East as said by Sugreeva | Kishkindha-Kanda-Sarga-40 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வினதனின் தலைமையில் கிழக்குத் திசையில் தேட வானரர்களுக்கு ஆணையிட்ட சுக்ரீவன்; கிழக்குத் திசை குறித்த வர்ணனை...
பிலவகேஷ்வரனும் {தாவிச் செல்லும் குரங்குகளின் தலைவனும்}, அர்த்தம் நிறைந்தவனுமான ராஜா சுக்ரீவன், பிறகு, நரசார்தூலனும் {மனிதர்களில் புலியும்}, பகைவரின் பலத்தை நசுக்குபவனுமான ராமனிடம் {பின்வருமாறு} பேசினான்:(1) “எனக்குத் தெரிந்த தேசங்களில் வசிக்கும் பலவான்களும், காமரூபிகளும் {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களும்}, மஹேந்திரனைப் போன்றவர்களுமான வானரேந்திரர்கள் வந்தடைந்து நிலைநிறுத்தப்பட்டனர்.(2) கோரமானவர்களும், தைத்திய, தானவர்களுக்கு ஒப்பானவர்களும், பீம விக்கிரமங் {அஞ்சத்தக்க நடை} கொண்டவர்களும், பலவான்களும், பல்வேறு நடைகளைக் கொண்டவர்களுமான வானரர்கள் வந்துவிட்டனர்.(3)
பாராட்டுக்குரிய கர்மங்களையும், காரியங்களையும் நிறைவேற்றியவர்களும், பலவான்களும், களைப்பைக் களைந்தவர்களும், பராக்கிரமத்தில் புகழ்வாய்ந்தவர்களும், வியவசாயத்தில் {முயற்சிகளில்} உத்தமர்களும்,{4} பிருத்வியிலும் {நிலத்திலும்}, நீரிலும் பயணிக்கவல்லவர்களும், நானாவித நகங்களில் {மலைகளில்} வசிப்பவர்களும், கோடிக்கணக்கிலானவர்களுமான இந்த வானரர்கள், இராமரே, உமது கிங்கரர்களாகி {பணியாட்களாகி / ஏவலர்களாகி} இருக்கின்றனர்.(4,5) அரிந்தமரே {பகைவரை அழிப்பரே}, இவர்கள் அனைவரும் ஆணைப்படி நடப்பவர்கள்; இவர்கள் அனைவரும் குருக்களின் ஹிதத்தில் {பெரியவர்களுக்கு நன்மை விளைவதில்} திடமாக இருப்பவர்கள். உமது விருப்பத்தை நிறைவேற்றவல்லவர்கள்.(6)
கோரமானவர்களும், தைத்திய, தானவர்களுக்கு ஒப்பானவர்களுமான வானரர்கள் பல்லாயிரக்கணக்கானோர், அஞ்சத்தக்க வெற்றிநடையோடு படைகளுடன் வந்துவிட்டனர்[1].(7) நரவியாகரரே, எது பிராப்த காலமென நினைப்பீரோ அதைச் சொல்வீராக. உமது வசத்தை அடைந்திருக்கும் அந்த சைனியத்திற்கு ஆணையிடுவீராக.(8) இந்தக் காரியத்தின் தத்துவத்தை {இயல்பை} உள்ளபடியே நான் அறிவேன். இருந்தாலும், தகுந்த முறையில் இவர்களுக்கு ஆணையிடுவதே உமக்குத் தகும்” {என்றான் சுக்ரீவன்}.(9)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “3ம் சுலோகமும், 7ம் சுலோகமும் ஒரே மாதிரி தெரிந்தாலும், நிலையிலும், தன்மையிலும் வெவ்வேறானவை” என்றிருக்கிறது.
தசரதாத்மஜனான {தசரதனின் மகனான} ராமன், இவ்வாறு பேசிக் கொண்டிருந்த சுக்ரீவனை இரு கைகளாலும் இறுகப் பற்றிக் கொண்டு, இந்த வசனத்தைச் சொன்னான்:(10) “மஹாபிராஜ்ஞனே {பேரறிஞனே}, சௌம்யா, வைதேஹி ஜீவித்திருந்தாலும், இல்லையென்றாலும், ராவணன் எங்கே வசிக்கிறானோ அந்த தேசத்தை அறிய வேண்டும்.(11) வைதேஹியையும், ராவணனின் நிலயத்தையும் {வசிப்பிடத்தையும்} அறிந்த அந்தக் காலத்திலேயே உன்னுடன் சேர்ந்து பிராப்த காலத்தை {போருக்குரிய காலத்தைக் குறித்துத்} தீர்மானிப்பேன்.(12) பிலவகேஷ்வரா {தாவிச்செல்லும் குரங்குகளின் தலைவா}, வானரேந்திரா, நான் இந்தக் காரியத்தில் பிரபுவல்ல; லக்ஷ்மணனுமல்ல. நீயே இந்தக் காரியத்திற்கு ஹேதுவான பிரபுவாக இருக்கிறாய்.(13) விபுவே {தலைவா}, என் காரியத்தை நிச்சயிக்க நீயே ஆணையிடுவாயாக. வீரா, என் காரியத்தை நீ அறிந்திருக்கிறாய் என்பதில் ஐயமில்லை.(14) நீ {லக்ஷ்மணனுக்கு அடுத்து} நண்பர்களில் சிறந்த இரண்டாமவனும், விக்ராந்தனும் {வெற்றிநடை கொண்டவனும்}, பிராஜ்ஞனும் {அறிஞனும்}, காலவிசேஷத்தை அறிந்தவனும்; எனக்கு நன்மை செய்ய வல்லவனும்; நல்லிதயம் கொண்ட ஆப்தனும் {நெருங்கிய நண்பனும்}; அர்த்தம் {எங்கள் நோக்கங்களை} அறிந்தவர்களில் சிறந்தவனுமாக இருக்கிறாய்” {என்றான் ராமன்}[2].(15)
[2] குடதிசைக்கண் சுடேணன் குபேரன் வாழ்வடதிசைக்கண் சதவலி வாசவன் மிடல்திசைக்கண் வினதன் விறல்தருபடையொடு உற்றுப்படர்கள எனப் பன்னினான்.- கம்பராமாயணம் 4456ம் பாடல், நாட விட்ட படலம்பொருள்: மேற்குத் திசையில் சுடேணனும் {இடபனும்}, குபேரன் வாழும் வட திசையில் சதவலியும், வலிமை கொண்ட இந்திரனுக்குரிய கிழக்குத் திக்கில் வினதனும் வலிமைமிக்க சேனையோடு சேர்ந்து செல்வாராக என்று கூறினான் {சுக்ரீவன்}
{இராமன்} இவ்வாறு சொன்னதும், சுக்ரீவன், ராமன், மதிமிக்க லக்ஷ்மணன் ஆகியோரின் சன்னிதானத்தில் {முன்னிலையில்}, வினதன் என்ற பெயரைக் கொண்ட யூதபனிடம் {குழுத்தலைவனிடம் பின்வருமாறு} பேசினான்.{16} சைலம் போன்றவனும், மேகம் போல் முழங்குபவனும், வலிமைமிக்கவனுமான பிலவகேஷ்வரனிடம் {தாவிச் செல்லும் குரங்குகளின் தலைவனான வினதனிடம்},(16,17அ) “வானரோத்தமா {வினதா}, சோமனுக்கும் {சந்திரனுக்கும்}, சூரியனுக்கும் ஒப்பான ஒளி பொருந்திய வானரர்களுடன் கூடியவனே,{17ஆ} தேச, கால, நயம் அறிந்தவனாகவும், காரியத்தை நிச்சயம் செய்வதில் திறன்வாய்ந்தவனுமான நீ, வலிமைமிக்க நூறாயிரம் வானரர்கள் சூழ,{18} சைலங்கள், வனங்கள், கானகங்களுடன் கூடிய பூர்வ திசைக்கு {கிழக்குத் திசைக்குச்} செல்வாயாக.(17ஆ-19அ) அங்கே வைதேஹியான சீதையையும், ராவணனின் நிலயத்தையும் {வசிப்பிடத்தையும்},{19ஆ} கிரி துர்கங்களிலும் {கடப்பதற்கரிய மலைகளிலும்}, வனங்களிலும், நதிகளிலும் தேடுவீராக[3].(19ஆ,20அ) நதிகளான பாகீரதி, ரம்மியமான சரயு, அதே போல கௌசிகி,{20ஆ} காளிந்தி, ரம்மியமான யாமுன மஹாகிரியில் உற்பத்தியாகும் யமுனை, சரஸ்வதி, சிந்து, {மாணிக்க} மணிக்கு நிகரான தெளிந்த நீரைக் கொண்ட சோணை,{21} மஹீ, கானகங்களுடன் சோபிக்கும் சைலங்களுடன் {மலைகளுடன்} கூடிய காலமஹீ {ஆகிய ஆறுகளிலும்}, பிரஹ்மமாலம், விதேஹம், மாலவம், காசி, கோசலம்,{22} மாகதம் {ஆகிய நாடுகளிலும்}, மஹாகிராமங்களான புண்டரம், அங்கம் {ஆகியவற்றிலும்}, அதே போல கோஷகாரங்களின் {பட்டுப்பூச்சிகளின்} பூமி, ரஜதாகரங்களின் {வெள்ளிச்சுரங்கங்களின்} பூமி ஆகியவற்றிலும் {தேடுவீராக}[4].(20ஆ-23) இராமரின் அன்புக்குரிய பாரியையும், தசரதரின் மருமகளுமான சீதையை ஆங்காங்கே சர்வ இடங்களிலும் தேடுவீராக.(24)
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “கிழக்குப் பக்கம் என்பது கிஷ்கிந்தையின் கிழக்குப்பக்கமல்ல, இது ‘தென்கிழக்காசியாவுடன் சேர்ந்த இந்தியத் துணைக்கண்டமான’ ஜம்பூத்வீபத்தின் கிழக்குப்பக்கமாகும். இளை, பாரதி, சரஸ்வதி என்ற ஆறுகளின் சங்கமமான சரஸ்வதி திரிவேணி எனும் தீர்க்கரேகையே இன்னும் இந்திய வானியலாளர்களின் முதன்மையான தீர்க்கரேகையாகத் திகழ்கிறது. முதல் வானாய்வகமான உஜ்ஜைன் வானாய்வகம், இந்த தீர்க்கரேகையில்தான் அமைந்திருக்கிறது. மத்திய இந்தியாவில் சுழன்று பாய்ந்து வந்த ஒரு புராதன நதியான சராவதி ஆறு இருக்கும் இடமான உஜ்ஜைனை நாட்டின் மையமாகக் கொண்டே தொல்கால வானியலாளர்கள் திசைகளைத் தீர்மானித்தனர். எனவே, சுக்ரீவனும் இந்தியாவின் முழுமையான கிழக்குப் பகுதியைச் சொல்கிறானேயன்றி, தன் சிறிய ராஜ்ஜியத்தின் கிழக்கப்பகுதியையல்ல” என்றிருக்கிறது.
[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “சரஸ்வதி, சிந்து எனும் மேற்கு ஆறுகள் இரண்டும், வினதனை அனுப்பும் கிழக்குப்பகுதியில் இருக்கிறது என்று குறிப்பிடுவது சர்ச்சைக்குரியதாகிறது. சரஸ்வதி ஆறானது, முன்பு பாய்ந்து பின் மறைந்தோ, பூமிக்கடியில் இன்னும் பாய்ந்து கொண்டோ இருக்கும் வேதகால ஆறாகும். இந்த ஆறு இமயத்தில் உற்பத்தியாகி பஞ்சாப், ஹரியானா, மேற்கு ராஜஸ்தான், குஜராத் வழியாகப் பாய்ந்து கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது. அதேபோல எந்த நதியும், ஓடையும் பொதுவாகவே சிந்து என்று அழைக்கப்படுவதால், இங்கே குறிப்பிடப்படும் சிந்து என்பது மேற்கில் பாயும் இண்டஸ் நதிக்குப் பொருந்தாது. எனவே, இதைப் பொதுவாகக் கிழக்கில் பாயும் ஏதோவொரு நதியாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். கிஷ்கிந்தா காண்டம், 42ம் சர்க்கம், 15ம் சுலோகத்தில் சுக்ரீவன் மேற்கில் பாயும் சிந்து நதியைத் தனியே குறிப்பிடுகிறான். அதேபோல மஹீ என்ற ஆறு “மத்தியப்பிரதேசத்தின் மால்வாவில் மேற்கு நோக்கி பாயும் நதியாகும்” என்று கிரிஃபித் சொல்கிறார். ஆனால் இந்தியாவின் தொல்புவியியல், “இந்த நதியின் குறிப்பு எங்கேயும் கிடைக்கவில்லை. சுலோகங்களின் தவறான நிலைமாற்றங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம்” என்று சொல்கிறது. புவியியல் குறித்த சுக்ரீவனின் விவரிப்பு, சிதறியிருப்பதாகப் பொதுவாக நம்பப்படுகிறது. சோணை ஆறு என்பது இன்றைய சோன் ஆறாகும். விஷ்வாமித்ரரின் தமக்கையான கௌசிகி ஆறு, இன்றைய கோசி ஆறாகும். பாலகாண்டத்தில் இந்த ஆற்றின் தோற்றம் குறித்து விஷ்வாமித்ரர் விளக்குகிறார் {1:34}. சீதை எங்கிருந்து அயோத்திக்கு வந்தாளோ அந்த மிதிலை ராஜ்ஜியமே விதேஹமாகும். அங்கம் இன்றைய மேற்கு வங்கத்தில் இருக்கிறது. மகதம், இன்றைய பீஹார் ஆகும். “மகதத்தின் வடக்கே கங்கை ஆறு பாய்கிறது, மேற்கே காசி இருக்கிறது, கிழக்கே ஹிரண்ய பர்வதம் இருக்கிறது, தெற்கே கிரணசுவர்ணம் {சிங்கபூமி} இருக்கிறது. மகதத்தின் தலைநகரம் குசுமபுரம் {பாடலிபுத்திரம்} இன்றை பாட்னாவாகும். மேலும், “கோஷகாரங்கள்” என்ற சொல் பட்டுப்பூச்சிகளையோ, வாளுக்கான உறைகளைச் செய்பவர்களையோ, சொற்களஞ்சிய ஆசிரியர்களையோ குறிக்கும். இந்தக் குலங்களின் அரசர்களையும் கூட இது குறிப்பிடக்கூடும்” என்றிருக்கிறது.
ஆழமான சமுத்திரங்கள், பர்வதங்கள், பட்டணங்கள் ஆகியவற்றையும், மந்தரத்தின் கொடுமுடியையும் ஆலயமாகச் சிலர் கொண்டிருக்கின்றனர்.{25} கர்ணப்பிராவணர்கள் {மறைந்த காதுகளைக் கொண்டவர்கள்}, அதேபோல ஓஷ்டகர்ணகர்கள் {உதடுகளையே தங்கள் காதுகளாகக் கொண்டவர்கள்}, கோரலோகமுகர்கள் {கோரமான உலோக முகம் படைத்தவர்கள்}, ஜவனர்கள், ஏகபாதர்கள் {ஒரே காலைக் கொண்டவர்களும்},{26} பலசாலிகளான அக்ஷயர்கள் {அழிவில்லாதவர்கள்}, அதே போல புருஷாதகர்கள் {நரமாமிச உண்பவர்கள்}, உயர்ந்த புற்களைச் சூடி பிரிய தரிசனம் தருபவர்களும், ஹேமத்தின் {தங்கத்தின்} நிறம் கொண்டவர்களுமான கிராதர்கள்,{27} {சமைக்கப்படாத} பச்சை மீனை உண்பவர்களும், துவீபவாசிகளுமான {தீவில் வசிப்பவர்களுமான} கிராதர்கள், அந்தர்ஜலத்தில் {நீருக்கடியில்} திரியும் கோரர்கள், நரவியாக்கிரர்கள் {புலிகளைப் போன்ற மனிதர்கள்} என்று புகழ்பெற்றவர்களுமான{28} இவர்கள் அனைவரின் வசிப்பிடங்களிலும் தேடுவீராக. கானனோகஸர்களே {காட்டில் வசிப்பவர்களே}, கிரிகளில் {மலைகளில்} ஏறிச் சென்றும், தாவிச்சென்றும், மிதந்து சென்றும் அவற்றை {அவ்விடங்களை} அடைவீராக.(25-29)
சப்தராஜ்ஜியங்களுடன் சோபிக்கும் {ஏழு நாடுகளுடன் ஒளிரும்} யவத்வீபம், சுவர்ணாகரங்களால் {தங்கச் சுரங்கங்களால்} சூழப்பட்ட சுவர்ணரூப்யகத்வீபம் ஆகியவற்றிலும் யத்னம் செய்வீராக {முயற்சிப்பீராக}.{30} யவத்வீபத்தைக் கடந்ததும் சிசிரம் என்ற பெயரைக் கொண்ட பர்வதத்தில், திவத்தை {சொர்க்கத்தைத்} தொட்டுக் கொண்டிருக்கும் சிருங்கம் {சிகரம்} தேவர்களாலும், தானவர்களாலும் சேவிக்கப்படுகிறது.{31} இவற்றிலுள்ள கிரிதுர்கங்களிலும், பிரபாதங்களிலும், வனங்களிலும் ராமபத்தினியான யஷஸ்வினியை {இந்தத்வீபங்களிலுள்ள கடப்பதற்கரிய மலைகளிலும், அருவிகளிலும், காடுகளிலும், ராமனின் மனைவியும், புகழ்மிக்கவளுமான சீதையை நீங்கள்} அனைவரும் சேர்ந்து தேடுவீராக[5].(30-32)
[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “யவத்வீபம், இன்றைய ஜாவா தீவு {சாவகத்தீவு} என்று கருதப்படுகிறது. ஏழு ராஜ்ஜியங்களுடன் இன்றைய ஜாவா, சுமந்தரா, பாலி, இந்தோனேசியா முதலியவற்றை ஒப்பிடலாம். “பொதுக்காலத்திற்கு முன் 10 முதல் 8 ஆயிரம் ஆண்டுகளுக்குள் {around 10 to 8 millennia B.C.E.,} பர்மாவிலிருந்து, மத்திய அமெரிக்கா வரை தொடர் நிலப்பரப்பு இருந்தது என்றும், இதன் காரணமாகவே இவ்வழியில் மாயன் நாகரிகம் தழைத்தோங்கியிருந்தது என்றும் நம்பப்படுகிறது. பின்னர் காலப்போக்கில் புவி ஒட்டுக்குரிய வட இந்திய நிலப்பரப்பு உயர்ந்து, தென் பகுதி தாழ்ந்துவிட்டது” என்று தொல்கால பாரதக் காலவரிசை (Chronology of Ancient Bharath, by Prof. K. Srinivasa Raghavan, published by 'Sri Aurobindo Study Circle, Triplicane, Chennai, in year 1896) என்ற நூலில் இருக்கிறது. எனவே, இந்தியாவின் தீவுக்கூட்டங்களில் உள்ள தீவுகள் மிக எண்ணற்றவையாகவும், அருகருகே அமைந்துள்ளதாகவும் கருதப்படுகிறது. இராமாயணத்தின் கவிமுனி {வால்மீகி}, ராமாயண காலத்தில் நிகழ்ந்த தீவுகளின் பிளவை துவீபம் என்று குறிப்பிடுகிறார். சம்ஸ்கிருதத்தின் “ய” என்ற எழுத்து, வட்டார மொழிகளில் “ஜ” என்று வேறுபடும். எனவே, சிம்ஹபுரி “சிங்க நகரம்” இன்றைய சிங்கப்பூர் ஆனதுபோல யவம், ஜாவா {சாவகம்} ஆயிற்று” என்றிருக்கிறது.
பிறகு, சிவந்த ஜலத்தைக் கொண்டதும், சீக்கிரமாகப் பாய்வதும், ஆழமானதுமான சோணத்தை அடைந்து, சமுத்திரத்தின் அக்கரையில் சித்தர்களாலும், சாரணர்களாலும் சேவிக்கப்படுபவையான{33} அதன் {சோணம் நதியின்} ரம்மியமான தீர்த்தங்களிலும், விசித்திரமான வனங்களிலும் ஆங்காங்கே வைதேஹியையும், {அவளுடன்} சேர்த்து ராவணனையும் தேடுவீராக. {பிறகு பிலக்ஷத் தீவுக்குச் செல்வீராக}.(33,34) மிகப் பெரியவையும், ஏராளமானவையுமான தோட்டங்களிலும், பர்வதப்ரபாவ நதிகளிலும் {மலைகளில் பெருகும் ஆறுகளிலும்}, குகைகள் அடர்ந்த பர்வதங்களிலும், வனங்களிலும் தேடுவீராக. {பிறகு இக்ஷு தீவுக்குச் செல்வீராக}.(35)
பிறகு, மஹாரௌத்திரமாக அநிலன் {காற்றானவன்} உதித்து முழங்கும் அலைகளுடன் கூடியவையும், மிகப்பெரியவையுமான சமுத்திரத்வீபங்களை {அனிலோத்திதத்தைக்}[6] காண்பதே உங்களுக்குத் தகும்.(36) அங்கே மஹாகாயம் {பேருடல்} படைத்தவர்களும், தீர்க்க காலம் பசித்திருப்பவர்களும், பிரம்மனின் நல்லனுமதி பெற்றவர்களும், நித்தியம் நிழலைப் பற்றி இழுப்பவர்களுமான அசுரர்களைக் காண்பீர்கள்.{37} காலமேகத்திற்கு ஒப்பானவையும், மஹா உரகங்களால் {பாம்புகளால்} சேவிக்கப்படுபவையும், மஹாநாதம் கொண்டவையுமான அந்தப் பெருங்கடலின் {இக்ஷு சமுத்திரத்தின்} தீர்த்தங்களுக்குச் செல்வீராக.(37,38)
[6] இது ஜப்பான் என்று நம்பப்படுகிறது.
பிறகு, சிவந்த ஜலத்தையும், லோஹிதம் என்ற பெயரையும் கொண்ட சாகரத்தை {மது சமுத்திரத்தை / சிவந்த கடலை} அடைந்ததும், அங்கே மிகப்பெரும் கூடஷால்மலியை {முள்ளிலவமரம் ஒன்றைக்} காண்பீர்கள்.(39) நானாவித ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதும், கைலாசத்திற்கு ஒப்பானதும், விஷ்வகர்மனால் கட்டப்பட்டதுமான வைனதேயனின் {கருடனின்} கிருஹம் அங்கே இருக்கிறது.(40) அங்கே சைலத்திற்கு {மலைக்கு} ஒப்பானவர்களும், அஞ்சத்தக்கவர்களும், மந்தேஹர்கள் என்ற பெயரைக் கொண்டவர்களுமான ராக்ஷசர்கள், பயத்தை உண்டாக்கும் நானாவித ரூபங்களில், சைல சிருங்கங்களில் {மலைச்சிகரங்களில்} தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.(41) அந்த ராக்ஷசர்கள் {மந்தேஹர்கள்}[7], நாளுக்கு நாள் சூரிய உதயத்தின் போது, நித்தியம் சூரியனால் எரிக்கப்பட்டு, பிரம்ம தேஜஸ்ஸால் {பிராமணர்கள் ஓதும் காயத்ரி மந்திரத்தின் சக்தியால்} தாக்கப்பட்டு ஜலத்தில் விழுந்து, மீண்டும் மீண்டும் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.(42,43அ)
[7] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “மந்தேஹர்கள் தினமும் சூரியனின் பாதையைத் தடுத்து, சூரிய உதயத்தின்போது அவனைக் கைப்பற்ற முயற்சிக்கும் உயிரினங்களாவர். அந்த நேரத்தில், காயத்ரி மந்திரமோதும் பக்தர்கள், காயத்ரிக்கு நீர்க்காணிக்கையை அளிக்கின்றனர். இந்த நீர்க்காணிக்கைகளும், காயத்ரி மந்திரத்தின் சக்தியும் சேர்ந்து மந்தேஹர்களைத் தாக்கி சூரியனின் பாதையிலுள்ள தடையை அகற்றுகின்றன. இவ்வாறு செல்லும் சூரியன் அவர்களை எரிக்கிறான். ஆனால் மந்தேஹர்கள் மீண்டும் தங்கள் உயிர்களை அடைந்து, அடுத்த நாள் காலையில் மலைச்சிகரங்களில் தொங்கி மீண்டும் சூரியனின் பாதையைத் தடுக்கத் தொடங்கி, மீண்டும் காயத்ரி மந்திரங்களாலும், நீர்க்காணிக்கைகளலும் கடலுக்குள் தள்ளப்படுகின்றனர். இது நாள்தோறும் தொடர்கிறது” என்றிருக்கிறது.
வெல்லப்படமுடியாதவர்களே, அங்கே சென்றதும், வெண்மேகத்தின் ஒளியிலுள்ள அலைகளைக் கொண்டதும், முத்தாரம் போன்றதும், பால்போன்ற நீரைக் கொண்டதும், அதே பெயரை {பாற்கடல் என்ற பெயரைக்} கொண்டதுமான சாகரத்தைக் காண்பீர்கள்.(43ஆ,44அ) அதன் மத்தியில், ரிஷபம் என்ற பெயரைக் கொண்டதும், வெண்மையானதுமான மஹாபர்வதம்,{44ஆ} திவ்யகந்தத்துடன் {தெய்வீக நறுமணத்துடன்} எப்போதும் மலர்ந்திருப்பவையும், நெருக்கமாக அடர்ந்திருப்பவையுமான மரங்களுடனும் இருக்கிறது. ஜ்வலிக்கும் ஹேம கேசரங்களுடன் {தங்க இழைகளுடன்} கூடிய வெள்ளி பத்மங்கள் {வெள்ளித் தாமரைகள்} நிறைந்த சரஸ் {பொய்கை ஒன்று},{45} அங்கே ராஜஹம்சங்களால் {அன்னப்பறவைகளாலும்} சூழப்பட்டதாகவும், ஸுதர்ஷனம் {சுதர்சனம்} என்ற பெயரைக் கொண்டதாகவும் திகழ்கிறது.(44ஆ-46அ) விபுதர்களான {பேரறிஞர்களான} சாரணர்களும், யக்ஷர்களும், கின்னரர்களும், அப்சரஸ் கணங்களும் மகிழ்ச்சியாகத் துள்ளி விளையாடியபடியே அந்த நளினியை {சுதர்சனத் தடாகத்தை} அடைகின்றனர்.(46ஆ,47அ)
வானரர்களே, அந்த க்ஷீரோதத்தை {பால் போன்ற நீரைக் கொண்ட கடலைக்} கடந்தால், சர்வ பூதங்களிடமும் {உயிரினங்கள் அனைத்தினிடமும்} பயத்தை உண்டாக்கும் ஜலோதம் என்ற {மென்மையான நீரைக் கொண்ட} சாகரத்தை அப்போது சீக்கிரமாகவே தரிசிப்பீர்கள்.(47ஆ,48அ) அங்கே அந்த கோபத்தால் ஜனித்த மஹத்தான ஹயமுகம், மஹாவேகம் கொண்ட அலைகளுடன் கூடிய அந்தக் கடலில் சராசரங்களுடன் {அசைவன, அசையாதன ஆகியவற்றுடன்} இருக்கிறது[8].(48ஆ,49அ) அங்கே அந்த வடவா முகத்தைக் காணும் சாமர்த்தியமில்லாவிட்டாலும், பெரும் ஊளையிடுபவையான சாகரோகஸ பூதங்களின் நாதத்தை {கடலில் வசிக்கும் உயிரினங்களின் ஒலியைக்} கேட்கலாம்.[9](49ஆ,இ) மென்னீரின் உத்தர தேசத்தில் {வடக்கில்} முப்பது யோஜனைகள் அளவு கொண்டதும், மகத்தானதும், கனகப்பிரபைக் கொண்டதும் {தங்கம் போல் மினுமினுப்பதும்}, ஜாதரூபசிலம் என்ற பெயரைக் கொண்டதுமான மலை இருக்கிறது.(50)
[8] ஔரசம் என்பது ஊரு, அதாவது “தொடை” {மடி} என்ற சொல்லில் இருந்து வெளிப்படுகிறது. ஔரசர் என்ற முனிவரின் தாய், சில மன்னர்கள் அவரைக் கொல்ல வந்த போது, தன் மடியின் அடியில் அவரை மறைத்து வைத்ததால் அவருக்கு “ஔரசர்” என்ற பெயர் வாய்க்கப்பெற்றது. இந்த முனிவரின் பழிதீர்க்கும் நடவடிக்கையின் மூலம் உண்டான யோக நெருப்பு உலகை தஹிக்கத் தொடங்கியது. அப்போது அவரது பித்ருக்கள் வந்து அவரை சமாதானப்படுத்தி அந்த யோக நெருப்பைக் கடலில் விடச் சொன்னார்கள். அவ்வாறு அவர் செய்த போது நீருக்கடியில் இருந்த அந்த நெருப்பு, பெண் குதிரையின் வாயின் பரப்பளவைக் கொண்ட துவாரத்தில் இருந்து வெளிப்படத் தயாராக இருக்கும் நிலையில் தென்துருவக் கடலினடியில் இருந்தது. வடபா அக்னி என்றும், படபா அனலன் என்றும் அழைக்கப்படும் அந்த நெருப்பே இங்கே குதிரை முகம் என்று குறிப்பிடப்படுகிறது. யுகாந்தத்தில் {யுகத்தின் முடிவில்} அந்த நெருப்பு வெளிப்பட்டு மொத்தத்தையும் அழிக்கும்போது “படைப்புகள் அனைத்தும் அதன் எரிபொருளாகப் பயன்படும்” என்று அடுத்த சுலோகம் சொல்கிறது”. இந்தக் கதை மஹாபாரதம் ஆதிபர்வத்தில் இருக்கிறது {1:181}” என்றிருக்கிறது.
[9] தர்மாலயப் பதிப்பில், "அவ்விடத்தில் அந்த வடவாமுகாக்னியைக் கண்டு ஜலத்தில் வசிக்கிறவைகளும், வலுக்கொண்டவைகளும் அலறும் பிராணிகளுடைய சப்தமும் கேட்கப்படுகிறது" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "அங்கு அந்த ஜல சமுத்ரத்தில் வாஸஞ்செய்யும் ப்ராணிகள் பல பராக்ரமங்கள் மிகுந்திருக்கப் பெற்றவராயினும் அந்தப் படபாக்னியைப் பார்த்துப் பொறுக்க முடியாமல் உரக்க இறைச்சலிடுவது செவிப்பட்டுக் கொண்டிருக்கும்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "அக்கடலையும் தாண்டிச் செல்வீர்களாயின், நன்னீர்க்கடல் காணப்படும். அதனிடையில்தான் படபாநலம் எரிந்து கொண்டிருக்கின்றது; அதனாலேதான் ஊழிகாலத்தில் எல்லா நீரிரும் பருகப்படுகின்றது, அக்கடலிடையில் வாழ்கின்ற சிறந்த உயிர்களும் அந்தத் தீயைக் கண்டச் சங்கொண்டு கூவுகின்றன; அங்கு அவ்வொலி மிக வொலிக்கின்றது" என்றிருக்கிறது.
வானரர்களே, பிறகு, அங்கே பர்வதத்தின் உச்சியில் அமர்ந்திருப்பவனும், சந்திர பிரதிகாசம் கொண்டவனும், பத்மபத்ரவிசாலாக்ஷனும் {தாமரை இதழ்களைப் போன்ற அகன்ற விழிகளைக்} கொண்டவனும், சர்வ பூதங்களாலும் நமஸ்கரிக்கப்படுபவனும் {அனைத்து உயிரினங்களாலும் வணங்கப்படுபவனும்}, ஆயிரம் சிரங்களை {தலைகளைக்} கொண்டவனும், நீல வஸ்திரம் தரித்த தேவனும், தரணீதரனுமான {பூமியைத் தாங்குபவனுமான} அனந்த பன்னகனை {அனந்தன் என்ற பாம்பைக்} காண்பீர்கள்[10].(51,52) அந்தப் பர்வதத்தின் உச்சியில், மூன்று சிரங்களை {தலைகளை / கிளைகளைக்} கொண்டதும், காஞ்சன வேதிகையுடன் {பொன்னாலான வேள்விப்பீடத்துடன்} ஒளிர்வதுமான தாலம் {பனை மரம்} அந்த மஹாத்மாவின் அடையாளமாக {கொடியாக} ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது.(53)
[10] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “ஆயிரம் தலைகளைக் கொண்டவனும், ஆதிசேசன் என்ற பெயரால் அழைக்கப்படுபவனும், விஷ்ணுவின் படுக்கையாகத் திகழ்பவனுமான “அனந்தன்” என்பதற்கு எல்லையற்றவன் என்று பொருள். அனந்தன் என்ற இந்தச் சொல், அண்டங்கள், கிரஹங்கள், நட்சத்திரங்கள் உள்ளிட்ட பூமியின் அடையாளச் சொல்லாகும்” என்றிருக்கிறது.
அந்த நிர்மாணமே பூர்வ திசை {கிழக்குத் திசை} என்று திரிதச ஈஷ்வரர்களால் {தேவலோகத்தின் தேவர்களால்} செய்யப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகு, ஹேமமயமான ஸ்ரீமான் உதய பர்வதம் இருக்கிறது.{54} அது ஜாதரூபமயமான, திவ்யமான, வேதிகைகளுடனும் {பொன்மயமான, தெய்வீக வேள்விப்பீடங்களுடனும்}, நூறு யோஜனைகள் உயரம் கொண்ட தன் சிகரங்கள் திவத்தை {சொர்க்கத்தைத்} தொடும் வகையிலும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.(54,55) ஜாதரூபமயமானவையும், திவ்யமானவையும், சூரியனுக்கு ஒப்பானவையும், புஷ்பித்த சாலம் {ஆச்சா}, தாலம் {பனை}, தமாலம் {பச்சிலை}, கர்ணீகாரங்களுடன் {கொன்றை மரங்களுடன்} அது சோபித்துக் கொண்டிருக்கிறது.(56) அங்கே ஒரு யோஜனை விஸ்தாரம் கொண்டதும், தசயோஜனை {பத்து யோஜனை} உயரம் கொண்டதும், ஜாதரூபமயமானதும், உறுதிமிக்கதும், சௌமனஸம் என்ற பெயரைக் கொண்டதுமான சிருங்கம் {சிகரம்} இருக்கிறது.(57) புருஷோத்தமனான விஷ்ணு பூர்வத்தில் திரிவிக்கிரமனாக {வாமனனாக} வந்த போது, முதலில் அங்கே தன் பாதத்தை வைத்து, இரண்டாவதாக மேரு சிகரத்தில் வைத்தான்.(58) திவாகரன் ஜம்பூத்வீபத்தின் வடக்கில் திரியும்போது, மஹத்தான உயரம் கொண்ட அந்த {சௌமனஸ} சிகரத்தை அடைந்த பிறகே நன்கு காணப்படுகிறான்.(59) அங்கே சூரிய வர்ணம் கொண்ட தபஸ்விகளும், வைகானஸர், வாலகில்யர் என்ற பெயர்களைக் கொண்ட மஹரிஷிகள் பிரகாசமானவர்களாகக் காணப்படுகின்றனர்.(60)
பிராணன்களைக் கொண்ட அனைத்திற்கும் எங்கே வெளிச்சமும், பார்க்கும் சக்தியும் உண்டாகிறதோ அதன் முன்னிலையில் இந்த சுதர்சனத்வீபம் இருக்கிறது.(61) அந்த சைலத்தின் உச்சியிலுள்ள குகைகளிலும், வனங்களிலும் ஆங்காங்கே ராவணனையும், வைதேஹியையும் தேடுவீராக.(62) அந்த காஞ்சன சைலத்தின், மஹாத்மாவான சூரியனின் தேஜஸ்ஸால் ஆக்கிரமிக்கப்பட்டே பூர்வ சந்தி {கிழக்கின் ஒளி / காலை சந்தி} சிவப்பாகப் பிரகாசிக்கிறது.(63) பூர்வத்தில் இதுவே {உதயமலையே} பிருத்வியில் {சுவனத்திலிருந்து} புவனத்திற்கான துவாரமாகச் செய்யப்பட்டது. அவ்வாறே அங்கு சூரிய உதய ஸ்தானமாகவும் நிறுவப்பட்டது. எனவே, இது பூர்வ திக் {கிழக்குத் திசை} என்று சொல்லப்படுகிறது.(64) அந்த சைலத்தின் சிகரங்களிலும், அடிவாரங்களிலும் உள்ள அருவிகளிலும், குகைகளிலும் ஆங்காங்கே ராவணனையும், வைதேஹியையும் தேடுவீராக.(65)
திரிதசர்கள் {தேவர்கள்} ஒன்றுகூடும் இடமும், சந்திரன், சூரியன் இல்லாததால் இருள் சூழ்ந்ததுமான பூர்வ திக் {கிழக்குத் திசை} அதற்கும் மேல் கடக்க முடியாததாகவும், புலப்படாததாகவும் இருக்கிறது.(66) அந்த சைலங்களிலும், அனைத்துக் குகைகளிலும், வனங்களிலும் என்னால் உத்தேசமாகச் சொல்லப்பட்டதும், சொல்லப்படாததுமான தேசங்களிலும் {இடங்களிலும்} ஜானகியைத் தேடுவீராக.(67) வானர புங்கவர்களே, அதுவரை வானரர்கள் செல்வது சாத்தியம். பாஸ்கரனில்லாதனவும், எல்லையற்றனவுமான அதற்கப்பால் இருப்பனவற்றைக் குறித்து நான் அறிகிறேனில்லை.(68) உதய பர்வதத்தை அடைந்ததும் வைதேஹியையும், ராவணனின் நிலயத்தையும் தேடிவிட்டு ஒரு மாசம் பூர்ணமாவதற்குள் திரும்பி வருவீராக.(69) மாசம் தாண்டி வசிக்க வேண்டாம். வசித்தால் என்னால் வதம் செய்யப்படுவீர்கள். மைதிலியைக் கண்டடைந்து சித்தார்த்தர்களாக {நோக்கம் நிறைவேறியவர்களாகத்} திரும்பிவருவீராக.(70) வானரர்களே, மஹேந்திரனால் பேணப்படுவதும், வனங்களாலும், தோட்டங்களாலும் சூழப்பட்டதுமான அந்த திசையை {கிழக்குத் திசையை} நிபுணத்துவத்துடன் தேடி, ரகுவம்சத்தில் ஜனித்தவரின் {ராமரின்} பிரியத்திற்குரிய சீதையைக் கண்டடைந்து அங்கிருந்து சுகமாகத் திரும்பி வருவீராக” {என்றான் சுக்ரீவன்}.(71)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 40ல் உள்ள சுலோகங்கள்: 71
Previous | | Sanskrit | | English | | Next |