Wednesday, 19 April 2023

இராமனின் வேதனை | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 63 (20)

Rama's anguish | Aranya-Kanda-Sarga-63 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பழைய நினைவுகளில் மூழ்கி சோகமடைந்த ராமன்; சீதையைத் தேட முயற்சிக்குமாறு ராமனைத் தூண்டிய லக்ஷ்மணன்...

Rama Sita and Lakshmana

பிரியை {அன்புக்குரிய காதலி/சீதை} இல்லாத அந்த ராஜபுத்திரன் {ராமன்}, சோகத்தாலும், மோஹத்தாலும் பீடிக்கப்பட்டு, வேதனையடைந்து, தன்னுடன் பிறந்தானையும் {லக்ஷ்மணனையும்} மனச்சோர்வடையச் செய்து, தானும் தீவிர மனச்சோர்வடைந்தான்.(1) பெருஞ்சோகத்தில் மூழ்கியவனும், சோகத்தில் அழுது கொண்டிருந்தவனுமான அந்த ராமன், சோக வசமடைந்திருந்த லக்ஷ்மணனிடம், உஷ்ணப் பெருமூச்சுவிட்டபடியே தன் மனவேதனைக்கேற்ற வகையில் {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னான்:(2) "வசுந்தரையில் {உலகில்} என் விதம் தீச்செயலைச் செய்த இன்னொருவன் இல்லை என்றே நினைக்கிறேன். அடுத்தடுத்து சோகத்தின் மேல் சோகம் ஹிருதயத்தையும், மனத்தையும் பிளந்தவாறு என்னை அடைகிறது.(3) நான் பூர்வத்தில் {முற்பிறவியில்} நிச்சயம் விருப்பத்துடன் பாபகர்மங்களை அடிக்கடி செய்திருக்க வேண்டும். அவை இப்போது விளைந்து விழுவதனாலேயே {அந்த வினைப்பயனின் காரணமாகவே} நான் துக்கத்தின் மேல் துக்கத்தை அனுபவிக்கிறேன்.(4)

இலக்ஷ்மணா, ராஜ்ஜியத்தை இழந்தது, சொந்த ஜனங்களைப் பிரிந்தது, பிதா இறந்தது, ஜனனியை {பெற்றவளைப்} பிரிந்தது என அனைத்தையும் சிந்தித்தால் என் சோகம் வேகமாக எண்ணங்களில் நிறைகிறது[1].(5) இலக்ஷ்மணா, வனத்திற்கு வந்த இந்த துக்கம் அனைத்திலும் இருந்து சரீரம் சாந்தமடையும்போது, சீதையின் பிரிவானது, விறகுகளால் திடீரென எரியும் அக்னியைப் போல மீண்டும் கிலேசத்தை மூட்டுகிறது {அதிகரிக்கிறது}.(6) பயந்தவளும், ஆரியையுமான என்னவள், ராக்ஷசனால் அபகரிக்கப்பட்டிருக்க வேண்டும். நல்ல சுவரத்தில் பேசுபவளான அவள், வானத்தை அடைந்ததும், பயத்தால் பெரும் அபசுவரத்தில் நிச்சயம் கதறியிருக்க வேண்டும்.(7) சிவந்தவையும், பார்ப்பதற்கு இனிமையானவையும், உத்தம சந்தனத்திற்கு எப்போதும் உசிதமானவையும், உருண்டவையுமான என் பிரியையின் ஸ்தனங்கள் இரண்டும் நிச்சயம் குருதிச்சேற்றால் பூசப்பட்டு ஒளியிழந்திருக்கும்.(8)

இனிமையாகவும், தெளிவாகவும், மென்மையாகவும் பேசவல்லதும், நெற்றியில் சுருண்டு பரந்து கிடக்கும் கேசமுடையதும், ராக்ஷசன் வசம் அடைந்தவளுக்குரியதுமான அந்த முகம், ராகுவின் வாயில் அகப்பட்ட சந்திரனைப் போல நிச்சயம் பிரகாசம் இழந்திருக்கும்.(9) எப்போதும் ஹாரம் தரிக்க உசிதமானதும், நல்விரதையான என் பிரியையினுடையதுமான அந்தக் கழுத்தை, உதிரம் உண்ணும் ராக்ஷசர்கள் சூனியத்தில் {வெற்றிடத்தில்} முறித்து நிச்சயம் {ரத்தம்} பருகியிருப்பார்கள்.(10) அகன்ற பிரகாசமான கண்களைக் கொண்ட எவள், ஜனங்களற்ற வனத்தில் நான் இல்லாமல் இருந்தாளோ, அவள் ராக்ஷசர்களால் இழுத்துச் செல்லப்பட்டபோது நிச்சயம் பரிதாபமாக குரரியை {பெண்புறாவைப்} போலக் கூவி அழுதிருப்பாள்.(11)

