பேன். நான் கிரிதாரங்களையும் தகர்ப்பேன், தரணீயைப் பிளப்பேன், சாகரத்தை கலக்குவேன்” என்றும்,(14) “நான் எண்ணிக்கையில் நூறு யோஜனை தொலைவு தாவிச் செல்வேன். இதில் சந்தேகமில்லை. என்னால் நிச்சயம் நூறு யோஜனைக்கும் அதிகமாகத் தாவ முடியும்” என்றும்,(15) “பூதலத்திலோ, சாகரத்திலோ, சைலங்களிலோ, பாதாளத்தின் மத்தியிலோ என் கதியை {யாராலும்} தடுக்க முடியாது” என்றும் {ஒவ்வொருவரும் சொல்லிக் கொண்டிருந்தனர்}.(16)
அப்போது, தங்கள் பலத்தில் செருக்குற்றிருந்த வானரர்கள், அந்த ஹரிராஜனின் சந்நிதானத்தில் இருந்து ஒவ்வொருவராக இவ்வாறான வசனங்களை உச்சரித்துச் சென்றனர்.(17)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 45ல் உள்ள சுலோகங்கள்: 17
Previous | | Sanskrit | | English | | Next |