Sweet words of Hanuman | Kishkindha-Kanda-Sarga-29 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சுக்ரீவனுக்கு விழிப்புணர்வு உண்டாக்கிய ஹனுமான்; சீதையைத் தேடும் பணியைத் தொடங்குமாறு அறிவுறுத்தியது...
மின்னல்களும், மேகங்களும் மறைந்து, விமலமாக {களங்கமில்லாமல் தெளிவாக} இருக்கும் வானத்தையும், ஆரவார ஒலி நிறைந்த சாரஸங்களையும், ரம்மியமாகத் தெரியும் ஜ்யோதியையும் {வெளிச்சத்தையும்} கண்டும், {ஹனுமான் கண்டான்}.{1}
ஏராளமான செல்வத்துடன் கூடிய சுக்ரீவனானவன், தர்மத்தையும், அர்த்தத்தையும் சேர்ப்பதில் மந்தமானவனாகவும், அஸதர்களின் {தீயவர்களின்} மார்க்கத்தில் அதிகம் திளைப்பவனாகவும், ஏகாந்தத்தில் மனம் சென்றவனாகவும்,{2} காரியங்களில் இருந்து விலகியவனாகவும், சதா பிரமதைகளுடன் {பெண்களுடன்} இன்புற்றிருப்பவனாகவும், சர்வ மனோரதங்களும் நிறைவேறிய சித்தார்த்தனாகவும் {காரியம் நிறைவேறியவனாகவும்},{3} அன்புள்ள பத்தினியையும் {ருமையையும்}, பெரிதும்விரும்பிய தாரையையும் அடையப்பெற்றவனாகவும், ராத்திரியும், பகலும் சிற்றின்பத்தில் திளைப்பவனாகவும், ஜுவரம் நீங்கிய கிருதார்த்தனாகவும் {தொல்லைகள் நீங்கி நற்பேற்றை அனுபவிப்பவனாகவும்},{4} கந்தர்வ, அப்சரஸ் கணங்களுடன் கிரீடிக்கும் {விளையாடும்} தேவேசனை {இந்திரனைப்} போல மந்திரிகளிடம் காரியங்களை ஒப்படைத்தவனாகவும், மந்திரிகளைக் கண்ணெடுத்தும் பாராதவனாகவும்,{5} ராஜ்ஜியத்திற்கு ஏற்படும் இடையூறுகளில் சந்தேகம் கொள்ளாதவனாகவும், காமவிருத்தம் அடைந்தவனைப் போல நிலையாகத் தொடர்பவனாகவும் {இருப்பதைக்} கண்டும், {ஹனுமான் கண்டான்}.{6அ}
அர்த்தத்தில் நிச்சயம் கொண்டவனும் {காரியத்தில் உறுதியுள்ளவனும்}, அர்த்தங்களின் தத்துவத்தையும், கால, தர்ம விசேஷங்களையும் அறிந்தவனும்,{6ஆ} அருளைப்பெறும் ஹிதமான வகையில், மதுரமான {இனிமையான}, ஹேதுவான {பொருத்தமான}, மனோரமை {மனத்திற்கு விருப்பமான} வாக்கியங்களைச் சொல்பவனும், வாக்கியவித்தும் {வாக்கியங்களை அமைப்பதில் வித்தகனும்}, வாக்கியங்களின் தத்துவங்களை அறிந்தவனும், ஹரீசனும் {குரங்குகளின் தலைவனும்}, மாருதாத்மஜனும் {வாயு மைந்தனும்},{7} நடைமுறைக்கேற்றவற்றையும், பத்தியமானவற்றையும் {நன்மை பயக்கும் கட்டுப்பாடுகளையும்} ஹிதமாகவும், சாம, தர்ம, அர்த்த, நீதிகளின் படி, அன்புடனும், பிரீதியுடனும் சொல்பவனும், விசுவாசத்தில் நிச்சயம் கொண்டவனுமான{8} ஹனுமான், ஹரீஷ்வரனின் {சுக்ரீவனின்} அருகில் சென்று {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னான்:(1-9அ)
"இராஜ்ஜியமும், புகழும் அடையப்பட்டன, குலத்தின் செழிப்பும் இவ்வாறு அபிவிருத்தியடைந்திருக்கிறது. மித்ரர்களின் {நண்பர்களின்} நம்பிக்கையை ஈட்டுவதே எஞ்சியிருக்கிறது. அதைச் செய்வதே உமக்குத் தகும்.(9ஆ,10அ) எவன் காலஞானத்துடன் சதா மித்திரர்களிடம் {நண்பர்களிடம் எப்போதும்} நன்றாக நடந்து கொள்கிறானோ, அவனது ராஜ்ஜியமும், கீர்த்தியும், பிரதாபமும் பெருகும்.(10ஆ,11அ) பூமிபா {நிலத்தை ஆள்பவரே}, எவனுடைய கருவூலம், படை, மித்திரர்கள் {நண்பர்கள்}, ஆத்மா {சுயம் / இறையாண்மை} ஆகிய இவை அனைத்தும் சமமாக {முக்கியத்துவத்துடன்} இருக்கின்றனவோ, அவன் மஹத்தான ராஜ்ஜியத்தை அனுபவிப்பான்.(11ஆ,இ) எனவே, விருத்தசம்பன்னரான {நல்ல நடத்தை கொண்டவரான} நீர், ஆபத்தில்லாத {அர்ப்பணிப்பின்} பாதையில் திடமுடன் சரியாக நடந்து கொண்டு, மித்ரர்களின் நிமித்தம் முறையாகச் செயல்படுவதே தகும்.(12) எவன் சர்வகர்மங்களையும் கைவிட்டு, விரைவாகவும், காரியத்தில் உற்சாகத்துடன் மித்திரர்களுக்காக செயல்படுவானோ, அவன் அனர்த்தத்தால் {தீங்குகளால்} தாக்கப்படமாட்டான்.(13) எவன் காலந்தவறி மித்ர காரியங்களைச் செய்வானோ, அவன் மஹத்தான செயல்களைச் செய்தாலும், மித்திரனுக்கான அர்த்தத்தை {காரியத்தைச்} செய்தவனாக மாட்டான்.(14) எனவே, அரிந்தமரே {பகைவரை அழிப்பவரே}, இந்த மித்திர காரியத்திற்கான நமது காலம் கடக்கிறது. வைதேஹியை {சீதையைத்} தேட வேண்டும். இராகவருக்காக {ராமருக்காக} இதைச் செய்ய வேண்டும்.(15)
இராஜரே, பிராஜ்ஞரும் {அனைத்தையும் அறிந்தவரும்}, காலவித்துமான {காலஞானம் கொண்டவருமான} அவர் {ராமர்}, அவசரத்தில் இருந்தாலும், உமக்கு வசப்பட்டு பின்தொடர்வதால், அதீத காலமாவதை உம்மிடம் சொல்லாதிருக்கிறார்.(16) இராகவர், செழிப்பான உமது குலத்திற்கு ஹேதுவானவராக, உமக்கு தீர்கபந்துவாக {நீண்டகாலக் கூட்டாளியாகக்} கூடியவராக, அளவில்லா பிரபாவம் கொண்டவராக, குணங்களில் ஒப்பற்றவராக இருக்கிறார்.(17) ஹரீஷ்வரரே {குரங்குகளின் தலைவரே}, பூர்வத்தில் அவர் உமது காரியத்தைச் செய்து முடித்திருக்கிறார். நீரும் அவருடையதை {அவரது காரியத்தை} செய்வதற்காக ஹரிசிரேஷ்டர்களுக்கு {குரங்குகளில் சிறந்தவர்களுக்கு} ஆணையிடுவதே நிச்சயம் தகும்.(18) தூண்டப்படும் முன்பு காலம் கடந்ததாகக் கொள்ள முடியாது; தூண்டப்பட்டால் காரியம் கால வரையறையைக் கடந்ததாகவே ஆகும்.(19) ஹரீஷ்வரரே, காரியத்தைச் செய்யாதவனுக்கும் செய்பவரான நீர், வதத்திலும், ராஜ்ஜியத்திலும் உமக்காகச் செயல்பட்டவருக்கு பதிலுதவி செய்ய வேண்டும் என்பதை மீண்டும் சொல்லவும் வேண்டுமா?(20) வானரரிக்ஷ கணேஷ்வரரே {வானர, கரடிக் கூட்டங்களின் தலைவரே}, சக்திமானும், விக்ராந்தருமான நீர், தாசரதியின் {தசரதரின் மகனான ராமரின்} பிரீதியைச் செய்வதற்கு ஆணையிடுவதில் ஏன் தாமதிக்கிறீர்?(21)
தாசரதி, தமது சரங்களால் ஸுராஸுர, மஹா உரகர்களையும் வசத்தில் வைத்துக் கொள்ள விரும்புவதற்கான சக்தி படைத்தவரே. உமது பிரதிஜ்ஞைக்காகவே {உறுதிமொழிக்காகவே} அவர் காத்திருக்கிறார்.(22) பிராண தியாகத்தில் தயக்கமில்லாமல் அவர் மஹத்தான பிரிய காரியத்தைச் செய்திருக்கிறார். அவரது வைதேஹியை, பிருத்வியிலென்றாலும், அம்பரத்தில் {வானத்தில்} என்றாலும் தேடவேண்டும்.(23) தேவர்களால் அவருக்கு பயத்தை உண்டாக்க முடியாது. கந்தர்வர்களாலும் முடியாது; அசுரர்களாலும் முடியாது; மருதகணங்களாலும் முடியாது; யக்ஷர்களாலும் முடியாது எனும்போது ராக்ஷசர்களால் எப்படி முடியும்?(24) எனவே, பிங்கேஷரே {குரங்குகளின் தலைவரே}, எவ்வகை சக்தி யுக்தமானதோ {பொருத்தமானதோ}, அதைக் கொண்டு முன்பே பிரியத்தை {நீர் விரும்பியதைச்} செய்த ராமருக்கு, எல்லாவகையிலும் பிரியத்தைச் செய்வதே உமக்குத் தகும்.(25) கபீஷ்வரரே {குரங்குகளின் தலைவரே}, உமது ஆணையின்படி செல்லும் {வானரர்களான} எங்கள் எவருக்கும், பாதாளத்திலும், பூமியிலும், நீரிலும், மேலுள்ள ஆகாயத்திலும் இடையூறுண்டாகாது.(26) எனவே, அனகரே {தகுதிவாய்ந்தவரே}, எவர், எங்கே, எதைச் செய்ய வேண்டும் என்று ஆணையிடுவீராக. வெல்லப்பட முடியாத ஹரயர்கள் {குரங்குகள்} கோடிக்கும் அதிகமானோர் இருக்கின்றனர்" {என்றான் ஹனுமான்}.(27)
அவன் {ஹனுமான்}, உரிய காலத்தில் நன்றாக நிரூபிதம் செய்யும் வகையில் சொன்னவற்றைக் கேட்டவனும், சத்வசம்பன்னனுமான {நல்லறிவுடன் கூடியவனுமான} சுக்ரீவன், உத்தம மதியை அடைந்தான்.(28) அதிமதிமானான அவன் {சுக்ரீவன்}, சர்வ திக்குகளிலும் உள்ள சர்வ சைனியங்களையும் திரட்டுவதற்காக, நித்திய காரியங்களில் ஈடுபடுபவனான நீலனிடம் {பின்வருமாறு} ஆணையிட்டான்:(29) "என் மொத்த சேனையும், எங்குமிருக்கும் யூதபாலர்களும் {சேனைத்தலைவர்களும்} எப்படி தாமதமில்லாமல் சேனையை முன்னிட்டுக் கொண்டு வருவார்களோ அதைச் செய்வாயாக.(30) சேனையின் பரியந்தபாலர்களும் {படையைச் சேர்ந்த எல்லைக் காவலர்களும்}, பிலவகர்களில் {தாவிச் செல்லும் குரங்குகளில்} சீக்கிரமாகச் செல்லும் தைரியசாலிகளும் என் சாசனத்தின்படி {ஆணையின்படி} துரிதமாகவும், சீக்கிரமாகவும் அணிதிரளட்டும். பிறகு சைனியத்தை {திரட்ட வேண்டிய காரியங்களுக்கு} நீயே ஸ்வயமாக பார்த்துக் கொள்வாயாக.(31) எந்த வானரன், திரிபஞ்ச {பதினைந்து} ராத்திரிகளுக்குப் பிறகு இங்கே வருவானோ, அவனுக்கு பிராணாந்திகமே தண்டமாகும் {கொல்லப்படுவதே அவனுக்கான தண்டனையாகும்}. விசாரணைக்கான காரியம் வேறேதும் இல்லை.(32) நீ அங்கதனுடன் சேர்ந்து, என் ஆணையை அதிகாரமாகக் கொண்டு, முதிய ஹரிக்களை {குரங்குகளை} அணுகுவாயாக" {என்றான் சுக்ரீவன்}. வீரியவானான ஹரிபுங்கவேஷ்வரன் {சிறந்த குரங்குகளின் மன்னன் சுக்ரீவன்}, இந்த ஏற்பாட்டைச் செய்துவிட்டு வேஷ்மத்திற்குள் {அரண்மனைக்குள்} பிரவேசித்தான்.(33)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 29ல் உள்ள சுலோகங்கள்: 33
Previous | | Sanskrit | | English | | Next |