Ring | Kishkindha-Kanda-Sarga-44 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: ஹனுமானைக் குறித்து மிக உயர்வாகப் பேசிய சுக்ரீவன்; ஹனுமானிடம் தன் மோதிரத்தைக் கொடுத்த ராமன்...
சுக்ரீவன், விசேஷமாக ஹனூமனிடம் அர்த்தம் (காரியம்} குறித்துப் பேசினான். அவன் {சுக்ரீவன்}, உண்மையில் அர்த்தத்தை சாதிப்பவன் அந்த ஹரிசிரேஷ்டனே {குரங்குகளில் சிறந்த ஹனுமானே} என நிச்சயமாகத் தீர்மானித்தான்.(1) சர்வ வன ஓகஸர்களின் பிரபுவான {வனத்தில் வசிப்பவர்கள் அனைவரின் தலைவனான} சுக்ரீவன், பரமபிரீதியடைந்தவனாக, விக்ராந்தனும், அநிலாத்மஜனுமான {வெற்றி நடை கொண்டவனும், வாயுவின் புதல்வனுமான} ஹனூமந்தனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(2) “ஹரிபுங்கவா {குரங்குகளில் முதன்மையானவனே}, பூமியில் உன் கதிக்கு இடையூறேதும் நான் காணவில்லை. அந்தரிக்ஷத்திலுமில்லை {மேகங்கள் செல்லும் ஆகாயத்திலும் காணவில்லை}. அம்பரத்திலுமில்லை {வாயு வீசும் ஆகாயத்திலும் காணவில்லை}, அமராலயத்திலும் இல்லை {தேவர்களின் வசிப்பிடத்திலும் காணவில்லை}, அப்புவிலும் இல்லை {நீரிலும் காணவில்லை}.(3) அசுரர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், நரர்கள், தேவதைகள், சாகரம், தராதரம் {பூமியைத் தாங்கும் மலைகள்} உள்ளிட்ட சர்வலோகத்தையும் நீ அறிவாய்.(4) வீரா, மஹாகபியே {பெருங்குரங்கே}, உன் கதியின் {நடையின்} வேகம், தேஜஸ் {ஆற்றல்}, லாகவம் ஆகியவை, உன் பிதாவும், மஹா ஓஜசனுமான மாருதனுக்கு {அற்புத வேகம் வாய்த்த வாயுவுக்கு} ஒப்பானவை.(5) தேஜஸ்ஸால் உனக்கு சமமான பூதம் {உயிரினம்} ஏதும் புவியில் காணப்படவில்லை. எனவே, சீதையை எப்படி அடைவது என்பதை மட்டுமே நீ சிந்திப்பாயாக.(6) நயபண்டிதா {நீதிக்கு இணக்கமான அறிஞனே / அறிஞர்களில் சிறந்தவனே}, ஹனுமானே, பலம், புத்தி, பராக்கிரமம் ஆகியவற்றைக் கொண்டவனாகவும், தேச, காலங்களை அனுசரிப்பவனாகவும், நயமானவனாகவும் {நீதிக்கு இணக்கமானவனாகவும்} நீயே இருக்கிறாய்” {என்றான் சுக்ரீவன்}.(7)
அப்போது ராகவன், ஹனூமனிடம் காரியம் ஒப்படைக்கப்படுவதை அறிந்து, ஹனுமந்தனைக் குறித்து {பின்வருமாறு} சிந்தித்தான்:(8) “இந்த ஹரீஷ்வரன் {குரங்குகளின் மன்னனான சுக்ரீவன்}, ஹனூமான் காரியத்தைத் தீர்மானித்தபடியே சிறப்பாக சாதிப்பான் என்பதை நிச்சயித்திருக்கிறான். சர்வத்தையும் நிச்சயித்தே ஹனூமனிடம் காரியத்தை ஒப்படைக்கிறான்.(9) எனவே, இவ்வாறு புறப்படுகிறவனும், செய்த கர்மங்களின் மூலம் தலைவனால் {சுக்ரீவனால்} நன்கு அறியப்படுகிறவனும், நன்கு தேர்ந்தெடுக்கப்பட்டவனுமான இவனால் {ஹனுமானால்}, காரியம் பலனடையப் போவது உறுதி” {என்று நினைத்தான் ராமன்}.(10)
அந்த மஹாதேஜஸ்வி {ராமன்}, வியவசாயதரனாக அந்த ஹரியை {செயல்களில் சிறந்தவனாக ஹனுமானை} உணர்ந்து, இந்திரியங்களும், மனமும் மகிழ்ச்சியடைந்த கிருதார்த்தனை {காரியம் நிறைவேறியவனைப்} போலப் பெரும் மகிழ்ச்சியடைந்தான்.(11) பிறகு, பரந்தபன் {பகைவரை அழிப்பவனான அந்த ராமன்}, பிரீதியுடன், தன் பெயர் பொறிக்கப்பட்டு சோபிக்கும் அங்குலியை {மோதிரத்தை} ராஜபுத்திரியின் {சீதையின்} நினைவுக்காக அவனிடம் {ஹனுமானிடம்} கொடுத்தான்[1].(12) {அப்போது}, “ஹரிசிரேஷ்டா {குரங்குகளில் சிறந்தவனே}, இந்தச் சின்னத்தால், நீ என்னிடம் இருந்து வந்தவன் என்பதை ஜனகாத்மஜை {ஜனகனின் மகளான ஜானகி / சீதை} பயமில்லாமல் அடையாளம் கண்டு கொள்வாள்.(13) வீரா, வியவசாயம் {உன் முனைப்பு}, சத்வம் பொருந்திய விக்கிரமம் {உயிர் சக்தியுடன் கூடிய வீரம்}, சுக்ரீவனின் மொழி ஆகியன எனக்கு காரியசித்தியை {காரியம் நிறைவேறப்போவதை} அறிவிக்கின்றன போலும்” {என்றான் ராமன்}[2].(14)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “காட்டுக்கு வரும்போது ராமன் தனக்குரிய அனைத்தையும் துறந்தால், இந்த மோதிரத்தை மட்டும் எப்படி தன் விரலில் அணிந்திருந்தான்? அங்கதன் துருப்புகளின் தலைவனாக இருக்கும்போது, ஏன் மோதிரம் ஹனுமானிடம் கொடுக்கப்பட்டது? என்பன சச்சரவுக்குரிய தலைப்புகளாகும். ராமன் மோதிரத்தை வைத்திருப்பதால், அந்தக் காலத்தில் திருமணத்தில் மோதிரம் மாற்றும் வழக்கமிருந்தது என்றும் கொள்ளலாம். இது மிதிலையில் செய்யப்பட்டு சீதை ராமனுக்கு அணிவித்த மோதிரமாக இருக்கலாம். ஆண்களைப் பொறுத்தவரையில், இது பெண்களுக்கு அணிவிக்கப்படும் தாலியைப் போன்றதாகும். அடுத்ததாக மோதிரத்தைப் பொறுத்தவரையில், ராஜபுத்திரனான அங்கதன் சேனைத்தலைவனாக இருப்பினும் அவன் சிறுவன்; ஹனுமான் சாதாரண அமைச்சனாக இருப்பினும், சுக்ரீவனால் உயர்வாகப் புகழப்படுபவன். எனவே ராமன் மோதிரத்தை ஹனுமானிடம் கொடுக்கிறான்” என்றிருக்கிறது. இதில் இன்னுமொன்று. இராமனின் பெயர் மோதிரத்தில் பதிக்கப்பட்டிருந்தால், அன்று ராமன் பேசிய, அல்லது சீதை பேசிய மொழிக்கு எழுத்துரு இருந்திருக்க வேண்டும்.
[2] இனைய ஆறு உரைசெயா இனிதின் ஏகுதி எனாவனையம் மாமணி நல்மோதிரம் அளித்து அறிஞ நின்வினை எலாம் முடிக எனா விடை கொடுத்து உதவலும்புனையும் வார் கழலினான் அருளொடும் போயினான்- கம்பராமாயணம் 4519ம் பாடல், நாடவிட்ட படலம்பொருள்: அவனிடம் {ஹனுமனிடம்} இவ்விதம் அடையாளங்களைச் சொல்லி, “இனிதாகச் செல்வாய்” என்று கூறி, சிறந்த ரத்தினங்கள் பதிக்கப்பட்ட நல்மோதிரத்தைக் கொடுத்து, “அறிஞனே, நீ மேற்கொண்டிருக்கும் செயல் முழுவதையும் முடிப்பாயாக” என்று விடை கொடுத்து அனுப்பிவிட்டதும், கட்டப்பட்ட நீண்ட வீரக்கழலைப் பூண்டவன் {ஹனுமான், ராமனின்} அருளோடு புறப்பட்டுச் சென்றான்.
பிலவகரிஷபனான அந்த ஹரிசிரேஷ்டன் {தாவிச் செல்லும் குரங்குகளில் காளையும், குரங்குகளில் சிறந்தவனுமான ஹனுமான்}, அதை {மோதிரத்தைப்} பெற்றுத் தன் தலையில் வைத்து, கைகளைக் கூப்பி, சரணங்களை வந்திதம் செய்து {ராமனின் பாதங்களை வணங்கிவிட்டுப்} புறப்பட்டுச் சென்றான்.(15) ஹரிக்களின் அந்த மஹத்தான படையை வழிநடத்துபவனும், வீரனும், பவனாத்மஜனுமான அந்த கபி {வாயு மைந்தனுமான அந்த ஹனுமான்}, மேகங்கள் இல்லாத வானத்தின் சுத்தமான மண்டலத்தில், நக்ஷத்திர கணங்களுடன் சோபிக்கும் சசியை {சந்திரனைப்} போலத் தெரிந்தான்.(16)
{அப்போது}, “அதிபலவானே, ஹரிவரவிக்ரமா {சிங்க நடை கொண்டவர்களில் சிறந்தவனே}, பவனசுதனே {வாயுமைந்தனே}, ஹனுமனே, நான் உன் பலத்தைச் சார்ந்திருக்கிறேன். அற்பமில்லா விக்ரமத்தால், அந்த ஜானகியை எப்படி அடையமுடியுமோ, அப்படிச் செயல்படுவாயாக” {என்றான் ராமன்}.(17)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 44ல் உள்ள சுலோகங்கள்: 17
Previous | | Sanskrit | | English | | Next |