Thursday 5 October 2023

வானரப்படைகள் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 39 (44)

Armies of Vanara monkeys | Kishkindha-Kanda-Sarga-39 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சுக்ரீவனிடம் நன்றிபாராட்டிய ராமன்; சுக்ரீவன் வந்து கொண்டிருக்கும் தன் படையினரைக் குறித்து ராமனிடம் சொன்னது...

Armies of Monkeys

தர்மத்தை நிலைநாட்டுபவர்களில் சிறந்தவனான ராமன், இவ்வாறு கைகளைக் கூப்பியபடியே பேசிக்கொண்டிருந்த சுக்ரீவனைத் தன் இரு கைகளாலும் நன்கு தழுவிக் கொண்டு {பின்வருமாறு} மறுமொழி கூறினான்:(1) "இந்திரன் மழையைப் பொழிவதும், ஆயிரங்கதிர்களைக் கொண்ட அந்த ஆதித்யன் நபத்தை {வானத்தை} இருளற்றதாக்குவதும்,{2} சந்திரன் தன் பிரபையால் இரவைக் களங்கமற்றதாக்குவதும், பரந்தபா {பகைவரை எரிப்பவனே}, சௌம்யா {மென்மையானவனே}, உன்விதமானவர்கள் மித்திரர்களைப் பிரீதியடையச் செய்வதும் வியப்புக்குரியனவல்ல.(2,3) சௌம்யா, சுக்ரீவா, எது சோபனத்துடன் உன்னிடமுள்ளதோ அது {நல்லழகுடன் உன்னிடம் உள்ள உதவும் இயல்பு} வியப்புக்குரியதல்ல. நீ சதா பிரியவாதியாகவே இருப்பதை நான் அறிவேன்.(4) 

சகாவே, உன்னை நாதனாகக் கொண்டு, போரில் சகல எதிரிகளையும் வெல்வேன். நல்லிதயம் படைத்த மித்ரா, எனக்கு சஹாயம் செய்யத் தகுந்தவன் நீயே.(5) அனுஹ்லாதன் பௌலோமியான சசியை {புலோமனின் மகளான இந்திராணியை அபகரித்துச் சென்றதைப்} போல, ராக்ஷச அதமன் {ராவணன்}, தன்னழிவுக்காகவே வஞ்சனை செய்து வைதேஹியைக் கொண்டு சென்றிருக்கிறான்.(6) பகைவரைக் கொல்பவனான சதக்ரது {இந்திரன்}, இழிவாகப் பேசிய பௌலோமியின் பிதாவை {புலோமனைக் கொன்றதைப்}[1] போல, அந்த ராவணனை வெகுவிரைவில் கூரிய சரங்களால் கொல்லப் போகிறேன்” {என்றான் ராமன்}.(7)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “இந்திரனின் மனைவியான சசி தேவி, தனுவின் மகனும், புலோமன் என்றழைக்கப்பட்டவனுமான ஓர் அசுரனின் மகளாவாள். ஹிரண்யகசிபுவின் மகனான அனுஹ்லாதன் என்பவன், இந்திரனை வஞ்சித்து சசிதேவியை, அவளது தந்தையான புலோமனின் சம்மதத்துடன் அபகரித்துச் சென்றான். அப்போது புலோமன் மீது கோபங்கொண்ட இந்திரன், சசிதேவியை அபகரித்துச் செல்ல உடந்தையாக இருந்த காரணத்திற்காக அவனைக் கொன்றான். இதன்காரணமாக இந்திரன் புலோமஜித் என்ற பெயரைப் பெற்றான்” என்றிருக்கிறது.

அதேவேளையில், ககனத்தில் ஆயிரங்கதிரோனின் {வானத்தில் சூரியனின்} தீவிர உஷ்ணம் கொண்ட பிரபையை மறைக்கும் வகையில் புழுதி தோன்றியது.(8) அதன் மூலம் இருளால் களங்கமடைந்த திசைகள் குழப்பமடைந்தன; சைலங்களும் {மலைகளும்}, வனங்களும் {காடுகளும்}, கானகங்களும் {சோலைகளும்} உள்ளிட்ட சர்வ மஹீயும் {மொத்த பூமியும்} நடுங்கிற்று.(9) அப்போது நகேந்திரனுக்கு {மலைகளின் மன்னனான இமயத்திற்கு} ஒப்பானவர்களும், கூரிய பற்களைக் கொண்டவர்களும், மஹாபலசாலிகளும், எண்ணிலடங்காதவர்களுமான பிலவங்கமர்கள் {தாவிச் செல்லும் குரங்கினர்} மொத்த பூமியிலும் நிறைந்தனர்.{10} பிறகு, நிமிஷாந்தர மாத்திரத்தில் {இமைப்பொழுதில்}, கோடிக்கணக்கான நூறுகளில் {நூறு கோடி} பரிவாரங்களைக் கொண்டவர்களும், காமரூபிகளுமான {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களுமான} ஹரியூதபர்களும் {குரங்குக் குழுத் தலைவர்களும்},{11} நதிகளையும், பர்வதங்களையும், சமுத்திரங்களையும் சார்ந்தவர்களும், மஹாபலசாலிகளுமான ஹரிக்களும் {குரங்கினரும்}, மேகங்களுக்கு நிகராக முழங்குபவர்களும், வேறு வனவாசிகளும்,{12} இளம் ஆதித்யனின் வர்ணம் கொண்டவர்களும், சசியை {சந்திரனைப்} போன்று வெண்மையானவர்களும், பத்மகேசர {தாமரைத் தாது} வர்ணம் கொண்டவர்களும், வெண்மேருவைக் கிருதாலயங்களாக {செயல்படும் களங்களாகக்} கொண்டவர்களுமான அத்தகைய வானரர்களும் அவர்களை {தாவிச் செல்பவர்களான குரங்குகளைச்} சூழ்ந்து நின்றனர்.(10-13) 

அப்போது தசகோடி ஆயிரமானவர்களால் {பத்தாயிரம் கோடிகளானவர்களால்} சூழப்பட்டவனும், ஸ்ரீமானும், வீரனும், சதபலி என்ற பெயரைக் கொண்டவனுமான வானரன் புலப்பட்டான் {அங்கே வந்தான்}.(14) பிறகு, காஞ்சன சைலத்தை {பொன்மலையைப்} போலத் தோற்றமளிப்பவனும், தாரையின் பிதாவுமான வீரியவான் {சுஷேணன்}, பல்லாயிரக்கணக்கானவர்களுடன் புலப்பட்டான்[2].(15) அதேபோல, ருமையின் பிதாவும், சுக்ரீவனின் மாமனாருமான விபு {தலைவன் [பிருஹஸ்பதியின் மைந்தனான தாரன்]}, ஆயிரக்கணக்கான கோடிகளில் அமைந்த துருப்புகளுடன் வந்து சேர்ந்தான்.(16) பத்மகேசரத்திற்கு {தாமரைத் தாதுக்கு} ஒப்பான மேனி கொண்டவனும், இளம் அர்க்கனுக்கு {சூரியனுக்கு} ஒப்பான முகம் கொண்டவனும், புத்திமானும், வானரசிரேஷ்டனும் {வானரர்களில் சிறந்தவனும்}, சர்வ வானரர்களிலும் சத்தமனும், ஹனுமதனின் {ஹனுமானின்} பிதாவுமான ஸ்ரீமான் கேசரி {கேஸரி}, பல்லாயிரக்கணக்கான வானரப்படையுடன் கூடியவனாகத் தோன்றினான்.(17,18) 

[2] ஊன்றி மேருவை எடுக்குறும் மிடுக்கினுக்கு உரிய
தேன் தெரிந்து உண்டு தெளிவுறு வானரச் சேனை
ஆன்ற பத்து நூறு ஆயிர கோடியோடு அமையத்
தோன்றினான் வந்து சுசேடணன் எனும் பெயர்த்தோன்றல்

- கம்பராமாயணம் 4409ம் பாடல், தானை காண் படலம்

பொருள்: சுசேடணன் எனும் பெயரைக் கொண்டவன், மேரு மலையைப் பெயர்த்தெடுக்கவல்ல வலிமையுடைவர்களும், தேனை ஆராய்ந்து பருகி தெளிவு பெற்றவர்களுமான சிறந்த பத்து லட்சங்கோடி வானரசேனையோடு பொருந்த வந்து சேர்ந்தேன்.

ஆயிரங்கோடி வானரர்களால் சூழப்பட்டவனும், கோலாங்கூலங்களின் {முசுக்களின்} மஹாராஜனும், பீம விக்கிரமனுமான கவாக்ஷசனும் அங்கே புலப்பட்டான்.(19) பகைவரை அழிப்பவனான தூம்ரன், பீம வேகங்கொண்ட {அஞ்சத்தக்க துரிதங்கொண்ட} இரண்டாயிரங்கோடி ரிக்ஷங்களால் {கரடிகளால்} சூழப்பட்டவனாக விரைந்து அணிவகுத்து வந்தான்.(20) மஹாவீரியனும், பனசன் {பனஸன்} என்ற பெயரைக் கொண்டவனுமான யூதபன் {குழுத்தலைவன் / சேனைத்தலைவன்}, மஹா அசலங்களுக்கு {அசைக்க முடியாத பெரும் மலைகளுக்கு} நிகரானவர்களும், கோரமானவர்களுமான {பயங்கரவுரு கொண்டவர்களுமான} மூன்று கோடி பேருடன் அங்கே வந்தான்.(21) பிறகு, தசகோடி {பத்து கோடி} பேரால் சூழப்பட்டவனும், நீல அஞ்சனக் குவியலின் {கரிய மைக்குவியலின்} வடிவிலான மஹாகாயம் {பேருடல்} படைத்தவனும், நீலன் என்ற பெயரைக் கொண்டவனுமான யூதபன் புலப்பட்டான் {குரங்குக் குழுத்தலைவன் வந்தான்}.(22) 

பிறகு, காஞ்சனத்தின் பளபளப்புடன் கூடியவனும், மஹாவீரியனும், கவயன் என்ற பெயரைக் கொண்டவனுமான யூதபன் {குழுத்தலைவன் / சேனைத்தலைவன்}, ஐந்து கோடி பேரால் சூழப்பட்டவனாக வந்தான்.(23) பிறகு, பலவானான தரீமுகன் என்ற யூதபன், ஆயிரங்கோடி பேருடன் சீக்கிரமே சுக்ரீவனின் அருகில் வந்து நின்றான்.(24) மஹாபலவான்களும், அசுவினி புத்திரர்களுமான மைந்தன், துவிவிதன் என்ற இரு வானரர்களும் கோடானுகோடி ஆயிரவருடன் புலப்பட்டனர்.(25) பலவானும், வீரனும், மஹாதேஜஸ்வியுமான கஜனும், மூன்று கோடி பேர் சூழ சுக்ரீவனின் சமீபத்தில் வந்து சேர்ந்தான்.(26) மஹாதேஜஸ்வியும், ஜாம்பவான் என்ற பெயரில் புகழ்பெற்றவனுமான ரிக்ஷராஜா {கரடிகளின் மன்னன்}, தன்னைச் சுற்றிலும் பத்து கோடி பேருடன் சுக்ரீவனின் வசத்தை அடைந்தான்.(27) தேஜஸ்வியும், பலவானும், ருமணன் {ருமண்வான்} என்ற பெயரைக் கொண்டவனுமான ஒருவன், நூறு கோடி பேருடன் துரிதமாக வந்து சேர்ந்தான்.(28) பிறகு, நூறாயிரங்களிலும், ஆயிரங்கோடிகளிலும் ஹரிக்கள் {குரங்குகள்} பின்தொடர கந்தமாதனனும் வந்து சேர்ந்தான்.(29) 

பிறகு, பிதாவுக்கு {வாலிக்கு} நிகரான பராக்கிரமம் கொண்டவனும், யுவராஜாவுமான அங்கதன், ஆயிரம் பத்மங்களும் {நூறு லக்ஷம் கோடி பேரும்}, நூறு சங்குகளும் {நூறுகோடி கோடி பேரும்} சூழ அங்கே வந்து சேர்ந்தான்.(30) பிறகு, தாரைகளின் மினுமினுப்புடன் கூடியவனும், பீம {அஞ்சத்தக்க} பராக்கிரமம் கொண்டவனுமான தாரன் என்ற ஹரி {குரங்கு}, ஐந்து கோடி ஹரிக்களுடன் {குரங்குகளுடன்} வெகுதூரத்தில் புலப்பட்டான்.(31) பதினோரு கோடி பேருக்கு ஈஷ்வரனும், வீரனும், யூதபனுமான இந்திரஜானு என்ற கபி {குரங்கானவன்}, அதே அளவுள்ளவர்கள் சூழப் புலப்பட்டான்.(32) பிறகு, இளம் ஆதித்யனின் {சூரியனின்} ஒளியுடன் கூடிய ரம்பன், நூறாயிரம் ஆயுதங்கள் {கோடானு கோடி பேர்} சூழ வந்து சேர்ந்தான்.(33) பிறகு, யூதபதியும் {குழுத் தலைவர்களின் தலைவனும்}, வீரனும், பலவானும், துர்முகன் என்ற பெயரைக் கொண்டவனுமான வானரன், இரண்டு கோடி பேரால் சூழப்பட்டவனாகப் புலப்பட்டான்.(34)

ஹனுமான், கைலாச சிகரத்தின் வடிவம் கொண்டவர்களும், பீம விக்கிரமம் {அஞ்சத்தக்க வெற்றிநடை} கொண்டவர்களுமான ஆயிரங்கோடி வானரர்கள் சூழப் புலப்பட்டான்.(35) மஹாவீரியனான நளனும், நூறுகோடியே நூறாயிரம் துருமவாசிகள் {மரத்தில் வசிக்கும் குரங்குகள்} சூழ வந்து சேர்ந்தான்.(36) பிறகு, ஸ்ரீமான் ததிமுகன், பெரும் முழக்கம் செய்யும் பத்து கோடி பேர் சூழ, அந்த மஹாத்மாவான சுக்ரீவனிடம் வந்து சேர்ந்தான்.(37) வானரர்களும், காமரூபிகளுமான {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களுமான} சரபன், குமுதன், வஹ்னி {வந்நி}, ரம்ஹன் {ரம்மன்} ஆகியோரும், மொத்த பிருத்வியிலும், பர்வதங்களிலும், வனங்களிலும் உள்ளோரும், எண்ணிக்கையில் கணக்கிட முடியாதவர்களுமான பிற வானரர்களும், யூதபர்களும் வந்து சேர்ந்தனர்.(38,39) 

தொங்கி ஆடியபடியும், தாவிக் குதித்தபடியும், கர்ஜித்தபடியும் வந்த பிலவங்கமர்களும், பிருத்வியிலுள்ள சர்வ வானரர்களும், சூரியனைச் சூழும் மேக கணங்களைப் போல சுக்ரீவனை அடைந்து நின்றனர்.(40) வலிமைமிக்கவர்களும், பாஹுசாலிகளுமான {வலிமைமிக்கக் கைகளையே ஆயுதங்களாகக் கொண்டவர்களுமான} அவர்கள், பெரும் சத்தம் எழுப்பியபடியே தங்கள் சிரங்களால் {தலைகளைத் தாழ்த்தி} வானரேந்திரனான சுக்ரீவனின் அடிபணிந்தனர்.(41) வேறு வானரசிரேஷ்டர்கள், உசிதமாக ஒன்று கூடி சுக்ரீவனைச் சந்தித்து, கைகளைக் கூப்பியபடியே பின்னால் நின்றனர்.(42) தர்மஜ்ஞனான {தர்மத்தை அறிந்தவனான} சுக்ரீவன், கைகளைக் கூப்பி நிற்பவர்களான அந்த சர்வ வானர ரிஷபர்களைத் துரிதமாக ராமனிடம் அறிவித்துவிட்டு, {அவர்களிடம் பின்வருமாறு} சொன்னான்:(43) “வானரேந்திரர்களே, பர்வதங்களிலும், நதிக்கரைகளிலும், சர்வ வனங்களிலும் சுகமாகவும், விதிப்படியும் பலங்களை {படைகளை} நிலைபெறச் செய்வீராக. பலத்தை {படையை} ஆராய்பவர்களுக்கு, பலத்தை அறியச்செய்வீராக” {என்றான்}.(44)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 39ல் உள்ள சுலோகங்கள்: 44

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை