Felony of a single one | Aranya-Kanda-Sarga-65 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: உலகத்தை அழிப்பது முறையல்ல என்பதை விளக்க ராமனைத் தணித்த லக்ஷ்மணன்; தேடலைத் தொடங்குவது...
இவ்வாறு துன்பத்தில் தஹித்துக் கொண்டிருந்தவனும், உலகை மகிழ்ச்சியடையச் செய்பவனும், சீதை கடத்தப்பட்டதால் சோர்வடைந்து, சம்வர்த்தக அநலனை {ஊழித்தீயைப்} போல, உலகங்களை அழிப்பதற்கு ஆயத்தமாக, நாண்பொருத்தப்பட்ட தனுவை மீண்டும் மீண்டும் பார்த்து, வெப்பப் பெருமூச்சுவிட்டுக் கொண்டு, யுகாந்தத்தின் ஹரனை {யுகத்தின் முடிவில் தோன்றும் சிவனைப்} போல, சர்வ ஜகத்தையும் தஹிக்க {எரிக்க} விரும்பியவனுமான ராமனை, இதற்குமுன் ஒருபோதும் கண்டிராத கோபத்துடன் கூடியவனாகக் கண்ட லக்ஷ்மணன், வாடிய முகத்துடன் {பின்வருமாறு} பேசினான்:(1-3) "முன்பு மிருதுவாகவும், தற்கட்டுப்பாட்டுடன், சர்வ பூத ஹிதத்தை {உயிரினங்கள் அனைத்தின் நலத்தை} விரும்பியவராக இருந்துவிட்டு, குரோதத்தின் வசத்தில் விழுந்து, இயல்பை இழப்பது உனக்குத் தகாது.(4)
சந்திரனின் மகிமையும், சூரியனின் பிரபையும், வாயுவின் கதியும், புவியின் பொறுமையும், நியதமும் {அடக்கமும்} என இவை அனைத்துடன் சேர்ந்து உத்தம புகழும் உம்மில் நிலைத்திருக்கிறது.(5) ஏகன் {தனியொருவன்} செய்த அபராதத்திற்காக {குற்றத்திற்காக}, உலகங்களை அழிப்பது உமக்குத் தகாது. ஆயுத பரிவாரங்களும், போரில் பயன்படுத்தக்கூடிய இந்த ரதமும் எவனுடையவை என்பதையும், எவனால், என்ன காரணத்திற்காக பங்கமடைந்தன {நொறுக்கப்பட்டன} என்பதையும் அறியமுடியவில்லை.(6,7அ) பார்த்திபாத்மஜரே {மன்னரின் மகனே}, போர் நடந்து முடிந்த இந்த தேசம் {இடம்}, குளம்புகள் {விலங்குக் காலடிகள்}, சக்கரங்கள் ஆகியவற்றின் தடங்கள் பதியப்பெற்றதாகவும், உதிர பிந்துக்களால் {ரத்தத்துளிகளால்} நனைந்ததாகவும் கோரமாகக் காட்சியளிக்கிறது.(7ஆ,8அ)
பேசுபவர்களில் சிறந்தவரே, இஃது இருவருக்கிடையில் நடந்த தனிப்பட்ட மோதலே. மஹத்தான பலத்தின் {படையின்} சுவடுகள் எவையும் எனக்குப் புலப்படவில்லை.(8ஆ,9அ) தனியொருவன் செய்த செயலுக்காக, உலகங்களை அழிப்பது தகாது. மிருதுவானவர்களும், நல்ல இயல்பைக் கொண்டவர்களுமான வசுதாதிபர்கள் {பூமியின் தலைவர்கள்}, பொருத்தமான தண்டத்தையே {குற்றங்களுக்குத் தகுந்த தண்டனைகளையே} விதிப்பார்கள்.(9ஆ,10அ) நீர் சர்வ பூதங்களுக்கும் எப்போதும் புகலிடமாகவும், பரம கதியாகவும் திகழ்ந்தவர் ஆவீர். இராகவரே, {அத்தகையவரான} உமது தாரம் {மனைவி} தொலைந்து போவதை எவன்தான் நல்லதென நினைப்பான்?(10ஆ,11அ) தீக்ஷிதர்களுக்கு {விரதங்களை நோற்கத் தொடங்கியவர்களுக்குப் பிரியமற்றதைச் செய்யாத} நல்லோரைப் போலவே சரிதங்கள் {ஆறுகள்}, சாகரங்கள் {கடல்கள்}, சைலங்கள் {மலைகள்} ஆகியவற்றாலும், தேவர்கள், கந்தர்வர்கள், தானவர்கள் ஆகியோராலும் உமக்குப் பிரியமற்றதைச் செய்ய இயலாது.(11ஆ,12அ)
இராஜரே, சீதையை எவன் கடத்தினானோ அவனை, தனுஷ்பாணியாக {கையில் வில்லுடன் கூடியவராக}, என்னை இரண்டாமவனாக {துணைவனாகக்} கொண்டும், பரமரிஷிகளின் சகாயத்துடனும் தேடுவதே தகுந்ததாகும்.(12ஆ,13அ) சமுத்திரம் {பெருங்கடல்}, பர்வதங்கள் {மலைகள்}, வனங்கள் {காடுகள்}, விதவிதமான கோரமான குகைகள் ஆகியவற்றிலும், அதேபோல விதவிதமான பத்மினியங்களிலும் {தாமரை ஓடைகளிலும்} தேடுவோம்.(13ஆ,14அ) உமது பாரியையை {மனைவியை} அபகரித்தவனைக் கண்டுபிடிக்கும்வரை சமாஹிதத்துடன் {ஒருமுகமாக} தேவ, கந்தர்வ உலகங்களிலும் தேடுவோம்.(14ஆ,15அ) கோசலேந்திரரே {கோசல நாட்டின் மன்னரே}, திரிதச {தேவலோக} ஈசுவரர்கள் உமது பத்தினியை நல்லபடியாகக் கொடுக்காமல் போனால், அதன் பிறகு, அந்தக் காலத்திற்குரிய காரியத்தைச் செய்வீராக.(15ஆ,இ) நரேந்திரரே, சீலத்துடனும் {பண்புடனும்}, இணக்கத்துடனும், விநயத்துடனும் {பணிவுடனும்}, நயமாக {மேன்மையாக} சீதையை மீட்க முடியாவிட்டால், அதன் பிறகு, ஹேமபுங்கங்களுடன் {பொன் இறகுகளுடன்} கூடியவையும், மஹேந்திரனின் வஜ்ரத்தைப் போன்றவையுமான சரத் தாரைகளால் அனைத்தையும் அழிப்பீராக" {என்றான் லக்ஷ்மணன்}.(16)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 65ல் உள்ள சுலோகங்கள்: 16
Previous | | Sanskrit | | English | | Next |