Tuesday 29 August 2023

கிஷ்கிந்தா பிரவேசம் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 31 (51)

Lakshmana entered Kishkindha | Kishkindha-Kanda-Sarga-31 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சுக்ரீவனிடம் கடுங்கோபத்தில் சென்று அவனது குகை வாயிலை அடைந்த லக்ஷ்மணன்; அவனைக் கண்டு திகிலும், பீதியுமடைந்த வானரர்கள்...

Lakshmana goes to Kishkindha

நரேந்திரனின் {மனிதர்களின் மன்னன் தசரதனின்} மகனான அந்த ராமானுஜன் {ராமனின் தம்பி லக்ஷ்மணன்}, காமத்தால் தீனமடைந்தவனும் {காதலால் பரிதாப நிலையில் இருந்தவனும்}, சோர்வில்லாதவனும், சோகத்தில் மூழ்கியவனும், கோபம் தீவிரமடைந்தவனும், நரதேவபுத்திரனுமான தன் பூர்வஜனிடம் {அண்ணன் ராமனிடம்} இதைச் சொன்னான்:(1) "வானரன் {சுக்ரீவன்}, நன்னடத்தையைப் பின்பற்றமாட்டான். கர்ம பலனைப் பகிர்ந்து கொள்வதைக் கருத்தில் கொள்ளமாட்டான். வானரராஜ்ஜிய லக்ஷ்மியை அனுபவிக்கவும்மாட்டான். எனவே, அவனது புத்தி நம்மைப் பின்தொடர்ந்து வரவில்லை.(2) உமது அருளுக்குப் பிரதிகாரம் {பதிலுதவி} செய்யாத புத்தியைக் கொண்டவனும், மதி இல்லாததால் கிராம்ய சுகங்களில் {சிற்றின்பங்களில்} மூழ்கிக் கிடப்பவனுமான அவன், தன் ஆக்ரஜனான {அண்ணனான} வாலியை நேரில் காணட்டும் {இத்தகைய சுக்ரீவன் கொல்லப்பட வேண்டும்}. குணம் இல்லாதவனுக்கு {இப்படிப்பட்ட துர்ப்புத்தியைக் கொண்டவனுக்கு} ராஜ்ஜியத்தைக் கொடுக்க வேண்டாம்.(3) கோபத்தின் வேகத்தைத் தரிக்க {அடக்க} முடியாதவனான நான், அசத்தியனான {சொன்ன சொல் தவறியவனான} சுக்ரீவனை இப்போதே  கொல்லப்போகிறேன். வாலியின் புத்திரன், ஹரிப்ரவீரர்களுடன் சென்று நரேந்திரபுத்திரியை {அங்கதன், துணிவுமிக்க குரங்கு வீரர்களுடன் சென்று ராஜகுமாரியான சீதையைத்} தேடட்டும்" {என்றான் லக்ஷ்மணன்}.(4)

பகை வீரர்களைக் கொல்பவனும், போரில் தடுக்கப்படமுடியாத கோபம் கொண்டவனுமான ராமன், பாணாசனத்தை {பாணங்களைப் பொருத்தும் வில்லை} எடுத்துக் கொண்டு, புறப்படத்தயாராக இருப்பவனிடம் {லக்ஷ்மணனிடம்}, தீர்க்காலோசனையின் பலனாய் விளையும் {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னான்:(5) "உன்விதமானவர்கள் உலகத்தில் இவ்வகை பாபத்தை நிச்சயம் செய்யமாட்டார்கள். எவன், ஆரியனாகவும் {பெருந்தன்மை கொண்டவனாகவும்}, கோபத்தைக் கொன்றவனாகவும் {தீய எண்ணத்தை ஒழித்தவனாகவும்} இருக்கிறானோ அவனே வீரன்; உண்மையில் புருஷோத்தமன் {மனிதர்களில் உத்தமன்}.(6) இலக்ஷ்மணா, சாதுவிருத்தம் {நன்னடத்தை} கொண்ட நீ, இக்காரியத்தை இவ்வாறு புரிந்து கொள்ளக்கூடாது. இவற்றில்  பிரீதியையும் {சுக்ரீவனின் அன்பையும்}, பூர்வவிருத்த சங்கதத்தையும் {முன்நடந்த கூட்டுறவையும்} பின்பற்ற வேண்டும்.(7) காலம் கடந்துவிட்டது. அதைக் கவனிக்காமல் இருக்கும் சுக்ரீவனிடம் கடுமையான சொற்களைத் தவிர்த்துவிட்டு, சாந்தகுணத்துடன் வெளிப்படும் சொற்களில் பேசுவதே உனக்குத் தகும்" {என்றான் ராமன்}.(8)

ஆக்ரஜன் அனுஷ்டிக்கச் சொன்ன அர்த்தத்தின்படியே {அண்ணன் ராமனின் உபதேசத்திற்கேற்றபடியே}, புருஷரிஷபனும், பரவீரர்களைக் கொல்பவனும், வீரனுமான அந்த லக்ஷ்மணன் புரீக்குள் {கிஷ்கிந்தா நகருக்குள்} பிரவேசித்தான்.(9) சுபமதிபடைத்தவனும், பிராஜ்ஞனும் {அனைத்தையும் அறிந்தவனும்}, உடன்பிறந்தானின் பிரியத்திற்கு ஹிதம் செய்ய விரும்புகிறவனும், கோபத்தில் எரிந்து கொண்டிருந்தவனும், காலாந்தகனுக்கு ஒப்பானவனுமான லக்ஷ்மணன், சக்ரனின் {இந்திரனின்} பாணாசனத்திற்கு {பாணம் பொருத்தும் வில்லுக்கு} ஒப்பானதும், கிரி சிருங்கத்தின் {மலைச்சிகரத்தின்} பிரகாசத்தைக் கொண்டதுமான தனுவைத் தரித்து, சிருங்கத்துடன் கூடிய மந்தரத்தை {சிகரத்துடன் கூடிய மந்தரமலையைப்} போல கபி பவனத்தை {குரங்கான சுக்ரீவனின் வசிப்பிடத்தை} நோக்கிச் சென்றான்.(10,11) பிறகு, ஏற்ற காரியத்தைச் செய்பவனும், ராமானுஜனும் {ராமனின் தம்பியும்}, உடன்பிறந்தானின் காமகுரோதங்களால் தூண்டப்பட்டவனும், கோபாக்னியால் சூழப்பட்டவனும், பிருஹஸ்பதிக்கு சமமான புத்தியைக் கொண்டவனுமான லக்ஷ்மணன், பதில்களையும், மறுமொழிகளையும் நினைத்தவாறே புயற்காற்றைப் போல பிரீதியின்றி பிரயாணித்தான்.(12,13) 

சாலம் {ஆச்சா}, தாலம் {பனை}, அச்வகர்ணங்களையும், இதர மரங்களையும் வலிமையால் வீழ்த்தியபடியும், கிரிகூடங்களை {மலைச்சிகரங்களை} பலத்தால் அடியோடு அழித்துக் கொண்டும், பாத அடிகளை நீளமாக எட்டி வைத்துக் கொண்டும், வேகமாக நடக்கும் கஜத்தை {யானையைப்} போல, கால்கள் இரண்டாலும் சிறு கற்களை உருட்டித் தள்ளியபடியே காரியத்தின் வசப்பட்டவனாக வேகமாகச் சென்றான்.(14,15) இக்ஷ்வாகுசார்தூலன் {இக்ஷ்வாகு குலத்தின் புலியான லக்ஷ்மணன்}, கிரிகளின் மத்தியில் நிலைத்திருப்பதும், படைகள் நிறைந்ததும், கடப்பதற்கரியதுமான ஹரிராஜாவின்  மஹாபுரியான {குரங்கு மன்னன் சுக்ரீவனின் பெரும் நகரமான} அந்த கிஷ்கிந்தையைக் கண்டான்.(16) கோபத்தில் துடிக்கும் உதடுகளுடன் சுக்ரீவனை நோக்கிச் சென்று கொண்டிருந்த லக்ஷ்மணன், கிஷ்கிந்தையின் வெளிப்புறங்களில் வலிமைமிக்க வானரர்கள் திரிந்து கொண்டிருப்பதைக் கண்டான்.(17) 

பர்வதங்களின் மத்தியில் குஞ்சரங்களுக்கு {யானைகளுக்கு} ஒப்பான வானரர்கள், புருஷரிஷபனான {மனிதர்களிற் காளையான} அந்த லக்ஷ்மணனைக் கண்டனர். வானரர்கள் அனைவரும் சைலசிகரங்களையும், நன்கு வளர்ந்த நூற்றுக்கணக்கான பெரும் மரங்களையும் எடுத்துக் கொண்டனர்.(18) தாக்குதலுக்குத் தயாராக இருக்கும் அவர்கள் அனைவரையும் கண்ட லக்ஷ்மணன், அதிக விறகூட்டப்பட்ட அனலனை {நெருப்பைப்} போல இரு மடங்கு குரோதத்தை அடைந்தான்.(19) நூற்றுக்கணக்கில் இருந்த அந்த பிலவங்கமர்கள் {தாவிச் செல்லும் குரங்குகள்}, அதிகம் தூண்டப்பட்டவனும், யுகாந்தத்தின் கால மிருத்யுவை {யுகமுடிவில் தோன்றும் மரணதேவனைப்} போன்றவனுமான அவனைக் கண்டு பயத்தால் அங்கங்கள் சுருண்டு, திசைகள் அனைத்திலும் துரிதமாக ஓடிச் சென்றனர்.(20)

அந்த ஹரிபுங்கவர்கள் {சிறந்த குரங்குகள்} சுக்ரீவனின் பவனத்திற்குள் பிரவேசித்து, லக்ஷ்மணனின் வரவையும், அவனது குரோதத்தையும் தெரிவித்தனர்.(21) அப்போது காமியும் {காமத்தில் மூழ்கியவனும்}, தாரை சஹிதனாக தனிமையில் இருந்தவனுமான கபிவிருஷன் {குரங்குகளில் காளையான சுக்ரீவன்}, அந்தக் கபி வீரர்களின் சொற்களைத் தெளிவாகக் கேட்டானில்லை.(22) பிறகு, ரோமஹர்ஷனத்தை {மயிர்க்கூச்சத்தை} ஏற்படுத்தக்கூடியவர்களும், கிரிகளுக்கும், குஞ்சரங்களுக்கும் {யானைகளுக்கும்}, மேகங்களுக்கும் ஒப்பானவர்களுமான ஹரயர்கள் {குரங்குகள்}, அமைச்சர்களால் ஆணையிடப்பட்டவர்களாக நகரைவிட்டு வெளியே சென்றனர்.(23) 

அந்த வீரர்கள் அனைவரும், நகங்களையும், பற்களையும் ஆயுதங்களாகக் கொண்டவர்களாகவும், பயங்கரத் தோற்றம் கொண்டவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் புலியைப் போன்ற செருக்குடையவர்களாகவும், கொடும் முகம் படைத்தவர்களாகவும் இருந்தனர்.(24) சிலர் தசநாக {பத்து யானைகளின்} பலத்தைக் கொண்டவர்களாகவும், சிலர் அதற்கும் பத்து மடங்கு அதிக பலம் கொண்டவர்களாகவும், சிலர் ஆயிரக்கணக்கான நாகங்களுக்கு {யானைகளுக்கு} இணையான வலிமை பெற்றவர்களாகவும் இருந்தனர்.(25) அப்போது குரோதமடைந்த லக்ஷ்மணன், கைகளில் மரங்களுடன் இருப்பவர்களும், மஹாபலவான்களுமான கபிக்களால் {குரங்குகளால்} நிறைந்திருப்பதும், கடப்பதற்கரியதுமான அந்த கிஷ்கிந்தையைக் கண்டான்.(26) அப்போது, ஆற்றல் பெருகிய அந்த ஹரயர்கள் {குரங்குகள்} அனைவரும், பிராகாரத்தின் மதில்களில் இருந்து வந்து தங்களை வெளிப்படுத்தியபடியே நின்று கொண்டிருந்தனர்.(27) 

ஆத்மவானான அந்த வீரன் {லக்ஷ்மணன்}, சுக்ரீவனின் குற்றத்தையும், பூர்வஜனின் அர்த்தத்தையும் {அண்ணனின் காரியத்தையும்} நினைத்து மீண்டும் கோபவசம் அடைந்தான்.(28) உஷ்ணமான நீண்ட பெருமூச்சுகளை விட்டுக் கொண்டிருந்தவனும், கோபத்தால் கண்கள் சிவந்தவனும், நரசார்தூலனுமானவன் {மனிதர்களில் புலியுமான லக்ஷ்மணன்}, தூமத்துடன் கூடிய பாவகனை {புகையுடன் கூடிய நெருப்பைப்} போலத் திகழ்ந்தான்.(29) பாண நுனியெனும் துடிக்கும் நாக்கை உடையதும், வில் எனும் படத்தைக் கொண்டதும், தன் தேஜஸ் எனும் விஷப்பெருக்கை உடையதுமான பஞ்சாஸ்ய பன்னகத்தை {ஐந்து தலை பாம்பைப்} போலவும் விளங்கினான்.(30)

காலாக்னியை {பிரளயகாலநெருப்பைப்} போலவும், கோபத்தில் நாகேந்திரனைப் போலவும் ஜுவலித்தவனை {லக்ஷ்மணனை} நெருங்கிய அங்கதன், பயத்தால் பெரும் மனக்கவலையை அடைந்தான்.(31) கோபத்தால் சிவந்த கண்களையும், பெரும்புகழையும் கொண்டவன் {லக்ஷ்மணன்} அங்கதனிடம் ஆணையிடும் வகையில், "வத்சா {குழந்தாய்}, சுக்ரீவனிடம் என் வரவைச் சொல்வாயாக.(32) அரிந்தமா {பகைவரைக் கொல்பவனே}, வத்சா {குழந்தாய்}, "இராமானுஜரும் {இராமரின் தம்பியும்}, பகைவரை அழிப்பவரும், உடன்பிறந்தவரின் துயரத்தைத் தாமும் சுமப்பவருமான லக்ஷ்மணர் உம்மிடம் வந்து துவாரத்தில் {வாயிலில்} காத்து நிற்கிறார்.(33) வானரரே, விருப்பம் உண்டெனில் அவரது வாக்கியங்களுக்கு இணக்கமான நன்மையைச் செய்வீராக" என்ற வாக்கியங்களை {சுக்ரீவனிடம்} சொல்லிவிட்டு சீக்கிரமாகத் திரும்பி வருவாயாக" {என்றான் லக்ஷ்மணன்}.(34)

லக்ஷ்மணன் சொன்னதைக் கேட்ட அங்கதன், சோகத்தில் மூழ்கியவனாகத் தன் பிதாவின் {சிற்றப்பனான சுக்ரீவனின்} சமீபத்தில் சென்று, "இதோ சௌமித்ரி {சுமித்திரையின் மகனான லக்ஷ்மணர்} வந்திருக்கிறார்" என்று சொன்னான்.(35)

அப்போது, வலிமைமிக்கவனான அங்கதன், அவனது {லக்ஷ்மணனின்} தீவிரமான சொற்களால் மனக்குழப்பமடைந்து, உள்ளஞ்சிதறி, முகம் வாடியவனாக முதலில் நிருபதியிடமும் {மன்னன் சுக்ரீவனிடமும்}, பின்னர் ருமையின் சரணங்களிலும் {பாதங்களிலும்} விழுந்து வணங்கினான்.(36) உக்கிர தேஜஸ்ஸுடன் கூடியவன் {அங்கதன்}, பிதாவின் {சிற்றப்பனின்} பாதங்களைப் பற்றி, பிறகு மாதாவின் {தாரையின்} பாதங்களைப் பற்றி, ருமையின் பாதங்களையும் பற்றிய பிறகு செய்தியைத் தெரிவித்தான்.(37) நித்திரையும், போதையும் நிறைந்த அந்த வானரனோ {சுக்ரீவனோ}, மத்தமதத்தாலும் {குடிவெறியாலும்}, மதனமோஹிதத்தாலும் {காம வேட்கையாலும்} எதையும் புரிந்து கொள்ள இயலாதவனாக எழாதிருந்தான்.(38) 

அப்போது, குரோதத்துடன் கூடிய லக்ஷ்மணனைக் கண்ட வானரர்கள், பயத்தால் சிதறுண்ட மனங்களுடன், அவனை சாந்தப்படுத்தும் வகையில் கிலகிலா {ஆரவார} ஒலிகளை எழுப்பினர்.(39) அவர்கள், லக்ஷ்மணனின் சமீபத்தில் சுற்றி வந்து, பெரும் வெள்ளத்திற்கு நிகரானதும், வஜ்ராயுதத்திற்கும், இடியொலிக்கும் சமமானதுமான சிம்மநாதத்தை ஏககாலத்தில் எழுப்பினார்கள்.(40) மதத்தால் வசமிழந்த தாமிரக் கண்களுடன் கூடியவனும், மாலைகளாலும், ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவனுமான வானரன் {சுக்ரீவன்}, அந்த மகத்தான சப்தத்தால் உணர்வடைந்தான் {விழித்துக் கொண்டான்}.(41) அப்போது வானர மன்னனால் அங்கீகரிக்கப்பட்டவர்களும், தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களுமான மந்திரிகள் இருவர் அங்கதனின் சொற்களைக் கேட்டு அவனுடன் உள்ளே சென்றனர்.(42) வானரேந்திரனின் மந்திரிகளான பிலக்ஷன், பிரபாவன் என்ற அவர்கள் இருவரும், "அர்த்தத்தையும், தர்மத்தையும் எடுத்துச் சொல்ல லக்ஷ்மணன் வந்திருக்கிறார்" என்று தெரிவித்தனர்.(43) 

மருத்பதியான சக்ரனை {காற்று தேவர்களின் தலைவனான இந்திரனைப்} போல அமர்ந்திருந்த சுக்ரீவனைச் சூழ்ந்து அமர்ந்து, அர்த்தம் பொதிந்த சொற்களால் சமாதானம் செய்தபடியே {பின்வருமாறும்} சொன்னார்கள்:(44) "சத்தியசந்தர்களும், மஹாபாக்கியவான்களும், ராஜ்ஜியத்திற்குத் தகுந்தவர்களும், ராஜ்ஜியத்தை வழங்குபவர்களும், உடன்பிறந்தவர்களுமான ராமலக்ஷ்மணருடன் கூடிய நட்புபாவம் பலப்படுத்தப்பட வேண்டும்.(45)  அவர்களில் ஒருவரும், எவரால் பீதியடைந்தும், முற்றிலும் திகிலடைந்தும் வானரர்கள் நாதம் செய்து கொண்டிருக்கிறார்களோ அந்த லக்ஷ்மணர், தனுஷ்பாணியாக துவாரத்தில் {வாயிலில்} வந்து நிற்கிறார்.(46) இராகவரின் உடன் பிறந்தவர் எவரோ அந்த லக்ஷ்மணர், அந்த ராமரின் சாசனத்தால், வாக்கிய சாரதியாக வியவசாயம் {முயற்சி} எனும் ரதத்தில் வந்திருக்கிறார்.(47) அனகரே, ராஜரே {பாபமற்ற சுக்ரீவ மன்னரே}, தாரையின் அன்புக்குரிய தனயனான இந்த அங்கதன், லக்ஷ்மணரால் துரிதப்படுத்தப்பட்டு உமது முன்னிலையை அடைந்திருக்கிறான்.(48) வானரபதே, வீரியவானானவர் {லக்ஷ்மணர்}, கோபத்தில் சுழலும் கண்களுடனும், வானரர்களை எரித்துவிடுவதைப் போன்ற பார்வையுடனும் துவாரத்தில் {வாயிலில்} நிற்கிறார்.(49) மஹாராஜாவே, நீர் புத்திரனுடனும், பந்துக்களுடனும் சேர்ந்து சீக்கிரமே வந்து, தலையால் அவரை வணங்கி, இப்போது கோபத்துடன் இருப்பவரைத் தணிவடையச் செய்வீராக.(50) இராஜரே, தர்மாத்மாவான ராமர் எதைச் சொல்வாரோ, அதை சமாஹிதத்துடன் {நிலையான மனத்துடன்} செய்வீராக. சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு, ஒப்பந்தத்தின்படி நிற்பீராக" {என்றனர்}.(51)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 31ல் உள்ள சுலோகங்கள்: 51

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை