Sugreeva prostrates before Rama | Kishkindha-Kanda-Sarga-38 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனிடம் நன்றிக்கடனை வெளிப்படுத்திய சுக்ரீவன்; பல்வேறு வடிவங்களைக் கொண்டவையும், பலம்வாய்ந்தவையுமான குரங்குகளின் படை பூமியின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வருவதாகச் சொன்னது...
{சுக்ரீவன்}, தன்னிடம் கொண்டுவரப்பட்ட அந்த உபாயனங்கள் {பரிசுப்பொருட்கள்} அனைத்தையும் பெற்றுக் கொண்டு, நல்வார்த்தைகளால் ஆறுதல் கூறி, அந்த வானரர்கள் அனைவரையும் அனுப்பிவைத்தான்.(1) அவன் {சுக்ரீவன் தான் சொன்ன}, இட்ட கர்மங்களைச் செய்தவர்களும், ஆயிரக்கணக்கானவர்களுமான அந்த ஹரிக்களை {குரங்குகளை} அனுப்பிவிட்டு, தானும், மஹாபலம்பொருந்திய ராகவனும் கிருதார்த்தர்களென {காரியம் நிறைவேறியவர்களானதாகக்} கருதினான்.(2)
இலக்ஷ்மணனானவன், பீம பலம் {அச்சப்படத்தக்க பலம்} பொருந்தியவனும், சர்வ வானரசத்தமனுமான {வானரர்கள் அனைவரிலும் வெல்வதற்கரியவனுமான} சுக்ரீவனுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் {பின்வரும்} நயமான வாக்கியத்தைச் சொன்னான், "சௌம்யா {மென்மையானவனே}, உனக்கு விருப்பமிருந்தால் {ராமரிடம் செல்ல} கிஷ்கிந்தையில் இருந்து புறப்படுவாயாக" என்றான்.(3,4அ)
சுக்ரீவன், லக்ஷ்மணனானவனால் நன்றாகச் சொல்லப்பட்ட அந்தச் சொற்களைக் கேட்டு, பரம பிரீதியடைந்து {பெரும் மகிழ்ச்சியடைந்து}, இந்த வாக்கியத்தைச் சொன்னான், "அவ்வாறே ஆகட்டும். செல்வோம். நான் {எப்போதும்} உமது சாசனத்திற்கு {ஆணைக்குக்} கட்டுப்பட்டவன்" என்றான்.(4ஆ,5) சுக்ரீவன், சுபலக்ஷணங்கொண்ட அந்த லக்ஷ்மணனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, தாரை முதலிய யோசிதைகளுக்கு {பெண்களுக்கு} விடை கொடுத்து அனுப்பினான்.(6) சுக்ரீவன், "ஏஹி {இங்கே வருவீராக}" என்று ஹரிவரர்களிடம் {சிறந்த குரங்குகளிடம்} உரக்கச் சொன்னான். அவனுடைய அந்தச் சொற்களைக் கேட்டவர்களும், ஸ்திரீ தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டவர்களுமான ஹரயர்கள் {அந்தப்புரக் காவலர்களுமான குரங்குகள்} அனைவரும் கூப்பிய கைகளுடன் சீக்கிரமே வந்து சேர்ந்தனர்.(7,8அ) அப்போது அர்க்கனை {சூரியனைப்} போன்ற பிரபையுடன் கூடிய ராஜா {சுக்ரீவன்}, அங்கே வந்தவர்களிடம் {பின்வருமாறு} சொன்னான், "வானரர்களே, என் சிபிகையை {பல்லக்கை} சீக்கிரம் கொண்டு வருவீராக" {என்றான்}.(8ஆ,9அ)
சீக்கிரவிக்கிரமர்களான ஹரயர்கள் {வேகமாகச் செல்லக்கூடிய குரங்குகள்}, அவனது வசனத்தைக் கேட்டதும், பிரியதரிசனந் தரும் {காண்பதற்கினிய} சிபிகையைக் கொண்டு வந்து நிறுத்தினர்.(9ஆ,10அ) வானராதிபன் {வானரத் தலைவனான சுக்ரீவன்}, அங்கே நிறுத்தப்பட்ட சிபிகையைக் கண்டு, "இலக்ஷ்மணரே, சீக்கிரம் ஏறுவீராக" என்று சௌமித்ரியிடம் சொன்னான்.(10ஆ,11அ) சுக்ரீவன் இவ்வாறு சொன்னதும், சூரிய ஒளியைக் கொண்டதும், ஏராளமான ஹரிக்களால் {குரங்குகளால்} சுமக்கப்படுவதுமான அந்தக் காஞ்சன யானத்தில் {பொன்வாகனத்தில்} லக்ஷ்மணன் ஏறினான்.(11ஆ,12அ)
தலையில் நிழல் விழ வெண்குடை பிடிக்கப்பட்டும்,{12ஆ} சுற்றிலும் வெண்சாமரங்களால் வீசப்பட்டும், சங்கு, பேரிகை நாதத்துடன் வந்திகளால் வந்திதம் செய்யப்பட்டும்,{13} ஒப்பற்ற ராஜ்ஜியஸ்ரீயை {ராஜ்ஜியமெனும் லட்சுமியை / செல்வத்தை} அடைந்தவனான சுக்ரீவன் புறப்பட்டுச் சென்றான்.(12ஆ-14அ) அவன், கூர்மையான சஸ்திரங்கள் {ஆயுதங்கள்} ஏராளமானவற்றைக் கைகளில் கொண்டவர்களும், நூற்றுக்கணக்கானவர்களுமான வானரர்களால் சூழப்பட்டவனாக, ராமன் இருக்கும் இடத்திற்குச் சென்றான்.(14ஆ,15அ) இலக்ஷ்மணனுடன் கூடிய மஹாதேஜஸ்வியான அவன் {சுக்ரீவன்}, ராமனால் சேவிக்கப்படும் சிறப்புவாய்ந்த தேசத்தை {இடத்தை} அடைந்ததும், சிபிகையில் இருந்து இறங்கினான்.(15ஆ,16அ) பிறகு, ராமனையும் அடைந்து, கைகளைக் கூப்பி நின்றான். அவன் கைகளைக் கூப்பி நின்றபோது, வானரர்களும் அதே போல {கைகளைக் கூப்பி} நின்றனர்.(16ஆ,17அ) இராமன், பங்கஜ {தாமரை} மொட்டுகளுடன் கூடிய தடாகத்தைப் போன்றிருக்கும் அந்த மஹத்தான வானர சைனியத்தை {படையைக்} கண்டு சுக்ரீவனிடம் பிரீதியடைந்தவனானான்.(17ஆ,18அ) தலையானது, தன் பாதத்தில்பட விழுந்து கிடக்கும் அந்த ஹரீஷ்வரனை {குரங்குகளின் தலைவனான சுக்ரீவனை} எழுப்பிய இராகவன் {ராமன்}, பிரேமத்துடனும், பஹுமானத்துடனும் {அன்புடனும், பெரும் மதிப்புடனும்} அவனை இறுகத் தழுவிக் கொண்டான்.(18ஆ,19அ)
இவ்வாறு அணைத்தவனும், தர்மாத்மாவுமான ராமன், "அமர்வாயாக" என்று சொன்னதும், தரையில் அமர்ந்தவனை {சுக்ரீவனைக்} கண்டு {பின்வருமாறு} சொன்னான்[1]:(19ஆ,20அ) "வீரா, ஹரிசத்தமா {குரங்குகளில் சிறந்தவனே}, எவன் எப்போதும் தர்மம், அர்த்தம், காமம் ஆகியவற்றைக் காலத்திற்கேற்பப் பகுத்து சேவிப்பானோ, அவனே ராஜா ஆவான்.(20ஆ,21அ) எவன், தர்மத்தையும், அதேபோல அர்த்தத்தையும் கைவிட்டு காமத்தை மட்டுமே சேவிப்பானோ, அவன் விருக்ஷத்தின் {மரத்தின்} உச்சியில் உறங்கியவனைப் போல, விழுந்தபிறகே விழித்துக் கொள்வான்.(21ஆ,22அ) அமித்ரர்களை வதைப்பதிலும் {பகைவரைக் கொல்வதிலும்}, மித்ரர்களை {நண்பர்களைத்} திரட்டுவதிலும் பற்றுடைய ராஜா, தர்மத்துடன் கூடிய திரிவர்க்க பழங்களைப் புசிப்பான் {தர்மம் {அறம்}, அர்த்தம் {பொருள்}, காமம் {இன்பம்} ஆகியவற்றுக்குரிய மூவகை பலன்களை அனுபவிப்பான்}.(22ஆ,23அ) சத்ருக்களை அழிப்பவனே, பிங்கேசா {குரங்குகளின் தலைவா}, இஃது உத்யோகத்திற்கான {[போர்த்]தொழிலுக்கான} பிராப்த சமயமாகும். மந்திரிகளுடனும், ஹரிக்களுடனும் {குரங்குகளுடனும்} நன்றாகச் சிந்திப்பாயாக" {என்றான் ராமன்}.(23ஆ,24அ)
[1] தீண்டலும் மார்பிடைத் திருவும் நோவுறநீண்ட பொன் தடக் கையால் நெடிது புல்லினான்மூண்டு எழு வெகுளி போய் ஒளிப்ப முன்பு போல்ஈண்டிய கருணை தந்து இருக்கை ஏவியே- கம்பராமாயணம் 4395ம் பாடல், கிட்கிந்தைப் படலம்பொருள்: {சுக்ரீவன் வணங்கும் வகையில் தன் பாதங்களைத்} தீண்டியதும், {ராமன்} தன் மார்பில் உறையும் திருமகளும் {லட்சுமியும்} வருந்தும்படி, நீண்டவையும், பொன்போன்றவையுமான அழகிய பெரிய கைகளால் {சுக்ரீவனை} அழுந்தத் தழுவினான். மூண்டு எழும் கோபம் தணிந்து போக, முன்பு போலவே அன்பு பாராட்டி இருக்கையில் அமரச் சொன்னான்.
இவ்வாறு சொல்லப்பட்டதும், சுக்ரீவன் ராமனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான், "மஹாபாஹுவே, தொலைந்து போன ஸ்ரீயையும், கீர்த்தியையும், சாஸ்வதமான {நிலையான} இந்த கபிராஜ்ஜியத்தையும் உம்மருளாலேயே நான் மீண்டும் அடைந்தேன்.(24ஆ,25) தேவா, ஜயதாம்வரா {வெற்றியாளர்களில் சிறந்தவரே}, உம்மாலும், உம்முடன் பிறந்தவரின் {லக்ஷ்மணரின்} அருளாலும் அது நடந்தது. எவன் கைம்மாறு செய்யாதவனோ, அந்தப் புருஷன் தூஷகனாவான் {அந்த மனிதன் இழிந்தவனாவான்}.(26) சத்ருசூதனரே {பகைவரை அழிப்பவரே}, நூற்றுக்கணக்கான முக்கிய வானரர்களும், பிருத்வியிலுள்ள பலம்வாய்ந்த சர்வ வானரர்களும் இங்கே திரண்டு வந்திருக்கின்றனர்.(27) இராகவரே, கடப்பதற்கரிய காந்தார வனங்களை {ஆழமான காட்டுப்பகுதிகளை} அறிந்தவர்களும், கோர தரிசனங்கொண்டவர்களுமான ரிக்ஷர்களும் {பயங்கரத் தோற்றம் கொண்டவர்களுமான கரடிகளும்}, வானரர்களும், சூரர்களான கோலாங்கூலர்களும் {முசுக்களும்},{28} தேவ, கந்தர்வ புத்திரர்களும், காமரூபிகளுமான {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களான} வானரர்களும், ராகவரே, தங்கள் தங்கள் சைனியங்கள் சூழ பாதையில் {படைகள் சூழ வழியில்} வந்து கொண்டிருக்கின்றனர்.(28,29) பரந்தபரே, வீரரே, நூறு, நூறாயிரம் {லக்ஷம்}, கோடிக் கணக்கிலான பிலவங்கமர்களும் {தாவிச் செல்லும் குரங்கினரும்}, ஆயுதம், ஆவிருதம், சங்கு,{30} அர்ப்புதம், நூறு அர்ப்புதம், மத்யம், அந்தம் கணக்கிலான வானரர்களும், ஸமுத்ரம், பரார்த்தம் கணக்கிலான ஹரயர்களும், ஹரியூதபர்களும் {குரங்கினரும், குரங்குக்குழு தலைவர்களும்}[2],{31} ராஜரே, மஹேந்திரனுக்கு சமமான விக்கிரமம் கொண்டவர்களும், மேகங்களுக்கும், பர்வதங்களுக்கும் ஒப்பானவர்களும், மேரு, விந்தியம் ஆகியவற்றைத் தங்கள் கிருதாலயங்களாக {வாழ்வகமாகக்} கொண்டவர்களும் உமக்காக வந்து கொண்டிருக்கின்றனர்.(30-32) யுத்தத்தில் போரிட்டுத் தாக்கி, ராக்ஷசனான ராவணனைக் கொன்று, மைதிலியை மீட்கக்கூடியவர்களே உம்மிடம் வந்து கொண்டிருக்கிறார்கள்" {என்றான் சுக்ரீவன்}.(33)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்திய எண்முறையில் நூறாயிரங்கள் லக்ஷமாகின்றன (1,00,000). நூறு லக்ஷங்கள், கோடியாகின்றன{1,00,00,000 - பத்து மில்லியன்}. பண்டைய இந்தியாவில் "ஆயுதம்" என்பது இதில் ஆயிரங்களாலான ஓர் அலகைக் குறிப்பதும் {ஆயிரங்கோடி 1000,00,00,000 - பத்து பில்லியன்}, ஒரு "சங்கு" என்பது ஒரு லக்ஷம் கோடி {1000000,00,00,000 - பத்து டிரில்லியன்} என்ற எண்ணிக்கையைக் குறிப்பதுமான படைசார்ந்த பெயர்களாகும். ஓர் அர்ப்புதம் என்பது, ஆயிரம் சங்குகளாகும் {1000000000,00,00,000 - பத்தாயிரம் பில்லியன் / பத்து குவாடிரில்லியன் / ஒரு லட்சத்து ஆயிரங்கோடி}. ஒரு மத்யமம் என்பது, பத்து அர்ப்புதங்களாகும் {10000000000,00,00,000 - நூறு குவாடிரில்லியன் / பத்து லட்சத்து ஆயிரங்கோடி}. ஓர் அந்தம் என்பது, பத்து மத்யமங்களாகும் {100000000000,00,00,000 - ஒரு குவிண்டில்லியன் / ஒரு கோடியே ஆயிரங்கோடி}. ஒரு சமுத்ரம் என்பது இருபது அந்தங்களாகும் {2000000000000,00,00,000 - இருபது குவிண்டில்லியன் / இருபதுகோடியே ஆயிரங்கோடி}. ஒரு பரார்த்தம் என்பது முப்பது சமுத்ரங்களாகும் {60000000000000,00,00,000 - அறுநூறு குவிண்டில்லியன் / அறுநூறு கோடியே ஆயிரங்கோடி}. இராமதிலகர், "இந்த எண்ணிக்கைகள் கொடுக்கப்பட்டாலும், வந்து கொண்டிருக்கும் குரங்குகள் எண்ணிலடங்காதவை என்றே பொருள் கொள்ள வேண்டும்" எனச் சொல்கிறார். ஆனால் பிறரோ, ராமதிலகரின் பொதுமைப்படுத்தலைவிட்டு விலகி, "படை எண்ணிக்கை வடிவங்களை பழங்காலத்தவர்கள் இவ்வாறு ஒழுங்கமைத்திருந்தனர்" என்று கொள்கின்றனர்" என்றிருக்கிறது.
அப்போது வசுதாதிபாத்மஜனான அந்த வீரியவான் {பூமியாண்ட தலைவன் தசரதனின் மகனான ராமன்}, தன் கட்டுப்பாட்டில் இயங்கும் ஹரிபிரவீரனின் {குரங்குகளில் சிறந்த வீரனான சுக்ரீவனின்} நல்ல உத்யோகத்தை {ஏற்பாட்டைக்} கண்ட உற்சாகத்தில், நன்கு மலர்ந்த நீலோத்பலத்திற்குத் துல்லியமான {நிகரான} கண்களைக் கொண்டவனானான்.(34)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 38ல் உள்ள சுலோகங்கள்: 34
Previous | | Sanskrit | | English | | Next |