Goading words | Aranya-Kanda-Sarga-59 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சீதையைத் தனியாக விட்டு வந்தகாரணத்தை லக்ஷ்மணனிடம் கேட்ட ராமன்; சொல்லம்புகள் ஏவிய சீதையைக் குறித்து ராமனிடம் சொன்ன லக்ஷ்மணன்...
அப்போது, ரகுநந்தனனான ராமன், துக்கத்தால் பீடிக்கப்பட்டவனாக ஆசிரமத்தில் இருந்து திரும்பி அருகில் வரும் சௌமித்ரியிடம் {லக்ஷ்மணனிடம்} மீண்டும் வினவினான்.(1) அவனிடம் {லக்ஷ்மணனிடம்}, "உன் மீது கொண்ட விசுவாசத்தாலேயே {நம்பிக்கையாலேயே} நான் அவளை வனத்தில் விட்டுச் சென்றேன். மைதிலியை விட்டு எதற்காக நீ வந்தாய்?(2) இலக்ஷ்மணா, மைதிலியை விட்டு என்னிடம் வந்த உன்னைக் கண்டதும், மஹத்தான பாபத்தைக் குறித்த கலக்கத்தில் என் மனம் அடைந்த சந்தேகம் இப்போது சத்தியமாகியிருக்கிறது.(3) இலக்ஷ்மணா, சீதை இல்லாமல் உன்னை தூரத்தில் பாதையில் கண்டபோது, என் இடது நயனமும், {இடது} தோளும் மட்டுமல்ல ஹிருதயமும் துடித்தது" {என்றான் ராமன்}.(4)
இவ்வாறு சொல்லப்பட்டவனும், சௌமித்ரியும் {சுமித்திரையின் மகனும்}, சுபலக்ஷணம் கொண்டவனுமான லக்ஷ்மணன், அதிக துக்கமடைந்தவனாக, துக்கத்தில் இருக்கும் ராமனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(5) "நான் சுயவிருப்பத்தின் காரணமாக அவளை விட்டு இங்கே வரவில்லை. அவளது உக்கிரத்தால் தூண்டப்பட்டே இங்கே உமதருகில் வந்தேன்.(6) "ஹா சீதே, லக்ஷ்மணா, என்னைக் காப்பாற்று" என்ற அந்த வாக்கியம் ஆரியருடையதை {உம்முடைய குரலைப்} போல உரக்க கூவப்பட்டதை அந்த மைதிலி கேட்டாள்.(7) மைதிலியான அவள், அந்தத் துன்ப சுவரத்தைக் கேட்டு அழுது கொண்டே, உம்மீது கொண்ட சினேகத்திலும், பயத்தால் அதிர்ந்தும், "போவீராக, போவீராக" என்று என்னிடம் சொன்னாள்.(8)
அவள் அடிக்கடி, "போவீராக" என்று வற்புறுத்திக் கொண்டிருந்தாலும், உம் மீது கொண்ட நம்பிக்கையில் மைதிலியிடம் இந்த வாக்கியத்தை நான் மறுமொழியாகச் சொன்னேன்:(9) "அவருக்கு பயத்தை விளைவிக்க முடிந்த எந்த ராக்ஷசனையும் நான் பார்த்ததில்லை. அமைதியடைவாயாக. இவை யாவும் உண்மையல்ல. எவனோ இவ்வாறு கூவுகிறான்.(10) சீதே, திரிதசர்களையும் {தேவர்களையும்} பாதுகாக்கக்கூடிய ஆரியர், "என்னைக் காப்பாற்று" என்ற இழிவுக்குரிய நீசச் சொற்களை எவ்வாறு சொல்வார்?(11) எதன் நிமித்தமாகவோ, எவனோ என்னுடன் பிறந்தவரின் சுவரத்தைச் சார்ந்து, "லக்ஷ்மணா, என்னைக் காப்பாற்று" என்ற வாக்கியத்தை பொருத்தமில்லாத சுவரத்தில் கூவுகிறான்.(12) சோபனையே, "காப்பாற்று" என்பது ராக்ஷசன் சொல்லும் வாக்கியமாகும். சாதாரண நாரீ ஜனம் சேவிப்பதைப் போல நீ அச்சத்தால் பீடிக்கப்படுவது காரியத்திற்கு உகந்ததல்ல.(13) குழப்பத்தால் கலவரமடையாமல் அமைதியடைவாயாக. எவன் யுத்தத்தில் ராகவரை வெல்வானோ அந்த மனிதன் மூவுலகங்களிலும் பிறக்கவில்லை; பிறக்கப் போவதுமில்லை. சக்ரனை {இந்திரனை} முதன்மையாகக் கொண்ட தேவர்களாலும் போரில் அவரை வெல்லமுடியாது" {என்று சீதையிடம் சொன்னேன்}.(14,15)
இவ்வாறு சொன்னாலும், வைதேஹி புத்தி குழம்பியவளாகக் கண்ணீரைப் பெருக்கி என்னிடம் இந்தப் பயங்கரச் சொற்களைச் சொன்னாள்:(16) "உன்னுடன் பிறந்தவர் போனதும் என்னை அடைவதற்கான அதீத பாப பாவத்துடன் {இயல்புடன்} கூடியவனாக நீ இருக்கிறாய். உன்னால் என்னை அடையவே முடியாது.(17) பெருங்கதறலைக் கேட்டும் போகாதிருக்கிறாய். எனவே, நீ பரதனோடு சூழ்ச்சி செய்து, ராமரைப் பின்தொடர்ந்து வந்திருக்கிறாய்.(18) தன்னை மறைத்துத் திரியும் சத்ருவா நீ, ராகவரின் முடிவை எதிர்பார்த்து எனக்காகப் பின்தொடர்ந்து வந்திருக்கிறாய். அதனாலேயே அவரைத் தேடிப் போகாதிருக்கிறாய்" {என்றாள் சீதை}.(19) வைதேஹியால் இவ்வாறு சொல்லப்பட்டதும் குரோதத்தால் சிவந்த கண்களுடனும், துடிக்கும் உதடுகளுடனும் அவசரமாக ஆசிரமத்திலிருந்து உம்மிடம் வந்தேன்" {என்றான் லக்ஷ்மணன்}.(20)
இலக்ஷ்மணன் இப்படிச் சொன்னபோது, துக்கத்தில் ஆழ்ந்த ராமன் {பின்வருமாறு} சொன்னான், "சௌம்யா, எதனால் நீ அவளில்லாமல் வந்தாயோ அது தவறான காரியம்.(21) நான் ராக்ஷசர்களை விரட்டும் வல்லமை கொண்டவன் என்பதை அறிந்திருந்தாலும், நீ மைதிலியின் குரோத வாக்கியங்களால் தூண்டப்பட்டு வந்திருக்கிறாய்.(22) மைதிலியை விட்டு வந்த உன்னிடம் நான் மகிழ்ச்சியடையவில்லை. குரோதத்தில் இருந்த ஸ்திரீயின் கடுஞ் சொற்களைக் கேட்டு நீ இங்கே வந்துவிட்டாய்.(23) சீதையால் தூண்டப்பட்ட குரோதத்தின் வசமடைந்து என் சாசனத்தை மதிக்காமல் எல்லாவகையிலும் இப்படி நீ கைவிட்டுவிட்டாய் {என் ஆணையை மீறிவிட்டாய்}.(24)
மிருக ரூபத்தில் {மான் வடிவில்} வந்த எவனால் நான் ஆசிரமத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டேனோ, அந்த ராக்ஷசன் உண்மையில் என் சரத்தால் தாக்கப்பட்டு வீழ்ந்தான்.(25) என் வில்லை வளைத்து, சாயகத்தை {கணையைப்} பொருத்தி, விளையாட்டாக ஏவிய பாணத்தால் தாக்கப்பட்டவன், மிருகத்தன்மையைத் துறந்து, பரிதாப சுவரத்துடன் கூடியவனும், கேயூரங்கள் {தோள்வளைகள்} தரித்தவனுமான ராக்ஷசனானான்.(26) அந்த சரத்தால் இவ்வாறு வீழ்ந்தபோது, தூரத்திலும் நன்கு கேட்கும் வகையில், என் குரலைச் சார்ந்து, பயங்கரமான அந்தச் சொற்களைச் சொன்னான். அதனால் நீயும் மைதிலியைக் கைவிட்டாய்" {என்றான் ராமன்}.(27)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 59ல் உள்ள சுலோகங்கள்: 27
Previous | | Sanskrit | | English | | Next |