Friday 22 September 2023

வானரர்களின் வருகை | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 37 (37)

Arrival of Vanaras | Kishkindha-Kanda-Sarga-37 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சுக்ரீவனின் ஆணை; வானரர்கள் அனைவரையும் அழைத்துவர வானரர்களை அனுப்பிய ஹனுமான்; சுக்ரீவனை அடைந்த எண்ணற்ற வானரர்கள்...

Vanara army

மஹாத்மாவான லக்ஷ்மணன் இவ்வாறு சொன்னதும், சுக்ரீவன், தன் அருகில் நின்று கொண்டிருந்த ஹனூமந்தனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்:(1) "சிகரங்களுடன் கூடிய மஹேந்திரம், ஹிமயம், விந்தியம், கைலாஸம், வெண்சிகரத்துடன் கூடிய மந்தரம் ஆகிய பஞ்ச சைலங்களிலும் {ஐந்து மலைகளிலும்} இருப்பவர்களையும்,{2} மேற்குத் திசையில், சமுத்திரத்தின் அந்தத்தில் {எல்லையில்}, இளம் ஆதித்யனின் வர்ணத்தில் நித்தியம் பளபளக்கும் பர்வதத்தில் {அஸ்தகிரியில்} உள்ளவர்களையும்,{3} சந்தியாகால மேகத்தின் ஒளியுடன் கூடிய ஆதித்ய பவனமிருக்கும் கிரியின் {கிழக்கில் உதயகிரியின்} பத்ம {தாமரை}, தால {பனை} வனங்களில் உள்ள பீமஹரிபுங்கவர்களையும் {பயங்கர குரங்குத் தலைவர்களையும்},{4} அஞ்சன {கரிய மையின் நிறத்திலான} மேகத்தின் ஒளியுடன், குஞ்சரத்திற்கு {யானைக்கு} ஒப்பான வீரியத்துடன், அஞ்சன பர்வதத்தில் வசிக்கும் பிலவங்கமர்களையும் {தாவிச் செல்லும் குரங்குகளையும்},{5} மஹாசைலங்களின் {பெரும் மலைகளின்} குகைகளில் வசிப்பவர்களும், மேருவின் சாரல்களை அடைந்திருப்பவர்களும், தூம்ர கிரியில் வசிப்பவர்களும், கனக பிரபை {பொன்வண்ணம்} கொண்டவர்களுமான வானரர்களையும்,{6} இளம் ஆதித்யனின் வர்ணத்துடன் கூடிய மஹாஅருண பர்வதத்தில், மைரேய மது பருகி திளைத்திருப்பவர்களும், பீமவேகம் கொண்டவர்களுமான பிலவங்கமர்களையும்,{7} ரம்மியமான, கந்தம் {மணம்} நிறைந்த, மஹத்தான வனங்களிலும், தாபஸ {தபஸ்விகளின்} ஆசிரமங்களால் சூழப்பட்ட ரம்மியமான வனாந்தரங்களிலும் {ஆழமான காடுகளிலும்} இருப்பவர்களையும்,{8} பிருத்வியில் ஆங்காங்கே உள்ள சர்வ வானரர்களையும், சாம, தான {நல்வார்த்தை சொல்வது, தானம் கொடுப்பது} முதலிய வழிமுறைகளைப் பின்பற்றுபவர்களும், வேகமாகச் செல்பவர்களுமான வானரர்களைக் கொண்டு சீக்கிரமே நீ திரட்டி வருவாயாக.(2-9) 

என் ஆணையின் பேரில் முதலில் அனுப்பப்பட்டவர்கள் மஹாவேகம் கொண்டவர்களாக இருப்பினும், துரித அர்த்தத்திற்காக {காரியத்தின் அவசரத்திற்காக}, நீ மீண்டும் ஹரீஷ்வரர்களை {குரங்குத் தலைவர்களை} விரைந்து அனுப்புவாயாக.(10) எந்த வானரர்கள் காமத்தில் பற்றுடையவர்களோ, தீர்க்கசூத்திரர்களோ {காலந்தாழ்த்துபவர்களோ}, அந்த கபீஷ்வரர்கள் {குரங்குத் தலைவர்கள்} அனைவரையும் சீக்கிரமே இங்கே கொண்டு வருவாயாக.(11) எவர்கள் என் ஆணையின் பேரில் பத்து நாட்களுக்குள் வரவில்லையோ, ராஜசாசன தூஷகர்களான அந்த துராத்மாக்கள் கொல்லப்பட வேண்டியவர்களாவர்.(12) என் கட்டுப்பாட்டில் எவர்கள் இருக்கிறார்களோ அந்த கபிசிம்ஹங்கள் {குரங்குகளில் சிங்கங்கள்}, நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் என் சாசனத்தின்படி புறப்படட்டும்.(13) மேகங்களுக்கும், பர்வதங்களுக்கும் ஒப்பாக ஒளிர்பவர்களும், கோர ரூபம் கொண்டவர்களுமான கபிசிரேஷ்டர்கள் {குரங்குகளில் சிறந்தவர்கள்}, அம்பரத்தை {வானத்தை} மறைப்பதைப் போல என் சாசனத்தின் பேரில் இங்கிருந்து புறப்பட்டுச் செல்லட்டும்.(14) கதிஜ்ஞர்களான {வழிகளை அறிந்தவர்களான} அத்தகைய சர்வ வானரர்களும், துரித கதியில் {வேகமாகச் செல்லக்கூடிய வழிகளில்} சென்று, பிருத்வி முழுவதுமுள்ள ஹரிக்களை {குரங்குகளை} என் சாசனத்தின் பேரில் அழைத்து வரட்டும்" {என்றான் சுக்ரீவன்}.(15)

வாயுசுதன் {வாயுவின் மகனான ஹனுமான்} அந்த வானரராஜனின் {சுக்ரீவனின்} சொற்களைக் கேட்டு, விக்ராந்தர்களான வானரர்களை சர்வ திசைகளிலும் அனுப்பினான்.(16) இராஜனால் அனுப்பப்பட்ட அந்த ஹரயங்கள் {குரங்குகள்}, பறவைகளும், ஜோதிகளும் {நட்சத்திரங்களும்} செல்லும் பாதையில், க்ஷணப் பொழுதில் விஷ்ணு தாண்டிய பதத்தில் {வானத்தில்} பிரயாணித்தனர்[1].(17) அந்த வானரர்கள், சமுத்திரங்கள், கிரிகள், வனங்கள், சரஸ்கள் {பொய்கைகள்} ஆகியவற்றிலுள்ள சர்வ வானரர்களையும் ராமனுக்கு ஹேதுவாகத் தூண்டினர்.(18) மிருத்யுவுக்கும், காலனுக்கும் ஒப்பான ராஜராஜன் சுக்ரீவனின் ஆணையைக் கேட்ட வானரர்கள், சுக்ரீவனின் மீதுள்ள பயத்தால் பீடிக்கப்பட்டவர்களாகப் புறப்பட்டனர்.(19) 

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "விஷ்ணு, தன் வாமன அவதாரத்தில் சொர்க்கத்தை நோக்கித் தன் பாதத்தை விரித்து இடையில் இருந்த வானத்தை ஒரே எட்டில் {அடியில்} மறைத்தான். அதுமுதல் சொர்க்கம் திரிதிவம் என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் குரங்குகள் வானவழியில் சென்றன என்று சொல்லப்படுகிறதேயன்றி சொர்க்கவழியிலல்ல" என்றிருக்கிறது. வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பின் அடிக்குறிப்பில், "தலைவன் விஷ்ணு, தன் வாமன அவதாரத்தில் வானத்தில் தன் பாதத்தை வைத்ததுமுதல் வானம் விஷ்ணுபதம் என்றே அழைக்கப்படுகிறது" என்றிருக்கிறது.

அப்போது, அஞ்சனத்திற்கு ஒப்பான ஒளியைக் கொண்டவர்களும், மஹாவேகம் கொண்டவர்களுமான அந்த பிலவங்கமர்கள் மூன்று கோடி பேர் அந்த கிரியில் {அஞ்சன மலையில்} இருந்து ராகவன் இருந்த இடத்திற்குப் புறப்பட்டனர்.(20) எங்கே அர்க்கன் {சூரியன்} அஸ்தமடைவானோ அந்த கிரிவரத்தில் {சிறந்த மலையான அஸ்த கிரியில்} திளைத்திருப்பவர்களும், புடம்போட்ட ஹேமவர்ணத்தில் ஒளிர்ந்து கொண்டிருப்பவர்களுமான பத்து கோடி பேர் அங்கிருந்து {அஸ்தகிரியில்} புறப்பட்டனர்.(21) பிறகு, சிம்ஹகேசரத்தின் {சிங்கத்தினுடைய பிடரிமயிரின்} நிறம் கொண்ட வானரர்கள், ஆயிரங்கோடி பேர் கைலாஸ சிகரத்திலிருந்து புறப்பட்டனர்.(22) பழங்களிலும், கிழங்குகளிலும் ஜீவித்துக் கொண்டு ஹிமயத்தில் வசிப்பவர்கள் ஆயிரமாயிரம் கோடிபேர் புறப்பட்டனர்.(23) விந்தியத்திலிருந்து, அங்காரகனுக்கு ஒப்பானவர்களும், பயங்கர கர்மங்களைச் செய்யும் பயங்கரர்களுமான வானரர்கள் கோடிக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் வேகமாக இறங்கி வந்தனர்.(24) பாற்கடலின் கரைகளில் இருப்பவர்களும், தமால வனவாசிகளும் {பலா மரங்கள் அடர்ந்திருக்கும் வனத்தில் வசிப்பவர்களும்}, நாரிகேலத்தை {தேங்காயை} உண்பவர்களுமானவர்கள் {தென்னந்தோப்புகளில் வசிப்பவர்களுமானவர்கள்} எண்ணற்ற பேராவார்.(25) மஹாபலமிக்க அந்த வானரசேனையானது, திவாகரனை {சூரியனை} விழுங்குவதைப் போல வனங்களிலிருந்தும், குகைகளிலிருந்தும், சரிதங்களிலிருந்தும் {ஆறுகளிலிருந்தும்} வந்தது.(26)

எந்த வானரர்கள், சர்வ வானரர்களையும் தூண்டித் துரிதப்படுத்தினார்களோ, அந்த வீரர்கள், பெரும் மரங்கள் நிறைந்த ஹிமய சைலத்தை {இமய மலையைக்} கண்டனர்.(27) புண்ணியமான அந்த கிரிவரத்தில் {சிறந்த மலையான இமயத்தில்}, பூர்வத்தில், சர்வ தேவர்களின் மனத்திற்கும் மகிழ்ச்சியூட்டுவதும், மனத்திற்கு இனிமையானதுமான மஹேஷ்வர யஜ்ஞம் நடைபெற்றது.(28) அங்கே சிதறிய அன்னத்தில் இருந்து உண்டானவையும், அம்ருதத்துக்கு ஒப்பான சுவை கொண்டவையுமான கிழங்குகளையும், பழங்களையும் அந்த வானரர்கள் கண்டனர்.(29) அந்த அன்னத்திலிருந்து உண்டானவையும், திவ்யமானவையும், மனோஹரமானவையுமான பழங்களையும், கிழங்குகளையும் ஒரேயொருமுறை சிறிதளவே உண்ணும் எவரும் ஒருமாதம் {பசி, தாகமின்றி} திருப்தியாக இருப்பர்.(30) பழங்களை உண்பவர்களான ஹரிபுங்கவர்கள் {சிறந்த குரங்குகள்}, திவ்யமான அந்த கிழங்குகளையும், பழங்களையும், திவ்யமான ஔஷதங்களையும் {மூலிகைகளையும்} திரட்டினர்.(31) அங்கே சென்ற வானரர்கள், அந்த யஜ்ஞசாலையில் இருந்து உயர்ந்த நறுமணமிக்க புஷ்பங்களை சுக்ரீவனின் பிரிய காரணத்திற்காகத் திரட்டினர்.(32)

அந்த ஹரிவரர்கள் {சிறந்த குரங்குகள்} அனைவரும், பிருத்வியிலுள்ள சர்வ வானரர்களையும் தூண்டிவிட்டு, {கிஷ்கிந்தையை நோக்கி} கூட்டங்கூட்டமாக முன்னைவிட அதிக துரிதமாகச் சென்றனர்.(33) சீக்கிரம் செல்பவர்களான அந்த கபயர்கள் {குரங்குகள்}, அந்த முஹூர்த்தத்திலேயே வானரன் சுக்ரீவன் எங்கிருந்தானோ அந்த கிஷ்கிந்தைக்குத் துரிதமாக வந்து சேர்ந்தனர்.(34) அந்த வானரர்கள் அனைவரும், ஔஷதிகளையும் {மூலிகைகளையும்}, பழங்களையும், கிழங்குகளையும் கொண்டு வந்து அவனிடம் {சுக்ரீவனிடம்} கொடுத்து வாங்கிக் கொண்டு இந்தச் சொற்களைச் சொன்னார்கள்:(35) "சர்வ சைலங்களையும், சரிதங்களையும், வனங்களையும் சுற்றிவந்தோம். {உமது} சாசனத்தின் பேரில் பிருத்வியிலுள்ள சர்வ வானரர்களும் உமக்காக வந்து கொண்டிருக்கின்றனர்" {என்றனர்}.(36) அப்போது இதைக் கேட்டு மகிழ்ந்த பிலவகாதிபனான {தாவிச் செல்லும் குரங்குகளின் தலைவனான} சுக்ரீவன், அவர்களிடம் இருந்து உபாயனங்கள் {பரிசுப் பொருட்கள்} அனைத்தையும் பிரீதியுடன் பெற்றுக் கொண்டான்.(37)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 37ல் உள்ள சுலோகங்கள்: 37

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை