Towards south | Aranya-Kanda-Sarga-64 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சீதையின் ஆபரணங்களையும், காலடித்தடங்களையும் கண்டடைந்த ராமனும், லக்ஷ்மணனும்; சீதை ராக்ஷசனால் கடத்தப்பட்டாள் என்று தீர்மானித்த ராமன்...
தீனமாக {துயரத்தோடு} இருந்தவன் {ராமன்}, தீனமான {பரிதாபகரமான} குரலில் லக்ஷ்மணனிடம் {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான், "இலக்ஷ்மணா, சீக்கிரமாக கோதாவரி நதிக்குச் சென்று, சீதை பத்மங்களை {தாமரைகளை} எடுக்க சென்றிருக்கிறாளா என்பதை அறிவாயாக" {என்றான் ராமன்}.(1,2அ)
இவ்வாறு ராமன் சொன்னதும், லகுவிக்கிரமனான {நளினமாகவும், வேகமாகவும் செல்லக்கூடியவனான} லக்ஷ்மணன், ரம்மியமான கோதாவரி நதிக்கு இவ்வாறே மீண்டும் சென்றான்.(2ஆ,3அ) இலக்ஷ்மணன், தீர்த்தவதீயான அவளிடம் {நீராடும் துறைகள் பலவற்றைக் கொண்டவளான கோதாவரியில்} தேடிவிட்டு, ராமனிடம் {பின்வருமாறு} சொன்னான், "அவளைத் தீர்த்தங்களில் பார்க்கவில்லை, நான் அழைத்ததையும் {அவள்} கேட்கவில்லை.(3ஆ,4அ) இராமரே, கிலேசநாசினியான {கவலைகளை அழிப்பவளான} அந்த வைதேஹி, எந்த தேசத்தை {இடத்தை} அடைந்தாளோ, அந்த மெல்லிடையாள் எங்கே இருக்கிறாளோ அதை நான் அறியவில்லை" {என்றான் லக்ஷ்மணன்}.(4ஆ,5அ)
இராமன், லக்ஷ்மணன் சொன்னதைக் கேட்டு மனமுடைந்து, துக்கத்தில் மோஹித்தான் {திகைத்தான்}. அந்த ராமன், தானே கோதாவரி நதிக்கு நேரடியாகச் சென்று, அவளருகே {கோதாவரியின் அருகில்} நின்று, இவ்வாறு, "சீதே, எங்கே இருக்கிறாய்?" என்றான்.(5ஆ,6)
பூதங்களும் {உயிரினங்களும்}, கோதாவரி நதியும் கூட, 'வதம் செய்யப்படத் தகுந்த ராக்ஷசேந்திரன் அவளை {ராவணன் சீதையைக்} கடத்திவிட்டான்' என்று ராமனிடம் சொல்லவில்லை.(7) சோகத்துடன் அவன் {ராமன்} கேட்டபோது, 'அவனது பிரியை {அன்புக்குரிய காதலியைக்} குறித்துச் சொல்' என்று பூதங்கள் {உயிரினங்கள்} அவளை {கோதாவரியைத்} தூண்டினாலும், அவள் சீதை குறித்துச் சொன்னாளில்லை.(8) அந்த நதியானவள் {கோதாவரி}, துராத்மாவான ராவணனின் அந்த ரூபத்தையும், அவனது கர்மங்களையும் நினைவுகூர்ந்து, பயத்தால் வைதேஹியைக் குறித்துச் சொல்லாமல் இருந்தாள்.(9)
சீதையைக் காணாமல் ஏமாற்றம் அடைந்த ராமன், அந்த நதியானவளிடம் {கோதாவரியின் அருகில்} சீதையைக் காணும் நம்பிக்கையை இழந்து, சௌமித்ரியிடம் {லக்ஷ்மணனிடம், பின்வருமாறு} சொன்னான்:(10) "சௌம்யா {மென்மையானவனே}, இந்த கோதாவரி எதற்கும் பதிலளித்தாளில்லை. இலக்ஷ்மணா, வைதேஹி இல்லாமல் நான் ஜனகரையும், மாதாவையும் சந்திக்கும்போது, பிரியமற்ற சொற்களை எவ்வாறு சொல்வேன்?(11,12அ) இராஜ்ஜியத்தை இழந்து வனத்தில் வனப்பொருட்களைக் கொண்டு ஜீவிக்கும் என்னுடைய சர்வசோகத்தையும் போக்கிய வைதேஹி எங்கே சென்றுவிட்டாள்?(12ஆ,13அ) ஞாதி வர்க்கம் இல்லாமல், ராஜபுத்ரியையும் காணாமல் {தூக்கமின்றி} விழித்திருக்கும் எனக்கு ராத்திரிகள் நீண்டதாகத் தோன்றும் என்று நினைக்கிறேன்.(13ஆ,14அ) மந்தாகினி[1], ஜனஸ்தானம், இந்த பிரஸ்ரணவ கிரி {அருவிகளுடன் கூடிய மலை} என எங்கும் தேடிப்பார்க்கப் போகிறேன். சீதை ஒருவேளை கிடைக்கலாம்.(14ஆ,15அ) மஹாவீரா, இந்த மிருகங்கள் {மான்கள்} மீண்டும் மீண்டும் என்னைப் பார்க்கின்றன. என்னிடம் ஏதோ சொல்ல விரும்புவதைப் போன்ற இங்கிதங்களை {உடல் மொழியை / அறிகுறிகளை} வெளிப்படுத்துகின்றன" {என்றான் ராமன்}.(15ஆ,16அ)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "மந்தாகினி என்பது கங்கை ஆறு ஆகும். காவேரி, துங்கபத்திரை, கிருஷ்ணவேணி, கௌதமி {கோதாவரி}, பாகீரதி ஆகியவையே பஞ்ச கங்கைகள் என்பதால், இங்கே கோதாவரி ஆறே கங்கை என்று சொல்லப்படுகிறது. தென்னிந்தியாவில் இவை கங்கை நதியைப் போன்று புனிதமாக மதிக்கப்படுகின்றன" என்றிருக்கிறது. மந்தாகினி என்றால் மெல்லப் பாயும் ஆறு என்ற பொருளை ஏற்கனவே கண்டிருக்கிறோம். வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பிலும், இன்னும் பல பதிப்புகளிலும், "கோதாவரி" என்று இங்கே நேரடியாகவே குறிப்பிடப்படுகிறது.
நரவியாகரனான ராகவன் {மனிதர்களில் புலியான ராமன்}, கண்ணீரால் மறைந்த, இமைக்காத பார்வையுடன் கூடிய அவற்றை {மான்களைக்} கண்டு, "சீதை எங்கே?" என்று கேட்டான்.(16ஆ,17அ) நரேந்திரன் {மனிதர்களின் தலைவனான ராமன்} இவ்வாறு கேட்டதும், அந்த மிருகங்கள் {மான்கள்} அனைத்தும் உடனே எழுந்து தக்ஷிண முகமாக {தென் திசையை} நோக்கி நபத்தையும், ஸ்தலத்தையும் {வானத்தையும் தரையையும்} பார்த்து, கடத்தப்பட்ட அந்த மைதிலி எந்த திசையில் போனாளோ அந்த மார்க்கத்தில் சென்று நராதிபதியை {மனிதர்களின் தலைவனான ராமனைத் திரும்பிப்} பார்த்தன.(17ஆ-19அ) அந்த மிருகங்கள் எந்த மார்க்கமாக பூமியில் சென்று திரும்பிப் பார்த்து, மீண்டும் {அந்த மார்க்கத்திலேயே} கூச்சலிட்டவாறு சென்றன என்பதை லக்ஷ்மணன் கவனித்தான்.(19ஆ,20அ)
புத்திமானான லக்ஷ்மணன், அவற்றுடைய மொழியின் சாரத்தையும், இங்கிதத்தையும் கவனித்து, துன்பத்தில் இருக்கும் தன் அண்ணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(20ஆ,21அ) "தேவா, இந்த மிருகங்களிடம், "எங்கே சீதை?" என்று நீர் வினவியபோது, உடனே எழுந்து, நிலத்தை அடைந்து, தக்ஷிண திசையை எப்படிக் காட்டின? இந்த நைர்ருதீ திசையில்[2] செல்வது நல்லது. அவளைக் குறித்தோ, அந்த ஆரியை எங்கே காணப்படலாம் என்பதைக் குறித்தோ செய்தி ஏதாவது கிட்டலாம்" {என்றான் லக்ஷ்மணன்}[3].(21ஆ-23அ)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ், வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி, பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயம்} ஆகியோரின் பதிப்புகளிலும், கோரக்பூர் பதிப்பிலும் இதற்கு, "தென்மேற்கு திசையில்" என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. மன்மதநாததத்தர், ஹரிபிரசாத் சாஸ்திரி, தாதாசாரியர் பதிப்புகளில், "இதே திசையில்" என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. நைர்ருதீ என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு "யமனின் துணைவனான நிர்ருதியின் நகரம்" என்ற பொருள் வருகிறது. அவ்வாறெனில் "நிர்ருதியின் நகரமான நைர்ருதீ இருக்கும் திசையில்" என்பது சரியான பொருளாக இருக்கலாம். இந்த நிர்ருதி தென்மேற்கின் திக்பாலனாவான். இவனுக்கு நிருதா என்ற பெயரும் உண்டு. இதே சர்க்கத்தின் 23ம் சுலோகத்தில் தென்திசை நோக்கிச் சென்றான் என்று வருகிறது.
[3] தெற்கு நோக்கியது எனும் பொருள்தெரிந்தது இத்திண்தேர்மற்கு நோக்கிய திரள்புயத்துஅண்ணலே வானம்விற்கு நோக்கிய பகழியின் நெடுதுஅன்று விம்மிநிற்கும் நோக்கு இது என் பயத்தது எனஇளையவன் நேர்ந்தான்.- கம்பராமாயணம் 3481ம் பாடல், சடாயு உயிர்நீத்த படலம்பொருள்: "மற்போருக்கு எதிர்நோக்கும் அளவுக்குத் திரண்ட புஜங்களைக் கொண்ட அண்ணலே, அந்த திண்மையான தேர் தென் திசையை நோக்கிச் சென்றுள்ளது என்ற உண்மை தெரிந்துவிட்டது. வில்லின் இருந்து புறப்படும் அம்புக்கு வானம் நீண்டதல்ல, கலங்கி நின்று எண்ணும் இச்செயல் என்ன பயனைத் தரும்?" எனத் தம்பி {லக்ஷ்மணன்} கூறினான்.
ஸ்ரீமானான காகுத்ஸ்தன் {ராமன்}, "சரி" என்று சொல்லி லக்ஷ்மணனைப் பின்தொடர்ந்து, வசுந்தரையை {நிலத்தைக்} கவனித்தவாறே தக்ஷிண {தென்} திசையை[4] நோக்கிச் சென்றான்.(23ஆ,24அ) உடன்பிறந்தோரான அவ்விருவரும், அன்யோன்யம் பேசிக் கொண்டே இவ்வாறு சென்றபோது, புஷ்பங்கள் விழுந்து சிதறிக் கிடக்கும் மார்க்கத்தை {வழியைக்} கண்டனர்.(24ஆ,25அ) வீரனான ராமன், மஹீதலத்தில் விழுந்து கிடக்கும் புஷ்பமாரியைக் கண்டு துக்கமடைந்தவனாக, துக்கத்தில் இருந்த லக்ஷ்மணனிடம் {பின்வரும்} சொற்களைச் சொன்னான்:(25ஆ,26அ) "இலக்ஷ்மணா, இங்கே இருக்கும் புஷ்பங்களைக் கானகத்தில் நான் கொடுக்க, வைதேஹி சூடிக்கொண்டாள் என அடையாளம் காண்கிறேன்.(26ஆ,27அ) சூரியனும், வாயுவும், புகழ்பெற்ற மேதினியும் எனக்குப் பிரியமானதைச் செய்ய புஷ்பங்களைக் கவனமாகக் காத்திருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்" {என்றான் ராமன்}.(27ஆ,28அ)
[4] வடபாடமான தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பு, கிழக்குப் பாடங்களான மன்மதநாததத்தர், வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்புகள், தென்பாடங்களான தர்மாலயப் பதிப்பு, தாதாசாரியர் பதிப்பு ஆகியவை அனைத்திலும் இங்கே 15 முதல் 24ம் சுலோகங்கள் வரையுள்ள செய்தி இருக்கிறது. செம்பதிப்பான பிபேக்திப்ராய் பதிப்பில் இந்தப் பகுதி முழுவதும் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இராவணன் சீதையைக் கடத்திச் சென்ற லங்கை தென்திசையில் இருந்திருக்கலாம் என்பதற்கு இந்தப் பகுதி உதவக்கூடும். ஆய்வுகள் பலவற்றிலும் செம்பதிப்பே எடுத்துக் கொள்ளப்படுவதால் இங்கே குறிப்பிடப்படும் "தென் திசை"யைக் கருத்தில் கொண்டிருக்க மாட்டார்கள்.
மஹாபாஹுவும், தர்மாத்மாவுமான ராமன், புருஷரிஷபனான லக்ஷ்மணனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, பிரஸ்ரவண கிரியிடம் {அருவிகள் நிறைந்த மலையிடம் பின்வருமாறு} சொன்னான்:(28ஆ,29அ) "மலைகளின் நாதா, ரம்மியமான வனதேசங்களில் என்னை விட்டுப் பிரிந்தவளும், சர்வாங்க சுந்தரியுமான அழகியை எங்காவது நீ கண்டாயா?" {என்று கேட்டான் ராமன்}[5].(29ஆ,30அ)
[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்தச் சொற்களைக் கலைத்துப் போட்டால் அந்த மலை ராமனிடம் பதிலுரைப்பதைப் போலவும் கொள்ளலாம். அதாவது, "ஓ மலைகளின் நாதா, ராமா, ரம்மியமான வனதேசத்தில் உன்னைப் பிரிந்தவளும், சர்வாங்க சுந்தரியுமான அழகியை நான் கண்டேன்" என்றும் பொருள் கொள்ளலாம். கேள்வியே பதிலாகும் போது, அது சித்திர அலங்காரம் என்று சொல்லப்படும். இராமனின் சொற்களையே அந்த மலை எதிரொலித்தது. இராமன் அதை மலையின் மறுமொழியாக எடுத்துக் கொள்கிறான். ஆனால் அது தெளிவான பதில் இல்லை என்பதால் கீழ்வரும் சுலோகங்களில் உள்ளதைப் போல ராமன் கோபமடைகிறான்" என்றிருக்கிறது.
இதனால் சிங்கம், தாழ்ந்த மிருகத்திடம் {கோபமடைவதைப்} போல, அந்த கிரியிடம் குரோதத்துடன் {பின்வருமாறு} பேசினான், "பர்வதமே, நான் உன் தாழ்வரைகள் அனைத்தையும் பொடியாக்காமல் இருக்க வேண்டுமென்றால், ஹேமவர்ணம் கொண்டவளும், ஹேம அங்கங்களைக் கொண்டவளுமான அந்த சீதையைக் காட்டிவிடு" {என்றான் ராமன்}.(30ஆ,31) இராமன், மைதிலி குறித்து இவ்வாறு சொன்னதும், அந்தப் பர்வதம் அவளைக் காட்டுவது போலத் தெரிந்தாலும் ராகவனிடம் சீதையைக் காட்டாமல் இருந்தது[6].(32) அப்போது, தாசரதி ராமன் உயர்ந்த சைலத்திடம் {பின்வருமாறு} சொன்னான், "என் பாண அக்னியால் முழுமையாக எரிந்து, புற்களும், மரங்களும், தளிர்களும் ஒழிந்து பஸ்மமாகி {சாம்பலாகி}, எப்போதும் எவராலும் சேவிக்கப்படாதிருக்கப் போகிறாய்.(33,34அ) இலக்ஷ்மணா, சந்திர ஒளியுடன் கூடிய முகத்தைக் கொண்ட சீதையைக் குறித்து இப்போது என்னிடம் சொல்லவில்லை என்றால், இன்று இந்த சரிதத்தை {கோதாவரி ஆற்றை} வற்றச் செய்துவிடுவேன்" {என்றான் ராமன்}.(34ஆ,35அ)
[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இராமனின் அதே சொற்களை அந்த மலை எதிரொலித்த போது, "சீதையைக் கண்டேன்" என்று சொல்லிவிட்டு, மேலும் எதையும் சொல்லாமல் அமைதியடைந்ததைப் போல ராமன் கருதுகிறான். எனவே, "அந்த மலை தன்னை அவமதித்துவிட்டதாக" ராமன் கருதுகிறான் என்று மஹேஸ்வர தீர்த்தர் உரை சொல்கிறது. "அந்த மலை ஏதோ சொல்வது போல் தெரிந்தாலும், எந்தத் தகவலையும் சொல்லாமல் இருந்தது" என்று கோவிந்தராஜர் உரை சொல்கிறது. எவ்வகையில் கொண்டாலும், ராவணனின் அட்டூழியங்களுக்குப் பயந்து அந்த மலை மற்ற விபரங்களைச் சொல்லாமல் அமைதியாக இருந்ததால், ராமன் தன் அம்புகளால் அதைக் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்க விரும்பினான்" என்றிருக்கிறது.
இவ்வாறு பெரும் கோபமடைந்து, கண்களால் எரித்துவிடுபவனைப் போலிருந்த ராமன், பூமியில் நன்கு பதிந்திருந்த ராக்ஷசனின் பெரும் பாதச் சுவட்டையும், ராமனை {ராமனிடம் செல்ல} விரும்பி இங்கேயும், அங்கேயும் ஓடியும் ராக்ஷசனால் பின்தொடரப்பட்ட வைதேஹியின் பாதத்தடங்களையும் கண்டான்.(35ஆ-37அ) அந்த ராமன், சீதையாலும், ராக்ஷசனாலும் நன்கு பதியப்பெற்ற சுவடுகளையும், முறிந்த வில்லையும், தூணிகளையும், பலவாறு சிதறிக் கிடந்த ரதத்தையும் கண்டு, ஹிருதயம் கலங்கி, தன்னுடன் பிறந்த பிரியமானவனிடம் {லக்ஷ்மணனிடம், பின்வருமாறு} தெரிவித்தான்:(37ஆ,38) "சௌமித்ரியே, லக்ஷ்மணா, வைதேஹியின் ஆபரணங்களில் உள்ள கனக பிந்துக்களும் {பொன் துணுக்குகளும்}, விதவிதமான மாலைகளும் சிதறிக் கிடப்பதைப் பார்.(39) சௌமித்ரியே, புடம்போட்ட தங்க பிந்துக்களின் ஒளிக்கு ஒப்பாக ரத்தத் துளிகள் தரணீதலம் எங்கும் நிறைந்திருப்பதைப் பார்.(40) இலக்ஷ்மணா, வைதேஹி காமரூபிகளான {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களான} ராக்ஷசர்களால் துண்டுதுண்டாக வெட்டப்பட்டோ, பக்ஷிக்கப்பட்டோ இருக்கலாம் என்று நினைக்கிறேன்.(41) சௌமித்ரியே, அந்த வைதேஹியின் நிமித்தம் இரு ராக்ஷசர்களுக்கிடையில் நேர்ந்த விவாதத்தால் இங்கே கோரமான யுத்தம் நடந்திருக்க வேண்டும்.(42)
சௌம்யா, முத்து, மணிகள் பதிக்கப்பட்டு, ரமணீயமாக அலங்கரிக்கப்பட்டதும், முறிந்து தரணியில் கிடப்பதுமான இந்த மஹத்தான தனு யாருடையது? வத்ஸா {குழந்தாய்}, இது ராக்ஷசர்களுக்கோ, ஸுரர்களுக்கோ {தேவர்களுக்கோ} உரியதாக இருக்க வேண்டும்.(43,44அ) இளம் ஆதித்யனின் ஒளிக்கு ஒப்பான வைடூரிய குளிகங்கள் {மணிகள்} பதிக்கப்பட்டதும், பிளக்கப்பட்டு பூமியில் கிடப்பதுமான காஞ்சனக் கவசம் யாருடையது?(44ஆ,45அ) சௌம்யா, நூறு ஆரங்களைக் கொண்டதும், திவ்ய மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், தண்டம் {கைப்பிடி} முறிந்து பூமியில் கிடப்பதுமான இந்தக் குடை யாருடையது?(45ஆ,46அ) காஞ்சனத்தாலான மார்புக் கவசங்களைக் கொண்டவையும், பிசாச வதனங்கொண்டவையும், பயங்கர ரூபத்தையும், பேருடலையும் படைத்தவையும், ரணத்தில் {போரில்} கொல்லப்பட்டவையுமான இந்தக் கோவேறு கழுதைகள் யாருடையவை?(46ஆ,47அ) பாவகனின் ஒளிக்கு ஒப்பாக ஒளிர்வதும், பிரகாசம் கொண்டதும், போர்க்கொடியைக் கொண்டதும், போரிடப் பயன்படுத்தப்பட்டு, முறிந்து, சிதறிக் கிடப்பதுமான இந்த ரதம் யாருடையது?(47ஆ,48அ) ரத {தேர்} அச்சின் அளவைக் கொண்டவையும், சிகைகளுடன் {கூர் முனைகளுடன்} கூடிவையும், புடம்போட்ட தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், பார்க்க கோரமாக இருப்பவையும், தாக்குதலில் முறிந்து சிதறிக் கிடப்பவையுமான இந்த பாணங்கள் {அம்புகள்} யாருடையவை?(48ஆ,49அ) இலக்ஷ்மணா, சரங்களால் நிறைந்தவையும், முற்றிலும் சிதைந்தவையுமான தூணிகளைப் பார். சாட்டையும், கடிவாளமும் கையுமாக மாண்டுகிடக்கும் இந்த சாரதி யாருடையவன்?(49ஆ,50அ) எவனோ ராக்ஷசனுக்கோ, புருஷனுக்கோ {மனிதனுக்கோ} உரிய பாதச்சுவடு இது என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர்களின் ஜீவிதத்தை முடித்து வைக்க என் வைரம் நூறு மடங்கு பெருகுவதைப் பார்.(50ஆ,51அ)
சௌம்யா, தபஸ்வினியான சீதை, கோரமிக்க ஹிருதயங்களைக் கொண்டவர்களும், காமரூபிகளுமான {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களுமான} ராக்ஷசர்களால் கடத்தப்பட்டிருப்பாள், அல்லது பக்ஷிக்கப்பட்டிருப்பாள், அல்லது கொல்லப்பட்டிருப்பாள். இருந்தும் மஹாவனத்தில் கடத்தப்பட்ட சீதையை தர்மம் காக்கவில்லையே.(51ஆ,52) சௌம்யா, இலக்ஷ்மணா, வைதேஹி பக்ஷிக்கப்பட்டிருந்தாலும், கடத்தப்பட்டிருந்தாலும் எனக்கு உலகத்தில் எந்த ஈசுவரர்கள் {தெய்வங்கள்} பிரியத்தைச் செய்தார்கள்?[7](53) இலக்ஷ்மணா, உலகங்களின் கர்த்தாவாக இருந்தாலும், சூரனாக இருந்தாலும், சர்வ பூதங்களிடமும் கருணை கொண்டவன் அறியாமையால் அவமதிக்கப்படுவான்[8].(54) மிருதுவானவனும், உலக ஹிதத்தில் {நன்மையில்} ஈடுபடுபவனும், தற்கட்டுப்பாடுடையவனும், கருணை கொண்டவனுமான என்னை திரிதச ஈசுவரர்கள் {தேவலோகத்தின் தேவர்கள்} வீரியமற்றவன் என்றே நிச்சயம் நினைக்கின்றனர்.(55)
[7] தர்மாலயப் பதிப்பில், "குழந்தாய், ஜானகீ தின்றுவிடப்பட்டாளென்றாலும், திருடிக் கொண்டு போகப்பட்டாளென்றாலும், லக்ஷ்மணா, உலகில் எனக்கும் அபசாரத்தை விளைவிக்க துணிவு கொண்ட ஆற்றலுடையவர்கள் யாரிருக்கிறார்கள்?" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "எனக்குத் தீமைசெய்ய வானவரும் திறமைகொள்ளார்களே" என்றிருக்கிறது. மன்மதநாததத்தர் பதிப்பில், "ஜானகி விழுங்கப்பட்டாலும், கடத்தப்பட்டாலும் தெய்வீக சக்தி கொண்ட எவன் இவ்வுலகில் எனக்கு நன்மையைச் செய்தான்?" என்றிருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பில், "இவ்வுலகின் பெரியவர்களாலும் எவ்வாறு எனக்கு அமைதியைத் தர முடியும்?" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், "வைதேஹி கொல்லப்பட்டாள், அல்லது கடத்தப்பட்டாள், இனியவனே, என் தெய்வங்கள் எங்கே? இவ்வுலகில் எனக்கு ஏற்புடையதைச் செய்யவல்லவன் எவன்?" என்றிருக்கிறது.
[8] தர்மாலயப் பதிப்பில், "தேவோத்தமர்கள் உலகுக்கு நன்மை புரிவதில் ஈடுபட்டு காயக்லேசத்தைப் பொருட்படுத்தாது இரக்கமுற்று கருணையால் எதையும் பொறுக்கும் என்னை கையாலாகாதவன் என்று நினைத்து விடுகிறார்களோ என்னமோ?" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "யான் எல்லாவுலகங்களுக்குங் கர்த்தனும், அழித்தளிக்க வல்லவனுமாயினும், கருணையினால் பொறுமை கொண்டிருக்கின்றமையின் எல்லோரும் மடமையால் மதிக்கின்றிலர்" என்றிருக்கிறது.
இலக்ஷ்மணா, சசியின் ஜோதியை {சந்திரனின் ஒளியை} மறைத்துவிட்டு உதிக்கும் சூரிய மஹானைப் போல என் தேஜஸ்ஸானது, சர்வ குணங்களையும் மறைத்துவிட்டு, இப்போது சர்வபூதங்களையும், ராக்ஷசர்களையும் இல்லாமல் ஆக்கும் வகையில் பிரகாசிக்கப் போகிறது. நான் பெற்ற குணங்கள், தோஷங்களாக மாறுவதைப் பார்.(56,57) இலக்ஷ்மணா, யக்ஷர்களோ, கந்தர்வர்களோ, பிசாசங்களோ, ராக்ஷசர்களோ, கின்னரர்களோ, மனுஷ்யர்களோ சுகத்தை அடையப் போவதில்லை.(58) இலக்ஷ்மணா, என் அஸ்திர பாணங்கள், திரிலோக்யசாரிகளும் {மூவுலகங்களில் திரிபவர்களும்} நகரமுடியாதபடி சம்பூர்ணமாக ஆகாசத்தை நிறைக்கப் போவதைப் பார்.(59) திரிலோகங்களையும் கிரக கணங்களால் {கிரகக் கூட்டத்தால்} முற்றாக மறைக்கச் செய்வேன். நிசாகரன் {சந்திரன்} தடுக்கப்படுவான்; அனலன் {அக்னி}, மருதன் {வாயு}, பாஸ்கரன் {சூரியன்} ஆகியோரின் ஒளி மறைக்கப்பட்டு அழிவடைவர்; சைல உச்சிகள் {மலைச்சிகரங்கள்} நொறுங்கப் போகின்றன; ஜலக்கொள்ளிடங்கள் {நீர்நிலைகள்} வற்றிப் போகும்; மரங்கள், லதைகள் {கொடிகள்}, குல்மங்கள் {புதர்கள்} அழிவடையும்; சாகரத்தை கால கர்மத்திற்கு ஏற்ப செய்யப் போகிறேன் {கடல்களை இல்லாமல் ஆக்கப் போகிறேன்}.(60-62அ)
சௌமித்ரி, ஈசுவரர்கள் சீதையைக் குசலமாக {நலமாக} என்னிடம் கொடுக்கவில்லை என்றால், இந்த முஹூர்த்தமே என் விக்கிரமத்தை {சக்தியை} அவர்கள் தரிசிப்பார்கள்.(62ஆ,63அ) இலக்ஷ்மணா, என் வில்லின் நாணில் இருந்து வெளிப்படும் பாணஜாலங்களால், இடைவெளியின்றி ஆக்கப்படும் ஆகாசத்தில் சர்வ பூதங்களாலும் பறக்க முடியாது.(63ஆ,64அ) இலக்ஷ்மணா, இப்போது என் நாராசங்களால் தொடர்ந்து தாக்கப்பட்டு அழியவோ, மயங்கவோ போகும் மிருகதுவிஜங்களால் {விலங்குகளாலும், பறவைகளாலும்} நிலைகுலைந்து, தடுமாறப் போகும் ஜகத்தைப் பார்க்கப் போகிறாய்.(64ஆ,65அ) மைதிலியின் நிமித்தம், காதுவரை இழுத்து ஏவப்படும் தடுக்கப்பட முடியாத கணைகளால் ஜீவலோகத்தை பிசாசங்களற்றதாகவும், ராக்ஷசர்களற்றதாகவும் செய்யப் போகிறேன்.(65ஆ,66அ)
சினத்துடன் ஏவப்படுபவையும், சிகைகளை {கூர்முனைகளைக்} கொண்டவையும், என் கோபத்தால் செலுத்தப்படுபவையுமாக தூரம் செல்லப் போகும் சாயகங்களின் {கணைகளின்} பலத்தை ஸுரர்கள் {தேவர்கள்} இப்போது காண்பார்கள்.(66ஆ,67அ) என் குரோதத்தால் மூவுலகங்களும் அழியும்போது, தேவர்கள் இருக்க மாட்டார்கள். தைத்தியர்களும், பிசாசங்களும், ராக்ஷசர்களும் இருக்கமாட்டார்கள்.(67ஆ,68அ) தேவ, தானவ, யக்ஷர்களுக்குரியவையும், ராக்ஷசர்குரியவையுமான உலகங்கள், பாண வெள்ளத்தால் பலவாறாகப் பிளக்கப்பட்டு விழப்போகின்றன.(68ஆ,69அ) சௌமித்ரி, கடத்தப்பட்டிருந்தாலும், கொல்லப்பட்டிருந்தாலும் ஈசுவரர்கள் {சீதையை} என்னிடம் திருப்பிக் கொடுக்காதபோது, சாயகங்களால் {கணைகளால்} இந்த உலகங்களை மரியாதையற்றவையாக {நிலைகுலையச்} செய்யப் போகிறேன்.(69ஆ,70அ) அந்த ரூபத்திலேயே பிரியையான வைதேஹியைத் திருப்பித் தரவில்லையென்றால், சர்வ சராசரங்களுடன் {அசைவன, அசையாதனவற்றுடன்} கூடிய மூவுலகங்களையும் நாசமடையச் செய்வேன். அவளைப் பார்க்காதவரை ஜகத்தை சாயகங்களால் {கணைகளால்} தஹிக்கச் செய்வேன்" {என்றான் ராமன்}.(70ஆ,71)
இவ்வாறு சொல்லிவிட்டு, குரோதத்தால் தாமிரம் போல் சிவந்த கண்களுடனும், துடிக்கும் உதடுகளுடனும், தன் மரவுரியையும், மான்தோலையும் இறுகக் கட்டி, தன் ஜடாபாரத்தை {ஜடைமுடியை} முடிந்து கொண்டான்.(72) மதிமிக்கவனும், குரோதமடைந்தவனுமான ராமனின் உடல், இவ்வாறே பூர்வத்தில் திரிபுரத்தை எரித்த ருத்திரனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.(73) உலகைத் திளைக்கச் செய்பவனும், பரபுரஜயனுமான {பிறநகரங்களை வெல்பவனுமான} ஸ்ரீமான் ராமன், லக்ஷ்மணனிடம் இருந்து கார்முகத்தை {வில்லை} வாங்கி, இறுகப் பற்றிக் கொண்டு, ஒளிமிக்கதும், கோரமானதும், பாம்பின் விஷத்திற்கு ஒப்பானதுமான சரத்தை எடுத்து, தனுசில் பொருத்தி, யுகாந்த {யுகம் முடியும் நேரத்தில் உண்டாகும்} அக்னியைப் போல குரோதத்துடன் இந்த சொற்களைச் சொன்னான்:(74,75) "இலக்ஷ்மணா, சர்வ பூதங்களுக்கும் எவ்வாறு மூப்பும், எவ்வாறு மரணமும், எவ்வாறு காலமும், எவ்வாறு விதியும் தவிர்க்க முடியாதவையோ அவ்வாறே குரோதசம்யுக்தனான நானும் எவ்வாறும் தடுக்கப்பட முடியாதவனாவேன். இதில் சந்தேகம் இல்லை.(76) அழகிய பற்களைக் கொண்டவளும், நிந்திக்கத்தகாதவளும், மைதிலியுமான சீதையை முன்பைப் போலவே இப்போது காட்டவில்லை என்றால், தேவ, கந்தர்வ, மனுஷ்ய, பன்னகங்கள், சைலங்கள் ஆகியவற்றுடன் கூடிய ஜகத்தைத் தலைகீழாகப் புரட்டுவேன்" {என்றான் ராமன்}.(77)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 64ல் உள்ள சுலோகங்கள்: 77
Previous | | Sanskrit | | English | | Next |