இலக்ஷ்மணா, நல்ல சீலமுடையவளும், பிரகாசமாகப் புன்னகைப்பவளுமான சீதை, பூர்வத்தில் இந்தக் கற்பாறையில் என் அருகில் அமர்ந்து, சிரித்துக் கொண்டே உன்னிடம் பல வாக்கியங்களைப் பேசினாள்.(12) சரிதங்களில் {நதிகளில்} சிறந்த இந்த கோதவரி, என் பிரியைக்கு நித்திய காலமும் பிரியமானது. அங்கே சென்றிருப்பாளோ என்று நினைத்தாலும், உண்மையில் அவள் {அங்கே} தனியாக ஒருபோதும் போகமாட்டாள்.(13) பத்ம {தாமரை} முகத்தையும், பத்ம இதழ் நேத்திரங்களையும் {கண்களையும்} கொண்டவள், பத்மங்களைக் கொண்டு வர அங்கே சென்றிருக்கலாமோ என்றால், அதுவும் பொருத்தமாகத் தெரியவில்லை. அவள் ஒருபோதும் நானில்லாமல் பங்கஜங்களுக்காகச் சென்றதில்லை.(14) புஷ்பித்த விருக்ஷங்கள் நிறைந்ததும், நானாவித பக்ஷி கணங்களைக் கொண்டதுமான இந்த வனத்திற்குள் சென்றிருப்பாளோ என்றால், அதுவும் பொருத்தமாகத் தெரியவில்லை. பயந்தவளான அவள் தனியாகச் செல்லப் பயப்படுவாள்.(15)

உலகத்தில் செய்யப்படுபவை செய்யப்படாதவை ஆகியவற்றை அறிந்தவனே, உலகில் சத்தியமானவையும், பொய்யானவையுமான கர்மங்களின் சாக்ஷியாக இருப்பவனே, ஓ! ஆதித்யா {சூரியனே}, என் பிரியை எங்கே சென்றுவிட்டாள்? அல்லது எங்கே கடத்தப்பட்டாள்? சோகத்தில் நெளியும் என்னிடம் அனைத்தையும் சொல்வாயாக.(16) வாயுவே, சர்வலோகங்களிலும் நித்தியம் உனக்கு தெரியாதது எதுவும் இல்லை. குலசாலினியான {உன்னதமான பெண்ணான} அவளைக் குறித்துச் சொல்வாயாக. அவள் கடத்தப்பட்டாளா? இறந்துவிட்டாளா? பாதை தெரியாமல் திரிகிறாளா?" {என்றான் ராமன்}.(17)

இதைப் போல, சோகம் பற்றிய தேகத்துடனும், மயக்க நிலையிலும் இவ்வாறு அழுது புலம்பிக் கொண்டிருந்த ராமனிடம், சோர்வற்ற துணிவுடன், நியாயத்தில் நிலைப்பவனான சௌமித்ரி {லக்ஷ்மணன்}, காலத்துப் பொருத்தமான இந்த வாக்கியங்களைச் சொன்னான்:(18) "ஆரியரே, சோகத்தைக் கைவிட்டு, திடங்கொண்டு, உற்சாகத்துடன் {விடாமுயற்சியுடன்} அவளைத் தேடுவீராக. உற்சாகமுள்ள நரர்கள், உலகில் மிகக் கடினமான கர்மங்களில் {செயல்களைச் செய்யும் போது} ஒருபோதும் வருந்துவதில்லை" {என்றான் லக்ஷ்மணன்}.(19)

வேதனையிலிருந்த ரகுவம்சவர்தனன் {ரகு குலத்தை செழிக்கச் செய்பவனான ராமன்}, இவ்வாறு தன்னிடம் சொன்ன உயர்ந்த பௌருஷம் {பேராண்மை} கொண்ட சௌமித்ரியைச் சிந்தனையில் கொள்ளாமல், துணிவைக் கைவிட்டு மீண்டும் மஹத்தான துக்கத்தில் ஆழ்ந்தான்.(20)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 63ல் உள்ள சுலோகங்கள்: 20

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை