Wednesday, 19 April 2023

இராமனின் புலம்பல் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 62 (20)

Rama's Lament | Aranya-Kanda-Sarga-62 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அயோத்திக்குத் திரும்பிச் செல்லுமாறு லக்ஷ்மணனைக் கேட்டுக் கொண்ட ராமன்; இராமனின் புலம்பல்...

Rama and Lakshmana search Sita

கமலலோசனனும் {தாமரைக் கண்களைக் கொண்டவனும்}, மஹாபாஹுவும் {பெருந்தோள்களைக் கொண்டவனும்}, தர்மாத்மாவுமான ராமன் சீதையைக் காணாமல் சோகத்தில் ஆழ்ந்த நினைவுடன் அழுது புலம்பினான்.(1) மதனனால் {மன்மதனால்} பீடிக்கப்பட்ட ராகவன், அந்த சீதையைக் காணாமலே கண்டது போல, அழுது புலம்பியபடியே சொல்ல முடியாத இந்த வாக்கியங்களைச் சொன்னான்:(2) "பிரியே {அன்பே}, புஷ்பங்கள் உன் அதி விருப்பத்திற்குரியவை என்பதால் அசோக சாகைகளில் {அசோக மரக்கிளைகளில்} உன் சரீரத்தை மறைத்துக் கொண்டு என் சோகத்தை அதிகம் வளர்க்கிறாய்.(3) தேவி, கதலிகளால் {வாழை மரங்களால்} மறைக்கப்பட்ட கதலித் தண்டுகளைப் போன்ற உன் தொடைகளை நான் பார்க்கிறேன். உன்னால் அவற்றை மறைக்க முடியாது.(4) 

தேவி, பத்ரே {மென்மையானவளே}, கர்ணீகார {கோங்கு மர} வனத்தில் சேவித்து என்னை கஷ்டத்தில் ஆழ்த்துகிறாய். நீ செய்யும் பரிகாசம் போதும்.(5) விசேஷமாக, ஆசிரமஸ்தானத்தில் இந்த ஹாசம் {கேலி} நல்லதல்ல[1]. பிரியே, பரிகாசத்தில் பிரியங்கொண்ட உன் சீலத்தை {இயல்பை} நான் அறிவேன். விசாலாக்ஷி {அகன்ற கண்களைக் கொண்டவளே}, நீ வருவாயாக. உன்னுடைய இந்தக் குடில் சூனியமாக இருக்கிறது.(6,7அ) இலக்ஷ்மணா, அழுது கொண்டிருக்கும் என்னிடம் திரும்பி வராத சீதை, ராக்ஷசர்களால் பக்ஷிக்கப்பட்டிருக்க வேண்டும், அல்லது அவள் அபகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே வெளிப்படுகிறது.(7ஆ,8அ) இலக்ஷ்மணா, கண்கள் நிறைந்த கண்ணீருடன் இந்த மிருக மந்தை {மான் கூட்டம்} என் தேவி ரஜனீசரர்களால் பக்ஷிக்கப்பட்டதை {இரவுலாவிகளால் உண்ணப்பட்டதைச்} சொல்வது போலவே தெரிகிறது.(8ஆ,9அ)

[1] சென்ற சர்க்கத்தில் 28ம் சுலோகத்தில், "ஒரு மலையில் சோர்ந்து விழுந்தான் ராமன்" என்று இருக்கிறது. இப்போது மீண்டும் ராமனும், லக்ஷ்மணனும் ஆசிரமத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

ஹா என் ஆரியே {ஐயோ என் உன்னதப் பெண்ணே}, இப்போது எங்கே இருக்கிறாய்? ஹா சாத்வி {புனிதமான பெண்ணே}, வரவர்ணினீ {சிறந்த நிறம் கொண்டவளே}, ஹா உன்னால் இப்போது கைகேயி தேவி ஆசை நிறைவேறியவளானாள்.(9ஆ,10அ) சீதையுடன் புறப்பட்டு வந்த நான், சீதையில்லாமல் திரும்பிச் சென்று, சூனியமான என் அந்தப்புரத்திற்குள் பெயரளவில் எவ்வாறு நுழைவேன்?(10ஆ,11அ) என்னை, "வீரியமற்றவன்" என்றும், "தயையற்றவன்" என்றும் உலகம் சொல்லும். சீதை கொண்டு செல்லப்பட்டத்தில் என் கோழைத்தனம் பிரகாசமாகத் தெரியும்.(11ஆ,12அ) 

வனவாசம் நிறைவடைந்ததும், குசலம் {நலம்} குறித்து விசாரிக்கும் மிதிலாதிபரான ஜனகரைப் பார்ப்பது எவ்வாறு சாத்தியம்? {என்னால் எவ்வாறு நலம் விசாரிக்கும் ஜனகரை நிமிர்ந்து பார்க்க முடியும்?}(12ஆ,13அ) விதேஹராஜர் {ஜனகர்}, அவள் இல்லாத என்னைக் கண்டு, மகள் இறந்த துக்கத்தில் நிச்சயம் மோஹவசத்தை அடைவார் {மயக்கமடைவார் / நனவிழப்பார்}.(13ஆ,14அ) அல்லாமலும், பரதன் பாலிக்கும் புரிக்கு {அயோத்திக்கு} நான் செல்ல விரும்பவில்லை. அவள் இல்லாமல், ஸ்வர்க்கமும் எனக்கு சூனியமெனவே கருதுகிறேன்.(14ஆ,15அ) எனவே, என்னை வனத்தில் விட்டுவிட்டு, மங்கலமான அயோத்தியாபுரிக்குச் செல்வாயாக. உண்மையில் சீதை இல்லாமல் எவ்வகையிலேனும் என்னால் ஜீவிக்கமுடியாது.(15ஆ,16அ)

பரதனை இறுகத் தழுவிக் கொண்டு, "இராமனின் அனுமதியின் பேரில் வசுந்தரையை பாலிப்பாயாக {பூமியை ஆள்வாயாக}" என்ற என் சொற்களை நீ சொல்வாயாக.(16ஆ,17அ) விபுவே {ஆற்றல்வாய்ந்த தலைவா}, என் அம்பாக்களான கைகேயி, சுமித்திரை ஆகியோரையும், கௌசல்யையையும் நியாயப்படி வணங்குவாயாக. எதையும் சரியாகச் செய்பவனான நீ, என் ஆணையின் பேரில், முயற்சியுடன் அவர்களை {தாய்மாரை} ரக்ஷிப்பாயாக {பாதுகாப்பாயாக}.(17ஆ,18) அமித்ரசூதனா {பகைவரை அடக்குபவனே}, சீதையும், நானும் இப்படி அழிந்தோம் என்பதை நீ ஜனனீக்களிடம் {பெற்றவர்களிடம்} விஸ்தாரமாகத் தெரிவிப்பாயாக" {என்றான் ராமன்}.(19)

தீனனாக {பரிதாபகரமாக} இருந்த ராகவன், வனத்தை நெருங்கியதும், நல்ல கேசமுடையவள் {சீதை} இல்லாமல் இவ்வாறு அழுது புலம்பினான். இலக்ஷ்மணனும் பயத்தால் ஒளியிழந்த முகத்துடனும், மனக்கலக்கத்துடனும் அதிக கவலையை அடைந்தான்.(20)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 62ல் உள்ள சுலோகங்கள்: 20

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அசுவபதி அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அனசூயை அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இல்வலன் உமை கங்கை கசியபர் கபந்தன் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் குஹன் கேசினி கைகேயி கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபளை சரபங்கர் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திலீபன் தூஷணன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாரீசன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விராதன் விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஹனுமான் ஹிமவான்