Saturday 20 May 2023

காலின் மாமதலை - ஹனுமான் | கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் - 02 (29)

Hanuman - son of windgod | Kishkindha-Kanda-Sarga-02 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனின் புலம்பல்; இலக்ஷ்மணனின் தூண்டல்; இராமலக்ஷ்மணர்கள் ரிச்யமூகம் நோக்கிச் சென்றது; அவர்களைக் கண்டு அஞ்சிய சுக்ரீவன்...

Hanuman and Vanaras

சிறந்த ஆயுதங்களைத் தரித்தவர்களும், வீரர்களும், மஹாத்மாக்களும், உடன்பிறந்தோருமான ராமலக்ஷ்மணர்கள் இருவரையும் கண்டு சுக்ரீவன் சந்தேகம் அடைந்தான்.(1) அந்த வானரபுங்கவன் {வானரர்களில் முதன்மையான சுக்ரீவன்}, கலங்கிய ஹிருதயத்துடன், சர்வ திசைகளையும் நன்றாகப் பார்த்தபடியே எந்த தேசத்திலும் {இடத்திலும்} நிலைக்கவில்லை.(2) அந்த மஹாபலவான்களைக் கண்டதும், மனத்தை ஒரு நிலையில் நிறுத்த முடியாமல், பரமபீதியடைந்த அந்தக் கபியின் {குரங்கின்} சித்தம் அமைதியடையாமல் தத்தளித்தது.(3) ஒப்பீட்டளவில் விளைவுகளின் முக்கியத்துவத்தை {பலம், பலவீனங்களை} நினைத்து, சிந்தனையில் ஆழ்ந்த அந்த தர்மாத்மா {சுக்ரீவன்}, சர்வ வானரங்களுடன் சேர்ந்து பரம கலக்கமடைந்தான்.(4)

பிறகு அந்த பிலவகாதிபன் {தாவிச் செல்லும் விலங்கினமான குரங்குகளின் தலைவன்} சுக்ரீவன், ராமலக்ஷ்மணர்கள் இருவரையும் கண்ட பரம கலக்கத்துடன், தன் சகாக்களிடம் {மந்திரிகளிடம் பின்வருமாறு} சொன்னான்:(5) "மரவுரி தரித்து, மாறுவேடத்தில், கடப்பதற்கரிதான இந்த வனத்தில் திரியும் இவர்கள் இருவரும் நிச்சயம் வாலியால் அனுப்பப்பட்டே இங்கே வந்திருக்க வேண்டும்" {என்றான்}.(6)

அப்போது, சுக்ரீவனின் சகாக்கள், அந்தப் பரம தன்விகளை {சிறந்த வில்லாளிகளைக்} கண்டு, அந்த கிரித்தடத்தில் இருந்து மற்றோர் உயர்ந்த சிகரத்திற்குச் சென்றனர்.(7) பிறகு அந்த ஹரயங்களின் யூதபர்கள் {குரங்குகளின் குழுத் தலைவர்கள்}, சீக்கிரம் தங்கள் யூதபனிடம் {குழுத் தலைவனிடம்} வந்து, அந்த வானர சிரேஷ்டனை {சுக்ரீவனைச்} நெருக்கமாக சூழ்ந்து கொண்டனர்.(8) இவ்வாறே கிரி சிகரங்களையும் தங்கள் வேகத்தால் அதிரச் செய்தபடி, கிரிக்கு கிரி தாவிச் சென்று ஒரே ஆயனத்தை {வழியை} அடைந்தனர்.(9) மஹாபலவான்களும், சாகை மிருகங்களுமான {கிளை விலங்குகளுமான} அந்தப் பிலவமான்கள் {தாவிச் செல்பவர்கள்} அனைவரும், அங்கே நன்கு பூத்து அடர்ந்திருக்கும் மரங்களை முறித்தனர்.(10) அந்த மஹாகிரியெங்கும் தாவிச் சென்ற அந்த ஹரிவரர்கள் {குரங்குகளில் சிறந்தவர்கள்}, மான்களையும், காட்டுப்பூனைகளையும், புலிகளையும் அச்சுறுத்தியவாறே தாவிச் சென்றனர்.(11) பிறகு சுக்ரீவனின் சகாக்களான அவர்கள் அனைவரும், அந்தப் பர்வதங்களின் இந்திரனில் {அந்தச் சிறந்த மலையில்} கூடி, முக்கிய கபியை {குரங்குகளில் முக்கியமான சுக்ரீவனைச்} சூழ்ந்தபடி கைகளைக் கூப்பி நின்றனர்[1].(12)

[1] காலின் மா மதலை இவர் காண்மினோ கறுவு உடைய
வாலி ஏவலின் வரவினார்கள் தாம் வரி சிலையர்
நீல மால் வரை அனையர் நீதியா நினைதி என
மூலம் ஓர்கிலர் மறுகி ஓடினார் முழை அதனின்

- கம்பராமாயணம் 3752ம் பாடல், அனுமப் படலம்

பொருள்: "காற்றின் புதல்வனே {ஹனுமானே}, இவர்களைக் காண்பாயாக. நம்மிடம் பகைமை கொண்ட வாலியின் ஏவலால் நம்மை வருத்த வருகிறவர்களாகக் கட்டமைந்த வில்லையும், நீல நிற மலை போன்ற தோற்றத்தையும் கொண்டவர்களான இவர்களை முறையாக ஆராய்வாயாக" என்று {ராமலக்ஷ்மணர்கள் வரும்} காரணத்தை உணராதவர்கள் {வானரர்கள்} மனங்கலங்கி சொல்லிவிட்டு மலைக்குகைக்குள் ஓடினார்கள்.

அப்போது, வாக்கிய கோவிதனான {பேசுவதில் நிபுணனான} ஹனுமான், வாலியின் கில்பிஷத்தில் {சில்லுண்டித்தனத்தில்} கொண்ட சந்தேகத்தாலும், பயத்தாலும் திகைத்திருந்த சுக்ரீவனிடம் {பேசும் வகையில்}, இந்தச் சொற்களைச் சொன்னான்:(13) "அனைவரும், வாலியின் நிமித்தமான இந்த மகத்தான கலக்கத்தைக் கைவிடுவீராக. இது கிரிவரமான {சிறந்த மலையான} மலயமாகும். இங்கே வாலியால் பயம் ஏதும் உண்டாகாது[2].(14) ஹரிபுங்கவரே {குரங்குகளில் சிறந்த சுக்ரீவரே}, குரூரமாகக் காட்சியளிப்பவரும், குரூரருமான எவரால் நீர் நனவு கலங்கி ஓடிவந்தீரோ, அந்த வாலியை இங்கே நான் காணவில்லை.(15) சௌம்யரே, பிறப்பால் மூத்தவரும், பாப கர்மம் செய்பவருமான எவரிடம் உமக்குப் பயமோ, அந்த துஷ்டாத்மாவான வாலி இங்கே இல்லை. எனவே எந்த பயத்தையும் நான் காணவில்லை.(16) அஹோ, பிலவங்கமரே {தாவிச் செல்லும் குரங்கானவரே}, உம்மைக் குறித்து லகுவாக {எளிதாகச்} சிந்திப்பதால், மனத்தை நிலைப்படுத்திக் கொள்ள இயலாத தடுமாற்றத்தில் உமது சாகை மிருகத்வமே {கிளைகளில் வாழும் விலங்கினமான குரங்கின் தன்மையே} வெளிப்படுகிறது.(17) புத்தியுடனும், விஜ்ஞானத்துடனும் கூடியவராக, செய்யும் அனைத்திலும் இங்கிதத்தை {உடல்மொழியைப்} பின்பற்றுவீராக. புத்தி இல்லாத ராஜாவால், சர்வ பூதங்களையும் {உயிரினங்கள் அனைத்தையும் / குடிமக்கள் அனைவரையும்} கட்டுப்படுத்த முடியாது" {என்றான் ஹனுமான்}.(18)

[2] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த மலையின் புனிதத்தன்மையும், வாலி இவ்விடத்தில் நுழைய முடியாததற்கான காரணமும் அடுத்தடுத்த சர்க்கங்களில் விளக்கப்படுகின்றன. வாலி ஒரு சாபத்தின் காரணமாக இந்த மலையில் அடியெடுத்து வைக்கமுடியாது என்பதால், இந்த ரிச்யமூக மலையில், அல்லது மலயம் என்றழைக்கப்படும் இந்த மலையில் அவன் மூலம் பயம் உண்டாகாது" என்றிருக்கிறது. இவை அடுத்தடுத்து இருக்கும் வெவ்வேறு மலையாகவும் இருக்கலாம். கிஷ்கிந்தா காண்டம், 5ம் சர்க்கம், முதல் சுலோகத்தில் ஹனுமான் ரிச்யமூகத்தில் இருந்து மலயத்திற்கு ராமலக்ஷ்மணர்களை அழைத்துச் செல்வதாக வருகிறது. 

சுக்ரீவன், ஹனுமானின் சுபவாக்கியங்கள் அனைத்தையும் கேட்ட பிறகு, {பின்வரும்} மங்கலமான வாக்கியங்களை ஹனுமானிடம் சொன்னான்:(19) "தீர்க்கபாஹுக்களும் {நீண்ட கைகளைக் கொண்டவர்களும்}, விசாலாக்ஷர்களும் {அகன்ற விழிகளைக் கொண்டவர்களும்}, சரங்கள், வில், வாள் ஆகியவற்றைத் தரித்தவர்களும், ஸுரசுதர்களுக்கு {தேவர்களின் மகன்களுக்கு} ஒப்பானவர்களுமான இவர்கள் இருவரையும் கண்டால் எவருக்குத்தான் பயம் உண்டாகாது?(20)  இந்த புருஷோத்தமர்கள் {மனிதர்களில் சிறந்தவர்கள்} வாலியால் அனுப்பப்பட்டவர்கள் என்று நான் சந்தேகிக்கிறேன். இராஜர்களுக்கு மித்ரர்கள் {வாலி போன்ற மன்னர்களுக்கு நண்பர்கள்} பலர் உண்டு. உண்மையில் இங்கே விசுவாசம் பொறுத்துக் கொள்ளத்தக்கதல்ல {நம்பிக்கை கொள்வது முறையல்ல}.(21) மாறுவேடத்தில் திரியும் பகைவரும் மனுஷ்யனால் அறியப்பட வேண்டும். விசுவாசஸ்தானத்தில் இருப்பவர்கள் {நம்பிக்கையுடன் கூடியவர்கள்}, விசுவாசஸ்தானத்தில் இல்லாதவர்களால் {நம்பத்தகாதவர்களால்} தகுந்த சந்தர்ப்பத்தில் தாக்கப்படுவார்கள்.(22) 

அருஞ்செயல்களில் வாலி மேதாவியாவார். இராஜர்கள்  பல தரிசனங்களைக் கொண்டு பிறரைக் கொல்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களை சாதாரண ஜனங்களே அறிவார்கள்.(23) பிலவங்கமா {தாவும் விலங்கினத்தவனே}, நீ சாதாரணனாகத்[3] தனியாகச் சென்று அவ்விருவரின் நடத்தையாலும், ரூபத்தாலும், உரையாடல் மூலமும் அவர்களின் இங்கிதங்களையும் அறிய வேண்டும்.(24) அவர்களின் பாவங்களை {இயல்புகளை} இலக்காகக் கொள்வாயாக. அவர்கள் நல்ல, இனிய மனம் கொண்டவர்களாக இருந்தால், இங்கிதங்கள் மூலம் அவர்களை மீண்டும் மீண்டும் புகழ்ந்து, என் முன் முகமுகமாக நிற்கும் விசுவாசத்தை {நம்பிக்கையை} உண்டாக்குவாயாக. ஹரிபுங்கவா {குரங்குகளில் சிறந்தவனே}, அந்த தனுதாரிகள் இருவரும் இந்த வனத்திற்குள் பிரவேசிப்பதற்கான பிரயோஜனத்தை நீ விசாரிப்பாயாக[4].(25,26) பிலவங்கமா {தாவும் விலங்கினத்தவனே}, இவ்விருவரும் சுத்த ஆத்மா கொண்டவர்களா என்பதை அறிவாயாக. அவர்களுடன் பேசுவதன் மூலம் துஷ்டர்களா, இல்லையா என்பதைக் கண்டறிவாயாக" {என்றான் சுக்ரீவன்}.(27)

[3] அவர்கள் வாலியின் ஆட்களாக இருந்தால் ஹனுமானை அடையாளம் கண்டு கொள்வார்கள் என்பதற்காக சுக்ரீவன் இவ்வாறு சாதாரணனாகச் செல்லுமாறு சொல்கிறான்.

[4] பிபேக்திப்ராய் பதிப்பில், "அவர்களின் நடத்தை, வடிவம், பேச்சு ஆகியவற்றின் மூலம் நம் சந்தேகங்கள் உண்மைதானா என்பதை உறுதி செய்வாயாக. அவர்கள் மனத்தளவில் மகிழ்ச்சிமிக்கவர்களாக இருப்பின், இங்கிதங்கள் மூலமாக அவர்களின் கருத்தை அறிவாயாக. மீண்டும் மீண்டும் அவர்களைப் புகழ்ந்து அவர்களின் நம்பிக்கை ஈட்டுவாயாக. அப்படி அவர்களிடம் நீ கேட்கும்போது என்னை நோக்கிய முகத்துடன் நிற்பாயாக" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "ஹனுமான் தொலைவாக நின்றாலும் அவனது முகக்குறிகளின் மூலம் சுக்ரீவன் அங்கே நடப்பதைத் தெரிந்து கொள்ள முடியும்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தர் பதிப்பில், "அவர்களின் முகபாவனைகள், உடலசைவுகள், சொற்கள் ஆகியவற்றின் மூலம் அவர்களின் நோக்கத்தைக் கண்டறிந்து, அதை உறுதிசெய்வாயாக. அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக நீ அறிந்தால், என்னை மீண்டும் மீண்டும் புகழ்வதன் மூலமும், என் கருத்துகளை அவர்களிடம் தெரிவிப்பதன் மூலமும் எனக்குச் சாதகமாக அவர்களின் நம்பிக்கையைப் பெறுவாயாக. ஓ குரங்குகளில் சிறந்தவனே, அந்த வில்லாளிகள் இருவரும் தூய்மையான ஆன்மா கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் இந்த வனத்திற்குள் ஏன் நுழைந்தார்கள் என்பதைக் கேட்பாயாக" என்றிருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பில், "அவர்களின் உடல்மொழிகளையும், நடத்தைகளையும், பேச்சையும் கவனித்து அவர்களின் நோக்கத்தையும், மனநிலையையும் உறுதிசெய்வாயாக. புகழ்வதன் மூலமும், மீண்டும் மீண்டும் துதிப்பதன் மூலமும் அவர்களின் நம்பிக்கையைப் பெறுவாயாக. ஓ குரங்குகளில் சிறந்தவனே, அவர்கள் இந்த வனத்திற்கு வந்த காரணத்தையும் அவர்களிடம் கேட்பாயாக" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், "நல்லெண்ணமுடையவர்களாய் அவ்விருவர்களும் இருந்தால், ஸ்தோத்திரங்களாலும், அவைகளுக்கனுகுணமான அவயவ சின்னங்களாலும் மேன்மேல் நம்பிக்கையுண்டாகச் செய்து அவ்விருவர்களுக்கு ஆகவேண்டிய காரியத்தை அறிந்து வருவாயாக" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "அவரது அபிப்ராயத்தைக் கண்டு அறிவாயாக. அவரது மனத்தில் கெடு நினைவு இருக்குமாயின், அது போவதற்கு அந்தந்த நல்வார்த்தைகளாலும், புகழ்ச்சிகளாலும் அடிக்கடி அவர்க்கு நம்பிக்கையை உண்டுபண்ணி எனக்கு அனுகூலமாயிருக்கும்படி அவரைத் திடப்படுத்திப் பிறகு அவர்கள் வில்லைத் தரித்து இவ்வனம் புகுவதற்கு ப்ரயோஜனம் என்? என்று வினவுவாயாக. ஹனுமானே, வில்லைப் பிடித்து வந்த இவர்கள் மனத்தில் நல்ல எண்ணமுடையோர்களாயின், அப்பொழுதும் அவர்களை என் பக்ஷமுடையவர்களாகச் செய்து அவரது வரவுக்குப்ரயோஜனத்தை வினவித் தெரிந்து கொள்வாயாக" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "அவர்களின் கருத்தை நன்கு அறிந்து கொள்க; நல்ல எண்ணமுடையவர்களாயின், அவர்களைப் பலவாறாகப் புகழ்ந்து விசுவாசத்தை உண்டுபண்ணி, அவர்கள் குலகோத்திரங்களையும், இங்கே வந்ததற்குக் காரணத்தையும் நான் கேட்பதாகக் கேட்டு அவர்கள் உரைக்கும் பிரதி உத்திரத்தினால் உண்மையை நன்கு அறிந்து கொண்டு வாரீர்" என்றிருக்கிறது. கோரக்பூர் பதிப்பில், "அவர்கள் நல்ல எண்ணம் உடையவர்கள் தானா? என்பதை முதலில் அறிந்து கொள். அவ்விதம் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருந்தால், என் மேல் நல்லெண்ணம் உண்டாகும்படி பல விஷயங்களைக் கூறு. வானர வீரனே, என்னையே நோக்கி நின்று அவர்களைக் கேள். கோரமான இந்த காட்டுக்குள் வில்லேந்தியவர்களாக அவர்கள் வந்திருப்பதன் நோக்கம் என்ன? என்று கேள்" என்றிருக்கிறது. ஒவ்வொரு பதிப்பிலும் இவ்விரு சுலோகங்களின் பொருளும் வெவ்வேறாகச் சொல்லப்படுவதால் இங்கே அனைத்தும் பட்டியலிடப்பட்டது.

இவ்வாறு கபிராஜனால் {குரங்குகளின் மன்னனான சுக்ரீவனால்} அறிவுறுத்தப்பட்ட மாருதாத்மஜன் {வாயுதேவனின் மகன் ஹனுமான்}, ராமலக்ஷ்மணர்கள் இருவரும் இருக்குமிடத்திற்குச் செல்ல தன் புத்தியில் தீர்மானித்தான்.(28) மஹானுபாவனும், கபியுமான {குரங்குமான} ஹனுமான், பீதியிலிருந்த அந்த அடைதற்கரியவனின் {சுக்ரீவனின்} சொற்களை அவ்வாறே செய்வதாக ஏற்று அவனைப் பூஜித்துவிட்டு, அதிபலவானான லக்ஷ்மணனும், ராமனும் இருந்த இடத்தை நோக்கிச் சென்றான்.(29)

கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 02ல் உள்ள சுலோகங்கள்: 29

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை